Thursday, April 28, 2022

CHEMBUR MURUGAN

 திருசெம்பூர் முருகன்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


இந்த மாதம்  பம்பாய் சென்றபோது என்   பம்பாய் நண்பர்கள்  சிலரை  நான் நேரில் சந்திக்க நேர்ந்தது.   திட்டமிடப்படாத   திடீர் சந்திப்பு.  ஒவ்வொருத்தரும் எங்கெங்கோ வசிக்கிறார்கள்.  நான் இருக்குமிடம் அவர்களுக்கு அருகேயா வெகு தொலைவிலா  என்று  எனக்குத்  தெரியாதே. நானே  பம்பாய்க்கு அடிக்கடி முன்பு சென்றவன் என்றாலும் அங்கே வசிக்காதவன் ஆயிற்றே.  ஒரு நண்பர்  ஒரு யோசனை சொன்னார்.  எங்கள் வீடு  செம்பூர் அருகே சேதா நகரில்  இருக்கிறது. அங்கே வாருங்கள்.  அது பலருக்குத்  தெரிந்த இடம். அங்கே உங்களை எல்லோரும் சந்திக்கலாம், இன்னொரு விசேஷம் அங்கே சமீபத்தில் கும்பாபிஷேகமான  ஸ்ரீ செம்பூர் முருகன் ஆலயம் சென்று தரிசனம் செய்யலாம் என்றார்.   அவர் விலாசத்தை ஒரு சில நண்பர்களுக்கு மட்டும் அனுப்பினேன். அவர் வீட்டில் ஏராளமானவர்களை வரவேற்று அமர்விக்க  இடம் போதாதே.  பம்பாய் என்றால் முதலில் இடத்தை பற்றித்  தானே  சிந்திக்க வேண்டும். ஆகவே  என்னையும் என் மனைவியையும் சேர்த்து ஒரு பத்து பேர்  சேத்தா நகர் எனும் இடத்தில் ஸ்ரீ க்ரிஷ்ணமுர்த்தி இல்லத்தில் ஜமா பந்தி கூடினோம். 

 கோயம்பத்தூரில் த்யான பிரசித்தம் எனும் அற்புதமான முதியவர்கள் காலனியில் வசிக்கும், என் இனிய நண்பர், அடிக்கடி  எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும்,   மிலிட்டரி கார (மீசைக்கார) நண்பர் ஸ்ரீ வைத்யநாதன்  தனது  பெண் வீட்டில்  பம்பாயில் இருந்ததால்  காட்கோபரிலிருந்து செம்பூர்  வந்துவிட்டார்.  பெரியவா பக்தர் சுணாபட்டி  ஸ்ரீ N  கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ சிவராமன் தம்பதியர், அவர்கள் நண்பர்கள் சிலர்,   வந்திருந்தார்.  ஒரு  கிவாஜ  ரசிகர் சீடர்  அற்புதமாக தமிழ் சொல் விளையாட்டு வீரர் , சிலேடை கவிஞர்  ஸ்ரீ  கே. ஜி.எஸ். விஸ்வநாதன்  ஆகியோர்  வந்திருந்தார்கள். மொத்தத்தில்  வைத்யநாதனைத் தவிர மற்றவர்கள் அன்று தான் நேரில் என்னை சந்தித்தவர்கள்.  

அன்று ஸ்ரீ ராமநவமி. அதை சிறப்பாக  கொண்டாட  சில  பத்ராசலம் ராமதாஸ்,  சதாசிவ ப்ரம்மேந்த்ரரின்  ராமர் பாடல்கள், மற்றும்  சில  தமிழ் பாடல்கள்  பாடினேன். வந்திருந்தவர்கள் சிலர்  அற்புதமாக பாடினார்கள். நடு நடுவே  ராமாவதாரம் பற்றி பேசினேன். அது ஒரு கலந்துரையாடல். எல்லோருக்கும்  பானகம் நீர்மோர்,  கேசரி,  கிங்காங் வடை,  சுடச்சுட  இட்லி மிளகாய்ப் பொடி  டிக்ரீ   காப்பி எல்லாமே   விஜயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியர் நண்பர்கள்  உபயம். ரெண்டு மணி நேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை.  

ஸ்ரீ  ராமருக்கு ஹாரத்தி  பஜனை  ஸ்ரீ வைத்யநாதன் நிகழ்த்திய பிறகு  அருகே  செம்பூர்  சுப்ரமணிய சுவாமி ஆலயம் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்து முடிந்திருந்ததால் கூப்பிடு தூரத்தில் இருந்த அதற்கு  நடந்து சென்று சுப்ரமணிய தரிசனம் செய்துவிட்டு திரும்பினோம்.

