Saturday, June 18, 2022

ARUPATHTHU MOOVAR



 #அறுபத்து_மூவர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 



5  “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்’’

ஏதோ ஒரு விறல்   கதவுக்கு இடையே மாட்டிக்கொண்டு அதை   யாரோ  நசுங்காமல்  அதை மீட்ட மாதிரி ஒரு பெயராக   இருக்கிறதே. விறல் மிண்டர்  என்பது என்று நினைக்கவேண்டாம்.  இந்த பெயர் கொண்டவர் ஒரு  சிறந்த சிவபக்தர்.  உண்மையில் அவர் பெயர்  ''விரல் மீண்ட நாயனார்'' அல்ல. காரணப்பெயர். உண்மைப் பெயர் பலருடையது நமக்கு  கிடைக்க வில்லை.  சுந்தர மூர்த்தி வைத்த பெயர் விறல்மிண்டர். 

விறல்மிண்டர்   சேரநாட்டை சேர்ந்தவர்.  மலையாள தேசத்தில் மலைகள் அதிகம். அதில் ஒரு மலை நாட்டு கிராமம்  செங்குன்றூர். வேளாண்மை  தொழிலில் ஈடுபட்டவர்  விறல்மிண்டர்.  சிவன் கோயில்கள் உள்ள எல்லா ஊர்களுக்கும் போகிறவர்.  அங்கே திருப்பணி ஆற்றுவார்.  பக்தர்களை உபசரித்து சேவை செய்வார். அவர்களை  முதலில்  நமஸ்கரித்து விட்டு அப்புறம்  தான் கோவில் உள்ளே போய்  பரமசிவனை  நமஸ்க ரிப்பார்.  சிவனை விட சிவனடியார்  முதலில் வழி படவேண்டியர் என்ற கோட்பாடு உடையவர்.  ஒரு பற்றற்ற ஒரு உண்மை துறவி.  

விறல்மிண்டர்  சோழநாடு  சென்றார். வழி யெல் லாம் எங்கெங்கே  சிவனடியார்களைக் கண்ட போதும் மிகவும்  மகிழ்ந்து வணங்கி  தன்னாலியன்ற  சேவைகளைச் செய்த பிறகு  ஆலயங்களுக்கு சென்றார். 

திருவாரூர்  எங்கிருக்கிறது.  தியாகேசனை எல்லோரும்  புகழ்கிறார்கள். அவனை தரிசிக்கவேண்டுமே ? விசாரித்துக்கொண்டு வயதான  இந்த கிழவர்  விறன்மிண்டர்  வெகு  ஆவலோடு தாயை நாடும் சேயாக திருவாருர் ஆலயத்தில்  நுழைகிறார். 
அடேயப்பா  எவ்வளவு  பக்தர்கள் கூட்டம் ! மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு. அத்தனை போரையும் நமஸ்கரிக்கிறார்.  தன்னாலான சேவையை அவர்களுக்கு செய்கிறார்.   யார் இவர் என்று எல்லோரும் அதிசயிக்கிறார்கள்?அப்புறம் உள்ளே சென்று  தியாகேசனைக்  கண்ணார மனமார  தரிசிக்கிக்கிறார்.அந்த புனித க்ஷேத்ரத்தை விட்டு அகல மனமின்றி சிலநாள் அங்கே தங்குகிறார்.

ஒருநாள் பக்தர்கள் சிலர் பேசுவது  விறல்மிண்டர்  காதில் விழுகிறது. அதிகப்படியான கூட்டம் கோவிலில். 

