Saturday, December 24, 2022

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான  கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீர் குரல் பாடல் என்னை சிறுவயதிலேயே கவர்ந்த ஒரு  சினிமா பாட்டு. கர்நாடக சங்கீத கல்யாணி ராக பின்னணி கொண்டது.  1956ம் வருஷம்  சந்தானம் என்ற ஒரு படத்தில் நாகேஸ் வர ராவ் பாடுவதாக ஒரு காட்சி கருப்பு வெளுப்பில்  யு ட்யூபில் பார்த்தேன்.

 நாகேஸ்வர ராவ் அக்கால வழக்கப்படி  ஒரு  பியானோ எதிரில் உட்கார்ந்து அதற்கும் தனக்கு சம்பந்தமே  இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டு வாயசைப்பார், விரலசைப்பார். 

எதிரே சாவித்ரி  குளத்தில்  வாத்து  இறக்கை அடிப்பது போலொரு டான்ஸ் பண்ணிக் கொண்டு தன்னைத் தானே  ப்ரதக்ஷிணம் பண்ணுவார்.  பார்க்க வேடிக்கை யாக இருக்கும்.
 இசை  தக்ஷிணாமூர்த்தி.
மிகச் சின்ன பாட்டு என்றாலும் இன்றும்  என் மனதில் இடம் பெற்று என்னை பாட வைக்கும் சக்தி கொண்டது.

https://youtu.be/q3IBZac0lk8

HANUMAN


 ஹனுமத்  ஸ்மரணாத் பவே   - #நங்கநல்லூர்_J_K_SIVAN

  
நேற்று   மார்கழி மாசம்  அமாவாஸ்யை திதி. ஒரு மார்கழி  மாதம் மூல  நக்ஷத்திரத்தில் அமாவாசை திதி அன்று  அஞ்சனை பெற்றெடுத்த  ஆஞ்சநேயன் என்றும் சிரஞ்சீவியாக  நமக்கு  அருள்  புரிகிற ராம பக்தன். வாயு புத்ரன். அவன் தான் நம்முள்  பிராண வாயு வாக வும் இயக்குபவன்.  பிராண வாயு உயிரைக் காப்பது என்பதால் தானே  சஞ்சீவி மூலிகை மலையையே  பெயர்த்து படுவேகத்தில்  லக்ஷ்மணன் மற்ற வானரர் கள் உயிரைக் காப்பாற்றியவன்.   ப்ராணத்யாகம் செய்யத் துணிந்த  சீதையின் முன் தக்க சமயத்தில் தோன்றி தன்னை  ராம தூதன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு அவள் உயிரைக் காப்பாற்றியவன்.  அதே சமயம்  ராவணன் உயிரை  ராமன் வந்து அவன் உடலை கொன்று விளக்குவதற்காக  ''விட்டு வைத்த வன்''.

ராவணனின் உயிரை ராமன் கையால் போக  'விட்டு'  வைத்தவன். கம்பன் ஆஞ்சநேயனை எப்படி அடையா ளம் காட்டுகிறான்?   என்ற அற்புத பாடல் அனைவரும் அறிய வேண்டியஒன்று.   தமிழனுக்கு நாவினிக்க சொல்ல  ஒரு நல்ல கவிதை இது.  எளிமையான கவிதை. எல்லோருக்கும் புரியும் வார்த்தை ஜோடனை.  நீங்களும் மனனம் செய்து குழந்தைகளையும் மனப்பாடம் செய்ய வைக்கலாம்.   

''அஞ்சிலே ஒன்று பெற்றான்
                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான்

கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு அருமையான பாடல் இது. இது மாதிரி எழுத இன்னொருவன் பிறக்க வேண்டும். ஆஞ்சநேயரை வணங்கி துவங்கிய துதிப்பாடல்.

அஞ்சு என்றால் ஐந்து,  பயம் என்று ஒரு அர்த்தம். அஞ்சு என்றால்  'பஞ்ச'    என்ற சமஸ்க் ரித ஐந்து.  ஏன் ஐந்து?  இந்த  பிரபஞ்சமே  பஞ்ச பூதங்களின் சேர்க்கை.  அப்பு, வாயு, தேயு, ஆகாசம்,  ப்ரித்வி, என்ற   நீர், நெருப்பு, ஆகாயம், மண்,காற்று.   அதில் அனுமன்  வாயு புத்ரன்.  காற்றின்  மைந்தன்.  அஞ்சிலே ஒன்றான வாயு பெற்ற  மகன்..
அனுமன் என்ன செய்தான்?.  ராமனுக்காக இலங்கை யில் சீதையைத் தேட  சமுத்ரத்தை யே தாண்டினான் .வானரம் என்றால் தாண்டியது என்பதை விட ''தாவி யது''  என்று சொல்வது பொருத்தம் என்பதற் காக
  ''அஞ்சிலே ஒன்றைத்  தாவி'' என்று  எழுதி னார் கம்பர். அஞ்சிலே ஒன்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர், சமுத்திரம்.  கடலை ஹனுமார்  தாண்டி இலங்கையை அடைந்ததை சொல்கிறார்.   அடுத்த வரியில் இன் னொரு பஞ்ச பூதத்தை அறிமுகப்படுத்துகிறார்  கம்பர்.  ''அஞ்சிலே ஒன்று ஆறாகி'' ஆறு என்றால்  நம்பர்,  நதி என்ற அர்த்தத்தோடு  ''வழி''  என்றும் அர்த்தம்.  ஆற்றுப்படை என்றால்  ஒரு இடம் செல்ல, ஒருவரை தேடிப்போக  வழி சொல்வது. முருகனைத் தேடிச் சென்று துன்பம் நீக்க போவது நக்கீரர் எழுதிய   திருமுருகாற்றுப்படை,  இங்கே  பஞ்ச பூதங்களில் ஒன்றான  ஆகாயம்  அனுமனுக்கு வழியாக  அமைந்தது. 
 ஹனுமான் வான வீதியில் பறந்து இலங்கை சென்றான் என்கிறார் கம்பர்.

எதற்கு  ஹனுமான்  கடலைத் தாண்டி வானவீதியில் இலங்கைக்கு பறந்தான்?  ''ஆருயிர் காக்க ஏகினான்''. ராமனை  எதிர்பார்த்து அவன் வரவில்லையே. இனி உயிரை விடுவோம் என்று   ப்ராணத்யாகம் செய்ய முடிவெடுத்த  சீதா தேவியின் ஆருயிர் காக்க என்று ஒரு பொருள்.  இன்னொன்று , ராமனின் ஆருயிரான சீதையைக்  காப்பதற்கு என்று ஒருபொருள்  ''அம்மா, உனக்கு இந்த ராவணாதி ராக்ஷசர்களால் ஒரு துயரமும் வராது'' நாங்கள் ராமனோடு வந்து உன்னை மீட்போம் என்று  'புத்துயிர் நம்பிக்கை'  அளிக்க  என்று அருமை யான அர்த்தம் உள்ளே மிளிர்கிறது.

ஏன்  ஹனுமார் பறந்தார்?  ஸ்ரீ ராமனுக்காக.  ''ஆரியர்க் காக''   என்ற சொல் அற்புதமானது. ஆரியன் திராவிடன் என்ற மட்டரக  வித்யாசம் இங்கே வேண்டாம். அதற்கு இங்கே இடமில்லை.  ஆரியன்  என்பது சமஸ்க்ரிதத்தில்  மதிப்பு மிக்க, மரியாதைக்குரிய,  மேதகு,  மேன்மையா ன என்ற பொருள் தரும் சொல். அத்தனைக்கும் பொருத்த மானவன் ராமன் இல்லையா? இலங்கை நம் ஊரல்ல, அயலான் ஊர்.  ராமனின் தர்ம, நியாய ராஜ்ஜியம் அல்ல,  அதற்கு மாறான ராவண தேசம் என்கிறார் கம்பர்.  சீதையை  சாதாரணமாக  பெயரிட் டுச் சொல்லவில்லை  கம்பர்.  அஞ்சிலே ஒன்று பெற்ற  அணங்கு  என்கிறார். என்ன அக்ஷர லக்ஷ வார்த்தை!   பஞ்ச பூதங்களில் ஒன்றான  பூமித்தாய்  பெற்றவள், தந்தவள்,  சீதா தேவி  என்ற  அவள் சரித்திரம் அங்கே பளிச்சிடுகிறது.

சும்மா  போய் பார்த்துவிட்டு வர  ஹனுமான் என்ன  நம்மைப் போன்றவனா? ராவணனுக்கு தான் யார் என்று காட்டுவதன் மூலம் ராமனின் பலத்தை அறிவிக்க  வேண்டாமா? ஒரு சாதாரண தூதுவனாக பணியாள னாக வந்த  எனக்கே எவ்வளவு சக்தி பார்!'' என்று காட்ட  பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை, தீயை, இலங்கை மாநகரில்  சீதை இருந்த இடத்தைத் தவிர  மற்ற இடங்களில் மூட்டி பரப்பிவிட்டு  ராமனிடம் சீதை இருக்கும் இடத்தைச் சொல்லப்  பறந்தவன் ஹனுமான்.   இலங்காபுரிக்கு அக்னிப்  பரிசை ஹனுமான் தந்ததை
கம்பர்  ''அஞ்சிலே ஒன்றை வைத்தான்'' என்கிறார்.  பஞ்ச பூதங்களில் ஒன்றான  தீயை மூட்டி சேதம் விளைவித்தான் என்கிறார்..

இப்படி  சக்தி கொண்ட  சிரஞ்சீவி ஹனுமா, உன்னை வணங்குகிறோம், எங்களை காத்து ரக்ஷிப்பாயாக
 என்று சாஷ்டாங்க நமஸ்காரம் நம்மை செய்ய வைத்து தானும் வணங்குகிறார் கம்பர்.

GRAND MA ADVICE

 பாட்டி சொல் தட்டாதே..   #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
மதுரம்  பாட்டியை மறக்க  முடியவில்லை. அம்மாவின்  பெரியம்மா  அவள்.  எனக்கு  ஒன்பது பத்து வயாசாகும் போது அவளுக்கு  75-80 வயது இருக்கலாம்.  நாங்கள் வசித்த  சூளைமேட்டுக்கு  புரசைவாக்கத்திலி ருந்து
நடந்தே வருபவள்.  புரசைவாக்கத்திலிருந்து  பூந்த
 மல்லி  சாலையை கடந்து  இடது பக்கம்  கீழ்ப்பாக்கம்  பெரிய  ஆஸ் பத்திரியை ஒட்டி இறக்கத்தில் சேத்துப் பட்டு ஸ்டேஷன் அருகே ஆற்றின் நடுவே இருந்த  குட்டி  பிரிட்ஜ் மேலே நடந்து  இப்போது நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் இருக்கும் பக்கம்  மறுபடியும் ஆற்றின் மேல் பிரிட்ஜில் நடந்து நேராக   சூளைமேடு சாலைக்கு வந்துவிடுவாள். அங்கிருந்து  கால் மணி நேரம் நடந்து  எங்கள் வீட்டுக்கு நடந்து வருவாள்.   எப்போதும் கையில் ஒரு பித்தளை தூக்கில் தோசை மாவு,  அடை மாவு கொண்டுவருவாள்.  எல்லோருக்கும்  அன்று அருமை யான  கல் தோசை,  மொறுமொறு அடை, தேங்காய் துவையல்  பண்ணி போடுவாள். கொடுக்கும் மனசு அவளுக்கு.  பரம ஏழை. 

வெயில் காலத்தில்  கால் பாதங்களைச்   சுற்றி  தனது  பழைய  காவி நார்மடி  புடவை துணி கிழிசலை  பேண்டேஜ்  மாதிரி சுற்றிக் கொண்டு நடப்பாள். அது தான் அவளுக்கு செருப்பு.  இடுப்பில் கம்பளி மடிசஞ்சி. 

அவளுக்கு தெரியாத விஷயமே கிடையாது. நிரம்ப உலகானுபவம்.  சின்ன வயதிலேயே கணவன் முகம் அதிகம் தெரியாத போதே  விதவையானவள்.
பாட்டி நிறைய பேசுவாள்.  அவள்  சொல்லும் சில விஷயங்கள் அற்புதமானவை.  

'நம்பளை  மதிக்காதவாளை  லக்ஷியம் பண்ணாதே''.  என்பாளே  அது மதியாதார்  வாசல்  மிதிக்கவேண்டாம்  என்ற  அறிவுரையே தான்.
.
''மத்தவா விஷயத்தில் ஏன்  தலையிடறே? எப்பவும் நீ உண்டு உன் வேலையுண்டுன்னு இருக்கணும்.
 ஒருத்தர் வீட்டுக்குப்  போனா  உள்ளே  கண்டதை யெல்லாம்  அனாவசியமா  தொடப் டாது கெட்ட  பழக் கம்''  என்பாள்.

பாட்டி சொன்னது வாஸ்தவம்.   சிலருக்கு மற்றவர்கள் வீட்டில் போனால்  அங்கிருக்கும் அலமாரியில் இருக்கும் வஸ்துக்களை தொட்டு எடுத்துப்  பார்ப்பது, ஏதாவது  லெட்டர்கள் இருந்தால்  எங்கிருந்து வந்தது, யார்  எழுதியது என்று படிப்பது, இது என்ன அது என்ன என்று கேட்பது, எனக்கு இது பிடிக்கும் என்று சொல்வது, எனக்கு கொடுப்பாயா என்று கேட்பது. சமையல் அறைக்குள் சென்று மூடியிருக்கும்  பாத்திரங்களை திறந்து பார்ப்பது,  பிரிட்ஜை திறந்து உள்ளே  என்ன இருக்கிறது என்று நோட்டம் விடுவது ---  இந்த  பழக்கம் எல்லாம் உண்டு. மதுரம் பாட்டி சொல்வது ரொம்ப கரெக்ட்.

''ஆரையும்  அனாவசியமா போய் அகாலத்திலே கதவை தட்டப்படாது''  என்பாளே  அதற்கு என்ன அர்த்தம் என்றால்,  நன்றாக யோசித்துப் பார்த்தால்  இப்போது புரிகிறது.  இப்போது நம்   ஒவ்வொருத்தரிடமும்  மொபைல் போன் இருக்கிறது.  அதுவும்  வாட்ஸாப்ப் இல்லாத போனே  கிடையாது. வாட்ஸாப்ப்  செய்தி கண்ட நேரத்தில் அனுப்புவது கூட  பரவாயில்லை.  நாமாக  திறந்து பார்த்தால் தான் அவற்றால் தொந்தரவு. ஆனால் நம்மை வாட்ஸாப்பில்  அல்லது டெலிபோனில் நடு ராத்திரி, அல்லது நன்றாக தூங்கும்போது விடியற் காலையில்  ராத்திரி கூப்பிடுவார்கள். பேசுவதற்கு அல்ல,  நமது  வாட்ஸாப்  நம்பரை தெரியாமல்  தொடுவதால் நம்மை அது எழுப்புகிறது.   ''ஸாரி , தப்பாக கூப்பிட்டு விட்டேன், மறக்கவும் மன்னிக் கவும்'' என்று  செய்தியும்  கிடையாது.   

