Sunday, August 22, 2021

GAYATHRI JAPAM

 ஓம் ஸ்ரீ காயத்ரி   --  நங்கநல்லூர்  J.K. SIVAN


நாளை திங்கட்கிழமை  23.8.2021 அன்று  காயத்ரி ஜபம் என்று வழிபாடு.  காயத்ரி ஜபம் என்றால் என்ன என்று முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

உலகில் நாம் காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே  விஞ்ஞானத்தில் அடக்கம் என்பது  சரியில்லை. விஞ்ஞானம் அறிவின் வளர்ச்சி. இன்னும் முழுமை அடையாத   ஒரு விஷயம்.. ''பால் வீதி, MILKY WAY  ஆகாச கங்கா என்றெல்லாம்  லக்ஷோப லக்ஷம்  நட்சத்ரங்கள்  கண்ணுக்குத் தெரியாதவை,  பார்க்கவே பல நூற்றாண்டுகள் ஆகக்  கூடியவை   உண்டு.  சூரியனையே விழுங்கும் அளவு பெரியவை. பார்ப்பதற்கு மூர்த்தி .சிறியதாக  தோன்றும்.  சந்திரன் பூமியை சுற்றுகிறான். பூமி  சந்திரனோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது என்பது நமது சூரிய மண்டலம்.   எல்லா கோளங்களும்   சூரியனைச் சுற்றுபவை.   ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். பக்கத்தில் சுவற்றை, தூணை அல்லது யாராவது ஒரு தாத்தாவை கெட்டியாகப்  பிடித்துக் கொள்ளுங்கள்.  சூரியன் தனது எல்லா பரிவாரத்தோடும், எல்லா கிரஹங்களுடனும் நக்ஷத்ரங்களுடனும்  ஒரு  ரவுண்ட் அடிப்பதற்கு உண்டான காலம் 22.5. கோடி வருஷங்கள்!! இத்தனைக்கும்  அவை ஊர்ந்து போகும் வஸ்துக்களல்ல. கிரஹங்கள் எல்லாமே  கிட்டத்தட்ட   ஒரு நொடிக்கு   20,000 மைல் வேகம்  'ஓ' வென்ற பேரிரைச்சலோடு  நகர்வன. கண்ணைமூடி யோசித்துப் பார்த்தால்  பயத்தில் இதயம் நின்றுவிடும்.

பூமி மேல் வசிக்கும் நாமும் பூமியோடு சேர்ந்து வேகமாகத்  தான்நகர்கிறோம்.  வேகமான ரயிலில்,  ஆகாய விமானத்தில்  இருந்து  பார்க்கும்போது  வெளியே   எல்லாமே  மெதுவாக நகர்வது போல், அசையாமல் நிற்பது போல்  தோன்றுகிறதே  அது போல்  நாம்  நமது வீட்டில் அசைவற்று இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  எல்லா கிரஹங்களும் சூரியனையே தான் சுற்றுகிறது.
இது புரிந்தால்  காயத்ரி மந்திரம் புரிந்து கொள்ளலாம்.

''ஓம் பூர் புவ ஸ்வஹ:''
பூர்  என்றால் பூமி.  புவ   என்றால்  சூரிய மண்டல  கிரஹங்கள். ஸ்வஹ என்பது  இந்த  பிரபஞ்சம்:    நமது தலைக்கு மேலே லொட லொட என்ற சப்தத்தோடு சுற்றும்  பழைய  வோல்டாஸ்  மின்விசிறி சுற்றும் வேகமே  ஒரு  நிமிஷத்துக்கு  900 சுற்று  Rpm. அது போடும் சப்தமே  அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு  வரும் அளவுக்கு இருக்கிறதே. நொடிக்கு  20, 000 மைல் . கி.மீ. அல்ல என்றால் ???? அப்படி ஓடும் கிரஹங்களின் சப்தத்தை த் தான்   ''ஓம்''  என்று  இந்த காயத்ரி மந்திரம் சொல்கிறது. இதை முதலில் கேட்டறிந்தவர்  விஸ்வாமித்ரர்.  ஏன் மற்றவர்கள் செவிடா? என்று கேட்பது காதில் விழுகிறது.  ஒரு  200அடி  தூரத்தில்  யாரோ  கத்தினால் கூட நமக்கு  தெரிவதில்லை,கேட்பதில்லை.  எத்தனையோ சைபர்கள்  கொண்ட  நம்பர் மைல்களுக்கு அப்பால் அதே வேகத்தில் ஓடும் சப்தமா காதில் விழும்?
எப்படி டெலெஸ்கோப்பில் சாதாரண கண்  பார்க்கமுடியாததை  பார்க்க  முடிகிறதோ அப்படிபட்டது நுட்பமான  விஸ்வாமித்ரர் தவ வலிமை. அதனால்   அவர் அந்த  ஓம்   என்ற பெரும் சப்தத்தை தியானம் செய்து கேட்டு மற்ற ரிஷிகளுக்கு  சொன்னவர். அது  தான் கடவுளின்   பெயர் என்று ரிஷிகள்  ஒப்புக்கொண்டார்கள். கடவுளை ஒலி வடிவாக கண்டவர். கீதை கூட   ''ஓம்  இதி  ஏகாக்ஷரம் ப்ரம்மம்''  என்கிறதே.  சில  ஜீவன் முக்தர்கள் சமாதியில் எப்போதும்  ''ஓம்''சப்தம் கேட்கும். ஓம் என்பதை பிரணவம் என்போம். சக்தியின் ஒலி.                                                                    

