Saturday, April 30, 2022

DABOLKAR HOUSE

 


தபோல்கரின் இல்லம். ---   நங்கநல்லூர்  J K SIVAN 

நான் சமீபத்தில் பம்பாயில் இருந்து  ஷீர்டி செல்வதைப் பற்றி  சொன்னபோது நண்பர்கள்  பம்பாயில் ஒரு முக்கிய இடத்தைப்  பற்றி சொன்னார்கள். 

பாந்திராவில்  சாய் ஸத் சரிதா  எழுதிய   ஹேமாத்ரி பந்த்  என்கிற  கோவிந்தராவ் தபோல்கர்,1856-1929 வரை வாழ்ந்தவர்.  1911ல் அவர் கட்டிய  '' சாய் நிவாஸ்''  என்ற  வீடு   பாந்திரா மேற்கு பகுதியில்  செயின்ட் மார்ட்டின் தெருவில்  இருப்பதாகவும் அங்கே  உள்ளே  ஒரு பிரார்த்தனை கூடத்தில் ஷீர்டி பாபாவின் ஒரிஜினல்   முழு உயர படம் ஒன்று இருக்கிறது. அங்கே அந்த படத்தின் எதிரில்  உட்கார்ந்து தான்   தபோல்கர் சாய் சத் சரிதம் எழுதினார்  என்றும் அறிந்து மகிழ்ந்தேன்.   பாபா  தபோல்கருக்கு  கொடுத்த  ரெண்டு காசுகள், தபோல்கரின்  மூக்குக் கண்ணாடி,  பாபாவின் பாதுகை எல்லாமே  பொருட்காட்சியாக எல்லோரும் காண வசதி செய்திருக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை  யார் வேண்டுமானாலும் சென்று இலவசமாக தரிசிக்கலாம். அதை நிர்வகிப்பவர்  தபோல்கரின்  பேரன்  இன்னொரு தபோல்கர். 

தபோல்கர்  வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகஸ்தர்.  குஜராத்தில் ஆனந்த்  என்கிற ஊரில் உத்யோகம்.  காகா சாஹேப்   தீக்ஷித் என்ற நண்பர் அவருக்கு பாபாவின் லீலைகளை பற்றி ஒரு கடிதம் எழுதினத்திலிருந்து எப்படியாவது பாபாவை தரிசிக்க  ஆர்வமாக இருந்தது.  பம்பாய் குடியேற முயற்சித்தார். 

1910ல் பாபாவின் அருளால்,  தபோல்கர் எதிர்பாராதபடி,   பாந்திராவுக்கு மாற்றல் ஆகி வந்தார். ஷீர்டி விஜயம் செய்ய  30 நாள்  லீவ் கேட்டிருந்தார். கிடைத்தது.  

அக்காலத்தில்  ஷீர்டி ஒரு  வனாந்திர பிரதேசம். குக்ராமம் .  அங்கு என்ன விசேஷம் என்றால் பாபா ஒன்றே தான். அது ஒன்று போதாதா, உலகையே வளைத்துக் கட்டிப்போடாதா?   பல பாகங்களி லிருந்து பக்தர்கள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு தரிசனம் பெற வந்தார்கள்.  

தபோல்கர்  பாபா வுடன் எப்போதும் இருந்த   காகாசாஹேப்  தீக்ஷித்   மற்றும் நானாசாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் நெருங்கிய நண்பர்.  தபோல்கரை பார்க்கும்போதெல்லாம் நானா சாஹேப்  ''ஹேமாத் ,  ஷீர்டி போனீர்களா?   பாபா தரிசனம் ஆயிற்றா ? என்று கேட்பார் . ஒன்றி ரண்டு முறை கூறியும் முயற்சித்தும்  தபோல்கரால்  ஷீர்டி போகமுடியாமல் ஏதோ வேறு வேலைகள்  அவரது ஷீர்டி விஜயத்தை தள்ளிப்போட வைத்துக் கொண்டே இருந்தது. அப்போதெல்லாம்  ரயில் வசதி இருந்தது.  