மறுநாள் நாம் அவர்களை கூப்பிட்டு  ''நேற்று ராத்திரி  கூப்பிட்டீர்களே  ஏதாவது அர்ஜன்ட் விஷயம் உண்டா?''  என்று கேட்கும்போது 

 ''இல்லையே , எனக்கே தெரியாம உங்களை  தப்பா  கூப்பிட்டுட்டேன்  போல  இருக்கு''  என்ற பதில் கிடைக் கும்போது எவ்வளவு கோபம் வரும் என்று அவர்களுக்கு  புரியாது.  நாமும் அதே தப்பை பண்ணுகிறோமே .

ராத்திரி  10 மணிக்கு  முன்னறிவிப்பு, ஒப்புதல்,  இல்லாமல் எவரையும் டெலிபோனில் கூப்பிடக்
கூடாது. தூங்கும் நேரம்.

''யாராத்துக்கும்  கூப்பிடாம சாப்பிட போறது  நமக்கு   கௌரதை , மதிப்பு மரியாதை  இல்லை ''என்பாள்  பாட்டி.  
பாட்டி சொல்வது ரொம்ப சரி.  சாப்பிடும் நேரத்தில் எவரையும் அவர்கள் வீட்டில் சென்று அவர்களை போய் தொந்தரவு பண்ணக்கூடாது.  கூப்பிடாமல் சாப்பிட  உட்கா ரக்கூடாது. என்ன இருக்கு சாப்பிட  என்று கேட்பது ரொம்ப  தவறு. சங்கடப்படுவார்கள்.

சிலர்  அடுத்தவர் வீட்டுக்குப் போனால்  அவர்கள் படுக்கை அறைக்குள் போய் கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள், படுத்துக் கொள்வார்கள்.  ரொம்ப தப்பு இது.   முதலாவது  மற்றவர்  படுக்கை அறைக்குள் போகக்கூடாது. ரெண்டாவது அவர்களே  சொல்லாமல் அவர்கள் கட்டிலில் போய் உட்காருவது படுப்பது  அநாகரீகம்.

75 வருஷம் ஆனாலும்  மதுரம் பாட்டி சொன்னது இன்றும் ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.  நல்ல பழக்கங்கள்  பழசாவதில்லை. அவற்றுக்கு  வயசாவதுமில்லை. 
 

Friday, December 23, 2022

ADHI SANKARAR EKA SLOKI

 ஆதி சங்கரர் -   நங்கநல்லூர்  J K   SIVAN

ஏகஸ்லோகி     ---   '' ஒத்தை ஸ்லோகம்''  

ஒண்ணே  ஒண்ணு அது  ''நான்''  தான்....

ஸ்லோகம் என்றால் நீளமாக  நிறைய பாடல்கள் தொகுப்பு என்று  நாம்  நினைப்பது ஞாயம். எல்லோரும் அப்படித்தான்  எழுதினார்கள், எழுதுகிறார்கள்.   ஆதி சங்கரரும் அப்படித்தான். பாய் பாயாக  நீளமாக  ஸ்லோகங்கள்  எத்தனையோ  ஸ்வாமிகள்  மேல் பாடியவர்.  அவரே ஒரு வித்யாசமான படைப்பும் படைத்துள்ளது  எத்தனை பேருக்கு தெரியும்?

 அது ஒரே ஒரு ஸ்லோகம்,   நாலு  அடியில்  வேதாந்த தத்துவத்தை அப்படியே  அமுக்கி  பிசைந்து, உருட்டி  ஒரே ஒரு சின்ன  மிளகு உருண்டையாகப்  பண்ணி  கையில்   கொடுத்து விட்டார்  ஆதி சங்கரர்.  அதற்கு  ''ஒரே ஸ்லோகம். ஏக ஸ்லோகி '' என்று பெயர்.  அதை மட்டும் இன்று  ரசிப்போம். இதை எனக்கு முன்பு ரசித்து மகிழ்ந்தவர்  சுவாமி விவேகா னந்தர்.   அவரைப் படிக்கும்போது தான் இது என் கண்ணில் பட்டது.

ஆதிசங்கரரைப் பொறுத்தவரை எப்போதுமே வெட்டு  ஒண்ணு  துண்டு ஒண்ணு (ரெண்டு கிடையாது). அத்வைதி என்பதால் எல்லாம்  ஒன்றே தான். ரெண்டே கிடையாது.  நோ டூயலிட்டி.  எல்லாம் ஒண்ணு  தான். அவர் மேல் தப்பு இல்லை,   நாம் தான்  தப்பு செய்பவர்கள்   எல்லாமே  ஒண்ணே  ஒண்ணு தான் என்று புரிந்து விட்டால்  நாம் வேறு சங்கரர்  வேறு இல்லையே.

ஆயிரக்  கணக்கான  ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறவர் '' ஒரே  ஒரு ஸ்லோகம்'' என்று ஒரு ஸ்லோகம் எழுதியதை தான் இன்று படிக்கிறோம்.  இது தான் அந்த ஒத்தை ஸ்லோகம்:

किं ज्योतिस्तवभानुमानहनि मे रात्रौ प्रदीपादिकं
स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने 
किं  तत्राहमतो भवान्परमकं ज्योतिस्तदस्मि प्रभो ॥

கிம் ஜ்யோதிஸ்தவ  பானுமான ஹனி மே  ராத்ரோவ் ப்ரதிபாதிகம்
ஸ்யா  தேவம் ரவி தர்சன  விதெள  கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ் த்ஸ்ய நிமிலநாதி சமயே கிம் தீ தியோ தர்சனே
கிம் தத்ராஹம்  அதோ  பவான்பரமகம் ஜ்யோதிஸ்தத ஸ்மி ப்ரபோ:

''ஐயா,  கொஞ்சம் நில்லுங்க. எந்த வெளிச்சம் உங்களுக்கு உதவுது?   யோசிச்சீங்களா? பகலிலே  சூரியன். பொழுது சாய்ஞ்சா  தீபங்கள், விளக்குகள்.? அவ்வளவு தானா?   சூரியனும்  தீபங்களும்  இருந்தா வெளிச்சம் தெரிஞ்சுடுமா?  கண்ணு  வேண்டாமா? சரி கண்ணுலே இருக்கிற  ஒளி இந்த மற்ற  ஒளி யெல்லாம் பார்க்க  உதவுது.  கண்ணை மூடிக்கிட்டா என்ன தெரியும்? நமக்குள்ளே  ஞானம் , அறிவுன்னு ஒண்ணு  இருக்கு இல்லையா? அது ஒளி காட்டுது.  
சரிங்க.  ஞானம் உள்ளே  இருக்குது. ஒளிகாட்டுதுன்னு யார் உணர  முடியும்?எப்படி   தெரியும்? ஆத்மான்னு, உயிர், ஜீவன்  என்று ஒன்று இருந்தாதானே  மத்ததெல்லாம் தெரியும், புரியும். செத்ததுக்கு என்ன தெரியும்?

ஆகவே,   பகவானே  புரிஞ்சுக்கிட்டேன்.  ஆத்மான்னு ஒரே ஒரு ஒளி தான் உள்ளே வெளியே எல்லாம் வெளிச்சம் போடறது.  பிரகாசமானது. நீதான்  பிரம்மமே ,  அந்த ஆத்ம ஒளி. நீ  ஒண்ணு  தான்  எல்லாமே''.

ஆதி சங்கரர் மேற்கண்ட ஒரே ஒரு ஸ்லோகத்தை ‘ஏக ஸ்லோகி’ என்ற ஒத்தை செய்யுளாக வேதாந்தத்தை ஒரு சீடன் கேள்வி கேட்க குரு விளக்குவதாக பேசி புரிந்து கொள்வதைப் போல அல்லவா எழுதியிருக்கிறார்!    சிஷ்யன்  அப்படி என்ன கேட்டான், குரு என்ன பதில் சொன்னார் என்று பார்த்தால் தானே விஷயம் புரியும்?  சுவாமி   விவேகானந்தர் இந்த ஸ்லோகத்தை அப்படித்தான்  பார்த்தார்.  நாமும் பார்ப்போமே.

''சுவாமி , நான் தங்கள் சிஷ்யன்,  எனக்கு நீங்கள்  ஞானம் புகட்டவேண்டும்''
''அது என் கடமையப்பா.  எனக்கு தெரிந்ததை  நான் உன் போன்ற சிஷ்யர்களுக்கு உரைத்து தெளிவிக்க வேண்டும். அவர்கள் பின்னால் அடுத்த தலைமுறைக்கு அதை அளிக்க
வேண்டும் என்பது தான்  பெரியோர்கள்  அனுஷ்டித்த முறை.  இதைத்  தான் கர்ணபரம்பரை என்பார்கள். கர்ணன் என்பவனின் குடும்ப  வாரிசுகள் என்று அர்த்தம் இல்லை. கர்ணம் என்றால் காது.    பெரிய  தவலை , குடம்  மாதிரி  காது இருந்ததால்  ராவணன் தம்பிக்கு கும்பகர்ணன் என்று பெயர்.

வேத காலத்தில் ஸ்லோகங்களை  எல்லாம் குரு சிஷ்யர்களுக்கு போதித்து அவர்கள் மனதில் இருத்தி,  அவர்களை  மனப்பாடம் செய்ய  வைத்து  அழியாமல்  காத்து, அது  தலைமுறை தலை முறையாக ஒவ்வொரு சந்ததிக்கும் போதிக்கப்பட்டது., அதனால்  மாறுதல் இல்லாமல், அடையாளம் இழக்காமல் பாதுகாக்கப்பட்டது.
''புரிகிறது குருநாதா'
''சரி அப்பனே,   நீ  முதலில்  என்  இந்த கேள்விக்கு பதில் சொல் பார்க்கலாம்.  
''நீ எப்படி இந்த உலகத்தை காண்கிறாய்?''
நாம்   அநேகர்  கண்  கெட்டவர்கள்.  எல்லோருமே   மூக்கு கண்ணாடி போட்டுக் கொள்பவர் களாக இருக்கிறோம்  ஆகவே  மூக்கு கண்ணாடியை துடைத்து விட்டுக்கொண்டு  என் மூக்குக் கண்ணாடியால்  பார்க்கிறேன்'' என்று பதில் சொல்கிறவர்கள்.  

இந்த சம்பவத்தில் வரும்  சிஷ்யன் அருமையானவன்.  நல்ல குருவின் சிஷ்யன்  என்பதால் அற்புதமாக ஒரு பதிலைச் சொல்கிறான்

''சுவாமி , நாம் யாருமே  சூரியனின்  ஒளியால் தான் எதையும் காண்கிறோம். நல்ல  பார்வை இருந்தாலும் சூரிய ஒளியின்றி, எதையும்  காணமுடியாது.''
'பகலில்  நீ சொல்வது  சரி.  இரவு வந்தால்  எப்படி  பார்க்கிறாய்?''
'தீபத்தின்  ஒளியால்,  குருநாதா”
 ‘ஓஹோ, . நீ  விளக்கை பார்த்து எடுத்து அதை எண்ணெய் திரி போட்டு ஏற்றியபின் தான்  அது உனக்கு ஒளி கொடுத்தது.  அதை ஏற்றுவதற்கு முன்  விளக்கை எப்படி பார்த்து தெரிந்து கொண்டாய்?”
''குருநாதா,  விளக்கை  என்  அறிவால் , புத்தியால் தான்  அடையாளம் தெரிந்து கொண்டேன் 
”சபாஷ்  சிஷ்யா,  சரியான பதிலை சொன்னாய். உனக்குள் இருக்கும் புத்திக்கு   எத்தனை யோ  பொருள்களுக்கு  இடையே  இது தான்  விளக்கு என்று எது பார்த்து தெரிந்து கொள்ள வைத்தது?'
''நான் அதையும் யோசித்தேன்  குருநாதா. 
”நான்” எனும் ஆன்மா, பிரம்மம் தான் புத்திக்கு  வழி காட்டியது''
”ஆமப்பா, நன்றாக  உணர்ந்தவன் நீ.   நீ தான் அந்த புறவெளியை அடையாளம் காட்டிய ஆன்ம ஒளி”
''சதகோடி  நமஸ்காரம் குருவே. தங்கள் அருளால் ”நான்” யார்? என்று புரிந்துகொண்டேன்.
இது தான் மேலே சொன்ன சின்ன  நாலு அடி  ஸ்லோகத்தின் சாராம்சம். ப்ரம்ம ஞானம் பற்றியது.

Wednesday, December 21, 2022

DEVOTION TOWARDS PARENTS

 

பெற்றோர் மேல் பக்தி: நங்கநல்லூர் J K SIVAN

ஏழிசை மன்னன் என்று கொடிகட்டி பரந்த சூப்பர் ஸ்டார் M .K தியாகராஜ பாகவதர். ஹரி தாஸ் என்ற படம் மூன்று தீபவளைகளை கண்ட அற்புத படம். படம் முழுக்க வாயை திறந்தாலே ஹீரோ ஹீரோயின் பாட்டுகள் தான். 75-80 வருஷங்களுக்கு முன்பு கருப்பு வெளுப்பு படங்கள் பூரா பாட்டுக்காகவே ஓடியவை. மூன்று நான்கு மணி நேர படங்கள் . இப்போது நம்மால் பொறுமையாக உட்கார்ந்து பார்க்கவோ, அந்த டயலாக் கேட்கவோ இயலாது. நெளிவோம். பாகவதர் அந்த படத்தில் ஒரு யதுகுல காம்போதி, அடாணா ராக பாடல் ஒன்று பாடிக்கொண்டே இடுப்புக்கு கீழே கோணியைக் கட்டிக்கொண்டு முடமாக நகர்ந்து வருவார். இதைப் பார்த்து அழாத ரசிகர்களே கிடையாது. அவரது பாடல் அக்கால தமிழர்களை, இசை விரும்பிகளை காந்தமென கவர்ந்தது . நானும் அந்த பாடலை 84 ல் பாடிப் பார்க்கிறேன்.

https://youtu.be/hc_djgOEYTo

diplomacy

 ராஜ தந்திரம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


 இப்போது   நடப்பதெல்லாம்  அப்போதே நடந்தது தான்.   துர்யோதனன்  ராஜ சபை  நமது சட்டசபை மாதிரி அமளி துமளியாக  உரத்த குரலில் சப்தங்களோடு ஒலித்தது.  ஆமாம் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால்.

