பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
62 மஹா பெரியவா தரிசனம்
பால் ப்ரண்டன் எனும் வெள்ளைக்காரரை மஹா பெரியவாவிடம் அழைத்துச் சென்றவரை பற்றி வேண்டுமென்றே சொல்லாமலிருந்தேன். காரணம். அவரைப் பற்றி தனியாக நிறைய சொல்லவேண்டும் என்பதால்.
காவேரிபட்டணம் சித்தநாத ஐயர் வேங்கடரமணி (1891-1952) ஒரு பிரபல மைலாப்பூர் வக்கீல். ஸர் C P ராமஸ்வாமி ஐயரிடம் உதவியாளராக இருந்தவர். ஆங்கிலத்தில் நிபுணர். தஞ்சாவூர் காரர். சுவாரஸ்யமாக எழுதுபவர். பால் ப்ரண்டனின் நண்பர். மஹா பெரியவா பக்தர்.1928ல் தாகூரை பார்த்து அவர் ரசிகராகி தாய்மொழி தமிழில் அழகாக எழுதி, தமிழ் உலகு என்ற பத்ரிகை ஆரம்பித்தவர். மஹா பெரியவா பால் ப்ரண்டன் சம்பாஷணையை மொழி பெயர்ப்பாளராக இருந்தவர். photo attached.
பால் ப்ரண்டன் பிரிய மனமில்லாமல் மஹா பெரியவாளிடம் விடை பெற்றார்.''ஆஹா என்ன அற்புதமான பிறவி இவர். சிறு குழந்தை வயதிலேயே சன்யாசியாகி ஹிந்து மத ஜகதகுரு ஆசா ர்யனானவர். உலக ஆசை, பட்டம் பதவி எதிலும் விருப்பமில்லாதவர். எளிமையானவர். எப்படியும் இந்த தேசத்தை விட்டு போகுமுன் மீண்டும் அவரை ஒருமுறை பார்க்கவேண்டும்'' என்று எண்ணினார். கோவிலில் கூட்டமாக பலர் அமர்ந்திருக்க ஒரு மூலையில் அமர்ந்து உபதேசம் செய்து கொண்டிருந்த பெரியவாளை ஒருமுறை பார்த்தார். ''எவ்வளவு பாக்யம் செய்தவர்கள் இந்த மக்கள். குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதைப் போல் அல்லவா ஒவ்வொன்றையும் விளக்குகிறார். சகல விஷயங்களையும் கரைத்துக் குடித்தவராக இருக்கிறாரே. உலக விஷயங்கள் அத்தனையும் அத்துப்படி'',
''நீங்கள் அதிர்ஷ்டக்காரர், மஹா பெரியவா அந்நிய தேசத்தவர்களை சந்திப்பதை தவிர்ப்பவர்.'' என்கிறார் வேங்கடரமணி திரும்பி செல்லும்போது.
நடுராத்ரி சென்னை திரும்பி படுக்கையில் சாய ஆயாசமாக உள்ளே சென்று டார்ச் விளக்கை அடித்தபோது வெராண்டாவில் படுத்திருப்பது தெரிந்தது.
''யார் அது? என்ன செய்கிறீர்கள் இங்கு?
படுத்திருந்தவர் எழுந்தார் . ''உங்களுக்காக தான் காத்திருந்தேன். நீங்கள் ஊருக்கு திரும்புவதற்கு முன் ஒருமுறை சந்திக்கிறேன் என்று சொன்னேனே திருவண்ணாமலைக்காரன் ஞாபகம் இருக்கிறதா?''
''ஓ. ஓ. நநன்றாக நினைவிருக்கிறது. மகரிஷி சிஷ்யர் தானே ?. நான் உங்களோடு திருவண்ணாமலை வருகிறேன். உங்கள் மகரிஷியை பார்க்க எனக்கும் ஆவலாக இருக்கிறது''. அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தபிறகு இருவரும் தூங்கினார்கள்.
விடியற்காலை. திடீரென்று என் அறையில் எப்படி ஒரு வெளிச்சம்? பால் ப்ரண்டனுக்கு குப்பென்று வியர்த்தது. நாடி படபடத்தது. கைகால்கள் விறைத்துக்கொண்டன . பயமா, அதிர்ச்சியா? கைக்கடிகாரத்தை எடுத்து பார்த்தபோது விடிகாலை 2. 45 AM என்று சொல்லியது. காட்டில் காலடி பக்கம் அந்த ஒளி தெரிந்தது. எழுந்து படுக்கையில் உட்கார்ந்தார். காஞ்சி மஹா பெரியவா காட்சி அளிக்கிறார். பேயோ பிசாசோ அல்ல. செங்கல்பட்டில் சந்தித்த அந்த லோகாச்சார்யன். ஜகத்குரு. கண் விழித்த பிறகும் காவி வஸ்திரம் வெண்ணீறு, ருத்ராக்ஷ தரித்த முகம். தாடி மீசை புன்னகை கண்களில் கருணை.
''அமைதியும் ஒழுக்கமும் கடைப்பிடி. நினைத்ததை அடைவாய்'' என்றது அந்த உருவம். எதற்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு தரிசனம்? தோன்றிய மாதிரியே சட்டென்று மறைந்தது மஹா பெரியவா உருவம்.
ப்ரண்டன் மனதில் சொல்லமுடியாத ஒரு அமைதி, சந்தோஷம், பெருமை. நடக்கமுடியாதது நடந்திருக்கிறது. இதை கனவு என சொல்ல முடியாது. அதற்கப்பறம் தூக்கம் போய் விட்டது மஹா பெரியவாவுடன் சந்தித்து நிகழ்த்திய சம்பாஷணை நினைவில் நின்றது.
பொழுது நன்றாக விடிந்தது. நண்பருடன் பால் ப்ரண்டன் திருவண்ணாமலைக்கு பயணமானார். இப்போது போல் எளிதான சில மணி நேர பயணம் அல்ல அப்போது. மண் தெருக்கள்,குண்டும் குழியுமாக குதிரை, காளை மாடு வண்டிகளில் தான் குலுங்கி கொண்டு எலும்புகள் நொறுங்க செல்லவேண்டும்.
திருவண்ணாமலையில் பால் ப்ரண்டன் ரமண மகரிஷியை சந்தித்ததை அடுத்த பதிவில் அறிவோம்.
No comments:
Post a Comment