சூடான வடை
குளத்திலும் நீரோடையிலும் தாமரைக்கொடிகள் அருகில் வசிக்கும் தவளை பூக்களிலிருந்து சொறியும் தேனை அறியாது. புழு பூச்சியைத் தான் தேடும். கஸ்துரி மான் தன வயிற்றில் இருக்கும் விலையுயர்ந்த கோரோசனை கஸ்துரியை அறியாது. காட்டில் இலை தேடும். இதை எதற்கு சொல்கிறோம் என்றால் நமக்கு நம்மிடம் இருக்கும் ஒன்றின் மதிப்பு தெரியாத போது யாரோ ஒருவர் எடுத்து சொன்னால் தான் புரிகிறது. தவறாக எவராவது வழி நடத்தினால் அதை நம்புகிறோம்.
சிவன் ஒரு முறை பார்வதிக்கு ராமனின் நாம மகிமையை பெருமையை எடுத்து உபதேசித்தது தான் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் சிறந்த ஸ்லோகமாக பாராயணம் செய்கிறோம். இதை அவர் தனது ஹஸ்தத்தை பார்வதி தேவியின் சிரசில் வைத்து உபதேசம் செய்த போது அவள் ஸ்மரணை இழந்தாள் .
அந்த கணத்தில் ஒரு முதலையின் கர்ப்பத்தில் ஒரு உயிர் ஜனித்தது. சிவன் உபதேசம் அதற்கும் கேட்டது. ''பிரபோ புரிந்து கொண்டேன் '' என்றது. ஆழ்ந்த நீரின் அடியிலிருந்து முதலையின் கர்ப்பத்திலிருந்து அது சிவன் பார்வதிக்கு செய்த உபதேசத்தை மனதில் இருத்திக்கொண்டது. அது தான் மத்ஸ்யேந்திர நாத், சிவனின் அம்சம். சகல கலைகளையும் இயற்கையாகவே தன்னுள் அறிந்தவர். சர்வஞர். ஒரு நிலையில் ஆழ் கடலிலிருந்து வெளியேறி லோக சஞ்சாரம் செய்தார். பல ஸ்தலங்களுக்கு சென்றார். காட்டில் தனியே அமர்ந்து தியானத்தில் ஈடு பட்டார்.
ஒரு நாள் ஒரு ஊருக்கு வந்தார். ஒரு வியாபாரியின் வீட்டு வாசலில் நின்றார். ''அலாக்'' எனக்கு ஏதாவது கொடுப்பதாக இருந்தால் உடனே கொடுங்கள் என்று அவர் கேட்டது உள்ளே வியாபாரியின் மனைவி காதில் விழுந்தது. வெளியே வந்தவள் அவரைப் பார்த்தாள் . அவரது தேஜஸ். காதில் பளபளக்கும் குண்டலங்கள் நக்ஷத்திரங்களாக ஜொலிப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தாள் . பொன் போன்ற மேனியில் வெள்ளை வெளேரென்று விபூதி.
''சுவாமி தாங்கள் எந்த ஊர்?''