ஆம்  கிருஷ்ணன் த்வாரகையிலிருந்து  பாண்டவர்களுக்காக சமாதான  தூது பேச வந்திருக்கிறான். அவர்கள் உரிமையை யுத்தமில்லாமலே, சமாதானமாக  பெற  முயற்சிக்கிறான்.   பிரச்னை   தீரவில்லை.  யுத்தம் ஒன்று தான்  முடிவு என்று ஆகி விட்டது.  ஆகவே   கிருஷ்ணன்  தூது  தோல்வியடைந்தது என்று சொல்லலாமா?

அங்கேதான்  சூக்ஷ்மம் இருக்கிறது. கிருஷ்ணன் சமாதான தூதுக்கு  வந்தானே தவிர  இந்த யுத்தம் நடைபெற வேண்டும் அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்று  தர்மம் நீதி  நிலைக்க வேண்டும் என்பது தானே அவன் நோக்கம். அதற்குத்தான் அவன் அவதாரமும் எடுத்தான்.

கிருஷ்ணன் தூது   தோல்வியில்  முடிந்த உடன் பாண்டவர்கள் ஆவலாக  முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்  விராட நகருக்கு திரும்புகிறான்.   

கிருஷ்ணனின்  தேரோட்டி  தாருகன்  கிருஷ்ணனை நன்றாக அறிந்தவன் அல்லவா?   தேரை கடகடவென்று  வேகமாக  ஓட்டிக்கொண்டே  கிருஷ்ணனிடம் பேச்சு கொடுக்கிறான்.   

"பிரபு,  நீங்கள்  துரியோதனன்  அரண்மனையில் தங்காமல் விதுரனை முதலில் சந்தித்து அவர்  ஆஸ்ரமத் தில் தங்கியதால்  கௌரவர்கள்  கொந்தளித்துள்ளார்கள் என்பதை கவனித்தேன்.  நிறைய பேர்  இதைப் பற்றி பேசுவதைக் கேட்டேன்.   கௌரவர்கள்  இதை  சபையில்  உங்களிடம்  வெளிப்படுத்தினார்களா?
கிருஷ்ணன் முகத்தில் புன்னகை.   

''ஆம் தாருகா, நான் எதிர்பார்த்தபடியே அவர்களுக்கு என் செய்கையில்  ரொம்ப ஆத்திரம்''

''நீங்கள் ஏன் அவ்வாறு செயதீர்கள்?.  உங்களுக்கு தான் துரியோதனன் அவன் அரண்மனையிலேயே   வசதியாக தங்க  நல்ல ஏற்பாடுகள்   செய்திருந்தானே.  

''தாருகா, நான் யோசிக்காமல்  எதையாவது செய்வேனா? 

''என்ன காரணம் பிரபு,எனக்கும் சொல்லுங்களேன்''

''ஒரே கல்லில் ரெண்டு  மாங்காய் விஷயம்  தான் அது"

"கிருஷ்ணா  நான்  உங்களைப்  போல் ஞானி அல்ல.  எனக்கும் புரியும்படியாகவே சொல்லலாமே."

"சில  காரியங்கள் எப்போதும் தக்க காலம் வரும்போது தான் புரியும். நீயும் பொறுத்திரு, காத்திரு"

துரியோதனன் ராஜசபையில்  கிருஷ்ணனின்  சமாதான தூது தோல்வி அடைந்து கிருஷ்ணன் சென்ற பிறகு  காரசாரமாக  விவாதம் தொடர்ந்தது.
துரியோதனன்  எப்போதுமே   எல்லோரையும் விட  அதிக  பொறாமையும் சந்தேகமும் கொண்டவன் ஆயிற்றே.  அதிலும் கிருஷ்ணன் விதுரனின்  எளிய  குடிலில் ஒரு இரவு  தங்கி  அவனுடன்   இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தான் என்று ஒற்றர்கள் மூலம்  கேள்விப்பட்டான் .
வழக்கம் போலவே  அதனால்  ரெண்டும் ரெண்டும்  நாலு  அல்ல நாப்பது என்று  கணக்கு போட்டு  விதுரன் பாண்டவர்களுக்கு எப்படி  யெல்லாம்  வெற்றி கிடைக்க வழியோ அதெல்லாம் கிருஷ்ணனுடன்  பேசி முடித்து விட்டான்  என்று சந்தேகப்பட்டான்.  விதுரன் பச்சை துரோகி என்ற பட்டம் கொடுத்தான்.

பாண்டவருடன் யுத்தம் நிச்சயம் என்று தான் ஆகிவிட்டதே!!. யார்  யார்  என்ன  என்ன பதவியில்  எப்படி போர் புரிய வேண்டும்? எவர் எவர்  தலைமையில்? என்று காரசாரமான  விவாதம் நடந்தது.

துரியோதனன் கடும்  கோபத்தில் இருந்தான்  விதுரன் மேல்.  துரோணர், கர்ணன்,  பீஷ்மன்  கிருபர் ஆகியோருக் கெல்லாம் யுத்தத்தில் தலைமைப் பதவி அளிப்பு நடந்து கொண்டிருந்தது. 

பீஷ்மர்  '' துரியோதனா , பீஷ்மரை விட்டுவிட்டாயே?  அவர் பராக்ரமம் பிரசித்தம். மஹா வீரர்.  அவர் தலைமை யை அறிவுரைகளை  யுத்தத்தில் சரியானபடி  பயன்படுத்திக் கொள். மிகவும் உங்களுக்கு உதவும்'' என்று விவரித்தார்.

“தாத்தா,  போதும்,  நிறுத்துங்கள்”. விதுரருக்கு எந்த தலைமை பொறுப்பும் கிடையாது.'

''துரியோதனா, என்னை புண்படுத்துவதில் உனக்கு தனி சந்தோஷம் எப்போதுமே.  நீ கொடுத்தாலும் எந்த பொறுப்பையும் நான் ஏற்றுக்  கொள்ளப்  போவதில்லை.  என்னையும்  என்  வீரத்தையும்   நன்றியுணர்ச்சியும்  அவமானபடுத்திய  உனக்காக  நான்  போர்  புரிய மாட்டேன். இது சத்யம்''  

விதுரன்   ராஜசபையில் எழுந்து சபதம் செய்த  போது  சபையில் எல்லோரும் திடுக்கிட்டார்கள்.   தொடர்ந்து  'படார் ''என்று பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. தன்னுடைய பெரிய  வில்லையும் அங்கேயே  உடைத்து   கீழே எறிந்து விட்டு   விதுரன் வெளியே நடந்தார். 
பீஷ்மன் துடித்து போனார்.
“ முட்டாளே துரியோதனா,  என்ன  காரியம் செய்துவிட்டாய்? எவ்வளவு புரிய நஷ்டத்தை விலை கொடுத்து  வாங்கிவிட்டாய்.  உன்னுடைய பலத்தில்  பெரும்பங்கை  உன் அறியாமையால்  இழந்துவிட்டாயே.''
''தாத்தா, என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?'' உறுமினான்  துரியோதனன்.
'' ஆமாம், நீ முட்டாள் என்று நிரூபித்து விட்டாயே.  மாயாவி கிருஷ்ணன் போட்ட திட்டத்தில்  வகையாக  சிக்கி  பாண்டவர்களுக்கு   லட்டு மாதிரி உதவி விட்டாய்”  என்றார்  பீஷ்மர் .
"என்ன தாத்தா புதிர் போடுகிறீர்கள்,  கிருஷ்ணன்  போட்ட திட்டமா?  அது என்ன தாத்தா  ஏதோ கிளப்பி விடுகிறீர்கள்?" 
''ஆமாம் தாத்தா, அந்த கிழ விதுரன் போர்புரியாவிட்டால் அப்படி என்ன  பெரிய நஷ்டம் நமக்கு ?'' என்று சிரித்தான் கர்ணன். 

ஒரு பழங்கதையை  தெரிந்து கொள்வது  இப்போது அவசியமாகிவிட்டதே.
மாண்டவ்ய ரிஷி  தான்  செய்யாத பாபத்திற்கு தர்ம தேவதை  தண்டனை கொடுத்தது  என்று கோபித்து தர்ம தேவதைக்கே ஒரு சாபமிட்டார்
"தர்ம தேவா,  நீ பூமியில்  மனிதனாக  பிறந்து  நீ செய்யாதவற்றுக்கெல்லாம்  பழி ஏற்று தவிப்பாயாக" 

 தர்மதேவதை விதுரனாக பிறந்தான். சிறந்த வீரன்,  வில் வித்தையில்  நிபுணன்.  அவனை எதிர்கொள்வது  மிகவும் கடினம். இதை உணர்ந்த கிருஷ்ணன் துரியோதனனுக்கு விதுரன் மீது சந்தேகம் ஏற்பட விதுரன் வீட்டில் தங்கி அவன் அளித்த உணவை உண்டான்.  அதனால் கிருஷ்ணன் எதிர்பார்த்தபடியே துரியோதனன் விதுரனை சந்தேகித்து அவன் துரோகி என்று முடிவு கட்டி  போரில் அவனுக்கு  மரியாதை கிடையாது என்று சபையில் அனைவர் முன்னிலையில் அவமதித்தான்.  விதுரன் தான் ஒரு தவறும் துரோகமும் செய்யாதபோதே  இந்த அவச்சொல் அவமரியாதை தனக்கு நேர்ந்ததால்  போரில் பங்கேற்க மாட்டேன் என்று சபதம் செய்தான், எவரும் எதிர்த்து வெல்லமுடியாத  வில்லையும் உடைத்ததெரிந்தான்.  அது பாண்டவர்களுக்கு ரொம்பவும் சாதகமாக போய்விட்டது.  

இதைத் தான் தாருகனுக்கு கிருஷ்ணன் "காலம் சொல்லும் பொறுத்திரு" என்று சுட்டிக்  காட்டினானோ?


Tuesday, December 20, 2022

RAMA NAMA

  ''ஸ்ரீ ராம ஜெயம்'' ...நங்கநல்லூர்  J K  SIVAN


மதுராந்தகத்தில்  ஸ்ரீ  ரகுவீர பட்டாச்சாரியார் ராம ஜெயம் எழுத பலரை தூண்டி ஊக்குவிப்பதை  அறிந்தபோது  மட்டும் அல்லாமல் அவரது வீட்டிலேயே  2 கோடி ராமநாமாவை சேகரித்து  பிரதிஷ்டை செய்து  அதன் மேல் ஒரு சிறு பீடம் அமைத்து கோதண்டராமர் பாதம், படம் வைத்திருக்கிறார் என்பதை  பார்த்து வணங்கியபோது ராம ஜயம் பற்றி   அன்பர்களே உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. 

ராம நாமம் எழுதுவது  உலக இன்பங்கள் மட்டுமல்லாமல்  ஆத்ம திருப்தி என்ற முக்கிய காரணத்துக்காகவும்  மிகவும் பயன்படும் மின்றி,   ராம  என்பது தாரக மந்திரம். இதை திரும்ப திரும்ப ஜெபிப்பதன் மூலம்,  எழுதுவதன் மூலம்  உள்ளே கிடக்கும்  தீய   குணங் களையும், எண்ணங்கள்  அழியும்.  வெளியே  இருந்து தீய சக்திகள் நம்மை நெருங்காமல்  அரணாக  பாதுகாக்கும். இது போதுமே.

‘ராம” என்ற மந்திரத்துக்கு எத்தனையோ  அர்த்தங்கள் உண்டு.  ‘மரா” என்று  விடாமல் சொல்ல என்று வால்மீகிக்கு  நாரதர் உபதேசித்தார்.  நமக்கு ராமாயணம் கிடைத்தது.  சீதைக்கு ஒரு பெயர்  ரமா. ராமனுக்குள் சீதை எனும் லக்ஷ்மி தேவி  அடக்கம்.  ஆகவே  ராம  என்று ஜபித்தால்  எழுதினால்  லக்ஷ்மி  கடாக்ஷம் பெறுகும் .  எடுத்த காரியம் யாவினும் வெற்றி.  கற்போர்க்கும், கேட்போர்க்கும், கற்பிப்போர்க்கும்  இவ்வாறு பெறும்  பயன் தரும்.  ஜெய்ராம் சீதாராம் என்று சொல்லிக்கொண்டே  எழுந்திருப்போர், உட்காருவோர்,  சாப்பிடுவோர்  தூங்குவோர் கோடானுகோடி ஹிந்துக்கள்.   மஹாத்மா  காந்தியின் கடைசி வார்த்தை   ''ஹே  ராம்'', என்  தாய் வழி  தாத்தா ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதியார்  ''ஜெய்ராம் ஸ்ரீ ராம்''  என்று சொல்லாத  நேரமே கிடையாது.  ராமனைப் பற்றியே  பாடிய, பேசிய, வம்சம். எல்லோருக்கும் குடும்பத்தில் 
ஜெயராமன், சீதா ராமன், ரகு  ராமன், வெங்கட்ராமன் போன்று   ராமன் அடைமொழி நிச்சயம் உண்டு. 

‘ரா” என்றால் ‘இல்லை”  என்று அர்த்தம்.  ‘மன்’ என்றால் ‘தலைவன்’.  ராமனைப் போல ஒரு தலைவன்  இல்லை என்று பொருள் போடும் நாமம்  ராமனுக்கு.    மஹா பெரியவா கூட  முடிந்த போதெல்லாம் ''சிவ சிவா  ராம ராமா''என்று சொல்லுங்கள் என்று உபதேசித்தவர்.

ராம ராவண  யுத்தம் முடிந்தது.   ராவணனை ராமன்  கொன்றுவிட்டான்.  இந்த செய்தி  சீதைக்கு எப்படி தெரிந்தது? காற்றைக்  காட்டிலும் வேகமாக பறக்கும் ஹனுமான் தான்  சீதையிடம் சென்று  சொன்னது.   சந்தோஷத்தில்  ஹநுமானுக்கு  எப்படி  சீதையிடம்  ராமனின்  ஜெயத்தைப் பற்றி சொல்வது என்று  தெரியாமல்  பேச நா வரவில்லை.  சட்டென்று  சீதையை எதிரில் தரையில் மண்ணில்  பெரிதாக  ''ஸ்ரீ ராம ஜெயம்'' என்று சுருக்கமாக  எழுதினர்.  சொல்லின் செல்வன் அல்லவா?

ஆகவே முதன் முதலாக  ராம ஜெயம்  எழுதியவர் மாருதி தான்.   ராவணனுடன் யுத்தத்தில் ராமனுக்கு ஜெயம் என்று சீதைக்கு அதால் தெரிந்தது.  ஆகவே அன்று முதல்  ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார்கள்.  எழுதியவர்  படிப்பவர்  அனைவருக்குமே  ஆனந்தம். 

