Monday, December 12, 2022

DEVAN

 தேவனின்   ''சி.ஐ.டி  C.I. D  சந்துரு.

நங்கநல்லூர்  J K SIVAN 

சில மிக  அற்புதமான  மனிதர்கள், ஏனோ , இறைவன்  சங்கல்பத்தால், பூமியில் உலக வாழ்க்கையைச்  சில காலம் மட்டுமே  வாழ்ந்து   இளம் வயதிலேயே  மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதில் ஒரு அதிசயம் இருக்கிறது.  இப்படிப்  பட்டவர்கள்  அமரர்களாக, என்றும்  மறக்க முடியாதவர்களாக, நெஞ்சில்  நிறைந்த வர்களாக  மாறிவிடுகிறார்கள்.  ஆதி சங்கரர், விவேகானந்தர், மஹாகவி பாரதியார்  போல  இன்னும் எத்தனையோ  மாமனிதர்கள். 

43-44 வயதே  வாழ்ந்த  திருவிடைமருதூர்க்  காரர்  ஸ்ரீ R   மஹாதேவன்  B.A.   என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால்  ''அமரர்''  எழுத்தாளர்  ஆனந்த விகடன் ஆசிரியர்   தேவன்'' என்றால்  சகலரும் அறிவார்கள்.
கல்கியால்  ஈர்க்கப்பட்டு தனக்கென ஒரு பாணியை உரிமையாக்கி  அவர்  படைத்த நாவல்கள் , கதைகள், கட்டுரைகள்  பல லக்ஷக் கணக்கான  தமிழர்களால்  திரும்பத்  திரும்ப படிக்கப்படுபவை.   அவரது  மிஸ்டர் வேதாந்தம், துப்பறியும் சாம்பு, கோமதியின் காதலன், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்  ராஜத்தின் மனோரதம், ஸ்ரீமான்  சுதர்சனம்,கல்யாணி, லட்சுமி கடாக்ஷம்  போன்ற பல   புத்தகங்களை பல முறை படித்து ரசித்தவன் நான்.

சி.ஐ டி. சந்துரு என்ற  ஒரு நாவல் கடந்த ஒரு வார காலத்தில் நான் ஓய்வில் இருந்த போது  படித்தேன்.  இதற்கு முன்பு  ரெண்டு மூன்று முறை   பல வருஷங்களுக்கு முன்பு படித்த நாவல் தான்.  என்றாலும்  ஆரம்பித்தால்  கையிலிருந்து புத்தகத்தை  கீழே  வைக்க முடியாத அளவு, ''அப்புறம் என்ன, ஐயோ  அப்புறம் என்னாச்சு?'' என்று  ஆர்வத்தைக்  கிளப்பிக்  கொண்டே  விறுவிறுப்பாக செல்லும் ஒரு ஈடற்ற  தமிழ் துப்பறியும் நாவல். அற்புதமான எளிய  தமிழில்  சொல்லாற்றல்.  540 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரே நாளில்  படித்து முடித்தேன்.  கதை முழுக்க ஆசாமிகளின்   தேடல்,  ஓட்டம், அடி  பிடி  தான், சிலந்தி வலை பின்னுவதைப் போல  தேவன்  இந்த துப்பறியும் நாவலை  பின்னி இருக்கிறார். அதில் வரும் அத்தனை பாத்திரங்களும் ஒன்றுக்கொன்று  சளைத்தவை அல்ல.  விசித்திர குணாதிசயம்  கொண்டவர்கள்.  விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகுமே தவிர   தளர்வற்ற   ஆர்வம் குன்றாத நடை.

 சந்துரு  ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ். முதல் பாரா முதல்  கடைசி பாரா வரை  த்ரில்லிங்குக்கு குறைவே இல்லை.  

