உள்ளது நாற்பது -- நங்கநல்லூர் J K SIVAN
பகவான் ரமண மகரிஷி
1. உள்ளதை உள்ளபடி உள்ளல் .
உள்ளது அலது உள்ள உணர்வு, உள்ளதோ, உள்ள பொருள்
உள்ளல் அற, உள்ளத்தே, உள்ளதால் – உள்ளம் எனும்
உள்ள பொருள் உள்ளல் எவன்? உள்ளத்தே, உள்ளபடி
உ ள்ளதே உள்ளல் உணர்வாயே – உள்ளே
உ ள்ளதே உள்ளல் உணர்வாயே – உள்ளே
''நான் '' என்று நாம் சொல்லும்போது எல்லோருமே நமது உடம்பை மனதில் உருவமாக கொண்டு பேசுகிறோம், சொல்கிறோம். அதில்லாமல் வேறு ஒன்று எப்போதும் உள்ளே இருக்கிறது. அதை நினைக்காததால் அது உள்ளது என்றே நாம் உணர்வதில்லை. அது அனுபவத்தால் உணரப்படுவது. புலன்களால் அல்ல. இதயம் என்பது மையம். ''ஹ்ருதி அயம் தஸ்மாத்' என்றால் ஹ்ருத் என்றால் மையம். அயம் இருப்பது. 'இது + அயம் (நான்) இதயம் என்பது தான் அந்த நான். ப்ரம்மஸ்வரூபம்.
டாக்டர்கள் ஆபரேஷன் செய்யும் இதயம் இல்லை அது. கண்ணுக்கு புலப்படாதது. அதை ப்ரம்மம், பகவான், ஆத்மா (பரமாத்மா) என்று ஞானிகள், ரிஷிகள், யோகிகள் அறிந்து சொல்கிறார்கள். ரொம்ப இருட்டில் நான் உட்கார்ந்திருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று சொல்லும்போது என் உடம்பு எனக்கே தெரியவில்லை. நான் உடம்பை பார்க்காமல் நான் இருக்கிறேன் என்று சொல்கிறேன். நான் இருக்க பயமேன் என்று பகவான் சொல்கிறார். நமக்கு தைர்யம் வருகிறது. பகவானை பார்க்கமுடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்ற ஞானம் போதும் அல்லவா? மஹா பெரியவா அபய ஹஸ்தம் காட்டுகிறார். கவலைப்படாதே எல்லாம் சரியாகும் என்று சொல்வது போல் தோன்றுகிறது. அவர் இல்லை, எதிரே நான் கண்டது அவர் படம், எவனோ எடுத்தது, வரைந்தது, எழுதியது. ஆனால் அந்த எழுத்து, படம், உருவம் தாண்டி ஏதோ ஒரு சக்தி என்னை தைர்யம் கொள்ள செயகிறது. நாம் சந்தோஷமடைகிறேன். அது நான் எனும் ப்ரம்மம், பரமாத்மா, பகவான். சூரியன் என்றாலே அங்கே இருட்டு கிடையாது. அதுபோல் ஆத்மாவில் மனதுக்கு இடம் இல்லை . மனம் புலன்கள் வசம் மாட்டிக் கொள்வது. ஆத்மா அதை விட்டு விலகி நிற்பது. உள்ளே அவன் அப்படி இருப்பதால் தான் அது ''உள்ளம்'' அவன் இருப்பது உள்ளல் , அது உள்ளது. ஆகாயத்திலே மேலே பார்க்கிறோம், வண்ண வண்ண மேகங்கள் உருவம் மாறி மாறி ஓடிக்கொண்டே இருப்பது போல மனதில் எண்ண அலைகள் ஓடட்டும். அதற்கும் ஹ்ருதயத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. மனதின் ஆட்டங்களுக்கு இடம் கொடுக்காவிட்டால் வெளி விஷயங்கள் நம்மை நெருங்காது அல்லவா? புலன்களை அடக்கி, அதாவது கண்ணை மூடி, சப்தமின்றி, அண்ணா ஆகாரத்தில் புத்தி போகாமல் உள்ளே இருக்கும் ஹ்ருதயத்தை அலச முயன்றால், ஏதோ ஒன்று இருப்பது புலனாகும். அது தான் ஆத்மா. அது என்ன? என்பது தான் ஆத்ம விசாரம். மனதின் விகாரங்களை இடம் கொடுக்காமல் அதை நாடுவது தான் சமாதி நிலை. கவனத்தால் நிகழ்வது.
ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி என்ற மூன்று நிலைகள், விழிப்பு, தூக்கம், கனவு என்று இந்த மூன்றிலும் மாற்றமின்றி ஒரே அனுபவமாக உள்ளது தான் ஆத்மா. உதாரணமாக விழிப்பு நிலையில் தேகம் உண்டு, மனம் உண்டு, நான் உண்டு. ஸ்வப்னம் காணும்போது உடல் இல்லை, மனம் உண்டு, நான் உண்டு. ஆழ்ந்த உறக்க நிலையான சுஷுப்தியில் உடல் இல்லை, மனம் இல்லை, ஆனால் நான் உண்டு. அந்த நான் தான் மூன்றிலும் மாறுதல் இல்லாத ஆத்மா. புரிகிறதா? இந்த ''நானை '' எப்படி உணர்வது? விழிப்பு நிலையில், என் தலை, என் உடல், என் பெயர் என்று ரெண்டாக பண்ணிக்கொண்டு நான் வேறு மாதிரியாகவும், என்னுடையது வேறுமாதிரியாகவும் உணர்கிறோம். ஆகவே நான் ஆத்மா மற்றதெல்லாம் ''என்னுடையது''. கனவில் நான் என் அறையில் நங்கநல்லூரில் படுத்திருக்கிறேன். அனால் எங்கோ ஜெர்மனியில் மலைத்தொடர்களில் உதவுகிறேன். அது யார், இங்கே படுத்திருப்பது யார்? ரெண்டும் ஒன்றா. விழித்தல் ஒன்று தானே இருப்பது தெரிகிறது? தூங்கும்போது கவனத்தோடு உறங்குபவன் எழுந்ததும் இத்தனை நேரம் நான் எங்கே போனேன், எங்கே இருந்தேன் ? என்று வினவுகிறான். மெதுவாக இதுபோன்ற விசாரங்கள் ஆத்மாவை நெருங்க வைக்கும். இது போதும். இருப்பதை இல்லாததாக நாம் உணர்பவர்கள் , இல்லாததை இருப்பதாக உணர்பவர்கள். கானல் நீர், கயிற்றில் பாம்பு, மரத்தை பிசாசு என்று உணர்ந்து நடுங்குபவர்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உணர்ந்தால் அது தான் சஹஜ நிர்விகல்பம். இது போதும்.
No comments:
Post a Comment