ஹனுமத் ஸ்மரணாத் பவே - #நங்கநல்லூர்_J_K_SIVAN
நேற்று மார்கழி மாசம் அமாவாஸ்யை திதி. ஒரு மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் அமாவாசை திதி அன்று அஞ்சனை பெற்றெடுத்த ஆஞ்சநேயன் என்றும் சிரஞ்சீவியாக நமக்கு அருள் புரிகிற ராம பக்தன். வாயு புத்ரன். அவன் தான் நம்முள் பிராண வாயு வாக வும் இயக்குபவன். பிராண வாயு உயிரைக் காப்பது என்பதால் தானே சஞ்சீவி மூலிகை மலையையே பெயர்த்து படுவேகத்தில் லக்ஷ்மணன் மற்ற வானரர் கள் உயிரைக் காப்பாற்றியவன். ப்ராணத்யாகம் செய்யத் துணிந்த சீதையின் முன் தக்க சமயத்தில் தோன்றி தன்னை ராம தூதன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு அவள் உயிரைக் காப்பாற்றியவன். அதே சமயம் ராவணன் உயிரை ராமன் வந்து அவன் உடலை கொன்று விளக்குவதற்காக ''விட்டு வைத்த வன்''.
ராவணனின் உயிரை ராமன் கையால் போக 'விட்டு' வைத்தவன். கம்பன் ஆஞ்சநேயனை எப்படி அடையா ளம் காட்டுகிறான்? என்ற அற்புத பாடல் அனைவரும் அறிய வேண்டியஒன்று. தமிழனுக்கு நாவினிக்க சொல்ல ஒரு நல்ல கவிதை இது. எளிமையான கவிதை. எல்லோருக்கும் புரியும் வார்த்தை ஜோடனை. நீங்களும் மனனம் செய்து குழந்தைகளையும் மனப்பாடம் செய்ய வைக்கலாம்.
''அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்
கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு அருமையான பாடல் இது. இது மாதிரி எழுத இன்னொருவன் பிறக்க வேண்டும். ஆஞ்சநேயரை வணங்கி துவங்கிய துதிப்பாடல்.
அஞ்சு என்றால் ஐந்து, பயம் என்று ஒரு அர்த்தம். அஞ்சு என்றால் 'பஞ்ச' என்ற சமஸ்க் ரித ஐந்து. ஏன் ஐந்து? இந்த பிரபஞ்சமே பஞ்ச பூதங்களின் சேர்க்கை. அப்பு, வாயு, தேயு, ஆகாசம், ப்ரித்வி, என்ற நீர், நெருப்பு, ஆகாயம், மண்,காற்று. அதில் அனுமன் வாயு புத்ரன். காற்றின் மைந்தன். அஞ்சிலே ஒன்றான வாயு பெற்ற மகன்..
அனுமன் என்ன செய்தான்?. ராமனுக்காக இலங்கை யில் சீதையைத் தேட சமுத்ரத்தை யே தாண்டினான் .வானரம் என்றால் தாண்டியது என்பதை விட ''தாவி யது'' என்று சொல்வது பொருத்தம் என்பதற் காக
''அஞ்சிலே ஒன்றைத் தாவி'' என்று எழுதி னார் கம்பர். அஞ்சிலே ஒன்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர், சமுத்திரம். கடலை ஹனுமார் தாண்டி இலங்கையை அடைந்ததை சொல்கிறார். அடுத்த வரியில் இன் னொரு பஞ்ச பூதத்தை அறிமுகப்படுத்துகிறார் கம்பர். ''அஞ்சிலே ஒன்று ஆறாகி'' ஆறு என்றால் நம்பர், நதி என்ற அர்த்தத்தோடு ''வழி'' என்றும் அர்த்தம். ஆற்றுப்படை என்றால் ஒரு இடம் செல்ல, ஒருவரை தேடிப்போக வழி சொல்வது. முருகனைத் தேடிச் சென்று துன்பம் நீக்க போவது நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை, இங்கே பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் அனுமனுக்கு வழியாக அமைந்தது.
ஹனுமான் வான வீதியில் பறந்து இலங்கை சென்றான் என்கிறார் கம்பர்.
எதற்கு ஹனுமான் கடலைத் தாண்டி வானவீதியில் இலங்கைக்கு பறந்தான்? ''ஆருயிர் காக்க ஏகினான்''. ராமனை எதிர்பார்த்து அவன் வரவில்லையே. இனி உயிரை விடுவோம் என்று ப்ராணத்யாகம் செய்ய முடிவெடுத்த சீதா தேவியின் ஆருயிர் காக்க என்று ஒரு பொருள். இன்னொன்று , ராமனின் ஆருயிரான சீதையைக் காப்பதற்கு என்று ஒருபொருள் ''அம்மா, உனக்கு இந்த ராவணாதி ராக்ஷசர்களால் ஒரு துயரமும் வராது'' நாங்கள் ராமனோடு வந்து உன்னை மீட்போம் என்று 'புத்துயிர் நம்பிக்கை' அளிக்க என்று அருமை யான அர்த்தம் உள்ளே மிளிர்கிறது.
ஏன் ஹனுமார் பறந்தார்? ஸ்ரீ ராமனுக்காக. ''ஆரியர்க் காக'' என்ற சொல் அற்புதமானது. ஆரியன் திராவிடன் என்ற மட்டரக வித்யாசம் இங்கே வேண்டாம். அதற்கு இங்கே இடமில்லை. ஆரியன் என்பது சமஸ்க்ரிதத்தில் மதிப்பு மிக்க, மரியாதைக்குரிய, மேதகு, மேன்மையா ன என்ற பொருள் தரும் சொல். அத்தனைக்கும் பொருத்த மானவன் ராமன் இல்லையா? இலங்கை நம் ஊரல்ல, அயலான் ஊர். ராமனின் தர்ம, நியாய ராஜ்ஜியம் அல்ல, அதற்கு மாறான ராவண தேசம் என்கிறார் கம்பர். சீதையை சாதாரணமாக பெயரிட் டுச் சொல்லவில்லை கம்பர். அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு என்கிறார். என்ன அக்ஷர லக்ஷ வார்த்தை! பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமித்தாய் பெற்றவள், தந்தவள், சீதா தேவி என்ற அவள் சரித்திரம் அங்கே பளிச்சிடுகிறது.
சும்மா போய் பார்த்துவிட்டு வர ஹனுமான் என்ன நம்மைப் போன்றவனா? ராவணனுக்கு தான் யார் என்று காட்டுவதன் மூலம் ராமனின் பலத்தை அறிவிக்க வேண்டாமா? ஒரு சாதாரண தூதுவனாக பணியாள னாக வந்த எனக்கே எவ்வளவு சக்தி பார்!'' என்று காட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை, தீயை, இலங்கை மாநகரில் சீதை இருந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் மூட்டி பரப்பிவிட்டு ராமனிடம் சீதை இருக்கும் இடத்தைச் சொல்லப் பறந்தவன் ஹனுமான். இலங்காபுரிக்கு அக்னிப் பரிசை ஹனுமான் தந்ததை
கம்பர் ''அஞ்சிலே ஒன்றை வைத்தான்'' என்கிறார். பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயை மூட்டி சேதம் விளைவித்தான் என்கிறார்..
இப்படி சக்தி கொண்ட சிரஞ்சீவி ஹனுமா, உன்னை வணங்குகிறோம், எங்களை காத்து ரக்ஷிப்பாயாக
என்று சாஷ்டாங்க நமஸ்காரம் நம்மை செய்ய வைத்து தானும் வணங்குகிறார் கம்பர்.
No comments:
Post a Comment