செங்கல்வராய பிள்ளை  ஒரு கோடீஸ்வரர். மலயாவிலிருந்து நிறைய  பணம் சேர்த்து, (நேர்வழியில் இல்லை) சென்னையில் தேனாம்பேட்டை மாளிகை கட்டிக்கொண்டு வாழ்கிறார்  பிள்ளையோடு  மலாயாவில்  சிங்கப்பூரில்  பிள்ளையோடு  இத்தகையை  நிழல்  வியாபாரத்தில் சம்பந்தப்பட்ட  சுந்தரம் பிள்ளை,  தாமோதரன், சந்தானம், மதுரநாயகம்,கணேசன்  போன்ற  நிழலான  ஆசாமிகள் அவர் சொத்தை  அபகரிக்க  சென்னையில்  ஆட்டம்  போடுகிறார்கள்.    சில  ரகசிய தஸ்தாவேஜ்கள், சாவிகள்  ஒரு தோல் பையில்  பிள்ளையிடமிருந்து  பறிபோக, அந்த  தோல் பை பல கைகள் மாறி, மூன்று வித குழுக்களாக  ஆசாமிகள் ஒருவரை ஒருவர் துரத்தி, விரட்டி, ஜெயித்து, தோற்று. ஆள் கடத்தல்,  ஆள் மாறாட்டம் அநேகம்.  அபாரமான உத்தியில் தேவன்  சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக  அடுக்குகிறார்.  சம்பவங்கள்  லிங்கி செட்டி தெரு  காலி வீடு,  கோவிந்தப்ப  நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை பங்களா,  சிந்தாதிரி பேட்டை  வீடு, சுந்தரம் பிள்ளை தாம்பரம் பங்களா, புரசைவாக்கம், என்று  சுற்றி சுற்றி  நிகழ்ந்து அக்காலத்திய  சென்னையின்  முக்கிய இடங்களை போட்டோ பிடித்து காட்டுகிறது.

1955-56 களில் ஆனந்த விகடனில் ஒவ்வொரு வாரமும் எத்தனை லக்ஷம்  தமிழர்கள்  ஆர்வமாக  வாரா வாரம் இந்த  தொடரை படிக்க காத்திருந்தார்கள் என்பது எனக்கு  சிறிய வயதில் தெரியும்.  நாலணா கொடுத்து  ஆனந்த விகடன்  பிரதியை வாங்க  காத்திருந்து,  ஒவ்வொரு  புதன், வியாழன் வந்த அன்றே   வாங்கி ள்.  அனைத்து பிரதிகளும்  ஒரே நாளில் விற்றுப் போய்விடும்.  

 கோபுலுவின்  அற்புத  ஓவியங்கள்  சந்துரு மற்றும்  நாயர், தம்பி, இந்திரா, சுந்தரம் பிள்ளை, சங்கரன், தாமோதரன்  போன்ற  பாத்திரங்களை அற்புதமாக உயிரூட்டி தத்ரூபமாக  தேவனின் கற்பனையை கண்முன்  காட்டுபவை. கோபுலுவின் சித்ரம் ஒரு தனி ரகம். கல்கிக்கு  மணியம்  மாதிரி  தேவனுக்கு கோபுலு. 
  
ஒவ்வொரு தமிழ் தெரிந்த வாசகரும் படித்து இன்புற வேண்டிய  ஒரு துப்பறியும் நாவல்   சி.ஐ.டி  சந்துரு.    தேவன் காலமாவதற்கு முதல் ஆண்டு 1955ல் வெளிவந்த நாவல்.  மனிதர்களின் ஸ்வபாவம், குணம்,  மனநிலை, அவர்களது  செயல் பாடுகள், அனைத்தையும் படம் பிடித்து   கண் முன் காட்டும் தேவனின்  எழுத்தில், சாதுர்யம்,  ஹாஸ்யம், கோபம், பக்தி, நீதி நெறி அக்காலத்திய  வாழ்க்கை முறை,  போக்குவரத்து வசதிகள்,(அநேகர்  ரிக்ஷா வண்டியில் தான்  பிரயாணம் பண்ணினார்கள், பஸ் , நிறைய  பக்கங்களில் ஓடுகிறது.)    பாத்திரங்களின்  சொல்லாடல்  சமயோசிதமாக, ஹாஸ்யத்தோடு  இணையற்ற  தனித்த தன்மையோடு  மிளிர்கிறது.   எண்ணற்ற   சம்பவங்களை  பல முடிச்சுகளாக  கட்டி,  சிக்கல்களை  சந்துரு  ஒவ்வொன்றாக அவிழ்ப்பது போல  காட்சிகள்  ஜோடனை செய்யப்பட்டுள்ளன.

 தேவனின் உன்னத இந்த படைப்பை  அனைத்து தமிழ் அன்பர்களும் ஒருதரமாவது படித்து  நான் பெற்ற  இன்பத்தை பெறலாம்.  இந்த புத்தகம்  கூகிளில்   தேடினால்  இலவச மாக  படிக்க  கிடைக்கிறது.  முகநூலில்  PDF  புத்தமாக  இணைக்க  வழியில்லை.   வாட்சப்பில் இணைத்துள்ளேன். 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...