Saturday, January 5, 2013

குட்டி கதை 69 ஆண்டாளும் தோழியரும் (1)



இன்றுமுதல்  மார்கழி மாத  சிறப்பு  குட்டி  கதையாக ஸ்ரீ  ஆண்டாளின் திருப்பாவை யை  குட்டிகதைகளாக அளிக்கிறேன்.  


குட்டி  கதை 69           ஆண்டாளும்  தோழியரும் (1)

திருப்பாவை 30 பாசுரங்களையும் ஆண்டாள் எழுதியபோது  தன்னை  கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த  ஊர்  சிறுமிகளில் ஒருவளாக  உருவகப்டுத்தி  பாவை நோன்பு நோற்றது கிருஷ்ணனின்  பெருமையை உணர்த்துவதற்கு அல்லவா?.  மார்கழி 30 நாளும் ஒருநாளைக்கு ஒன்றாக  அந்த பாசுரங்களை  தொடர்  நிகழ்ச்சியாக தொகுத்து அந்த  சிறுமியர்களின்  பேச்சு வாயிலாக  திருப்பாவை பாசுரங்கள்  இந்த  குட்டிகதையில் விளக்கப்பட்டுள்ளது

"என்னடி ஆண்டாளு,   இந்த மார்கழி குளிரில்  அதி காலையில் வந்து எங்களை எழுப்பி வா  குளிப்போம், பாடுவோம் என்கிறாய். விஷயம் சொல்லேன்?  என்றனர்  அந்த  ஆயர்பாடி சிறுமியர்  அவளிடம்.  அவள் சொன்னாள்:  
நான் சொல்றேன் ஆனால் ஒரு நாளைக்கு  ஒரு விஷயம்  தான் சொல்வேன் அப்போதான்  உங்களுக்கு  கொஞ்சம் கொஞ்சமா புரியும்.  ஒரே அடியா  ஒரு மாச  விஷயத்தை  ஒரே நாளில்  சொல்லி திணிக்க கூடாது
இன்னிக்கு மார்கழி 1ம்  நாள்   சொல்ற விஷயம் இது:
"இந்த  மார்கழி  என்கிற  மாசம்  ரொம்ப  ஒசத்தியானது எனக்கென்னமோ  இந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது. தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த ஊர் என் உயிர். ஏன் என்றால் இதில் தான் கிருஷ்ணன்ஆண் அழகன்,   கருநீல வண்ணன்,  செவ்விதழ், கன்னம் உடையவன்-- கண்களோ செந்தாமரை --- அவன் இருக்கும் நம்முடைய இந்த  ஆயர்பாடி,  ஒரு ஸ்வர்கபூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!.  அவன் சாதாரணமானவனா யிருந்தால்  இந்த பேச்சுக்கே  இடமில்லையேஎதிர்த்தவர்களின் உயிர் குடிக்கும் வீரன் அந்த  நந்தகோபனின் பிள்ளையை தவிர வேறு யார்?  அவன்  தாய் பற்றி  சொல்லவில்லையே, இந்த சிங்கக்குட்டியை  பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை  அவள்  பேர். நேரமாச்சே  சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து  அவனை பாடுவோம்,  ஒரு விஷயம்!, எதற்காக இந்த  மார்கழி மாதம்  நோன்பு என்று தெரியணும்னாக்க, இந்த  மாசம்  தான்  அந்த கிருஷ்ணனுக்கு, நாராயணுக்கு பிடிச்ச மாசம். மாதங்களில் அவன்  மார்கழியாகவே இருக்கானாம்.  நாமெல்லோரும்  ஏன்   இந்த உலகில் எவருமே ஸ்வர்கமடைய நாம் செய்யும்  இந்த  பாவை நோன்பு  தவிர  குறுக்கு வழி வேறே இல்லை  அல்லவா?. கிளம்புங்கள்  எல்லோரும்  உடனே போவோம்  யமுனைக்கு. மீதியை  நாளைக்கு சொல்றேன்.