ராம  பாணம்,  ராமனின் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு சென்றால்,  இலக்கை அழித்துவிட்டு தான் திரும்பும்.  அது போல் ராம நாமம்  எனும்  ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும்  எப்போதும்  ஜெயத்தையே  தருவது.

லங்கை சென்று திரும்பிய ஹனுமானிடம்  ராமர்  ''சீதை  எப்படி இருக்கிறாள்?'' என்று கேட்டபோது,  ''ப்ரபோ,  சீதா தேவி  துளியும்  கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப் படாதீர்கள்.  ராம நாமத்தை ஜபித்துக்  கொண்டே இருக்கிறார்.    ராம  நாமத்தை மறப்போருக்கு தான்  துன்பமும் கஷ்டமும்'' என்றான் ஹனுமன் ..

ராமநாமத்தை  கோடிக்கணக்கான  ஜபித்தவர்  ஸ்ரீ  தியாகராஜ ஸ்வாமிகள்.  ராமர் ப்ரத்யக்ஷமாக அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பார்வதி தேவியிடம் ஸ்ரீ  பரமேஸ்வரன்  ஸ்ரீ ராமா என்று மூன்று தடவை சொன்னாலே போதும் விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்களை சொல்வதற்கு ஈடு  என்கிறார்.

 செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்னை நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, நோய் விலக, ஆரோக்யம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை கூட, கண் த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம் கிடைக்க,  சனி தோஷம், தசா புத்தி தோஷம், நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி அதிகரிக்க,  மனத்தில் பயம் நீங்க, திக்கு வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலித்வம்  கிடைக்க,  எதிலும் வெற்றி அடைய, அரசு வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு பலிதம்  ஆக, கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக, இவை அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள். இன்னொரு விஷயம்  நான் கொடுத்த லிஸ்டில் இல்லாத விஷயங்களும்  ராமஜெயம்  எழுதுவதால்  பெறலாம்.

 ஒவ்வொரு குடும்பமும் எப்படியும் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும்.  தெரிந்தவர்களுக்கும் எடுத்து சொல்லி ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டலாம்..அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும் அந்த புண்ணியம்  அதைச் சொன்னவர்களும்  வந்து சேரும். இதை  சேங்காலிபுரம்  அனந்த ராம தீக்ஷிதர் சொல்லி கேட்டிருக்கிறேன். 

ஒரு சிலர்  ஆச்சர்யமாக, அனால்  துரதிர்ஷ்டவசமாக,   ராம நாமம் எழுதினால்  வீட்டில்  கஷ்டங்கள் ஏற்படும்,   ராமன்  துன்பப்பட்டவன், சீதையை  பிரிந்தவன்,  ஆகவே  எழுத கூடாது என்று பிரச்சாரம் செய்வது நம்பியார் வீரப்பா  வேலை. அப்படி நினைப்பதே  மஹா பாபம்.  ராமஜெயம் எழுதி துன்பங்கள் அனுபவித்தவர் எவரும் இல்லை.  பூர்வ ஜென்ம பாபங்கள் ராம ஜபத்தால் தீரும் போது ராம நாமம் எழுதினால் சொன்னால் எப்படி பாபங்கள் சேரும்.?  நல்ல காரியங்களுக்கு தடை சொல்வது ரொம்ப தவறு.   அப்படி யாராவது சொல்வதை  ஏற்றுக் கொள்ளாமல் நீங்களே சிந்தித்து பார்க்கவேண்டும்.   கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்வது போல் இருக்கிறது இது. பக்தர்கள் இதை நம்புகிறீர்களா?

MADHURANTHAKAM LAKE

 கலெக்டருக்கு தரிசனம்  - நங்கநல்லூர்   J K  SIVAN  --


சென்ற பதிவில் மதுராந்தகம் ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யரை பற்றி எழுதி இருந்தேன்.   அவரைச் சந்திக்க  விரும்பிய  ஸ்ரீ  செந்தில் இளங்கோவன் தம்பதிகள்,  ஸ்ரீ சேதுராமன்  ஆகியோருடன் மதுராந்தகத்துக்கு   மார்கழி 3ம் நாள் சென்றோம்.  நண்பர்கள் மூவருமே  ஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷை பெற்றவர்கள். கர்ம யோகிகள். 

 விடிகாலையிலேயே சென்றால்   ஏரி  காத்த ராமனையும் தரிசிக்கலாமே . மார்கழியில் ஆலயத்தை  காலையில் சீக்கிரமே சாத்திவிடுவார்களே.   அதிக நெரிசல் இல்லாததால்  ஒன்றரை மணி நேரத்தில்  மதுராந்தகத்தை அடைந்தோம்.   ரகுவீர பட்டாச்சாரியார் நேராக ஆலயத்துக்கு வந்து விட்டார். அவரோடு  சென்றதால்,  ஜனகவல்லி சமேத கோதண்டராமன்,கருணாகர மூர்த்தி தரிசனம்  அற்புதமாக கிடைத்தது.

மதுராந்தகத்தில்  கோதண்ட ராமன் ஏன் ஏரி காத்த ராமன் ஆனான் என்ற சரித்திரம் சொல்வதற்காகவே இது ஒரு தனி பதிவாக்குகிறேன். 

 125-150 வருஷங்களுக்கு முன்பு,  ஒரு சமயம்   மதுராந்தகம்  அடாது பெய்த மழையில்   ஏரி  நீர் நிரம்பி கரை உடையும்  வெள்ள பீதியில்  திகைத்தது. 

சோழ ராஜா முதலாம் பராந்தகன் (கி பி  907 - 955) மதுரை மீது படையெடுத்துச் சென்று பாண்டியரை வென்றதால் "மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன் " ஆனான்.   வெற்றியை கொண்டாட   நான்கு  வேதங்களை ஓதும் அந்தணர்க்குந் தனமாக  இந்த கிராமத்தை வழங்கி  மதுரையை வென்ற பெயர் சூட்டி  "மதுராந்தகச் சதுர்வேதிங்கலம்"  ( மதுரை அந்தகன் மதுராந்தகன்)   என்று கல்வெட்டுகளில்  உள்ளது. ஒரு கல்வெட்டு   "ஸ்வஸ்தி  ஸ்ரீ, ஸ்ரீ பராந்தகதேவற்கு   யாண்டு எழாவது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூற்கோட்டத்துத்தநியூர் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து " என்கிறது. .  மதுராந்தகம் சென்னையிலிருந்து   77   கி. மீ  தூரம். திருச்சி செல்லும் பாதையில் உள்ளது.

 கொட்டும் மழையில், பருவகாலப் பேய்  மழையில்,  ஏரி நிரம்பி, உபரியாக  வெளியேறி அண்டை அசல் கிராமங்களை  எந்த  நேரமும் பசியோடு  விழுங்கிவிடும் என்ற கவலை  அப்போதிருந்த மக்களுக்கும்   கிழக்கிந்திய கம்பெனி கலெக்டர்- COL   LIONEL  BLAZE - (1794-1799) க்கும் தூக்கமில்லாமல் செய்தது.   தமிழகத்திலேயே ரெண்டாவது பெரிய  ஏரியான  மதுராந்தக ஏரி  கிட்டத்தட்ட  14  சதுர மைல்.24ஆயிரம்  ஏக்கர்  பரப்பும்   21-22  அடி  ஆழமும்  கொண்டது.. மண் கரைகள் நீரின் பலத்தை தாங்காமல் எந்நேரமும் உடைப்பு எடுக்கலாம் என்ற  பீதி. கலெக்டர் லியோனெல்  பிளேஸ்  தூங்கவில்லை, எப்படி  இந்த  மழையை நிறுத்துவது? எப்படி ஏரியை உடையாமல் பாதுகாத்து  மக்களுக்கு உயிர்பிச்சை அளிப்பது?. எப்படி பயிர்களை வயல் வெளிகளை காப்பது.?  ஏரி  உடைந்தால் எண்ணற்ற உயிர்ச்சேதம் நிச்சயம். எத்தனையோ கிராமங்கள் முழுகிவிடுமே 

இரவு பகலாக   கிராம அதிகாரிகளை கூப்பிட்டு பிளேஸ்  ஆலோசித்தார்.   கிராமத்தார் ஒத்துழைக்க வில்லை. ''பகவான் பாத்துக்குவார்'' என்கிறார்களே. முட்டாள்களுக்கு எப்படி   உருவாகும   பேராபத்தை,  அபாயத்தை  உணர்த்துவது? புரிந்து கொள்ளாத  எளிதில் கோபமடையும் ஜனங்கள்.   

''துரை , நீங்க பயப்படாதீங்க...'' கோதண்ட ராமரால்  மட்டுமே  ஏரி  உடையாமல்  பாதுகாக்க முடியும்,   அவர் பாது காப்பார்'' என்ற  நம்பிக்கையோடு  சும்மா இருக்கிறார்களே.   ஏரியின் கரை உடைப்பெடுக்காமல் பலப்படுத்த  முன் வரவில்லையே?''
 வேறு வழியும் தோன்றவில்லை  யாருக்குமே.   ராமர் கோவிலில் ஒரு பகுதி சிதிலமாகி,   கோவிலில் நிறைய  கல் தூண்கள், பெரும் கற்கள் சேமித்து வைத்திருந்ததை   எடுத்துக் கொண்டு போய்   கிராம மக்கள்  ஒத்துழைப்போடு  ஏரியின் கரையை பலப்படுத்தலாம் என்று கலெக்டர் ப்ளேஸ்  சொன்னதை எதிர்த்தார்கள்.

''இல்லை  கூடாது, துரை. அது  ஜனகவல்லி தாயார் சந்நிதி கட்ட  வேண்டும் என்பதற்காக  சேர்த்து வைத்த கல் அது.. தொடக்கூடாது.''

''வேறே வழியில்லை, அப்படியென்றால் உங்கள் ராமரே  வந்து ஏரி  உடையாமல் தடுத்து உங்களை எல்லாம் காப்பாற்றட்டும்.   நீங்களும்  ராமரை வேண்டிக்கொள்ளுங்கள்,  நானும் உங்கள்  ராமரை  பிரத்யேகமாக  வேண்டிக் கொள்கிறேன்.  இன்றிரவு கொஞ்சம் மழை நின்று,  எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து மதுராந்தகம் காக்கப்பட வேண்டும். அவர் அதை செய்யட்டும். நான்  ஏதாவது செய்ய வேண்டுமானால் என்ன ஏற்பாடுகள் தேவை என்று சொல்லுங்கள். செய்கிறேன் '' என்றார் கலெக்டர். ஆலோசனை கூட்டம் ப்ளேசுக்கு  திருப்திகரமாக முடியவில்லை.உள்ளூர பயம் அவருக்கு. 

ஊர் மக்கள்  எல்லோரும்  கோதண்ட  ராமருக்கு  பூஜைகள்  செய்து  வேண்டிக் கொண்டார்கள்.   அன்று இரவில் மழை  விடாமல் பெய்தது.  கவலையோடு   கலெக்டர்   பிளேஸ் இரவில்  இருட்டில், குடை எடுத்துக்கொண்டு ஏரியின்  நிலையைத்  தானே  நேரில் சென்று பார்த்து வரலாம் என்று  கிளம்பினார். அவர்   ஹிந்து அல்ல.  கடவுள் என்று ஒருவர் உள்ளார். அவர் தான் கதி என்று மனதில் எங்கோ ஒரு மூலையில் சின்ன நம்பிக்கை.   அவரது பார்வை  கோதண்டராமர் கோவில் மேல் சென்றது.  

 ''ஹே ஹிந்து  கடவுளே, உங்களை நம்பும் இந்த ஊர் ஜனங்களை காப்பாற்ற  எப்படியாவது இந்த ஏரி உடையாமல் இருக்க செய்யுங்கள்''  என்ற மானசீகமாக  வேண்டிக்கொண்டார்.  ஆபத்து காலத்தில் உதவி எங்கிருந்து வந்தாலும் நல்லது தானே.
என்ன இது? யார் இது?  
கும்மி ருட்டில்  ஏரிக்கரையில்  யாரோ இருவர் நடமாட்டம் தெரிந்தது.
'ஆஹா  இந்த  ஊரில்  விஷமிகள் கிடையாதே.  என்  ஆட்சியில்  எவனாவது ஏரியை உடைக்க முயற்சித்தால் அவன் தப்ப முடியாதே'' யார்  இந்த நேரத்தில் இங்கே,  என்ன செய்கிறார்கள் இவர்கள் ?  தப்பான ஆட்களாக இருந்தால்  கையும் களவுமாக பிடிப்போம்''  என்று  ஏரியின் கரை மீது ஏறி  பிளேஸ்  அந்த இருவர்  அருகே சென்று பார்த்தார்.  அந்த  இருவர்களும்  ஒளி வீசும்  மேனியர்கள்.  உயர்ந்த  ஆஜானுபாகுவானவர்கள் . அரச குடும்பத்தார்கள் போல் இருக்கிறது. தலையில்  கிரீடம் ,  உடலில் மின்னும்  ஆபரணங்கள், இடையில்  பட்டு பீதாம்பர ஆடை.  இருவர் கையிலும்  பெரிய வில்.  ஏரியை கண்காணித்துக் கொண்டு அங்கும் இங்கும் அவர்கள்  இரவெல்லாம்  அது உடைபடாமல்  பாரா நடக்கிறது.  யார் இவர்கள்,  எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே!  
ஆம்  இந்த ஊர்  கோவிலில் இந்த  உருவத்தைப் பார்த்திருக்கிறோமே!   ஏதோ உள்ளே  ஒரு  வித உணர்ச்சி கொந்தளித்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் முகத்தை ஒரு நிமிடமே நேருக்கு நேர்  பார்த்தார்.  அவரை அறியாமல்  கைகள் கூப்பின. மண்டியிட்டு  அமர்ந்து அந்த  கரை மேட்டிலேயே  வணங்கினார்.
இரவு  ஓடியது.  

மழையும் ஒருவழியாக நின்றது. ஏரி நீர்  கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம்போல்  அளவை மீறாமல்  பாசனங்களுக்கு  சென்றது. பொழுது விடிந்தது.  மழை பெய்த  சுவடு இல்லாமல்,  ஏரி வழக்கம்போல்  கவலைக்கிடம் அளிக்காமல்  சாதாரணமாக காட்சி அளித்தது.  இன்று இதை எழுதும் வரை ஏரியின் கரை பலமாகத்தான்  இருக்கிறது.