சுப்பிரமணியர் ஆலயத்தைப் பற்றி  ஒரு  சிறிய குறிப்பு: 

குட்டி மெட்றாஸ்  என்று அழைக்கப்படும் மாதுங்காவில் ஒரு பகுதி சேத்தா நகர்.  அங்கே  சுப்ரமணிய சமாஜ் என்று சில  பம்பாய் வாழ்  தமிழ் பக்தர்கள் ஒன்று கூடி  ஆரம்பித்தார்கள்.  அது ஆரம்பானது  1940  களில்  விம்கோ  WIMCO  T  V லக்ஷ்மணன் என்ற பக்தரின்  மாதுங்கா  வீட்டில் அமர்ந்து  பேசியபோது  பிறந்தது  சுப்ரமணிய சமாஜம்.  சொந்த இடமில்லாதது ஒரு பிரச்சனையாக இல்லை.  சங்கரமடம் மற்றும்  சவுத் இந்தியன் பஜன் சமாஜ் நிறுவனம் தங்கள் இடத்தை உபயோகத்துக்கு  கொடுத்தது.அப்புறம் என்ன, ஸ்கந்தஷஷ்டி  பங்குனி உத்திரம், தைப்பூசம் விழாக்கள்,  உபன்யாசங்கள் பிரசங்கங்கள் எல்லாம் விமரிசையாக நடந்தது.

சமாஜத்தை சேர்ந்தவர்கள்  சேத்தா  நகரில் இடம் வாங்கினார்கள்.  ப்ரஸ்னம் பார்த்ததில்  இப்போதுள்ள சேத்தா நகர்  ஆலயம் ஒருகாலத்தில்  ரிஷிகள் முனிவர்கள் தவம் செய்த ஆரண்யமாக இருந்தது தெரிந்தது. ஆஹா இப்படி அல்லவோ சுப்பிரமணியன் கோவில் இடம் அமைய  வேண்டும் என்று மகிழ்ந்தார்கள்.  ஒரு  ஆலய நிர்மாண குழு அமைத்தார்கள்,.  அவர்கள் பெயர்கள் ஆலயத்தில் கல்வெட்டில் காண்கிறது. 

ஒரு பெயர் எனக்கு  பழைய நினைவைக் கிளப்பிவிட்டது.  ஸ்ரீ  ''S  வெங்கிடேஸ்வரன் ''  ....  ஆஹா இந்த அற்புத மனிதரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். என்னோடு அன்பாக நிறைய பேசி இருக்கிறாரே. சிறந்த கப்பல்  சம்பந்தப்பட்ட  வழக்குகளில்,   சட்ட நிபுணர், கப்பல்  உலகத்தில் பலரும் அறிந்த அசகாய சூரர் ஆயிற்றே.  நான் கப்பல் நிறுவனத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல்  பிழைத்தவன். அவரை பம்பாயில்  மேக்கர் பவனில்   MAKER BHAVAN கட்டிடத்திலும் சென்னையில் எங்கள்  கப்பல் நிறுவனத்திலும் அடிக்கடி பார்த்தவனாயிற்றே. அன்பும் பண்பும் நிறைந்த  வெங்கிடேஸ்வரனை  மறக்க முடியுமா?  அவர் பெயர் தாங்கிய  கல்வெட்டின் முன் நின்று ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தி ஆசி பெற்றேன். 

இப்போது நிர்வாக கமிட்டீயில் உள்ள  ஸ்ரீ சுப்ரமணியனையும் நேரில் சந்தித்தேன். அவர்  என் நண்பர், பிரபல வக்கீல் ஜே. ராதாகிருஷ்ணனின் நண்பர்.   ஸ்ரீ ராதாகிருஷ்ணன்  மேலே சொன்ன ஆரம்ப கால  ஆலய  கமிட்டீயில் இருந்தவர்.  இப்போது  84+ .     சென்னையில் ராயப்பேட்டையில்  இருக்கிறார். இனிய நண்பர். 

செம்பூர்  சேத்தா நகர்  சுப்ரமணியசுவாமி ஆலயம் ஆகம விதிகளுக்குட்பட்டு  நிர்மாணிக்கப் பட்டு அதன் வரைபடத்தை  மஹா பெரியவாளிடம் சமர்ப்பித்து அவர்  அறிவுரைப்படி  1972ல்  எழும்பிய ஆலயம்.  சமீபத்திய  கும்பாபிஷேகம்  6.4.2022 அன்று நிறைவு பெற்றது.  மஹான்கள்  கிருபானந்த வாரியார், சுவாமி சின்மயானந்தா  ஆகியோர்  விஜயம் செய்து உபன்யாசங்கள் நிகழ்த்திய ஆலயம்.

இந்த  ஆலயம் ஒரு பெரிய பங்களா மேல் மூன்றாவது மாடியில் கோபுரத்தோடு  காட்சி தருகிறமாதிரி உள்ளது. மேலே ஏற  லிப்ட் LIFT  பொருத்தி இருக்கிறார்கள். வயதானவர்கள் கஷ்டமின்றி ஏறி தரிசிக்கலாம்.  சுப்ரமணிய சுவாமி   நாலரை அடி  உயரத்தில் மாளிகைமலை மேல் ஜம்மென்று நிற்கிறார்.  மயிலத்தில் உருவான சிலை.  இந்த ஆலயத்திற்கென்று  மஹாபலிபுரத்திலிருந்து  சுமார்  800 டன்  கற்பாறைகள் பம்பாய்க்கு சென்றுள்ளது.  கும்பாபிஷேகங்கள்  1980, 1991,2000, 2011, அப்புறம்  2022ல் நடந்துள்ளது.

எப்போதோ நான் செய்த புண்யம் என்னையும்  இந்த  முறை பாம்பே சென்றபோது  அவர் முன்னே நின்று  ஆனந்தமாக கும்பாபிஷேக விசேஷ தரிசனம் செய்ய வைத்துள்ளது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...