Friday, April 1, 2022

LIFE LESSON

 மனதில் பதியட்டும்  - 9   -  நங்கநல்லூர்  J K  SIVAN 


அப்போதெல்லாம்   வீடுகளை சுற்றி மரங்கள் இருந்தது. நெரிசல் இல்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் திண்ணை உண்டு.   இப்போது ஹாலில் சோபா  போல அது. திண்ணையில் 
காற்று வாங்கியவாறு  காலாட்டிக் கொண்டு  உட்கார்ந்திருப்பது  ராஜயோகம். சிலர்  பாட்டும் பாடிக்கொண்டு  ஆலாபனம் செய்வார்கள்.    திண்ணையிலிருந்து  கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.  அவரவர்  நிலைமையை உணர்ந்து  எல்லை மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகிறது. அகலக்கால்  வைக்கக் கூடாது.

உலகத்தில்  சிலருக்கு  அடி மனதில் "எனக்கு எல்லாம் தெரியும், நான் ஒருவனே மற்றவர்களை விட  அதிக கெட்டிக்காரன், பரம யோக்கியன், ரொம்ப அழகானவன்,  நான் அதிர்ஷ்டகக்காரன், தொட்டதெல்லாம் விளங்கும், மேலே மேலே எதிலும் வெற்றி, லாபம் ' என்ற எண்ணம்  தோன்றலாம். அதே போல    துன்பம்  நேர்கையில்  "எனக்கு மட்டும்  ஏன்  இப்படி   உலகிலேயே  அடிக்கடி அடிக்கடி, மேலே மேலே  துன்பம்  வந்து கொண்டே இருக்கிறது ' என்று எண்ணம் எழுகிறது.  ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்  பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.

பணம், பேச்சு, செய்யும் செயல் எல்லாவற்றிலும்  ஒரு எல்லை, அளவு இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது. பிடிக்கிறது,  ருசியாக இருக்கிறது  என்பதால் கண்டதை எல்லாம் அளவில்லாமல் திங்கக்கூடாது.  அளவுக்கு மீறினால் அம்ருதமும்  விஷம்.  எதிலும் போதும் என்ற திருப்தி,  சுய கட்டுப்பாடு அவசியம்.

சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்.  உள்ளே நல்ல எண்ணங்கள்  நிரம்பியிருந்தால் ஒவ்வொரு வார்த்தையும்  அற்புதமாக  வெளியே வரும். மஹா பெரியவா பேச்சுகளை ஏன்  அமுத வாக்கு, அருள் வாக்கு, தெய்வத்தின் குரல்  என்கிறோம்?  இதனால் தான்.

 போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்ய  வைக்கிறது.  அதன் காரணமாகவே  பின்னால் ரொம்ப  அவஸ்தை,  அவதிப்பட நேரிடும்.

தர்மம், நீதி, நியாயம்  எல்லாம்  சேர்ந்தால்  தான் பண்பு உண்டாகிறது. மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பிவிடும்.

பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். சுவற்றின் மேல் வேகமாக எறிந்த பந்து  எறிந்தவன்  முகத்தையே வேகமாக வந்து தாக்குகிற சமாச்சாரம்.  கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை; மற்றவர்களுக்கும் நன்மை இல்லை.

 பிதுர் காரியங்கள்  செய்வதில்  சிரத்தை வேண்டும். அமாவாசை என்பதால் தர்ப்பணம் பண்ண வேண்டும் என்று  ஏதோ ஒரு காரியம் நிர்ப்பந்தமாக செய்யவேண்டும்  என்கிற  எண்ணத்தைவிட  என்னைப்  பெற்றோருக்கும்  மூதாதையருக்கும், இன்று ஒருநாளாவது   த்ரிப்தியத  த்ரிப்தியத  த்ரிப்தியத  என்று  ரொம்ப எளிமையான  முறையில்  எள்ளும் நீருமாவது நன்றியோடு அளிக்கிறேன் என்ற  ஆர்வம் இருக்கவேண்டும்.  அதே போல்  தெய்வகாரியங்கள்  செய்யும்போது மனதில் பக்தி வேண்டும்.

நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல.  நாம் கேட்டு கிடைத்தது அல்ல,  கடவுளாக என் தரம் தகுதி பார்த்து அளித்தது, இது  கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம். நான் ஒன்றும் இல்லை, எல்லாம் அவனே, என்று  உணர்த்துவதும்    உள்ளே  அகங்கார  எண்ணத்தைப் போக்குவதும் தான் இதன் நோக்கமாகும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...