'தத்  ஸவிதுர்  வரேண்யம்''    
தத்:  அது  (பகவான்)  ஸவிதுர் :  சூரியன் .  வரேண்யம்:  என்றால்  பூஜிக்கத்  தக்கது.   ஒருவர் உருவம் தெரிந்தால், பெயரும் தெரிந்தால் அவரை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.    குட்டை  ஆள்   ரெட்டை நாடி,  ஒருகால்  ஊனம்  குப்புஸ்வாமி , சுண்டக்காமுத்தூர்  கோவிந்தன்   என்றால் ஒரு வழியாக  சுண்டக்காமுத்தூரில் போய் அவனைத் தேடி கண்டுபிடிக்கலாம்.

விஸ்வாமித்ரர்  பிரணவ சப்தத்தை கண்டுபிடித்து,  அந்த மந்திரத்தை , காயத்ரி மந்திரத்தை உச்சரித்து  பகவானை அடையும் வழி காட்டி விட்டார்.  சூத்ரம் தெரிந்துவிட்டால்  கணக்கை போட்டு முடிக்கலாம் அல்லவா.  சூரியன்,   பிரபஞ்சத்தை ஒளியாக காட்டிவிட்டார்.

''பர்கோ  தேவஸ்ய தீமஹி''
பர்கோ:  ஒளி. தீபம்,   தேவஸ்ய:  தெய்வங்கள், தீமஹி:  த்யானம் செய் .  
கண்ணுக்கு தெரியும்  சூரியனை பிடித்துக் கொள் . அதன் மூலம்  உருவமற்றவனை பிடி. அவனைக் கட்டும்  கயிறாக  ஓம்  என்ற மந்திரத்தை விடாமல் சொல்.  இது மட்டும் போதாது என்பது தான் ரஹஸ்யம்.  மனது என்று நமக்குள் இருக்கிறதே  அதை முதலில் கட்டி அசையாமல் பண்ண வேண்டும்.  அதை நிலை நிறுத்தி  ஓம்  என்ற த்யானத்தில்  ஈடுபட்டு மனதில் சூரியன்  மற்றும் பிரபஞ்ச ஒளியை தேடினால்  பகவானைப்  பிடித்தாகி விட்டது.

''தியோ யோ ந  ப்ரசோதயாத்''

தியோ:  புத்தி,  யோ  : யார் , எவர்?,  நா:  நாம் எல்லாரும்,   ப்ரசோதயாத்:   சரியான வழியில் அழைத்துச் செல்லப்படுவோம்.

பகவானே  என் புத்தியை நிலை நிறுத்தி சரியான வழியில் என்னை  நடத்திச்செல்.

இந்த  பூமி,    சூரிய மண்டல  கிரஹங்கள்  அண்ட பேரண்டம் எல்லாமே தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிறது.  அவற்றின் சப்தம்  ஓம்  என்று கடவுள் பெயரை சொல்கிறது.   அந்த கடவுள் தான்  எத்தனையோ சூரியன்களின்  ஒளி,   அவனே  வணங்கத்தக்கவன்.  ஆகவே  நாமெல் லோரும்   மனதை, புத்தியை  நிலைநிறுத்தி அவனையே  தியானித்து  ஒளியாக கண்டு  ஓம்  என்ற அவன் நாமத்தை விடாமல் உச்சரிக்க  அவனே  வழிகாட்ட வேண்டும்.

சுருக்கமாக  சொன்னால்  இது தான் காயத்ரி மந்த்ர உள்ளர்த்தம்.  மஹான்கள் பெரியவர்கள், யோகிகள், ரிஷிகள், பண்டிதர்கள்  வித விதமாக  அர்த்தம் சொல்வார்கள். அடியேனுக்கு தோன்றியதை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அப்படி சொல்லிவிட்டேன். மேற்கொண்டு காயத்ரி மந்த்ர சக்தியை பற்றி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...