மார்கழி 2ம்  நாள்  ஆண்டாள் தன தோழிகளுக்கு  சொன்னதன்  சுருக்கம் இதோ
இதென்ன  புதுசா இத்தனை நாள்  இல்லாமல்  இப்போ  "பாவை நோன்பு"? நாமெல்லாம் இதை பண்ணதே இல்லையே?. அதை எப்படி பண்ணுவது, எதற்காக என்று சொன்னால்  புரிந்து கொண்டு  சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அப்படியே  "மடி"யாக  பண்ணலாம், ஆண்டாள்  நீயே  சொல்லு?:
"கேளுங்க சொல்றேன்,  பாற்கடலில்  நாராயணன் பாம்பு  மேலே படுத்துக்கொண்டு  உலகத்தில் நாம்  எல்லோரையும்  ரட்சிக்கிறான் என்று  உங்களுக்கே  தெரியும்நாம்  செய்யும் பாவை நோன்பு அவனைப் பாடி  போற்றி வேண்டுவது. எப்படியென்றால்,  நாம்  குளித்து,  தலையை வாராமல்  அள்ளி முடிந்துகொண்டு, மை பவுடர்  எல்லாம்  போட்டுக்காமல், விரதம் இருக்கணும்.  அப்போ  பால், பழம்தயிர், வெண்ணை  இதெல்லாம்  வயிற்றில் ரொப்ப கூடாது. உள்ளே மட்டும் இல்லை,  வெளியேயும்பொய், பித்தலாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் யார் கிட்டயும் கூடாது
 "ஏண்டீ,  நாம  இவ்வளவு  கஷ்டப்படணுமா? என்றாள்  ஒரு சிறுமி
"எனக்கு  தெரியலை,  ஆண்டாளையே  கேட்போம், அப்படியென்ன அவர்  பெரிய கடவுள்,  நீயே  சொல்லேன் ?   என்றாள்   மற்றொருவள்.
அதற்குள்  அவர்கள்  யமுனைக்கு  சென்று குளித்து விட்டு  நாராயணன் மேல்  பாடி  வீடு திரும்பினர்.  
“என்னடி  நான்  கேட்டேன்  நீ  ஒன்றும் சொல்லவே இல்லை?
“நாளைக்கு  காலம்பர  உங்களுக்கு விவாமா சொல்றேன்  நேரமாச்சு இப்போ என்றால் ஆண்டாள்.

மார்கழி 3ம்  நாள்  ஆண்டாளின் வாயை பிடுங்கி  அவள்  தோழிகள்  என்ன  தெரிந்து கொண்டனர்: இதை தான்!!
"ஆமாம்.  அந்த  நாராயணன்  ரொம்ப பெரியவனாயிருந்ததால் தான்  இந்த உலகம், மேல்  உலகம்,  ரெண்டையுமே, ரெண்டு கால் அடி வைச்சு அளந்தவன். மூணாவது  அடி மண்ணுக்கு கால் எங்க வைக்கறதுன்னு மஹாபலி ராஜா தலையிலேயே வைச்சான்னு பாட்டி கதை சொல்வாளே. அதனாலே தான் அவ்வளவு பெரிய அவன் அருளணும்னு நாம் இந்த நோன்பு விரதமெல்லாம் இருக்க போகிறோம்நம்ப விரதத்தாலே நிறைய மழை பெய்யும், பசு வெல்லாம், நிறைய  பால் வெள்ளமா கொடுக்கும். விளைச்சல்  நல்லா  இருக்கும்நாடு செழிச்சா நமக்கு சுபிட்சம் தானே. சுபிட்சம் இருந்தா திருடு, கொள்ளை,கொலை எதுவுமே இருக்காது  எல்லாரும்  அன்பா சந்தோஷமா இருப்போம். அது தான் அந்த நாராயணன் விரும்பறது