கலெக்டர் பிளேஸ்  அசந்து போனார். இயற்கையையே  வெல்லக்கூடிய  சக்தி வாய்ந்த அந்த இருவர் யார்?  பொழுது விடிந்ததும் . கிராம  மக்கள்,அதிகாரிகள் ஓடிவந்தனர்.  கலெக்டருக்கு  பழங்கள்  காய்கறிகள்  எல்லாம் அளித்து  வந்தனம் செய்தனர். அவர்களிடம்  இரவில்  தான் கண்ட  அந்த  இரு வில்லாளிகளைப்  பற்றி வர்ணித்து  யார் அவர்கள் என்று கேட்டார்.    

கிராமத் தலைவர்களில் முதியவர்  ''ஹே  ராமா, ஹே  லக்ஷ்மணா  என்று  கதறிக்கொண்டு  கலெக்டர் கால்களை கெட்டியாக  பிடித்துக் கொண்டார். அவருக்கு  ஆவேசம்,  சாமி, வந்துவிட்டது  ராம பக்தர் அவர்.  தாரை தாரையாக  கண்ணீரால்  அந்த வெள்ளைக் காரர் பாதங்களை கழுவினார்.  எல்லோரும் அப்படியே செய்தார்கள்.  

''எத்தனை  எத்தனை ஜன்மங்கள் தவமிருந்தாலும் கிடைக்காத  தரிசனத்தை எளிதில்பெற்ற மகான் என்று  கலெக்டர்  ப்ளேசை  வாழ்த்தி போற்றி வணங்கினர்.

''போதும்  எல்லோரும்  அமைதியாக  உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். என்னால் இந்த அதிசயத்தை நம்பாமல்  இருக்க முடியவில்லை.  உங்களுக்கும் இந்த கோவிலுக்கும் நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். எனது நன்றிக்கடனாக உடனே  ஏற்பாடு செய்கிறேன்.

''துரை,   ராமர் கோவில்  சிதிலமான நிலையில் இருக்கிறது. செப்பனிடவேண்டும்'' 
மதுராந்தகம் கோவிலை  கலெக்டர் உடனே   கம்பெனி நிர்வாக செலவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. தாயாருக்கு சந்நிதி இல்லாமல் இருந்தது.   அதை கலக்டர் கட்டி கொடுத்தார். அப்போது முதல் மதுராந்தகம் கோவில்  கோதண்ட  ராமர்  ஏரி காத்த ராமர் என்ற பெயர் பெற்றார்.   பய பக்தியோடு  கலெக்டர்  தம்பதிகள்   ராமரை  வணங்கி  நன்றியை  தெரிவித்தனர் .

ஜனகவல்ல   சீதா  தேவிக்கு  ஒரு  புது சந்நிதி கலெக்டர் ப்ளேஸ்  உத்தரவில்  உருவானது..ஜனகவல்லி தாயார்  சந்நிதியில் அதன் மேல் உத்தரத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு  காணப்படுகிறது. பார்க்கவும்.   தமிழில்  “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது”    என்றுள்ளது.  அவசியம் மதுராந்தகம் சென்று இதுவரை  காண வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னுடன் வந்தவர்களுக்கு ரெண்டு நாள் முன்பு  காட்டியபோது அசந்து போனார்கள்.
அர்ச்சகரும் சரித்ரத்தை விவரித்துச் சொன்னார். 

ஆட்சியில் உள்ளவர்கள்  எந்த  கோவிலும்  புதிதாக கட்டவேண்டாம்.   இருக்கும்  கோவில்கள்,   நிலங்களை இழந்து குறுகி  அகத்தியர் உரு  பெறாமல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை  கோவிலுக்காக, அந்தந்த ஊர்  கோவில்  பராமரிப்புக்கு அண்டை  வருமானமில்லாத கோயில்கள் நிலைக்க, தர்ம காரியங்களுக்காக  பயன் பட ஒத்துழைத்தால்  அதுவே போதும்.  கடவுள் பக்தி என்பது உலகத்தில்  மதம் கடந்தது என்பது புரிந்தால் அதுவே போதும்.  


Monday, December 19, 2022

A GREAT SPIRITUALIST


 இன்னொரு கி.வா.ஜ . #நங்கநல்லூர்_J_K_SIVAN



நமது வாழ்வில் சில சமயம் சில அபூர்வ மனிதர்களை சந்திக்க நேர்வது நமது அதிர்ஷ்டம். சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் மதுராந்தகம் ஏரியும் , அதை காப்பாற் றிய ஏரி காத்த ராமரும் இருந்தாலும், அந்த ஊரில் இன்னொரு அதிசயம் ஒரு மனித உருவில் உள்ளதே தெரியுமா?. விண்ணையும் மண்ணையும் தன்னில் அடக்கி '' குறுகத் தரித்த'' குரள் போன்ற உடம்பு. அதற்குள் எத்தனையோ ஆன்மீக சுனாமிகள் பொங்கி எழுந்து கொண்டே இருக்கும் . வேதம், குறள், கண்ணதாசன் தத்துவ பாடல்கள், கம்பன், நாலாயிர திவ்ய பிரபந்த ஆழ்வார்கள். இன்னொரு கி.வா.ஜ என சொல்லக்கூடிய திடீர் திடீர் சிலேடைகள், வார்த்தை ஜாலங்கள், (ஆங்கிலத்தில் PUN) ஆகியவற்றை வாரி வழங்குபவர். அவற்றை கேட்டு என்னை மறந்து வாய் விட்டு சிரித்து அனுபவித்த நேரங்கள் அதிகம். அவருக்குள் ஷேக்ஸ்பியர், கம்பர் வள்ளுவர் ஆழ்வார்கள் எல்லோரும் இருந்து அடிக்கடி வாக்கில் இனிமையாக, சாதுர்யமாக தலை காட்டுவார்கள்.
எண்பதை நெருங்கினாலும் சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் அதிகமாகிக் கொண்டே வரும் எளிய வைணவ திலகம் மதுராந்தகம் திருமால் கவிச்செல்வர் ஸ்ரீ ரகுவீர பட்டாச் சாரியார். எனது இனிய நண்பர். பல புத்தகங்கள் எழுதியவர். மாதாமாதம் அருள் மலர் ஒன்றை வெளியிடுபவர்.

வெடுக் வெடுக் என்று பேசும் இவர் மதுராந்தகத் திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள கடுக்களூரில் உதித்தவர். இனிய குரலில் இன்னிசை வேறு. பிரசங்கம் செய்யும்போது குறித்த நேரத்தில் எல்லாவற்றையும் அடக்கி பளிச் சென்று எடுத்துச் சொல்லும் பாங்கு. முதலில் அவரைப் பார்த்தபோது அடடா இவரை இதுவரை தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்று ஏங்க வைக்கும் அளவிற்கு ஒரு ஈர்ப்பு சக்தி கொண்டவர்.

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவை டிரஸ்ட் நிகழ்ச்சிகளில் முடிந்தவரை பங்கு கொண்டு பரிமளிக்கச் செய்பவர்.
நேற்று இவரது இல்லத்துக்கு நண்பர்களோடு சென்றேன். அவரது வீட்டில் அவர் தியானம் செய்யும் சிறிய அறையில் ஒரு பீடத்தின் அடியில் ரெண்டு கோடி ராம நாமங்கள் பிரதிஷ்டை சிறிய மேடை எழுப்பி அதன் மேல் ஏரிகாத்த ராமன் படம், அவனது பாதங்கள். அந்த சிறிய அறையில் சத் சங்க பஜன், உபன்யாசம் வேத பாராயணம் எல்லாம் நடக்கும்.சில வருஷங்க ளுக்கு முன்பு நானும் அங்கே ராமனைப் பற்றி பேசும் பாக்யம் கிடைத்தது. முரளி தர ஸ்வாமிகளுக்கு என்னுடைய முதல் பிரதி ''ஐந்தாம் வேதத்தை'' அந்த அறையில் அவர் திருக்கரத்தில் அளித்து திருப்பாதத் தை வணங்கிய பாக்கியமும் உண்டு.

நேற்று ரகு வீர பட்டாச்சாரியார் எங்களை ஏரி காத்த ராமன் ஆலயத்தில் உதித்து மார்கழி 3ம் நாளில் ராம தரிசனம் பெற்றது அடுத்த பதிவில்.

Sunday, December 18, 2022

MATHRU PANCHAKAM

மாத்ரு பஞ்சகம் - நங்கநல்லூர்  J K SIVAN
ஆதி சங்கரர்

என்  மூன்றரை வயது பேத்தி தானாகவே  விளையாடிக் கொண்டிருக்கும்போது உரக்க  அவளுக்குத் தெரிந்த  ஒரு  பள்ளிக்கூட  ரைம்  சொல்லியதைக்  கேட்டேன். '' அம்மா இங்கே வா வா  ஆசை முத்தம்  தா தா....''   குழந்தைகளுக்கு  அம்மா  தெய்வம். இன்றியமையாத ஜீவன்.  உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் ஒருநாள் கொண்டாடு
கிறார்கள்.  நல்லவேளை  ஒரு நாளாவது  அம்மாவை நினைக்க தோன்றியதற்கு  கிருஷ்ணா  உனக்கு ஆயிரம்  நமஸ்காரம்.

' ஹே  வெள்ளைக்காரா,  அம்மாவைப் பற்றி நினைக்க வருஷத்தில் ஒரு நாள்  அவளுக்கு ஒதுக்கிய  நீ  சத் புத்ரன்.  வீட்டிலேயே இருந்தும், ஊரில் இருந்தும், உயிரோடு இருந்தும்   அம்மா ஞாபகம்  இல்லாத   எங்களவர்களை  விட  நீ  உயர்ந்தவன்.

 அம்மா'' --- இந்த வார்த்தைக்கு மிஞ்சிய சக்தி வாய்ந்த ஒரு சக்தி வாய்ந்த  சொல் தமிழில்  கிடையாது. அம்மா ஸ்தானத்தில் ராஜாவின் அம்மாவும் பிச்சைக்காரன் அம்மாவும் ஒரே நிலைப்பாடு தான். உலகில் முதன்மையானவள்  ப்ரத்யக்ஷ தெய்வம்  அவள்.  மாத்ரு தேவோ பவ : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்: தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை..... இன்னும் நிறைய....மாதா,   பிதா, குரு  தெய்வம்  என்று முன்னிலையில்  இருப்பவள்.
இன்று என் அம்மாவைப் பற்றி சில வரிகள் எழுதி நிறைய பேருக்கு பிடித்து அவர்கள் அம்மா பற்றி நினைக்க தோன்றினால் அது நான் செய்த புண்யம். அடிக்கடி  என் அம்மா  ஜாம்பாவதியைப்  போற்றி தோண்றியதை  எழுத தவறுவதில்லை.

''அம்மாவைப் பற்றி எழுதினால் யாருக்கு தான் பிடிக்காது. எத்தனை தரம் படித்தாலும் விருப்பும் விறுவிறுப்பும் பாசமும் பழைய ஞாபகமும் குறையுமா?.    நமக்கு மட்டுமல்ல ஆதி சங்கரர் போன்ற முற்றும் துறந்த சந்நியாசிக்கு கூட அம்மாவை  ரொம்ப  பிடித்தது.   அவருடைய மாத்ரு பஞ்சகம் என்ற ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் ஐந்து யுகங்களிலும் அழியாத ஒன்று . அதையே  மீண்டும்  சொல்கிறேன்.

''அம்மா எனக்கு சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப விருப்பமாக இருக்கிறதே''

என் கண்ணே, சங்கரா,  எனக்கு  இருப்பது நீ ஒருவனே. உன் தகப்பனாரும் என்னை விட்டுச் சென்று விட்டார். பல வருஷம் தவமிருந்து திருசூர் வடக்கு நாதன் அருளால் நீ பிறந்தாய். கண்ணை இமை காப்பது போல் உன்னை வளர்த்தது நீயும் என்னை விட்டுபிரிந்து போவதற்காகவா? இதற்கா பெற்றேன். நீ சந்நியாசியாவது நான் உன்னை உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?

'' என் அருமை அம்மா, நீ தாய் என்பதோ நான் ஒரு நேரத்தில் உன் மகன் என்பதோ பிரிபடும் உறவோ? உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் நாம் இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும் அந்த இறைவன் தான் என் மனத்திலும் இருப்பவன் அல்லவா? நான் எங்கிருந்தாலும் நீ தான் என் மனதில் முழுவதுமாக இருப்பாய்''.

எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு நிபந்தனையுடன் சன்னியாசி யானான் 7 வய து மகன் சங்கரன்..

''சங்கரா, என்  குழந்தே, நீ என் மரணத் தருவாயில் என் அருகில் இருக்க வேண்டும். உன் கையால் தான் எனக்கு தகனம். செய்வாயா? சரி என்றால் நீ என்னை விட்டு செல்லலாம் ''.
''நிச்சயம்  அம்மா,  அப்படியே ஆகட்டும்.

வருஷங்கள் உருண்டது. அந்த சந்நியாசி ஸ்ரிங்கேரியில் இருக்கும்போது அன்னையின் அந்திம காலம் வந்ததை உணர்ந்தார். திரிகாலமும் உணரும் ஞானி அல்லவா அவர். அம்மாவுக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது.

இறைவன் அருள் மிக்க அந்த ஞானி அடுத்த கணமே அன்னையிருந்த ஊர்  கேரள தேச  காலடி கிராமத்தில்  தாயின்  காலடியில் வணங்கி அருகே அமர்ந்தார். மடியில் இருத்தி க்கொண்ட அம்மாவின்  கண்கள் மட்டுமே பேசின. கொஞ்சம் கொஞ்சமாக உடல் ஒவ் வொன்றாக சக்தியை இழந்து வந்தது. நினைவு தப்பியது. சிறிது நிமிஷங்கள் கசிந்தது. மரணம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது. தாய் வெறும் உடலானதை உணர்ந்த அந்த துறவி, அவளுக்கு அந்திம கடன்களை ஆசாரத்தோடு சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே.   துறவிக்கு   ஏது உறவு  என்று எல்லோரும்   எள்ளி நகையாடினர்.

துறவியின் மனத்திலிருந்து, எண்ணக் குவியல்களிலிருந்து வெடித்து வாய் வழியே கடல் மடையென ஐந்து ஸ்லோகங்கள் அப்போது வெளியேறியது . அந்த ஞானியின் மற்ற காவியங்களிலிருந்து முற்றிலும்  அப்பாற்பட்ட ஒன்றே ஒன்று. இதில்  தாய் பாச உணர்ச்சி பொங்கும். உறவும் நினைவும் தொக்கி நிற்கும். அதுவே இன்றும் என்றும் அழியாத காவியமாக இருப்பதைப் பார்க்கலாமா  .