''இன்று இங்கே  என்ன விசேஷம்  வழக்கத்தை விட  அதிக பக்ஷமாக பக்தர்கள் இங்கே கூடுகிறார்களே?  என கேட்கிறார்.
'' நீர் இந்த ஊர்க்காரர் தானே, அல்லது ஊருக்கு புதிதா?''
''சுவாமி நான் இந்த ஊருக்கு  தான் புதுசே தவிர  பரமசிவனுக்கு  ஒரு பழைய பக்தன்''
''ஓ அது தான் உமக்கு சமாச்சாரம் தெரியவில்லை''
''சுவாமி என்ன சமாச்சாரம், சொல்லுங்கோ?'
''இன்று இங்கு யார் வருகிறார் தெரியுமா உமக்கு?''
''தெரியவில்லையே ''
''பல க்ஷேத்ரங்களுக்கு சென்று பரமசிவனை வழிபட்டு பாடல்கள் பாடி, இறைவனே மிகவும் விரும்பும் ஒரு  சிவ பக்தனான சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இங்கே விஜயம் செய்கிறார்.''
''ஓ  அப்படியா, ஆஹா  அவரைப் பற்றி கேள்விப்பட் டிருக்கிறேன்.  அது தான் இவ்வளவு ஆரவாரமா, பக்தர்கள் கூட்டமா?''
''அதோ பாரும்.  சிவபக்தி ஜொலிக்க நெற்றியில் திருநீறணிந்து நிற்கிறாரே  அவர் தான் சுந்தரரின் மனைவி பறவை நாச்சியார்.   ஒவ்வொரு நாளும் தவறாது இங்கே பரமேஸ்வரனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்பவர்''
'' அடடா  நான் என்ன பாக்யம் செய்தேன்  இந்த திவ்ய தரிசனம் பெற?'', பக்தியால் ஆனந்த கண்ணீர் வடித்து பறவை நாச்சியார் நிற்கும் திசை நோக்கி வணங்குகி றார் விறன்மிண்டர்.

தூரத்தில் பக்தர்கள்  ''ஹர  ஹர  மகாதேவா'' கோஷம் கேட்கிறது.  ''பரமேஸ்வரா பார்வதி பதே, தியாகேசா'' என்ற ஒலி  விண்ணைப்  பிளக்கிறது.  சுந்தரரின் பாடல் களைப் பாடியவாறு  ஒரு பக்தர் குழாம் நெருங்கி வருகிறது.    நடுவே அழகே  உருவான  கல்யாண மாப்பிள்ளை மாதிரி வாலிபனாக சுந்தரர்  வெகுநாள் கழித்து  சந்திக்கும் நண்பன்  திருவாரூர்  தியாகேச னைக் காண  ஆவலோடு கூப்பிய கரங்களோடு உள்ளே வருகிறார்.

ஆலயத்தில் தேவாசிரிய மண்டபம்  பொங்கி வழிகிறது. பக்தர்கள் கூட்டம் பத்து நூறாகி  ஆயிரமாகும் அளவு ''பரமேஸ்வரா,  ஓம் நமசிவாய''   சப்தம் எங்கும் ஒலிக்கிறது.  'நம்பி ஆரூரர் வாழ்க,  என்று ஒரு கோஷம்'' சுந்தரரின் கண்கள் பறவை நாச்சியாரைக்  கண்டு மகிழ்கிறது. நாச்சியார் ஓடிவந்து அவருக்கு அருகே நிற்கிறார். சுந்தரர் இனிய குரலில் ஆரூரனைப்   போற்றி பாடுகிறார்.

சுந்தரரின்  கண்களில், கூட்டமோ, மண்டபமோ, நாச்சியாரோ,  எதுவுமே தென்படவில்லை. உள்ளே சர்வாலங்கார பூஷிதனாக காட்சி தரும்  தியாகராஜ னையே இமைக்காமல் தரிசிக்கிறார்.  நேராக கற்பகிரஹம் நோக்கி செல்கிறார்.

விறன்மிண்ட நாயனார் இதுவரை சுந்தரரை சந்தித்த தில்லை, ''இவரா சுந்தரமூர்த்தி எனும் நம்பியாரூரர்'' சிறந்த சிவபக்தர், பெருமானே தோழராக ஏற்றுக்கொண்டவர்.  இவ்வளவு சிவபக்தர்கள் நிறைந்த இந்த மண்டபத்தில் யாரையுமே அவர் காணவுமில்லை, வணங்கவுமில்லையே. ஏன் ?  இவ்வளவு பக்தர்கள் நிற்கிறார்கள். ஒருவரையும் லக்ஷியம் பண்ணவில் லையே. அவ்வளவு ஆணவமா?சிவனை விட பக்தர்கள் அல்லவோ உயர்ந்தவர்கள்? அது கூட தெரியாத சுந்தரர் நிச்சயம் சிவபக்தர் இல்லை. இவர் தவறு செய்தவர்.  இவர் ஆலயத்தில் நுழையக்கூட  தகுதி அற்றவர்.  அவரை விட  இந்த சுந்தரரை இவ்வாறு நடந்துகொள்ள அனுமதித்த   இந்த  தியாகராஜனும்  உண்மையில் இனி என்  கடவுள் அல்ல''.  

அதிர்ச்சி அடைந்த விறன்மிண்டர்  தான் எங்கிருக் கிறோம் என்பதை மறந்தவராக நேராக  சுந்தரரை நோக்கி ஓடுகிறார்.  தடுக்கிறார் அவரை.