''பரபிரம்மம் இருக்கும் இடம் என் இடம். ''
''சுவாமி உங்களிடம் ஒரு வரம் வேண்டும். எனக்கு குழந்தையில்லை. எங்களிடம் செல்வம் இருந்தும் சந்தோஷம் இல்லை. நீரில்லாத ஆறு, மரமில்லாத கட்டாந்தரை எங்கள் வாழ்க்கை. எங்கள் குடும்பத்தில் புத்திர பாக்கியம் பெற அருள் பாலிக்க வேண்டும். மத்ஸ்யேந்ரனாத் ஏதோ மந்திரத்தை உச்சரித்து கொஞ்சம் விபூதி எடுத்து அவள் கையில் கொடுத்தார். இதைசசாப்பிடு. நினைத்தது நடக்கும். உனக்குப் பிறப்பவன் விஷ்ணு அம்சம். ஞாபகம் இருக்கட்டும்''
வியாபாரியின் மனைவி அந்த விபூதியை பூஜை அறையில் வைத்தாள் . தலை வெடித்துவிடும் போல் ஆகிவிட்டது அவளுக்கு. அடுத்த வீடு, பக்கத்து வீடு என்று எல்லா நண்பிகளையும் கூப்பிட்டு ''ஒரு தெய்வீக் சாமியார், இளம் வயது, இன்றெல்லாம் பார்க்கலாம் போல சாந்தஸ்வரூபமாக எங்கள் வீட்டுக்கு வந்தார். நான் கொஞ்சம் பிக்ஷை போட்டேன். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். சுவாமி எங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை என்றதும் விபூதி மந்திரித்து கொடுத்து இதை சாப்பிடு உனக்கு பிள்ளை பிறக்கும் என்றார்'' என்று ஒப்பித்தாள் . நான் எதற்காக இதை உங்களிடம் சொல்கிறேன் என்றால் எனக்கு உங்களை விட ஆப்தர்கள் யாருமில்லை. அவர் சொன்னது போல் விபூதி சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?'' என்று கேட்டாள்.
''ஐயோ, நல்ல வேளை நீ என்னைக்கேட்டாய். நம்பவே நம்பாதே. சில சாமியார்கள் இந்த மாதிரி விபூதி கொடுத்து சாப்பிட்டவர்கள் மந்திரத்தால் நாயாய் போய் அவர்கள் பின்னேயே போனதாக கேள்விப்பட்டேன். இதெல்லாம் வேண்டாமே. உனக்கு தானாகவே ஒரு நாள் குழந்தை பிறக்கலாமே'' என்றாள் ஒரு நண்பி. வேறு சிலரும் ஒத்துப்பாடவே, வியாபாரியின் மனைவி மனதில் சந்தேகம் செடியாக முளைத்தது. யோகி கொடுத்த விபூதியை அடுப்பில் போட்டுவிட்டாள். கண்ணாடி என்று வைரத்தை கோட்டை விட்டாள் .
பன்னிரண்டு வருஷம் ஓடி விட்டது. ஒருநாள் மத்ஸ்யேந்திரர் அந்த பகுதிக்கு மீண்டும் வந்து அந்த வியாபாரி வீட்டை அணுகினார். எனக்கு ஏதாவது கொடுப்பவர்கள் கொடுக்கலாம் -- ''அலாக் '' என்ற அவர் குரல் மீண்டும் கேட்டது. வியாபாரியின் மனைவி அவருக்கு உணவு கொண்டுவந்தாள். அவர் முகத்தைப் பார்த்ததுமே அவளுக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.
''உன் பையனைக் கூட்டி வா நான் பார்க்க வேண்டும்'' என்றார் யோகி. அவளுக்கு பயம் வந்தது. ''நீங்கள் கொடுத்த விபூதியை நான் சாப்பிடவில்லை'' என்று உண்மையை சொன்னால் எனன்னையும் சாம்பலாக்கிவிடுவாரோ என்று நடுங்கி, ஒன்றுமே பதில் சொல்லவில்லை.
''நான் கொடுத்த விபூதியை சாப்பிட்டாயா, எங்காவது எறிந்துவிட்டாயா?''
''சுவாமி, உண்மையை சொல்லிவிடுகிறேன். என் புத்தி கேட்பார் பேச்சு கேட்டு நம்பிக்கை யின்றி எறிந்து விட்டேன்''
''அடுப்பு சாம்பலை எங்கே கொட்டினாய் உடனே சொல்?''