தாயைக் கடவுளாகவே போற்றுவதும்  கடவுளைத் தாயாக  நெருங்குவதும்  நாம் அறிந்தது தான். உலகியலில் ஒரு தாய்க்கு  தான் மகனாகப் பணி புரியவில்லையே என்ற ஏக்கம் எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது?. முக்கியமாக அவள் இருக்கும்போது.     மனச் சாட்சியின் உறுத்தல் நெருடும்.

आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी ।
एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः दातुं निष्कृतिमुन्नतोऽपि तनयस्तस्यै जनन्यै नमः ॥ १॥


''ஆஸ்தம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம : தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

என் அம்மா! என் தலை உன்னிலிருந்து வெளிப்படும் போது என்னமாக பல்லைக் கடித்துக்கொண்டு தாங்க முடியாத பிரசவ வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில் வெளியே தள்ளினாய் , வருஷக் கணக்காய் உன் அருகே படுத்து உன் ஆடையை, படுக்கையை தாராளமாக  நிறைய  ஈரமாக்கி  நனைத்தேனே. ஒரு வார்த்தை நீ கோவித்த தில்லையே . மாறாக சிரித்து என்னை அணைத்தாய்.

என்னால் உன் உடல் இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது. ஒரு பத்து மாச காலம் என்னமாய் நான் உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்.உலகம் என்னை பெரிய  ஞானி  என்று  புகழ்வதால் அது ஈடாகுமா?

गुरुकुलमुपसृत्य स्वप्नकाले तु दृष्ट्वा यतिसमुचितवेशं प्रारुदो मां त्वमुच्चैः ।
गुरुकुलमथ सर्वं प्रारुदत्ते समक्षं सपदि चरणयोस्ते मातरस्तु प्रणामः ॥ २॥

''குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம் ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

என் அம்ம்மா!! திடீரென்று ஒருநாள் நான் காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய். அது எவ்வாறு உன்னை உலுக்கியது. கண்ணீர் கங்கையாய் பெருக என் குருகுல வாச ஆசான் வீட்டுக்கு ஓடிவந்தாய்.என்னைத் தேடினாய்,  நான் உடுத்திக்கொண்டிருந்த  என்இடுப்புத் துண்டை தான் முதலில் கவனித்தாய். வெள்ளையாக தான் இருந்தது. காவி இல்லை...  ஆஹா  நிம்மதியாக   என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல் பாதம் வரை நீ  தடவிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என் ஆசானும் கூட உன்னோடு  சேர்ந்து அழுதது இப்போது நடந்தது போல் இருக்கிறதே. நான் என்ன செய்யமுடியும்?. பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக வணங்குகிறேன்.

अंबेति तातेति शिवेति तस्मिन्  प्रसूतिकाले यदवोच उच्चैः । कृष्णेति गोविन्द हरे मुकुन्द
इति जनन्यै अहो रचितोऽयमञ्जलिः ॥ ५॥

''அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்  ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே - த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

ஒ ! என் அம்ம்மா ! உனக்கு ப்ரஸவ வலியெடுத்த போது நீ என்ன கத்து கத்தினாய் ஞாபக மிருக்கிறதா? '' அப்பா, அம்மா ! தேவாதி தேவா,   பரம சிவா, தெய்வமே கிருஷ்ணா, கோவிந்தா, ஸ்ரீ ஹரி, பகவானே, முகுந்தா ''

அதற்கு  ஈடாக  நான் இப்போது என்ன செய்யப்போகிறேன் தெரியுமா ? என் அன்புள்ள அம்மா, பணிவோடு கண்ணீர் மல்க  உன் காலில் விழப்போகிறேன்.

न दत्तं मातस्ते मरणसमये तोयमपिवा स्वधा वा नो दत्ता मरणदिवसे श्राद्धविधिना । न जप्त्वा मातस्ते मरणसमये तारकमनु-
रकाले सम्प्राप्ते मयि कुरु दयां मातुरतुलाम् ॥ ३॥

''ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு: அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

என் தாயே, உனக்கு நான் என்னவெல்லாம் செய்யவில்லை தெரியுமா? தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட தரவில்லை. உன் கடைசி யாத்திரைக்கு உபகாரமாக ஒரு விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை என்று ஒன்று இருந்ததா எனக்கு? போனதெல்லாம் போகட்டும் உனக்கு நினைவு அழியுமுன்னே அந்த அந்திம நேரத்தில் உன் காதில்    ''ஒ ராமா, ஸ்ரீ ராமா -- ஏதாவது ஒரு வார்த்தையாவது சொல்ல நான் இருந்தேனா? ஈடற்ற,    இணை கூற  முடியாத தாயே, இரக்கமற்ற என் மேல் கொஞ்சூண்டு இரக்கம் வை. என்  தவறையெல்லாம் மறந்துவிடு, மன்னித்து விடு. ஏதோ கடைசி கடைசியாக வாவது உன் உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததைத் செய்தேனே. அதற்காகவாவது கருணை காட்டு..

मुक्तामणि त्वं नयनं ममेति राजेति जीवेति चिर सुत त्वम् ।
इत्युक्तवत्यास्तव वाचि मातः ददाम्यहं तण्डुलमेव शुष्कम् ॥ ४॥

''முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத: ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

அம்மா, நீ நீடூழி வாழ்க. '' என் முத்தே, என் நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டி, என்உயிரின் உயிரே,'' என்றெல்லாம் இட்டுக்கட்டி நீயாக ராகம் போட்டு என்னை தூக்கிக்  கொண்டு  ஆடி,  மடியில் வைத்து கொஞ்சி பாடுவாயே, நான்  நன்றிக்கடனாக  இப்போது உனக்கு என்ன செய்கிறேன்?.    அன்பின் ஈரத்தோடு, பாசத்தின் பனித்துளி யோடு, கருணையின் குளிர்ச்சியோடு நீ பாடிய அந்த வாய்க்கு ஈரமில்லாமல் வறண்ட உலர்ந்த அரிசியைத்தான் கொஞ்சம் வாய்க்கரிசியாக போடுகிறேன்.

அந்த ஞானி, முற்றும் துறந்த துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, ஆதி சங்கரர். இந்த ஐந்து ஸ்லோகமும் அவர் தாய் ஆர்யாம்பாவுக்குகொடுத்த வாக்கினைக் காப்பாற்ற காலடிக்கு  வந்து அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது பாடிய '' மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்  மேலே  சொன்னவை.

தாய் தந்தையைப் பேண தவறவேண்டாம்.  காலம் கடந்து சங்கரர் போல் துடிக்க வேண்டாமே. அவர் சன்யாசி அதனால் ஒப்புக்கொள்ளலாம். நமக்கு மன்னிப்பே கிடையாது.  உலகத்தில்  எங்கெங்கோ  ஏதேதோ  காரணத்தால்  நகர  முடியாமல்  தவிக்கும் அம்மாவைக் காண துடிக்கின்ற, காண இயலாமல் தவிக்கும்  அன்பு உள்ளங்களே  பகவான் கிருஷ்ணன் உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கட்டும். விரைவில் அம்மாவைப்  பார்த்து ஆசி பெற  சந்தர்ப்பம் கிடைக்கும்.

music season

 


விண்ணுலக  மார்கழி உற்சவம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

டிசம்பர் மதம் வந்துவிட்டால் நமது தமிழகத்தில்  கூடவே  பக்கவாத்யமாக வருவது குளிர், விட்டு விட்டு மழை, பனி,  விடிகாலையில்  கோயில்களில்  சூடாக பிரசாதம்.சங்கீத நிகழ்ச்சிகள்  எங்கும் சபாக்களில்  மார்கழி உற்சவமாக. நடு  நடுவே  கிரிக்கெட், கால் பந்து உலகளவு போட்டிகள் இன்னும் எத்தனை எத்தனையோ.கல்யாண பத்திரிகைகள் போக்குவரத்து கிடையாது.

பூலோகத்தில் அதுவும் நம் தமிழகத்தில் நடப்பதை எல்லாம் அப்பப்போது  இங்கே வந்து சகல விஷயங்களையும் அறிந்து மேலே விண்ணுலகத்தில் சொல்வதற்கு நாரதர் எப்போதும் ரெடி. ஆகவே  அங்கேயும்  கொண்டாட்டம்  நடக்கும்.

விண்ணுலகத்தில் ஒரே கொண்டாட்டம்  என்றால்  நாம் இங்கே  மண்டபம்  வாடகைக்கு பிடித்து, கலர் லைட்  போட்டு, காதைச் செவிடாக்க  ஸ்பீக்கர் செருகி, சாப்பாடு, போட்டோ, வீடியோ  தடபுடல் எதுவுமில்லை. அங்கே  யாருக்குமே  பசி தாகம் கிடையாது. எங்கே வேண்டுமானாலும்  பறந்து போவார்கள், ஓலா   ஊபர்  தேடமாட்டார்களே.  கார் செருப்பு எதுவும் தேவை இல்லை.  ஆவி ரூபத்தில் எல்லோரும்  பொன்னாக தகதக  வென்று மின்னுபவர்கள். அவர்கள் பேசும் பாடும்  பாஷை நமக்கு புரியாது. ஆகவே  எங்குமே  நம்மைப் பொறுத்தவரை அமைதி தான்.
 
தேவேந்திரன் சங்கீத ரசிகன்.   தேவலோக  சபா  செக்ரெட்டரி.  எல்லோரும் வந்து  இந்திரன்  மாளிகையில்  கூடினார்கள்.

''தேவர்களே, இந்த வருஷம் மார்கழியை விமரிசையாக இங்கே  கொண்டாட எல்லோரும் ஐடியா சொல்லுங்கள்'' என்று கேட்டான்  இந்திரன்.

''திருப்பாவை  30பாசுரங்களையும்  நான் யார் யார் படவேண்டும் என்று சொல்கிறேன். MLV,  அரியக்குடி, பாடட்டும். கூடவே  கதிரி கோபால்நாத், வயலின்  செளடையா,  புல்லாங் குழலில் TR மாலி, சரப ஸாஸ்த்ரி , நாதஸ்வரத்தில்  TN  ராஜரத்தினம் பிள்ளை , காரு குறிச்சி,  மாண்டலினில்  ஸ்ரீனிவாஸ்,    மிருதங்கத்தில்  பாலக்காடு மணி அய்யர் சேர்ந்து கொள்ளட்டும்'' என்கிறார் சுப்புடு ஸ்டைலில்   TKC  முதலியார்.

''பலே பலே '' என்கிறார்  ராஜாஜி.  அனந்தராம  தீக்ஷிதர்  உபன்யாசம் தினமும் வைப்போம் அவர் ஸ்லோகங்கள் கேட்டு ரொம்ப நாளாயிற்று''  

''எனக்கு  MSS  வைஷ்ணவ ஜனதோ ,   மைத்ரீம் பஜே...  பாடி கேட்கவேண்டும்.. அதையும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்  என்கிறார்  காந்தி தாத்தா.

இந்த மார்கழி வைபவத்தை  ஒரு காவ்யமாக  பாரதியார்  இனிய தமிழில் வடிக்கட்டும்  என்கிறார் வ.வு.சி.

நேரு  புரியாமல் சிரித்து கை  தட்டுகிறார்.  சரோஜினி தேவி  அவரைப் பார்த்து முகத்தை சுளிக்கிறார்.

ரைட் ஆனரபிள்  ஸ்ரீனிவாச சாஸ்திரியார்  ஆங்கிலத்தில்  ராமாயணம் நிகழ்ச்சி தினமும் ஒரு  மணிநேரம்  நடக்கவேண்டும் என்கிறார்  CP  ராமசாமி அய்யர்.   சோவின்  நாடகங்கள்  ஒரு சிரீஸ் நடக்கவேண்டும் என்று என் ஆசை ..... குரலை உயர்த்துகிறார்  கல்கி கிருஷ்ணமூர்த்தி

அருமையான குரலில்  பாட  ரெண்டு பேர்  இருக்கிறார்களே  அவர்களை  ஏன் விட்டுவிட்டீர்கள்? ஒரு ஜோடி கணவன் மனைவி.   S G  கிட்டப்பா   K B S   அவரகள் பழைய  நாடக  மேடை பாடல்கள் நடுநடுவே சில நாட்கள் பாடவேண்டும் என்கிறார்.  N S  கிருஷ்ணன்.

பத்மினி  அம்மா டான்ஸ் ப்ரோக்ராம்  நிச்சயம் இருக்க வேண்டும்  என்கிறார் TMS   ஐயா.

இதெல்லாம்   போதாது  MKT  பாகவதர்,  P U   சின்னப்பாவும்  பாடவேண்டும்  என்கிறார் மதுரை மணி அய்யர்.

நாரதர்  எல்லாவற்றையும்  எழுதிக்கொண்டு   ஒரு  லிஸ்ட் தயார் செய்ய, இன்னும்  பல நிகழ்ச்சிகளை  GNB   முடிவு பண்ணுகிறார்.

'' நீங்களும்  அஷ்டபதிகள் பாடவேண்டும் என்று   ருக்மணி தேவி  பாலமுரளியை கேட்டுக் கொள்ள  ' ஆஹா  அதற்கென்ன  வைகுண்டத்தில் கிருஷ்ணன் எதிரிலேயே  பிருந்தாவன  சங்கீதம் ஜோராய் ஒலிக்கட்டும்''   என்று  ஆமோதிக்கிறார்  ஜெயதேவர்.

ஒவ்வொரு நாளும்  நிகழ்ச்சி முடிவில் பூலோகத்தில்  பாரத தேச ஒற்றுமைக்கு  எல்லோரும்  சேர்ந்து  தாகூர்  இயற்றிய  ஜன கண மன  பாடவேண்டும் என்பது என் அபிப்ராயம் என்கிறார் சர்தார் படேல்.  தாகூர்  சிரித்துக்கொண்டே  தாடியை செல்லமாக தடவிக் கொடுக்கிறார்.

சீர்காழி ஸார்  கணீரென்று பாட  நாம்  எல்லோரும் சேர்ந்து கொள்வோம்  என்கிறார்  D K  பட்டம்மாள்.  அப்படியே  என்று எல்லோரும்  கோரஸ்..

மொத்தத்தில்  மார்கழி முப்பது நாளும்  கலை நிகழ்ச்சிகள் அற்புதமாக  விண்ணுலகில் நடை பெறப் போகிறது.  இதில் என்ன முக்கிய விஷயம் என்றால்.