''சுந்தர மூர்த்தி, சற்று நில்லும். என்ன காரியம் செய்து விட்டீர்? ''
''சிவபக்தர்  நீங்கள் யார், அடியேன் என்ன தவறு செய்தேன் , பொருத்தருளவேண்டும்'' என்கிறார் சுந்தரர் திகைப்புடன்.
''இதோ இந்த எண்ணற்ற சிவபக்தர்கள் எங்கிருந்தெல் லா மோ இங்கே சிவதரிசனம் பெற பல நாட்களாக காத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நீங்கள் வணங்க  வேண்டாமா முதலில்,  சிவபக்தர்கள் அல்லவோ சிவனை விட உயர்ந்தவர்கள். அவர்களை  மதிக்காதவருக்கு எப்படி முக்தி கிடைக்கும் சொல்லுங்கள். நீங்கள் சிவபக்தர் குழாம் சேர்வதற்கு அருகதை அற்றவராகி  விட்டதால், பக்தர்கள் குழாம் உங்களை விலக்கி வைக்கவேண்டும். அது தான் ஞாயம்.'' என்கிறார் விறன்மிண்டர்.

''ஆஹா  அடியேன் செய்தது பிழை தான்'' என  சுற்றிலும் உள்ள   எல்லோரையும் தலைமேல் கை கூப்பி  வணங்குகிறார் சுந்தரர்.

விறன்மிண்டர்  ஆவேசம் கொண்டு மேலும் கர்ஜிக்கிறார்.

'' உம்மை இப்படி பக்தர்களை உதாசீனப்படுத்த  ஒத்துழைத்த சிவனும்  தவறிழைத்தவர் தான். பக்தர்களை அவமதித்த உம்மை புறக்கணிக்க தவறிய குற்றம் அவரும் இழைத்துவிட்டார். ''

சித்தப்ரமை பிடித்தவர் போல் விறன்மிண்டர் இவ்வாறு உரக்க ஒலித்தவுடன்  சுந்தரர் கண்களில் நீர் பெறுகிறது.

''தியாகேசா.....இதுவும் உன் சோதனையா?  எப்படிப்பட்ட தவறை, பாபத்தை நான் செயது விட்டு தவிக்கிறேன். இதற்கு என்ன தண்டனையோ  அதை நீயே இப்போதே கொடுக்கவேண்டும். இந்த சிவனடியார்கள் அனைவ ருக்கும் நான் அவர்கள் திருவடி பணியும் தாசனாக வேண்டும்  அதற்கு எனக்கு  அருள் புரியவேண்டும்'' என்கிறார் சுந்தரர்.  

கருவறையில் தோன்றும் சிவபிரானை வேண்டி கண்ணீர் உகுக்க  சிவனின் குரல் அவருக்கு கேட்கிறது :

''சுந்தரா, “நாம் அடியாருடன் உள்ளோம்; அடியாரைப் பாடு என்றருளி “தில்லைவாழந்தணர்” என அடியெடுத்துக் கொடுத்தார். 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேசமெல்லாம் உய்வதற்கு காரணமானதும், சைவநெறியின் சீலம் விளங்கச் செய்வதுமான திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார்.  நாம் அவரியற்றிய திருத்தொண்டர் தொகை  எனும் சிவநேச செல்வர்கள், நாயன்மார்கள் அனைவரையும் பற்றிய  பெயர்கள் விவரங்கள்  அறிகிறோம். அத்தனைபேருக்கும் நான் திருவடித்  தொண்டன்  ''அடியார்க்கு  அடியேன்'' என்கிறார் சுந்தரர். இதை ஆதாரமாக வைத்து தான் சேக்கிழார் பெருமான்  பெரிய புராணம் விரிவாக நமக்கு அளித்தார். 

ஒன்று நிச்சயம் தெரிகிறது. திருவாரூர்   தியாகராஜன்  தான் விறன்மிண்டர் உடலில் புகுந்து இவ்வாறு ஆவேசம் கொண்டு பேச வைத்து அதன் மூலம் தானே அடியெடுத்துக் கொடுத்து நமக்கு சுந்தரரை ஒரு கருவியாக உபயோகித்து திருத்தொண்ட தொகையை அருளியிருக்கிறார். தென்னாடுடைய சிவனே போற்றி''   என்று உரக்க பாடுவோம். காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனாரையும்  கைகூப்பி தொழுவோம்.

No comments:

Post a Comment