மழையிலே நனைஞ்சிண்டே அந்த   ஆயர்படிசிறுமிகள்  எல்லாரும்  அந்த  பெண்   ஆண்டாளுடன்  கூடி யமுனை  நதியில் குளித்து தூய  மனத்தோடு  நோன்பு  இருந்தனர் அப்போது  நடந்தது  இது 
இன்னிக்கி மார்கழி 4ம்  நாள்  காலையிலேயே  என்ன  மழை  பார்த்தாயா?.  நேற்று   தானே நாமெல்லாம்  அந்த நாராயணனை, பரிசுத்தமாக பாடி ஆடினோம். நிறைய  மழை இருந்தால்  தான்  சுபிக்ஷம் என்பதற்காக.  
ஆண்டாள்  நீ  சொன்னால்  அது  நிஜம்தான் டீ.”
“இப்போ எல்லாரும் அந்த  வருணனுக்கு  நன்றி சொல்வோம்  வாங்கடி. "வருண  பகவானே,  நீ  எங்களுக்கு  சமர்த்தியா  இடி இடிச்சு, ஜோ என்று  மழையை குடு. சமுத்ரம்  எல்லாம்  ரொம்பணும். மேலே பார்த்த மேகம்  வானம் எல்லாம்  அந்த கிருஷ்ணன்  மாதிரி கருப்பா இருக்கணும். மின்னல் அந்த  நாராயணன்  சக்ரம்  மாதிரி மின்னனும் இடி சத்தம் கிருஷ்ணனுடைய பாஞ்ச ஜன்யம் மாதிரி கேக்கணும். மழை விடாது பெய்யணும்எங்க ஊர் யமுனையில் நிறைய தண்ணீர் வந்து  நாங்க  ரொம்ப  சந்தோஷமாக  குளிக்கணும் ,
ஆண்டாளு ,  நீ ரொம்ப விஷயம்  தெரிஞ்சவ டீ. எப்படி உன்னாலே இவ்வளவு அழகாக ஒண்ணு ஒண்ணுக்கும் உதாரணம் எல்லாம் கொடுக்க முடியறது. மழை அந்த நாராயணனுடைய  சார்ங்கம் என்கிற  வில்லிலிருந்து  புறப்படும்  சரங்கள்  மாதிரி  விடாமல்  தொடர்ந்து  பெய்யணும்  என்கிறது ரொம்ப  பொருத்தம்"
ஆண்டாள் உன்னோடு  நாங்க  இந்த  நோன்பு நோக்கும்போது  நிறைய  தெரிஞ்சிக்கிறோம். உனக்கு நன்றி. ஆயர்பாடி  சிறுமிகள்  வீடு  சென்றனர்நாளை காலையில்  மீண்டும் அவர்களை சந்திப்போம்   

இன்னிக்கி  மார்கழி 5ம் நாள் உங்களுக்கு  கிருஷ்ணனை பத்தி கொஞ்சம் கூடவே சொல்லப்போறேன்.
இதை கேளுங்கடி, கிருஷ்ணனை நினைச்சு மனசார  பாடி ஆடி  வேண்டினால், நெருப்புலே  போட்ட  துரும்பு புல்  மாதிரி  நம் கஷ்டம் எல்லாம்  காணாம போகும். அவன்  வட மதுரையிலே  பிறந்த  வீராதி வீரன் டீ. இந்த  யமுனையில்  மீன் குஞ்சா  நீந்தி  விளையாடுவதை  நாளெல்லாம்  பார்க்கலாமே. ஆயர் பாடி  கோபர்களுக்கு  நடுவிலே அவன்  ஒரு  பளபளக்கும் விளக்கு டீ.  அம்மா  மேலே இருந்த பாசத்தினாலே  அந்த  மகா பலசாலி  அவள்  கட்டிய  கயிறாய் அவளே  அவிழ்க்கும் வரை  வயிற்றில்  கயிறோடு இருந்தவனாச்சே. அந்த  கிருஷ்ணனை வேண்டி  நிறைய  பூவெடுத்து  கை நிறைய போடுவோம் வேண்டிக்குவோம்

“பசிக்குது ஆண்டாள்”  என்றாள் ஒரு சிறுமி. “ இதோ கொஞ்சநேரம் அந்த கிருஷ்ணனை வேண்டிக் கொண்டு நாம் எல்லோரும்  வீடு போய் விடலாம். அப்பறம்  என்ன  சொல்லுடி?  
இன்னிக்கி  இது  போதும் உங்களுக்கு. விட்டு விட்டு சொன்னாதான் உங்களுக்கு  மேலே மேலே தெரிஞ்ஜுக்க தோணும்.  நாளைக்கு  மீதியை சொல்றேன்  ((தொடரும்)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...