தபோல்கர் படித்தவர். மராத்தி குறுநில மன்னர்கள் மஹாதேவ், ராம்தேவ் ஆகியோருக்கு மந்திரி. நிறைய ஆன்மீக புத்தகங்கள் எழுதியவர். கணக்கு வழக்குகள் பார்க்க புது முறை வகுத்தவர்.  பிற்காலத்தில் ஷீர்டி சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகள் பார்த்து நிர்வாகம் பார்க்கும்போது அவர் பெயர் ''ஹேமாத்ரி பந்த்'' . 

''என்னய்யா இன்னும் நீங்கள் ஷீர்டி போகவில்லையா?' என்று தபோல்கரிடம்  காகா சாஹேப் மீண்டும் ஞாபகப் படுத்தப்  பட,   அவரும்   ''சரி இப்போதே புறப்படுகிறேனே'' என்கிறார். ரயிலில் சென்று  தாதரில் இறங்கி மன்மத்  செல்லும் வேறு ரயிலைப்பிடித்து ஷீர்டி செல்ல உத்தேசம்.  ரயிலில்  அறிமுகமில்லாத ஒரு பிரயாணி ''சார் எங்கே போகிறீர்கள்?''  என்கிறான். '' தாதரில்  இறங்கி மன்மத் போகும் ரயிலைப்  பிடித்து ஷீர்டி போகிறேன்''.

''தாதரில்  இறங்கவேண்டாம். மன்மத் போகும் ரயில் அங்கே வராது'' என்று ஷீர்டி செல்லும்  சரியான வழியை கூற ஷீர்டி வந்து சேர்கிறார் தபோல்கர். நேராக  வாடா வுக்கு சென்று தங்கி  பாபாவை த் தேடி செல்ல எண்ணம்.  இங்கே தான் வாடா  அருகில் பாபா  ஒரு மசூதியில் இருக்கிறார் என்று யாரோ சொல்ல பாபாவை சென்று தரிசிக்கிறார். இப்போது போல் அப்போதெல்லாம் கூட்டம் இல்லை. பாபா அருகில் சென்று அவர் திருவடிகளை தொட்டு வணங்குகிறார். உடல் சிலிர்க்கிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏதோ ஒரு புதிய சக்தி மின்சாரம் போல் பாய்கிறது. வாழ்க்கையையே அக்கணம் மாற்றிவிட்டதோ ?

ஷீர்டி சென்றபோது பாபா  கல் இயந்திரத்தில்  கோதுமை மாவரைத்து  அந்த மாவை  ஷீர்டி கிராம எல்லைகளில் தூவினதைப்  பார்த்தார்.   அதன் மூலம் அந்த கிராமத்தில் காலரா பரவாமல் தடுத்தார் என்பது பாபாவின் எண்ணற்ற  அதிசயங்களில் ஒன்று.  அதை  எழுதி எல்லோருக்கும் தெரியப்படுத்த  வேண்டும் என்று  தபோல்கருக்கு  ஆசை.  மாதவ ராவ் தேஷ்பாண்டே  (ஷாமா)  என்பவரிடம் அனுமதி கேட்டார்.  ''எழுதப்பா'' என்று அனுமதியளித்தார் ஷாமா.

தபோல்கரிடம்   ஷாமா  ' ஹேமாத் , நீ என்னுடன் வா. பாபாவிடம் உன் எண்ணத்தை சொல்வோம். ஆசிபெறுவோம் '' .  

