பாட்டி சொல் தட்டாதே.. #நங்கநல்லூர்_J_K_SIVAN
மதுரம் பாட்டியை மறக்க முடியவில்லை. அம்மாவின் பெரியம்மா அவள். எனக்கு ஒன்பது பத்து வயாசாகும் போது அவளுக்கு 75-80 வயது இருக்கலாம். நாங்கள் வசித்த சூளைமேட்டுக்கு புரசைவாக்கத்திலி ருந்து
நடந்தே வருபவள். புரசைவாக்கத்திலிருந்து பூந்த
மல்லி சாலையை கடந்து இடது பக்கம் கீழ்ப்பாக்கம் பெரிய ஆஸ் பத்திரியை ஒட்டி இறக்கத்தில் சேத்துப் பட்டு ஸ்டேஷன் அருகே ஆற்றின் நடுவே இருந்த குட்டி பிரிட்ஜ் மேலே நடந்து இப்போது நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் இருக்கும் பக்கம் மறுபடியும் ஆற்றின் மேல் பிரிட்ஜில் நடந்து நேராக சூளைமேடு சாலைக்கு வந்துவிடுவாள். அங்கிருந்து கால் மணி நேரம் நடந்து எங்கள் வீட்டுக்கு நடந்து வருவாள். எப்போதும் கையில் ஒரு பித்தளை தூக்கில் தோசை மாவு, அடை மாவு கொண்டுவருவாள். எல்லோருக்கும் அன்று அருமை யான கல் தோசை, மொறுமொறு அடை, தேங்காய் துவையல் பண்ணி போடுவாள். கொடுக்கும் மனசு அவளுக்கு. பரம ஏழை.
வெயில் காலத்தில் கால் பாதங்களைச் சுற்றி தனது பழைய காவி நார்மடி புடவை துணி கிழிசலை பேண்டேஜ் மாதிரி சுற்றிக் கொண்டு நடப்பாள். அது தான் அவளுக்கு செருப்பு. இடுப்பில் கம்பளி மடிசஞ்சி.
அவளுக்கு தெரியாத விஷயமே கிடையாது. நிரம்ப உலகானுபவம். சின்ன வயதிலேயே கணவன் முகம் அதிகம் தெரியாத போதே விதவையானவள்.
பாட்டி நிறைய பேசுவாள். அவள் சொல்லும் சில விஷயங்கள் அற்புதமானவை.
'நம்பளை மதிக்காதவாளை லக்ஷியம் பண்ணாதே''. என்பாளே அது மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம் என்ற அறிவுரையே தான்.
.
''மத்தவா விஷயத்தில் ஏன் தலையிடறே? எப்பவும் நீ உண்டு உன் வேலையுண்டுன்னு இருக்கணும்.
ஒருத்தர் வீட்டுக்குப் போனா உள்ளே கண்டதை யெல்லாம் அனாவசியமா தொடப் டாது கெட்ட பழக் கம்'' என்பாள்.
பாட்டி சொன்னது வாஸ்தவம். சிலருக்கு மற்றவர்கள் வீட்டில் போனால் அங்கிருக்கும் அலமாரியில் இருக்கும் வஸ்துக்களை தொட்டு எடுத்துப் பார்ப்பது, ஏதாவது லெட்டர்கள் இருந்தால் எங்கிருந்து வந்தது, யார் எழுதியது என்று படிப்பது, இது என்ன அது என்ன என்று கேட்பது, எனக்கு இது பிடிக்கும் என்று சொல்வது, எனக்கு கொடுப்பாயா என்று கேட்பது. சமையல் அறைக்குள் சென்று மூடியிருக்கும் பாத்திரங்களை திறந்து பார்ப்பது, பிரிட்ஜை திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று நோட்டம் விடுவது --- இந்த பழக்கம் எல்லாம் உண்டு. மதுரம் பாட்டி சொல்வது ரொம்ப கரெக்ட்.
''ஆரையும் அனாவசியமா போய் அகாலத்திலே கதவை தட்டப்படாது'' என்பாளே அதற்கு என்ன அர்த்தம் என்றால், நன்றாக யோசித்துப் பார்த்தால் இப்போது புரிகிறது. இப்போது நம் ஒவ்வொருத்தரிடமும் மொபைல் போன் இருக்கிறது. அதுவும் வாட்ஸாப்ப் இல்லாத போனே கிடையாது. வாட்ஸாப்ப் செய்தி கண்ட நேரத்தில் அனுப்புவது கூட பரவாயில்லை. நாமாக திறந்து பார்த்தால் தான் அவற்றால் தொந்தரவு. ஆனால் நம்மை வாட்ஸாப்பில் அல்லது டெலிபோனில் நடு ராத்திரி, அல்லது நன்றாக தூங்கும்போது விடியற் காலையில் ராத்திரி கூப்பிடுவார்கள். பேசுவதற்கு அல்ல, நமது வாட்ஸாப் நம்பரை தெரியாமல் தொடுவதால் நம்மை அது எழுப்புகிறது. ''ஸாரி , தப்பாக கூப்பிட்டு விட்டேன், மறக்கவும் மன்னிக் கவும்'' என்று செய்தியும் கிடையாது.
மறுநாள் நாம் அவர்களை கூப்பிட்டு ''நேற்று ராத்திரி கூப்பிட்டீர்களே ஏதாவது அர்ஜன்ட் விஷயம் உண்டா?'' என்று கேட்கும்போது
''இல்லையே , எனக்கே தெரியாம உங்களை தப்பா கூப்பிட்டுட்டேன் போல இருக்கு'' என்ற பதில் கிடைக் கும்போது எவ்வளவு கோபம் வரும் என்று அவர்களுக்கு புரியாது. நாமும் அதே தப்பை பண்ணுகிறோமே .
ராத்திரி 10 மணிக்கு முன்னறிவிப்பு, ஒப்புதல், இல்லாமல் எவரையும் டெலிபோனில் கூப்பிடக்
கூடாது. தூங்கும் நேரம்.
''யாராத்துக்கும் கூப்பிடாம சாப்பிட போறது நமக்கு கௌரதை , மதிப்பு மரியாதை இல்லை ''என்பாள் பாட்டி.
பாட்டி சொல்வது ரொம்ப சரி. சாப்பிடும் நேரத்தில் எவரையும் அவர்கள் வீட்டில் சென்று அவர்களை போய் தொந்தரவு பண்ணக்கூடாது. கூப்பிடாமல் சாப்பிட உட்கா ரக்கூடாது. என்ன இருக்கு சாப்பிட என்று கேட்பது ரொம்ப தவறு. சங்கடப்படுவார்கள்.
சிலர் அடுத்தவர் வீட்டுக்குப் போனால் அவர்கள் படுக்கை அறைக்குள் போய் கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள், படுத்துக் கொள்வார்கள். ரொம்ப தப்பு இது. முதலாவது மற்றவர் படுக்கை அறைக்குள் போகக்கூடாது. ரெண்டாவது அவர்களே சொல்லாமல் அவர்கள் கட்டிலில் போய் உட்காருவது படுப்பது அநாகரீகம்.
75 வருஷம் ஆனாலும் மதுரம் பாட்டி சொன்னது இன்றும் ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. நல்ல பழக்கங்கள் பழசாவதில்லை. அவற்றுக்கு வயசாவதுமில்லை.
No comments:
Post a Comment