''சாணம் கொட்ட ஒரு குழி வெட்டி வைத்திருக்கிறது. பல வருஷங்களாக உரத்துக்காக அதில் தான் வீட்டு குப்பை கூளம் சாம்பலைக் கூட கொட்டுவோம். ''
''' எனக்கு அதைக் காட்டு ''
''யோகி அந்த சாணக்குவியலை உற்று பார்த்து ''ஆலாக் '' என்றார். அடுத்த கணமே ''ஒ குரு ஆதேஷ்'' என்ற ஒரு குரல் சாணக்குவியலிலிருந்து கேட்டது. இதற்குள் நிறைய கும்பல் சேர்ந்து விட்டதே. ஆகவே இந்த குரல் கேட்டதும் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.
''இந்த குப்பையை அப்புறப்படுத்துங்கள் '' என்றார் குரு . விரைவில் சாணம் சாம்பல், சத்தை, குப்பை எல்லாம் அகற்றப்பட்டது. பனிரெண்டு வயது பாலகன் ஒருவன் தெய்வ பிம்பமாக நின்றான். 32 சாமுத்ரிகா லக்ஷணங்களோடு அவன் நின்றது கண் கொள்ளா காட்சி. விஷ்ணு அவதாரம் அல்லவா. குரு அவனருகில் சென்று அவன் சிரசில் கை வைத்தார். அவன் சர்வாபரணங்களுடன் காது குண்டலத்தோடு நெற்றியில் கோபி சந்தனத்தொடு தூய ஆடை துளசி மணி மாலையோடு அவரை வணங்கினான். அவன் கையைப் பிடித்துக்கொண்டு குரு கிளம்பி விட்டார். பசும் சாணத்தில் பனிரெண்டு வருஷம் வளர்ந்ததால் அவன் பெயர் கோ ரக்ஷக நாத் .
வியாபாரி மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதான். ''அரிய செல்வம் கிடைத்தும் அனுபவிக்காமல் பாழக்கிவிட்டாயே. பாவி'' என்று அவளை கடிந்தான்.
குரு அவனை சமாதானப்படுத்தி '' உனக்கு மற்றுமொரு பிள்ளை பிறப்பான் கவலைப் படாதே'' என்று வாழ்த்தினார்.
''மகாஸ்வாமி எனக்கு அருள் புரியுங்கள்'' என்று கோ ரக்ஷக் நாத் குருவை வேண்டினான்.
''அப்பனே, நான் உன்னை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவே இல்லையே. பார்த்தவுடனே ஒருவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்வதோ அவனுக்கு உபதேசம் செய்வதோ முறையல்ல. '' என்றார் குரு. வெகு தூரம் நடந்தபின் ஒரு ஊர் வந்தது. அங்கு ஒரு இடத்தில் தங்கினர் . சுவாமி தாங்கள் இளைப்பாறுங்கள் நான் பிக்ஷைக்குபோகிறேன். கோரக்ஷக் நாத் ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று ''அலாக்'' என்று குரல் கொடுத்தான். ஒரு வீட்டில் சப்பாத்தி, சில வீடுகளில் வேறு வித உணவு வகைகள் ஒரு வீட்டில் சூடான சில வடைகள் எல்லாம் கிடைத்தன. அவற்றை குருவிடம் கொண்டுவந்து அவர் முன் வைத்தான். நல்லதை எல்லாம் அவருக்கு அளித்தான்.
''சூடான ஒரு வடை கொண்டுவந்தாயே அது மிக நன்றாக இருந்தது. நாளைக்கும் அதையே கொண்டுவா'' என்றார் குரு
''அப்படியே மகாஸ்வாமி'' என்றான் கோ ரக்ஷக் நாத். எந்த வீட்டில் பிராமணர்களுக்கு விருந்து நடந்து அந்த வீட்டில் வடை கொடுத்தார்களோ அங்கு போய் நின்றான். '' தாயே எனக்கு நேற்று கொடுத்தது போலவே சில சூடான வடைகளை அளியுங்கள்'' என்று கேட்டான்.
