Sunday, December 18, 2022

music season

 


விண்ணுலக  மார்கழி உற்சவம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

டிசம்பர் மதம் வந்துவிட்டால் நமது தமிழகத்தில்  கூடவே  பக்கவாத்யமாக வருவது குளிர், விட்டு விட்டு மழை, பனி,  விடிகாலையில்  கோயில்களில்  சூடாக பிரசாதம்.சங்கீத நிகழ்ச்சிகள்  எங்கும் சபாக்களில்  மார்கழி உற்சவமாக. நடு  நடுவே  கிரிக்கெட், கால் பந்து உலகளவு போட்டிகள் இன்னும் எத்தனை எத்தனையோ.கல்யாண பத்திரிகைகள் போக்குவரத்து கிடையாது.

பூலோகத்தில் அதுவும் நம் தமிழகத்தில் நடப்பதை எல்லாம் அப்பப்போது  இங்கே வந்து சகல விஷயங்களையும் அறிந்து மேலே விண்ணுலகத்தில் சொல்வதற்கு நாரதர் எப்போதும் ரெடி. ஆகவே  அங்கேயும்  கொண்டாட்டம்  நடக்கும்.

விண்ணுலகத்தில் ஒரே கொண்டாட்டம்  என்றால்  நாம் இங்கே  மண்டபம்  வாடகைக்கு பிடித்து, கலர் லைட்  போட்டு, காதைச் செவிடாக்க  ஸ்பீக்கர் செருகி, சாப்பாடு, போட்டோ, வீடியோ  தடபுடல் எதுவுமில்லை. அங்கே  யாருக்குமே  பசி தாகம் கிடையாது. எங்கே வேண்டுமானாலும்  பறந்து போவார்கள், ஓலா   ஊபர்  தேடமாட்டார்களே.  கார் செருப்பு எதுவும் தேவை இல்லை.  ஆவி ரூபத்தில் எல்லோரும்  பொன்னாக தகதக  வென்று மின்னுபவர்கள். அவர்கள் பேசும் பாடும்  பாஷை நமக்கு புரியாது. ஆகவே  எங்குமே  நம்மைப் பொறுத்தவரை அமைதி தான்.
 
தேவேந்திரன் சங்கீத ரசிகன்.   தேவலோக  சபா  செக்ரெட்டரி.  எல்லோரும் வந்து  இந்திரன்  மாளிகையில்  கூடினார்கள்.

''தேவர்களே, இந்த வருஷம் மார்கழியை விமரிசையாக இங்கே  கொண்டாட எல்லோரும் ஐடியா சொல்லுங்கள்'' என்று கேட்டான்  இந்திரன்.

''திருப்பாவை  30பாசுரங்களையும்  நான் யார் யார் படவேண்டும் என்று சொல்கிறேன். MLV,  அரியக்குடி, பாடட்டும். கூடவே  கதிரி கோபால்நாத், வயலின்  செளடையா,  புல்லாங் குழலில் TR மாலி, சரப ஸாஸ்த்ரி , நாதஸ்வரத்தில்  TN  ராஜரத்தினம் பிள்ளை , காரு குறிச்சி,  மாண்டலினில்  ஸ்ரீனிவாஸ்,    மிருதங்கத்தில்  பாலக்காடு மணி அய்யர் சேர்ந்து கொள்ளட்டும்'' என்கிறார் சுப்புடு ஸ்டைலில்   TKC  முதலியார்.

''பலே பலே '' என்கிறார்  ராஜாஜி.  அனந்தராம  தீக்ஷிதர்  உபன்யாசம் தினமும் வைப்போம் அவர் ஸ்லோகங்கள் கேட்டு ரொம்ப நாளாயிற்று''  

''எனக்கு  MSS  வைஷ்ணவ ஜனதோ ,   மைத்ரீம் பஜே...  பாடி கேட்கவேண்டும்.. அதையும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்  என்கிறார்  காந்தி தாத்தா.

இந்த மார்கழி வைபவத்தை  ஒரு காவ்யமாக  பாரதியார்  இனிய தமிழில் வடிக்கட்டும்  என்கிறார் வ.வு.சி.

நேரு  புரியாமல் சிரித்து கை  தட்டுகிறார்.  சரோஜினி தேவி  அவரைப் பார்த்து முகத்தை சுளிக்கிறார்.