1.  இங்கு போல் அங்கே  பொங்கலுக்கு கும்பல் சேராது.  
2.  கொரோனா, தொற்று, மழை,குளிர், பனி  தொந்தரவு, மாஸ்க்  பெட்ரோல் டீசல்  புகை நாற்றம்   பார்க்கிங்  ப்ராபளம் எதுவும் இல்லை.  
3. இரவு பகல்  இடைவேளை இல்லை.
4. டிக்கெட், முன் வரிசை ஒதுக்கீடு என்று எதுவுமில்லை. காற்றில் எங்கும்  கானம் வியாபிக்கும்,  பொன்வண்ணத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்லோருக்கும் சந்தோஷத்தை அளிக்கும். ஒவ்வொருவர் கண்ணுமே  டிவி, யூட்யூப் தான்.
5. மார்கழி மாதம் முழுதும்  நரக வாசிகளுக்கும், மாஜி அரசியல்வாதிகளுக்கும், கூட,   நிகழ்ச்சிகளை  அனுபவிக்க  இலவச அனுமதி உண்டு. பேச மட்டும் அனுமதியில்லை.

LIFE LESSON



இது நமக்குண்டான  பொது விஷயம் 
நங்கநல்லூர் J K  SIVAN 

அன்பர்களே, நண்பர்களே,   இது  வயோதிக வாலிபர்களான நமக்கு ஒரு பிரத்யேக பதிவு.  

ஐம்பது வயதாகிவிட்டாலே  நம்மைத் தேடி வரும் பட்டம்  'கிழவன், கிழவி, பெரிசு.' போன்றவை. மரியாதையாக  முதியவர்கள் என்று நம்மை  ஓரம் கட்டி  ஒரு  குரூப்பில் சேர்த்து விடுகிறார்கள். 

பெரிசுகள்  நம்மைப் பற்றி  மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்  என்பதை விட  டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்  என்று தெரிந்தால் ஆச்சர்யமாக இருக்கும். நான் எங்கோ படித்து அறிந்து கொண்ட விஷயம் இது தான்:

பெரிசுகள்  பேசிக்கொண்டே  இருக்கவேண்டும். அப்போது தான்  ஞாபக மறதி குறையும்.
நாம் பேசிக்கொண்டிருந்தால்  இளசுகள்  என்ன சொல்கிறது?  ''அது கிட்டே போய் மாட்டிக்காதே. பிடிச்சுக்கும், அறுத்துத்  தள்ளிடும்''.  ஆகவே இளசுகளை நெருங்காமல் நமக்குள்ளேயே பேசுவோமே.

பேசிக்கொண்டே இருப்பதால்  என்ன  நன்மை தெரியுமா?   பேசுவதால்  மொழியும்  மூளையும் இணைந்து மூளையின் செயல்பாடு தொடர்ந்து கொண்டே இருக்கும். அது நல்லது.  நிறைய பேசவேண்டும், வேகமாகவும் பேசவேண்டும்.  வேகத்தால் மூளையும்  வேகமாக  வேலை செய்யும்.  வேகமாக பேசும்போது மூளையை   ஆழ் மனதிற்குள்  ஓட வைத்து எத்தனையோ  விஷயங்களை, எண்ணங்களைத்  தேடி எடுத்துக் கொண்டு வேகமாக  வாய்க்கு அனுப்புகிறது.   நான்  ஏன் நிறைய  பழங்கால விஷயங்களை
உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்ற ரஹஸ்யம் இப்போது புரிகிறதா?

பழசை,அனுபவங்களை,  நினைத்துப் பார்க்க வைக்கிறது.  தனிமையில்  பேசாமல்  உம்மென்று உட்கார்ந்து கொண்டிருக்கும்  பெரிசுகளுக்கு வெகு சீக்கிரம்  ஞாபக மறதி வியாதி வந்துவிடுமாம். 

இன்னொரு விஷயமும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.  பேசிக்கொண்டே இருப்பதால்,  மனோ வியாதிகள் அண்டாது.  மன அழுத்தம் குறையும்.  உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் உள்ளே  போட்டு அமுக்கி வைப்பதால்  அந்த மூட்டையின் கனம் அதிகமாகி,  மூளையை  திணற அடித்து விடுகிறது.  பெரிசுகளை பேச விட்டால்  உள்ளே இருக்கும் சுமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே  கொட்டி  விட  வாய்ப்பு இருக்கிறது.

டாக்டர்கள் ஆராய்ச்சி செய் து சொல்வதில் ரொம்ப பிடிக்கும் விஷயம் என்ன தெரியுமா?பெரிசுகள் பேசுவதால் அவர்களின் முக  தசைநார்கள் வலுப்படுகிறது. தொண்டைக்கு சக்தி கூடுகிறது. பேசுவதால் நுரையீரல்களின் வேலை சுருங்கி விரிவது  கூடுகிறது ரொம்ப நல்லது. அதன் திறன் அதிகமாகிறது. கண் காதுகளின்  செயல்பாடு பாதிக்கப் படுவதில்லை.   காது கேளாமை சீக்கிரம் நெருங்காது. தலை சுற்றாது. அதாவது எதிரே  எல்லாமே  விர்ரென்று நம்மை சுற்றி  ஓடாது.

கடைசியில் ஒரு அறிவுரை.   என்னைப்போன்ற  எல்லா பெருசுகளே,  நம்மை  alzemeir
 வியாதி, அதாவது  மறதி முழுமையும் ஆட்கொள்ளாமல் பாதுகாத்துக்கொள்ள  நாம் அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.  

பேச்சினால் ஆபத்து எப்போது வரும் என்றால் மற்றவர்களை குறை சொல்லும்போது தான்.  அவன் வாயாலே கெட்டான்  என்று பேர்  வாங்க வைத்துவிடும்.

மற்றபடி  கிருஷ்ணனை ராமனை முருகனை சிவனைப்  பற்றி பேசும்போது பாடும்போது தொந்தரை எதுவும் இல்லை.சரியா?


 

Friday, December 16, 2022

A POPULAR SONG

 

எட்டாப் பழத்துக்கு விட்ட கொட்டாவி
நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒவ்வொரு  மனிதனின் மனத்திலும் எத்தனையோ ஆசைக் கனவுகள்.  என்னென்னவோ ஆசைகள்.
மனக்கோட்டைகள். அவை எல்லாமே  நிறைவேறுவதில்லை.  அப்படித்தான்  எனக்கும் நன்றாக  பாடவேண்டும் என்று ஒரு ஆசை சின்ன வயதிலிருந்து. ஆனால்  இசையை முறையாக கற்றுக்கொள்ள முடியவில்லையா முயலவில்லையா அதற்கெல்லாம்  வழியே இல்லையா என்று சொல்ல முடியவில்லை.

கேசவ நாயர்  டீக்கடையில் ஆற்காட்டில்  ரோட்டில் சாயந்திரம்  ரேடியோ சிலோன், இலங்கை வானொலி வர்த்தக ஒலி பரப்பு  சில  மணி நேரங்கள் முடிந்த போதெல்லாம் கேட்டு  பல பாடுகளை நெட்டுரு பண்ணிக்கொள்வேன்.   அப்போதெல்லாம் கல்யாணம் மற்றும் விசேஷங்கள் வீட்டில் நடந்தால்  லௌட் ஸ்பீக்கர் loud  ஸ்பீக்கர்  எனும்  முக்கோண வடிவில் cone  காதை பிளக்கும்படியாக  சினிமா பாட்டுகள் கிராமபோனில் போடுவார்கள்.  அதில் பிடித்த  பாடல்கள் ஒலித்தால்  சைக்கிளை சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு  வாசலில்  நின்று கேட்பதுண்டு.

பாடுவது என்பது ரெண்டு வகை.  ஒன்று இயற்கையிலே குரல் வளம் கொண்டவர்கள் சிலர் தமது திறமை வெளிப்படாமல்,பாடாமல், அதன் இனிமையை வெளிப்படுத்தாமலேயே மறைத்து, தமக்குள், வீட்டில்  குளிக்கும் அறையில் பாடும் பாத்ரூம்  பாடகர்கள்.   சிலர் குரல் வளம் இல்லாவிட்டாலும் கடுமையான உழைப்பால் முறைப்படி இசைப்பயிற்சி மேற்கொண்டு பாடுபவர்கள். அதிர்ஷ்டம் இருந்தால், சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் , அவர்கள் பிரபலமாக சமூகத்தில் தென்படுவார்கள். 

குரல் இனிமை இல்லாவிட்டாலும் இருக்கும் குரலை வைத்துக்கொண்டு அற்புதமாக உழைத்துப் பாடி தனி இடத்தை பெற்றவர்களும் உண்டு. தமது குரலுக்கு ஏற்றபடி, எத்தகைய பாடல்கள் இனிமையாக பாடமுடியுமோ அதைப்பாடி புகழ் பெருமை பெற்றவர்களையும் நாம் அறிவோம்.

இனிய குரலுக்கு உதாரணமாக எம்.கே. தியாகராஜ பாகவதர், ஏ. எம். ராஜா, S. P. பாலசுப்ரமணியன், TMS பாலமுரளி கிருஷ்ணா, போன்ற சிலரை அடையாளம் காட்டி விட்டு சங்கீதம் கற்று இருக்கும் குரலை மதிப்புறச் செய்த மதுரை சோமு, மதுரை மணி அய்யர், CS ஜெயராமன், M .D , ராமநாதன் போன்றோரை அடையாளம் காட்டலாம். 

இருக்கும் குரலின் கம்பீரத்தை உபயோகித்த கண்டசாலா.பி.பி. ஸ்ரீனிவாஸ் சந்திரபாபு போன்றோர்.

கடைசி ரகம். மற்றவர்கள் பாடினால் அவர்களே கேட்க விரும்பாதோர். நான் அவ்வகை.
இது இப்படி இருக்கும்போது, 1966ல் ஆலங்குடி சோமு என்ற கவிஞர் கடவுளை வேண்டி எனக்கு 

நீ அருள்வாயே,தேவா, என் உள்ளத்தில் உனக்கு கோவில் அமைத்தேனே ,
 உன் பக்கம் என்னை அழைத்தாயே , நன்றி உனக்கு, 
எனது தூய பழக்கத்தால்  உன்னை வாழ்த்தவேண்டும், 
என் தீய பழக்கங்கள் என்னை விட்டு தானாக ஓடவேண்டும், 
கொடிய புலியையும் நான் அன்போடு பராமரிக்கவேண்டும்,
 உலகம் என்னை அன்புள்ளவன் என்று பாராட்ட நான் வாழவேண்டும், எ
ன் வாழ்வில் நான் நீதி நேர்மையோடு பிறழாமல் வாழவேண்டும், 
என் பாபங்கள் தூளாக சிதையவேண்டும்,
 உன் ஜோதி சமுத்திரத்தில் நான் கலக்கவேண்டும், 
இதற்கெல்லாம் நீ அருளவேண்டும் என்ற  அர்த்தம் கொண்ட  ஒரு பாடலை பாடி இருப்பதை பாலமுரளி கிருஷ்ணா எளிமையாக ஒரு தமிழ் சினிமாவில் பாடி இருக்கிறார். அதை கேட்க நேர்ந்தபோது தான் எனக்கும் இதைப் பாடி பார்த்தால் என்ன என்று தோன்றியதன் விளைவு இத்துடன் இணை த்திருக்கும் என் குரல்
எண்பத்து  மூன்று  வயதுக்கு  மேல் இப்படி ஒரு ஆசையா? என்றால்  இதனால்  விளையும் ஒரே துன்பம்  இதை கேட்பவராகள் படும் கஷ்டம் ஒன்றே. பாடும் எனக்கு தெரியவில்லை.
 பாவம் சிந்து பைரவி. அதன் போதாத காலம் என்னிடம் மாட்டிக்கொண்டது 
யூட்யூப் லிங்க்

https://youtu.be/rUCmhDHgSdY

Thursday, December 15, 2022

pesum deivam

 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J.K. SIVAN


பெத்தச்ச  தேவுடு 

நான் படித்த ஒரு வித்யாசமான  சம்பவம் இது.  

முற்றுமுணர்ந்த ஞானிகள், மஹான்கள்  நம்மைப் போல் அறைகுடமாக  தளும்புவதில்லை. இருக்கும் இடமே தெரியாமல்  எந்த பந்தாவும் பண்ணுவதில்லை.  எங்கே  போகிறார்கள் எப்போது என்றே  தெரியாமல் உளவுபவர்கள்.

இப்போதுள்ள  சில  குருமார்கள் எங்காவது போக  வேண்டுமானால் முன்னறிவிப்புகள்  செய்த்துவிட்டு  மற்றவர்கள் சிலரை   முன்னாலேயே சிலர் போய் அந்த இடத்தில் அவர்கள்  தங்க வசதி, சாப்பாடு, தூக்கம், குளிர் சாதனங்கள், தனி அடுப்பு, குளிக்க வசதி, நிறைய பேர் வருவார்களா, அவர்களுக்கு தரிசனம் கொடுக்க சரியான இடம், ''வருகிறார் வருகிறார்'' என்று விளம்பரம், நோட்டிஸ் கள் பத்திரிகை செயதிகள் மூலம் கூட்டம் சேர்ப்பது என்பதெல்லாம்  அறிகிறோம்.

மஹா பெரியவா, சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமணர் போன்றவர்கள் எந்த விளம்பரமும் தேவை அற்றவர்கள். மஹா பெரியவா நிறைய இடங்களுக்கு அறிவிப்பு இன்றியே சென்றவர். ஒரு சிலருக்கு மட்டுமே அவர் எங்கு எப்போது இருப்பார், போகப்போகிறார் என்று தெரியும்.

இப்படித்தான் ஒரு தரம் ஆந்த்ராவில் மஹா பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். கடும் கோடை வெயில் காலம். அப்போது , பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ஆடம்பரமோ, பந்தாவோ துளியும் கிடையாது.

கிராமங்களில் உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட யாருக்கும் அறிந்திருக்க மாட்டார்கள். தெரிந்து கொள்ள முடியாது. எங்கோ எப்படியோ யாரோ ஒருவர் அறிந்து விட்டார் என்றால் அதுவே போதும் . காட்டுத்தீ போல் செயதி பரவி ஊர்மக்கள் திறந்துவிடுவார்கள். அது அவர் மேல் உண்டான பக்தி, பாசம், தனி மரியாதையினால்  பக்தர்கள் கூட்டம் சேர்வது.

யாரும் முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ, மாட்டுக் கொட்டகையோ, சிவன் கோவிலோ, திடீரென்று எப்போது எந்த நேரத்தில் “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போடுவார் என்றே அவருடன் இருப்பவர்களுக்கு தெரியாது. அப்படிச் சொல்லிவிட்டால் அந்த இடமே புண்ணிய க்ஷேத்ரம் ஆகிவிடும். அங்கு ஏதோ யாரும் அறியாத ஒரு விசேஷம் கட்டாயம் இருக்கும். அது அவருக்கு மட்டுமே தெரிந்த ரஹஸ்யம்.