''அப்பா, நேற்று எங்கள் வீட்டில் விசேஷம் அதால் வடை இருந்தது. இன்று நான் வடைக்கு எங்கே போவேன். சொல் '' என்றாள் அந்த அம்மாள். ஏதோ காசு கொடுக்கிறேன், அரிசி கொடுக்கிறேன் அவ்வளவு தான். '
'அம்மா எனக்கு அதெல்லாம் வேண்டாம். என் குருநாதர் அந்த வடை தான் மீண்டும் வேண்டும் என்று பணித்ததால் அதை தான் கேட்கிறேன். ''
இது தவறு. என்னை துன்புறுத்துகிறாய் நீ. ஒரு நாய்க்கு ஒரு நாள் உணவிட்டால். திரும்ப திரும்ப அது வந்து தொந்தரவு செய்வது போல் இருக்கிறது நீ செய்வது'' என்று கோபித்தாள் அவள்.
''அம்மா நான் நாயினும் கடையேன். இன்று இந்த வீட்டு வடை இன்றி நான் இங்கிருந்து நகரப்போவதில்லை ''
''அடே பிடிவாதக்காரா. அப்படியா விஷயம். உன் ஒரு கண்ணை நோண்டிக் கொடு வடை சுட்டு தருகிறேன்'' என்று கோபமாக சொன்னாள் அவள் .
''தருகிறேன் அம்மா''
''அடே வெறும் வாயால் சொல்லி பயனில்லை. செயலில் காட்டு'' என்றாள் அந்த வீட்டுக்கார அம்மாள்.
கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில் ஒரு விரலால் ஒரு கண் விழிக்கோளத்தை எடுத்து கோரக்ஷக் நாத் அவள் கைமேல் வைத்தான்.
''ஐயோ நான் வெறுமே சொன்னதை வாஸ்தவமாக்கி விட்டாயே என் செய்வேன்'' என்று பயந்து அலறிக்கொண்டே அவள் அவன் கண்களில் பீரிட்ட ரத்தத்தை தன் முந்தானையால் துடைத்தாள். உள்ளே ஓடி கதவைச் சாத்தினாள். வேக வேகமாகவடைக்கு தயார் செய்தாள் . நிறைய வடையோடு வெளியே வந்தாள். அவனது ஜோல்னா பையில் பொட்டலத்தை வைத்தாள் என்னை மன்னித்துவிடு'' என்றாள் . அவன் அவளை கைகூப்பி வணங்கிச் சென்றான். குருவின் முன் சூடான வடைகளை வைத்தான். அவனைப்பார்த்த குரு மனம் வாடினார்.
''உனக்கு எவ்வாறு கண் போயிற்று? ''
அவர் முன் இரு கை கூப்பி வணங்கி நடந்ததைச் சொன்னான் கோ ரக்ஷக் நாத்.
''ஒ அப்படியா. குருவுக்காக உன் மற்றொரு கண்ணையும் கொடுக்கத் தயாரா நீ? ''
''மகாஸ்வாமி நீங்கள் வாய் திறந்து கேட்டால் என் உயிரையும் கொடுக்கத்தயார்'' என்று சொல்லி மற்றொரு கண்ணையும் பிடுங்கி அவர் முன் வைத்தான் சிஷ்யன்.
'' என் மகனே நீ தானடா என் மனமுவந்த சிஷ்யன் என்று அவனை ஆலிங்கனம் செய்து கொண்டு தனது கையால் அவன் கண்களைத் தடவினார். மீண்டும் அழகிய விழிகள் அங்கு தோன்றின. முன்னிலும் கண்களில் ஒளியுடன் கோ ரக்ஷக் நாத் அவரை விழுந்து வணங்கினான். குருவுடன் பல க்ஷேத்ரங்கள் சென்றான் இன்றும் கோரக்நாத் என்று அவர் பெயர் பல இடங்களில் வழங்குவது நாம் அறிந்ததே.
No comments:
Post a Comment