Saturday, November 19, 2022

PESUM DEIVAM


 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவாளிடம்  100 கேள்விகள்.


22.  ஸ்ரீ ஹனுமத் ஸ்மரணாத் பவே :  

எதிரே அமர்ந்து அவரையே  பார்த்துக்  கொண்டிருந் தேன்.  ஆஹா  எப்படிப்பட்ட  தீர்க்க  தரிசனம் அவருக்கு!   எத்தனை முறை அந்த கண்கள்  எதிரே இருக்கும் கூட்டத்திலே  யாரையோ  சட்டென்று  தேடி பார்த்து கை ஜாடையால்  அருகே வர கட்டளையிடும்.   அழைக்கப்பட்ட  ஆசாமி பூர்வ ஜன்ம த்தில் வண்டி  வண்டியாக  புண்யம் பண்ணி இருப்பவன்.  இல்லா விட்டால்  தெய்வம் அவனை மட்டும் அழைக் குமா அருகே?  அவனுக்கே  தன்னை கவனித்து  கிட்டே வா என்று  தெய்வம்  உத்தரவிடும் என்பதே தெரியாதே.  காந்தத்திடம் இரும்பு துண்டு ஓடுவதைப்  போல் பறந்து சென்று அவரருகே  நிற்பான்.

என்னையும்  அந்த  காந்த அருள் விழிகள்  அழைப்பது போல் இருந்தது.  அமர்ந்து அவரையே பார்த்துக் கொண் டிருந்தேன்.  எதிரே படத்தில் தெய்வம்.  அருகே தீபம் மெல்லிதாக எரிந்து கொண்டிருந்தது.  கையில் இருந்த  ரோஜாப்பூவை  படத்தில் அவர் பாதத்தின் அருகே வைத்து கண்ணை மூடினேன். மனம் ஒருமைப்பட்டது. வழக்கமான சம்பாஷணை தொடர்ந்தது.

''என்னடா  கேளு,  என்ன  சொல்லணும் உனக்கு இப்போ?''''மஹா பெரியவா,  நான் நங்கநல்லூர்க்  காரன்.  எங்க  ஊர்க்கு  ஆஞ்சனேயரை  கொண்டு வந்ததே நீங்க.  அவரைப் பற்றியே  சொல்லுங்கோ''

++
''ஆஞ்சநேய ஸ்வாமி அலாதியான விசேஷம் கொண்ட வர். ''புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |  அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||  என்று ஸ்லோகமே இருக்கு.   ஆஞ்சநேயரை  நினைத்து வேண்டுபவர்களுக்கு  என்னென்ன அநுக்கிரஹம் தருவார்  என்கிறது இந்த ஸ்லோகம்.புத்தி, பலம், புகழ்,  மனோபலம், தைர்யம், ஆரோக்ய மான உடம்பு, விழிப்பு நிலை, வாக் சாதுர்யம்  எல்லாம்  தருகிறார்.

இதெல்லாம் ஒரே இடத்தில்  சேர்ந்து இருக்குமா? 
புத்திமானாக  இருப்பான், ஆனால் ஆரோக்கியம் இல்லாத சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவா  இருப்பான். இரண்டும் இருந்தாலும் 
பயந்தாங் கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப்  பயன் படுத்த தெரியாத,  சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக  நிறைய படிச்சி ருப்பான், ஆனால் தனக்குத் தெரிந்ததை எடுத்து  அழகாக பிறருக்கு சொல்லுகிற  வாக் சாதுர்யம் இருக்காது.   இப்படி  ஏறுமாறான குணங்கள்  எதுவும் இல்லாமல் சகல  ஸ்ரேயஸ்களையும்  ஒண்ணா சேர்த்து அருள்கிறவர் ஆஞ்சநேயர்.  ஏன் னு கேட்டால் அவர்கிட்டே அத்தனையும் பூரணமா  நிறைஞ்சிருக்கே.   எவ்வளவு பெரிய  பலசாலி  ஆனால் எவ்வளவு விநயம்!.  அஹங்காரமில்லாத ராம பக்தி! தேக பலம், புத்தி பலம், விநயம், தன்னடக்கம், பக்தி  எல்லாம் கொண்டவர். 
 மகா சக்திமானாக இருந்தும்,  ''எனக்கு எல்லாம்  ராமன் போட்ட பிச்சை'' என்கிற  ராமதாஸன்  ஆஞ்சநேயன்..

பக்தி இருக்கிறவர்களுக்கே  கூட ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருக்கு.  ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே   சண்டை  கூட  போடுகிறார்கள்.  ஆஞ்சநேயர்  ராமனின்  பரமபக்தர், பரம  ஞானி. . 

 தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களுக்காக  மௌன உபதேசம் செய்வதுபோல் நமக்கு  அருள்கிறாரோ  அப்படி ஸ்ரீ ராமர்  ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு  நமக்கு ஞானோபதேசம் செய்கி றார் என்று 'வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. 

அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை  முழுசா நேரிலேயே கேட்டவர்  ஹனுமான்.   பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யத்தை ஆஞ்சநேயர் இயற்றியது என்பார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த 'நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே ஆஞ்சநேயரை  புகழ்ந்தவர். தனுடையக புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும்  மூட்டை கட்டி வைத்து விட்டு கை  கட்டிக்  கொண்டு ராம  பக்தியிலேயே   எப்போதும்  பரமானந்தம் அநுபவிப்பவர் ஹனுமான்.

ஞானம், பலம். பக்தி. வீரம், கீர்த்தி, சேவை, விநயம்  இப்படி எல்லாத்திலேயும் உச்சியில் இருக்கிற  ஒரே சிரஞ்சீவி  பிரம்மச்சாரி  பக்தன்  ஆஞ்சனேயகர் தான்.  உலகமுழுதும்  ஹிந்துக்கள் அவரை 'ஹநுமார், ஹநுமந்தையா, மாருதி, பஜரங் பலி, ஆஞ்சநேயலு,
மஹா வீர்....என்றே வேண்டுகிறார்கள். 'ராம், ராம்' என்ற சப்தம் எங்கே ஒலித்தாலும் ராம சங்கீர்த்தனம், உபன் யாசம்  பஜனை  எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரை யாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு  கேட்கிறார்.
நம் எல்லோருக்கும்   இக்காலத்தில்  அவசியம்  அன்பு, பண்பு, சேவை மனப்பான்மை, திருப்தி,  ரொம்பவும் தேவை.  அஞ்சனா  புத்ரனை வணங்கி இவற்றைப்  பெறுவோம்''
+
கண்  திறந்தேன். இதை உடனே எல்லோருக்கும் சொல்ல  வேண்டும் என்ற வேகம் பிறந்து கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்தேன்.

No comments:

Post a Comment