 மஹா பெரியவா ஒரு ஆந்திர கிராமத்தின் வழியாக செல்லும்போது ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. ''இங்கே தங்குவோமே . சித்த நாழி  ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிப்போம் '' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

யாரோ ஒரு சிலர் அந்த பக்கமாக வந்தவர்கள் ''யாரோ பெரியவர் ஒரு சந்ந்யாஸி சிவன் கோவிலுக்கு  வந்திருக்கிறார். கூட சிலர் இருக்கிறார்கள். அவரைப் பார்த்தாலே   சொல்லமுடியாதபடி ஏதோ மனதில் சந்தோஷம் உண்டாகிறது'' என்று ஊரில் போய் சொல்லியிருப்பார்கள். அவ்வளவு தான். கிராமத்து ஜனங்கள் திமு திமுவென சேர்ந்து விட்டார்கள்.  வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. 

உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

அந்த கோவிலின்  வழக்கமான அர்ச்சகர்  உடல்நிலை சரியில்லாமல்  ஒரு  சிறிய  உதவியாளனை  அனுப்பி ஆவான் உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலைப் பூட்டிக் கொண்டு போயே போய் விட்டான்! அவனுக்கு  
 மஹா பெரியவாளை தெரியாது.  அது தவிர  அவனுக்கு அன்று  யார் வீட்டுக்கோ  உபாத்யாயம் பண்ணுவதில் கவனம். தனது வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தான் .  

பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!

''பெரியவர் சந்நியாசி இங்கே இருப்பதாக சொன்னார்களே? இந்த படைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …கோவிலானால் வெளியே பூட்டப்பட்டிருக்கிறதே. பூட்டு தொங்குகிறதே.
பாவம், பல விதமாக ஏமாற்றம், எதிர்பார்ப்பு நிறைவேறாத வருத்தம். தங்களுக்குள் இவ்வாறு எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

பூட்டப்பட்ட கோவில் உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், பரம சிவன்,மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்களும் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு பல கி.மீ தூரம் நடந்து வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?

அவருக்கே உரித்தான கை சொடுக்கு, சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்.

” ஏண்டா! வெளில என்ன சத்தம். பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா ,பெரியவா. குருக்கள் நாம இருக்கிறது தெரியாம வெளில கோவில் கதவு சாத்தி பூட்டிண்டு போயிருக்கார் போல இருக்கு பெரியவா.

“அடடா…இப்படி பண்ணிட்டாரே அவர்..ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!…சரி இந்தா! குமரேசா! நீ என்ன பண்றே, “டக்”குனு அந்த கல்லு மேலே ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”
குமரேசன் அப்படியே செய்தான்.

''டாங் டாங்'' என்று பழங்கால பெரிய வெண்கல மணி ஓசை இட்டது. வெளியே எங்கும் எதிரொலித்தது.

திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் அத்தனை பேரும் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் !

எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.

பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே! எல்லோரும் பக்தர்கள் தானே.

TANJORE BIG TEMPLE MIRACLES


 கல்லிலே கலைவண்ணம்   -  #நங்கநல்லூர்_J_K_SIVAN


 
தஞ்சாவூர்  போகிறவர்களுக்கு  பெரிய  கோயில்  கண்ணில் படாமல்  எங்கும் செல்ல முடியாது.  ஆயிரம் வருஷங்களுக்கு மேலாக  எத்தனையோ இயற்கை  உற்பாதங்கள்  நிகழ்த்தும்  அவை  எதுவும்  பாதிக் காமல்  ப்ரஹதீஸ்வரன் ஒருவனால் மட்டும்  தலை நிமிர்ந்து நிற்க முடியும். உலகத்திலேயே ஒரு அதிச யமான கோயில். உலக அதிசயமாக  வெள்ளைக்காரன் சொல்லாவிட்டால்  ஏற்காவிட்டால், அது அதிசயம் அற்புதம் இல்லாத  கோவில் ஆகிவிடுமா?

.அப்படியென்ன தஞ்சை பெருவுடையார் கோயில் அதிசயங்கள் என்றா கேட்கிறீர்கள். இதோ ஒவ்வொன் றாக விரலை மடக்கி எண்ணிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு பெரிய,உயர கோபுரத்தின் நிழல் ஏன் தரையில் விழவில்லை?  

கோவிலின்  அடித்தளம்,  அஸ்திவாரம் அப்படி  அமைக்கப்பட்டிருக்கிறது.  உலகத்திலே  எந்த   இஞ்சினீய ராவது  ஆயிரம் வருஷங்களுக்கு முன் இப்படி கட்ட நினைத்ததுண்டா,  முடிந்ததா? அஸ்திவாரமே  நிழலை தன்னுள் இழுத்துக் கொள்கிறதாம்.

உலகத்திலேயே பிரம்மாண்டமான சிவலிங்கங்களில் முதன்மையானது, பழைய  லிங்கம்  தஞ்சாவூர் பெருவு டையார்.

 கர்பகிரஹத்தை ஒட்டி  ரெண்டு நிலைகள், மாடிகள்,  அந்த அளவு உயரமானது சிவலிங்கம். எல்லோரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.  சில அர்ச்சகர் களுக்கு மட்டுமே அந்த உரிமை.   தலையை எட்டி உள்ளே  பார்க்கலாம். கொஞ்சம் நாமும் காணலாம். 

கர்பகிரஹத்தின் மேல் பாகம்  பருப்பு தேங்காய்  கூடாக கோபுரத்தின் உட்புறம்  எதுவும்  தடை, தடங்கல் இல்லா மல் உச்சி வரை போவதால்,  ஓம்  என்று ஒலித்தால் அது  விமானத்தின் உட்புறம் மேலே  சென்று  எதிரொலிக்கும்.  அந்த ப்ரணவ  சப்தம்   எங்கும் வியாபித்து  சகல சக்திகளையும்  காத்து அருளக் கூடியது. எவ்வளவு அற்புதமாக  சிந்தித்து  மஹான்கள்  யோகிகள் இவ்வாறு அமைத்திருக்கிறார்கள்!

ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால்  போக்குவரத்து குதிரையை யானையை காளைமாட்டை மட்டுமே  நம்பி இருந்த காலத்தில்  சௌராஷ்ட்ரம், குஜராத் எங்கே இருக்கிறது என்று சோழனுக்கு தெரியுமா? குஜராத்  பெயர் கேள்விப் பட்டிருந்தாலும் அங்கே  அற்புதமான  உறுதியான  கிரானைட் கல் இருப்பதாவது தெரியுமா? இன்றைய கணக்குப்படி தஞ்சாவூருக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே   2100 கி.மீ. ஆயிற்றே?  அப்போது அநேககமாக  எங்குமே மலை வனாந்திர பிரதேசமல்லவா?

சோழ ராஜா  ஒரு உயரமான  பீடத்தை அமைத்து அதன் மேல் நின்று  ப்ரஹதீஸ்வரருக்கு  அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறான்.

இதில் என்ன வேடிக்கை என்றால் சில ஞான சூன்யங் கள்,  ''இல்லை இல்லை, இது ராஜராஜ சோழன் கட்டிய கோவில் இல்லை, யாரோ வெளி மாநில, வெளி நாட்டுக் காரன்  இங்கே வந்து  கட்டியது''  என்கிறார்கள்.  கேட் டால்  இப்படிப்பட்ட ஒரு கோவிலை கட்ட சோழர்களுக்கு தெரியாது, சோழநாட்டில் வசதி இல்லை என்பார்கள். நரம்பில்லாத நாக்கு எதை வேண்டுமானாலும் பேசும், எப்படி வேண்டுமானாலும் திரும்பும். 

சிமெண்ட் கான்க்ரீட் தெரியாத காலத்தில் பெரிய பெரிய கருங்கல்  பாறைகளை எது இணைத்தது? கம்பிகள் கிடையாதே? 216 அடி  உயர  கோபுரத்தில் ஒரு கம்பி கூட  இல்லையே.  இடைச்செருகல் கல்லாலேயே கல்லை இணைத்த அசகாய சூரர்கள் சோழ மேஸ்திரி கள்.  சுற்று வட்டாரத்தில் 50 கி.மீ.தூரத்துக்கு கல்லே கிடையாதே. எங்கிருந்து இத்தனை கல், பெரிய பெரிய  சைஸ்களில் வந்தது, கோவிலானது? 130,000  டன் 
கல் அந்த கோவில் கட்ட  ஆகும்  என்று  நிபுணர்கள்,  ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறார்களே.  78-80 டன்  எடை கொண்ட  விமான கலசம் எப்படி அவ்வளவு உயரே  மேலே சென்றது???  கிரேன்  போன்ற நவீன வசதி தெரியாதே.

சரியான பதப்பட்ட  கிரானைட் கல்லில் தான் உளியால் சிற்பங்கள் செதுக்க முடியும் என்கிறார்கள். அதெல்லாம்
யார் தேர்ந்தெடுத்தார்கள், வரவழைத்தார்கள்? எங்கி
ருந்து, எப்படி, எப்போது வந்தது?  அடேய்  சோழா, நீ பலே  ஆளடா!

ராஜ ராஜன் தன்னை  சிவபாத சேகரன் என்று தான் சொல்லிக்கொள்வான். அந்த பக்தி தான் அவன் எண்ணத்தை கோவிலாக்கி இன்றும் உறுதியாக  நம்மிடையேயும் , நம் நெஞ்சிலும் நிற்கிறது. என்றும் நிற்கும்.

பின்னால் வந்த  மதவெறி  முஸ்லிம்கள் இந்த கோவிலை யும் இடிக்க  எண்ணினார்கள் என்று  நினைக்கவே   எரிச்சலும் அருவருப்பும் வருகிறது.  ப்ரஹதீஸ்வரர் ஆலய சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது. 

பரஹதீஸ்வரருக்கு  ஏற்ற பெரிய  நந்திகேஸ்வரர்.  பெரிய  கிரானைட் பீடத்தில் உட்கார்ந்திருக்கிறார்.  அவர் பீடமே 80 டன்  இருக்கலாம் என்கிறார்கள்.  நந்தினி பீடத்தை மேல்  விமானம்  எண்கோணம் வடிவில்  25 டன்  எதையாவது இருக்குமாம்.  எப்படி ஐயா  இதை நிறுவினார்கள்?

எகிப்தில் பிரமிட் கட்டிய பாராவோ PHARAOH  ராஜாக் கள்  45 டிக்ரீ கோணத்தில் சார்பாக  சாய்வாக சாரம் மேடை உறுதியாக கட்டி அதன் மேல் கல்லை  ஏற்றின தாக படிக்கிறோம். கல்லைக்கட்டி  யானைகள், குதிரை கள்  சாரத்தின் மேல் இழுத்துச் சென்றதாம். 

 ராஜராஜனும்  ஆயிரக்கணக்கான  யானைகள் குதிரை களைபயன்படுத்தி இருப்பானோ? வேகமாகவா  இப்படி  பெரிய கனமான கற்கள் மேலே போகமுடியும்? எத்தனை மாதங்களோ?

ஒரு முக்கியமான விஷயம்.  முனிவர்கள், ரிஷிகள், வேத மந்த்ரங்கள் உச்சரித்து அதனால் கற்கள் எடை குறைந்து மேலே  ஏற்ற முடிந்தது என்கிறார்கள். நான் நம்புகிறேன். வேறு  எப்படியும் முடியாது எனும்போது  இப்படித்தான் இருக்க வேண்டும் இல்லையா?. 

பெருவுடையார் கோவிலில்  ரகசிய சுரங்க பாதைகள் நூற்றுக்கணக்கான  இருக்கிறதாம்.  ஆலயத்திலிருந்து ராஜராஜன் அரண்மனைக்கு,  அருகே உள்ள பல ஊர் களுக்கு செல்ல  உபயோகித்திருக்கிறார்கள்.  நாட்டின் பாதுகாப்புக்கு இந்த  சுரங்க வழிகள் தேவையாக இருந்திருக்கிறது. சில பாதைகள்  உணவு, தண்ணீர்  கோட்டைக்குள்  கொண்டு வர என்றே  இந்த ஏற்பாடு.

திருவனந்த புரம்  பத்மநாப சுவாமி கோவிலுக்குள்ளும்  கூட  ரகசிய அறைகள், சுரங்க பாதைகள் இருக்கிறது. கதவுகளை மந்திரம் சொல்லி தான் திறக்கவேண்டும் என்பது நியதி. அதே போலவே  தஞ்சாவூர்  ப்ரஹ தீஸ்வரர் ஆலயத்திலும்.     ரகசியமாக குசுகுசு என்று பேசியே  செய்திகளை மூன்று மாடி உயரத்துக்கு அனுப்பினார்களாம். 

கோவில் கோபுரத்தில் பார்த்திருப்பீர்களே  தொப்பி போட்ட ஒரு அந்நியனை.  யார் அந்த ஐரோப்பியன்? எப்படி சோழ சிற்பி அவனை கல்லில் படம் பிடித்தான்? 

கங்கை கொண்ட சோழபுரத்தில் மற்றும் திருநெல்வே லியில் இருப்பதைப் போலவே தஞ்சாவூர் ப்ரஹதீஸ்வரர் ஆலயத்திலும்  ஸ்வரம் பேசும் கல் தூண்கள்  உண்டு. மொத்தத்தில்   தமிழர்கள் விஞ்ஞானம்,  உயர்ந்த கணித ஞானம், சாஸ்திரம்,  மின்காந்த  அதிர்வலைகள், வேத மந்த்ர சக்தி,அதி உன்னத சிற்ப கலைஞானம், ஓவியம்,  ஆகம சாஸ்திரம்,  அனைத்தையும்  பக்தியுடன் கலந்து அறிந்தவர்கள், நமக்கு வழங்கியவர்கள். பிரகதீஸ்வரர் ஆலயம் ஒன்றே போதும் இதற்கு சான்றாக.  கருங்கல்  தாமரை இதழ் மென்மையோடு கையாளப்பட்டுள்ளதே.

ரொம்ப சொல்லவேண்டாம்.  ப்ரஹதீஸ்வரர் ஆலயத் தின் ஒவ்வொரு கல்லும்  மௌனமாகவே  ஒரு சரித்திரம் சொல்லும் தகைமை கொண்டது.   ரெண்டு நாள் லீவு போட்டுவிட்டு  தஞ்சாவூருக்கு போய்  பெருவுடையார் கோவிலில் ஒவ்வொரு  சிற்பமாக  முடிந்தவரை ரசியுங்கள். ப்ரஹதீஸ்வரனை நமஸ்கரித்து சோழனை வாழ்த்துங்கள். 

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...