 பாபா முன் நின்று வணங்கினார்கள்.  மெதுவாக ஷாமா  ''குருநாதா,  தபோல்கர்  பாபாவின் லீலைகளை  புத்தகமாக எழுத ஆசைப் படுகிறார்.  உங்கள் ஆசிர்வாதத்தோடு துவங்க வந்திருக் கிறார்''

பாபா  தபோல்கரை  என்ற இறங்க பார்த்தார். ''ஹேமாத், ''என்று  அவர் பெயரைச் சொல்லி, ''கிட்டே வா''  என  கையில் ஜாடை காட்டுகிறார் பாபா. 
 ஹேமாத் அருகில்  நெருங்கி   சிரம் தாழ்த்தி குனிந்தார்.   பாபாவின் கரங்கள் தபோல்கரின்  சிரத்தை தொட்டு தடவுகிறது.   அருகில் இருந்து  ''உதி'' எனும் திரு நீற்றை அளித்தார்.  தபோல்கருக்கு கொள்ளை ஆனந்தம் ஆச்சர்யமும் கூட. எப்படி பாபாவுக்கு தனது பெயர்  ஹேமாத்ரி ''

 '' நீ  எழுது.   உனக்கு  என் ஆசீர்வாதம் உண்டு.  குறிப்புகள் கேட்டு எழுதிக்கொள்.  என் லீலைகளை  நீ சரியாக  எழுத்தில் வடித்தால் அதை, படித்தாலோ  சொன்னாலோ கேட்டாலோ, அறிபவர்கள் பாபங்கள், அறியாமை எல்லாம் அழியும்.  உலக வாழ்க்கையில்  கஷ்டங்கள் காணாமல் போகும்'' என்று அங்கீகரித்தார்.

வரும் வழியில்  ஷாமா,  '' ஹேமாத், (ரொம்ப நெருக்கமானவர்கள் அழைக்கும் பெயர்)  நீ அதிர்ஷ்டக்காரன். இனி நீ எழுதப்போவதில்லை,  பாபாவே  தனது அனுபவங்களை உன்னை  ஒரு கருவியாக கொண்டு   உன்  எழுத்தின் பலத்தால் பக்தர்களை இனி அணுகப்போகிறார்'' பக்தர்கள் மனதில்   உன் எழுத்து, பரிபூர்ண நம்பிக்கை ஊட்டும் காவியமாகப் போகிறது. '' என்றார்.

''பாபா போன்ற  குரு அவசியம் எல்லோருக்கும்  வாழ்க்கையில் தேவை என்று  உணர்ந்த   தபோல்கருக்கு அடிக்கடி  பாபாவின்  அரூப விஜயம்,  தரிசனம்  அவரது பாந்திரா இல்லத்தில் கிடைத்தது. அவர்  சத் சரிதம் எழுத  அவ்வப்போது அவரை வழி நடத்தி பாபாவே  உதவினார் என்பது எவ்வளவு பெரிய பாக்யம். 

1916ல்   தனது  சரித்திரத்தை எழுத  பாபா  அனுமதித்தார்.   தபோல்கர்  எழுதிய  சாய் சத் சரிதா  முதலில் மராத்திய கவிதை ரூபத்தில். 900 பக்கங்கள் கொண்ட மராத்தி புத்தகமாக  புத்தகமாக   மூன்று ரூபாய்க்கு கிடைத்தது. அப்புறம்  பல மொழிகளில் வந்தது.

1917ல்  ஒரு பௌர்ணமி  அன்று ஹோலி பண்டிகை.  வடக்கே ரொம்ப விசேஷமாக கொண்டாடு வார்கள்.  தபோல்கருக்கு  ஒரு விடியல்காலை கனவு.  பாபா  ஒரு சந்நியாசி மாதிரி இருக்கிறார்.  பேசுகிறார்:

''ஹேமாத் , நான் உன்னை பார்க்க வரேன். உன்னோடு தான் சாப்பிடப்போறேன்''. விழித்துக் கொண்ட  தபோல்கர்  ஆச்சர்யப்பட்டார். பாபா  சொன்னது  காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.   ஏழு வருஷமாக பாபாவுடன் தொடர்பு. அடிக்கடி  தரிசித்தவர். தியானம் செய்தவர். ஆனால்  இன்று தான் முதல் தடவையாக  ''உன் வீட்டுக்கு வரேன், உன்னோடு சாப்பிடறேன்'' என்ற வாசககம். மனைவியைக் கூப்பிட்டு ''ஒரு சந்நியாசி சாப்பிட வருகிறார்.  கொஞ்சம் அயிட்டம் எல்லாம்  கூடுதலாக சமைத்துவிடு ''என்றார்.

