Monday, December 19, 2022

A GREAT SPIRITUALIST


 இன்னொரு கி.வா.ஜ . #நங்கநல்லூர்_J_K_SIVAN



நமது வாழ்வில் சில சமயம் சில அபூர்வ மனிதர்களை சந்திக்க நேர்வது நமது அதிர்ஷ்டம். சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் மதுராந்தகம் ஏரியும் , அதை காப்பாற் றிய ஏரி காத்த ராமரும் இருந்தாலும், அந்த ஊரில் இன்னொரு அதிசயம் ஒரு மனித உருவில் உள்ளதே தெரியுமா?. விண்ணையும் மண்ணையும் தன்னில் அடக்கி '' குறுகத் தரித்த'' குரள் போன்ற உடம்பு. அதற்குள் எத்தனையோ ஆன்மீக சுனாமிகள் பொங்கி எழுந்து கொண்டே இருக்கும் . வேதம், குறள், கண்ணதாசன் தத்துவ பாடல்கள், கம்பன், நாலாயிர திவ்ய பிரபந்த ஆழ்வார்கள். இன்னொரு கி.வா.ஜ என சொல்லக்கூடிய திடீர் திடீர் சிலேடைகள், வார்த்தை ஜாலங்கள், (ஆங்கிலத்தில் PUN) ஆகியவற்றை வாரி வழங்குபவர். அவற்றை கேட்டு என்னை மறந்து வாய் விட்டு சிரித்து அனுபவித்த நேரங்கள் அதிகம். அவருக்குள் ஷேக்ஸ்பியர், கம்பர் வள்ளுவர் ஆழ்வார்கள் எல்லோரும் இருந்து அடிக்கடி வாக்கில் இனிமையாக, சாதுர்யமாக தலை காட்டுவார்கள்.
எண்பதை நெருங்கினாலும் சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் அதிகமாகிக் கொண்டே வரும் எளிய வைணவ திலகம் மதுராந்தகம் திருமால் கவிச்செல்வர் ஸ்ரீ ரகுவீர பட்டாச் சாரியார். எனது இனிய நண்பர். பல புத்தகங்கள் எழுதியவர். மாதாமாதம் அருள் மலர் ஒன்றை வெளியிடுபவர்.

வெடுக் வெடுக் என்று பேசும் இவர் மதுராந்தகத் திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள கடுக்களூரில் உதித்தவர். இனிய குரலில் இன்னிசை வேறு. பிரசங்கம் செய்யும்போது குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் அடக்கி பளிச் சென்று எடுத்துச் சொல்லும் பாங்கு. முதலில் அவரைப் பார்த்தபோது அடடா இவரை இதுவரை தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று ஏங்க வைக்கும் அளவிற்கு ஒரு ஈர்ப்பு சக்தி கொண்டவர்.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவை டிரஸ்ட் நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கு கொண்டு பரிமளிக்கச் செய்பவர்.
நேற்று இவரது இல்லத்துக்கு நண்பர்களோடு சென்றேன். அவரது வீட்டில் அவர் தியானம் செய்யும் சிறிய அறையில் ஒரு பீடத்தின் அடியில் ரெண்டு கோடி ராம நாமங்கள் பிரதிஷ்டை சிறிய மேடை எழுப்பி அதன் மேல் ஏரிகாத்த ராமன் படம், அவனது பாதங்கள். அந்த சிறிய அறையில் சத் சங்க பஜன், உபன்யாசம் வேத பாராயணம் எல்லாம் நடக்கும்.சில வருஷங்க ளுக்கு முன்பு நானும் அங்கே ராமனைப் பற்றி பேசும் பாக்யம் கிடைத்தது. முரளி தர ஸ்வாமிகளுக்கு என்னுடைய முதல் பிரதி ''ஐந்தாம் வேதத்தை'' அந்த அறையில் அவர் திருக்கரத்தில் அளித்து திருப்பாதத் தை வணங்கிய பாக்கியமும் உண்டு.

நேற்று ரகு வீர பட்டாச்சாரியார் எங்களை ஏரி காத்த ராமன் ஆலயத்தில் உதித்து மார்கழி 3ம் நாளில் ராம தரிசனம் பெற்றது அடுத்த பதிவில்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...