ரைட் ஆனரபிள்  ஸ்ரீனிவாச சாஸ்திரியார்  ஆங்கிலத்தில்  ராமாயணம் நிகழ்ச்சி தினமும் ஒரு  மணிநேரம்  நடக்கவேண்டும் என்கிறார்  CP  ராமசாமி அய்யர்.   சோவின்  நாடகங்கள்  ஒரு சிரீஸ் நடக்கவேண்டும் என்று என் ஆசை ..... குரலை உயர்த்துகிறார்  கல்கி கிருஷ்ணமூர்த்தி

அருமையான குரலில்  பாட  ரெண்டு பேர்  இருக்கிறார்களே  அவர்களை  ஏன் விட்டுவிட்டீர்கள்? ஒரு ஜோடி கணவன் மனைவி.   S G  கிட்டப்பா   K B S   அவரகள் பழைய  நாடக  மேடை பாடல்கள் நடுநடுவே சில நாட்கள் பாடவேண்டும் என்கிறார்.  N S  கிருஷ்ணன்.

பத்மினி  அம்மா டான்ஸ் ப்ரோக்ராம்  நிச்சயம் இருக்க வேண்டும்  என்கிறார் TMS   ஐயா.

இதெல்லாம்   போதாது  MKT  பாகவதர்,  P U   சின்னப்பாவும்  பாடவேண்டும்  என்கிறார் மதுரை மணி அய்யர்.

நாரதர்  எல்லாவற்றையும்  எழுதிக்கொண்டு   ஒரு  லிஸ்ட் தயார் செய்ய, இன்னும்  பல நிகழ்ச்சிகளை  GNB   முடிவு பண்ணுகிறார்.

'' நீங்களும்  அஷ்டபதிகள் பாடவேண்டும் என்று   ருக்மணி தேவி  பாலமுரளியை கேட்டுக் கொள்ள  ' ஆஹா  அதற்கென்ன  வைகுண்டத்தில் கிருஷ்ணன் எதிரிலேயே  பிருந்தாவன  சங்கீதம் ஜோராய் ஒலிக்கட்டும்''   என்று  ஆமோதிக்கிறார்  ஜெயதேவர்.

ஒவ்வொரு நாளும்  நிகழ்ச்சி முடிவில் பூலோகத்தில்  பாரத தேச ஒற்றுமைக்கு  எல்லோரும்  சேர்ந்து  தாகூர்  இயற்றிய  ஜன கண மன  பாடவேண்டும் என்பது என் அபிப்ராயம் என்கிறார் சர்தார் படேல்.  தாகூர்  சிரித்துக்கொண்டே  தாடியை செல்லமாக தடவிக் கொடுக்கிறார்.

சீர்காழி ஸார்  கணீரென்று பாட  நாம்  எல்லோரும் சேர்ந்து கொள்வோம்  என்கிறார்  D K  பட்டம்மாள்.  அப்படியே  என்று எல்லோரும்  கோரஸ்..

மொத்தத்தில்  மார்கழி முப்பது நாளும்  கலை நிகழ்ச்சிகள் அற்புதமாக  விண்ணுலகில் நடை பெறப் போகிறது.  இதில் என்ன முக்கிய விஷயம் என்றால்.

1.  இங்கு போல் அங்கே  பொங்கலுக்கு கும்பல் சேராது.  
2.  கொரோனா, தொற்று, மழை,குளிர், பனி  தொந்தரவு, மாஸ்க்  பெட்ரோல் டீசல்  புகை நாற்றம்   பார்க்கிங்  ப்ராபளம் எதுவும் இல்லை.  
3. இரவு பகல்  இடைவேளை இல்லை.
4. டிக்கெட், முன் வரிசை ஒதுக்கீடு என்று எதுவுமில்லை. காற்றில் எங்கும்  கானம் வியாபிக்கும்,  பொன்வண்ணத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்லோருக்கும் சந்தோஷத்தை அளிக்கும். ஒவ்வொருவர் கண்ணுமே  டிவி, யூட்யூப் தான்.
5. மார்கழி மாதம் முழுதும்  நரக வாசிகளுக்கும், மாஜி அரசியல்வாதிகளுக்கும், கூட,   நிகழ்ச்சிகளை  அனுபவிக்க  இலவச அனுமதி உண்டு. பேச மட்டும் அனுமதியில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...