''எந்த சாமியார் வரப்போறார் , எப்போது ?'' என்று  கேட்டாள்  மனைவி.

ஹேமாத்   தான் கனவு கண்ட விஷயம் சொன்னார்.  அவளுக்கு சந்தேகம்.  ஷீர்டிலேருந்து  பாபா  பம்பாய்க்கு வருவது சாத்தியமா? எத்தனை பக்தர்கள்  ராஜ போகமாக அவருக்கு நைவேத்யம் சமர்ப்பிக்கிறார்கள், இங்கே வந்து நம்ம வறட்டு சமையலையா பாபா  சாப்பிடப்
போறார்?''
''இல்லேம்மா, அவர்  நேர வரமாட்டார், ஒரு வேளை  வேறே யார் ரூபத்திலாவது வருவார்''
கொஞ்சம் கூட  சமையல் பண்றதாலே நமக்கு என்ன நஷ்டம்?''

பகல் வேளை தாண்டிவிட்டது. ஹோலி பண்டிகையாதலால்  சிலர் சாப்பிட  வந்திருந்தார்கள்.   இலை போட்டாகிவிட்டது. இலைகளை சுற்றி  ரங்கோலி வண்ண வண்ணமாக  காட்சி அளித்தது.  ரெண்டு வரிசையாக  சாப்பிட உட்கார்ந்தார்கள்.  வீட்டில் உள்ளவர்கள், விருந்தாளிகள்  எல்லோரும்  அமர்ந்தாகிவிட்டது. எங்கே அந்த சந்நியாசி??  காத்திருந்து யாரும் வராததால்,  வாசல் கதவை சார்த்தியாகிவிட்டது.  பரமாறியாகிவிட்டது. அன்னசுத்தி  பரிசேஷணம் ஆகி, போஜனம் ஆரம்பமாகிவிட்டது.  வாசலில் மாடிப்படியில் படிக்கட்டில் யாரோ நடக்கும் சத்தம்.....
வாசலில் சென்று கதவை திறந்தார் ஹேமாத்.   அலி முஹம்மது, மௌலானா  இஸ்மு முஜாவார்  ரெண்டுபேரும் தெரிந்தவர்கள்.   உள்ளே  போஜனம் நடப்பதை பார்த்து அவர்கள்  இடையூறுக்காக  வருந்தினார்கள்.

''ஹேமாத்,  போங்கோ  பாதிலே எழுந்து வரும்படியாக பண்ணிட்டோம். ஸாரி , போய் சாப்பிடுங்கோ, மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். இந்தாங்கோ, இதை வைத்துக்கொள்ளுங்கள், அப்புறம் இது பற்றி பேசுவோம்  என்று சொல்லி ஒரு பெரிய பார்சலைக்   கொடுத்தார்கள்.   தபோல்கர்  பொட்டலத்தைப்  பிரித்தார்.  உள்ளே  ஒரு  பாபாவின் பெரிய   படம்.  பாபாவின் கால்களுக்கு நமஸ்காரம் செய்து கண்ணில் ஒற்றிக்கொண்டார் ஹேமாத்.

''அலி எங்கே கிடைத்தது இந்த படம் உங்களுக்கு?''

''என் வீட்டில்  தான் இருந்தது.  ஒரு  துறவி  கொடுத்தது.  அப்புறம் விவரம் சொல்றேன், உள்ளே  போய் முதல்லே  சாப்பிடுங்க'
விசேஷ  விருந்தாளியாக   சந்யாசிக்காக போட்ட  இலை  முன்னால்  அந்த பாபா படத்தை வைத்துவிட்டு  ஹேமாத்  சாப்பிட உட்கார்ந்தார்.
அந்த நேரத்தில் ஷீர்டியில் என்ன நடந்தது தெரியுமா?
பாபா  அருகே  ஷாமா.
அவரிடம்  பாபா ''ஷாமா,  அப்பாடா  என்ன ருசியான விருந்து.  பம்பாயில்  ஹேமாத் வீட்டில்  வயிறு நிறைய சாப்பிட்டேன்'' என்கிறார்.
ஷாமாவுக்குப்  புரியவில்லை. அப்புறம் ஒருநாள்  ஹேமாத் ஷீர்டி வந்தபோது ஹோலிபண்டிகை  அன்று நடந்த விஷயத்தை  விவரித்தபோது தான் பாபா சொன்னதன் அர்த்தம் புரிந்து. அசந்து போனார்.

இந்த சம்பவம் நடந்து வெகு நாட்களுக்கு பிறகு  ஹேமாத்  அலி முஹம்மதை சந்தித்தார். அப்போது  ஆளுயர  சாய்பாபா படத்தை பற்றி சொன்னார்.  இதன்  பின்னால் ஒரு சரித்திரம் இருக்கிறது. சுருக்கமாக  சொல்கிறேன்.

சில நாட்கள்  முன்பு, அலியின் மைத்துனன் நோய்வாய் பட்டான்.       அலியிடம் எவனோ ஒரு மாந்த்ரீகன்  ''வீட்டிலுள்ள  சாமியார்கள் படங்களை கழட்டி சமுத்திரத்தில் எறிந்தால்  வியாதி குணமடையும்'' என்று சொல்லிவிட்டான்.  சும்மா இருப்பார்களா  அலியின் வீட்டில்?.  வீட்டில் இருந்த  அத்தனை  மஹான்கள்  படங்களும் காணாமல் போய்விட்டது ஆனால்  ஆச்சர்யமாக   ஸாயிபாபா  படம் மட்டுமே  சுவற்றில் தொங்கியது.  

அந்த  படம்  சில வருஷங்களுக்கு முன்பு  அப்துல் ரஹ்மான் என்கிற பாபா பக்தர் பக்கீர்,  அலி முஹம்மதுவுக்கு அளித்த   சாய்பாபா படம்.  அதை என்ன  செய்வது?  யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்த பொது  ஹேமாத்  ஞாபகம்  அலிக்கு வந்தது.   ஸாயிபா  முழு உருவத்துடன்  பார்சல்  கட்டப்பட்டு,   ஹேமாத்திடம் வந்தார்.  அதை  எதிரில் வைத்துக் கொண்டு தான்  மேலே  ரெண்டாவது  பாராவில்  சொன்னபடி  சாய் சத் சரிதம்   தபோல்கரால் எழுதப்பட்டது.

 கீதையில் கிருஷ்ணன் சொல்வது தான் நடக்கிறது. ' அநீதி, அக்கிரமம், 'தீயசக்திகள் பரவி தர்மம் நேர்மை ஆகியவை குறைந்து தவிக்கும்போது நானே வருவேன் அவற்றை   அழிப்பேன். தர்மம் நிலைநாட்டுவேன்'' என்பது தான் ஒருவகையில் ஷீர்டியில் பாபாவின் அவதாரமோ?   

ஷீர்டி ஹமத் நகர் ஜில்லாவில், கோதாவரியை கடந்து கோபர்காவ்ன் வழியாக நிம்காவ்ன் நோக்கி நடந்தால் தெரியும் கிராமம் என்று அக்காலத்தில் அடையாளம் சொல்வார்கள்.  இப்போது கார்,  பஸ், தனியார் துறை வாகனங்கள் பெருகிவிட்டன.  பம்பாயிலிருந்து  300 கிமீ. தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கிடக்கிறார்கள். வழியெல்லாம்  பல இடங்களில் நல்ல   சைவ  உணவகங்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...