Sunday, November 6, 2022

OM NAMASIVAYA



 ஓம் நமசிவாய -   #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
தமிழ் நாம் எல்லோரும் தான் பேசுகிறோம் அதிலும் மெட்ராஸ் பாஷையில் நாம்  எக்ஸ்பர்ட்கள். expert.  நாம்  பேசுகிற வார்த்தைகளுக்கு  என்ன அர்த்தம் என்று நமக்கே தெரியாத போது  கேட்பவர்களுக்கு எப்படி புரியும் என்று கேட்கவேண்டாம்?பதில் தெரியாது.
தமிழ் என்றால் அதைப் பேசுவதற்கும்  பாடுவதற்கும்  சொல்வதற்கும்  சிறந்த ஒரு  மனிதர்  இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி  யாரை நாம் தேர்ந்தெடுக்கலாம்?    நமக்கு   தமிழ் நன்றாக தெரிந்தால் தானே அதில் சிறந்தவரை நாம்  இதோ இவர் தான் சிறந்தவர் என்று  சுட்டிக்காட்ட முடியும். அதனால் தான்   நம்முடைய கஷ்டத்தை நன்றாக புரிந்து ஸாக்ஷாத்  பரமேஸ்வரனே  இதோ இருக்கிறாரே  இவர் தான்  ''நாவுக்கு அரசர்''  என்று ஒருவரை நமக்கு காட்டி அருள் புரிந்திருக்கிறார். அவர் தான்  நமக்கு எல்லாம்  அப்பா.  ஆகவே மரியாதையாக  ''அப்பர்''  என்கிறோம்.  அப்பர்  நிறைய  பாடி இருக்கிறார், பேசி இருக்கிறார், எழுதி இருக்கிறார். கோவில்களுக்கு சென்று  உழவாரப்பணி செய்தவர்.  எல்லா இடத்துக்கும்  நடந்தே தான் சென்றவர்.  அவரிடம் சைக்கிள் இல்லை. அப்போது சைக்கிள் கிடையாதே.

அவர்  எழுதிய ஒரு 10 பாடல்கள் தேவாரத்தில்  ''நமசிவாய பதிகம்'' என்று இருக்கிறதே தெரியுமா? தெரியாவிட்டால்  இதோ  இங்கேயே  இப்போதே  தெரிந்து கொள்வோம்.


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே 1

சைவத்தை வேரோடு கெல்லி எறிய  சமணர்கள்  பல்லவ ராஜாவின் பலத்தோடு முற்பட்டபோது திருநாவுக்கரசர் சிவ சிவா என்று இருந்தால்  விடுவார்களா. பிடித்து ஒரு பாறாங்கல்லுடன் சேர்த்து கட்டி தொபீர் என்று கடலில்  போட்டு விட்டார்கள். அவர்  பேசாமல் தனக்கு தெரிந்த ஓரே ஒரு ஆளான  சிவனிடம் எவ்வளவு அழகாக விஷயம் சொன்னார்? 
''அடே , பரம சிவா,  நீ தான் எல்லா சொற்களுக்கும்  தலைவன், அதற்கெல்லாம்  வேதம் நீயே . ஜோதி ஸ்வரூபன். உன் பளபளவென்று மின்னும் தங்கத்  திருவடிகளை நான் மறப்பதே இல்லையே. அது ஒன்றே போதுமே எனக்கு கெட்டியாக பிடித்துக் கொள்ள.   அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு,  இரு கைகளையும்  சிரத்தின் மேல் பதித்து  தொழ  எண்ணம். ஆனால் அது முடியாது. என் கைககளை தலையை எல்லாம் கல்லோடு கட்டி கடலில் போட்டுவிட்டார்கள்.  ஆகவே மனதால் அவ்வாறு தொழுகிறேன்.  நீ தான் என் தெய்வம், என் தலைவன், என் தாய்  உன்னை ''ஓம் நமசிவாய '' என்று விடாமல் போற்றுகிறேன் அது தான் எனக்கு நல்ல துணை.'' சிவன் சும்மா இருப்பானா, பாறாங்கல்   ஜம்மென்று  நீரில் மிதக்கும்  தெப்பம் போல் அப்பரை சுமந்து கரையேற்றிவிட்டது.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.  2

மூன்று தேவிகள், தாமரை மேல் வீற்றிருப்பவர்கள் என்பதால்  தாமரை மலர்களுக்கெல்லாம் அரசி.  பரமேஸ்வரா நீ அபிஷேகப்பிரியன். பால், தயிர், நெய் எல்லாவற்றாலும் அபிஷேகம் செய்ய, பரிசுத்தத்துக்கு  கோமியம், சாணம்  எல்லாம் தருவதால் பசு  மிருகங் களில் ஸ்ரேஷ்டமானது.  நீதி தவாமல் ஆளும் நேர்மை யான அரசன், ராஜாக்களில்  திலகம்.நாவினால் சொல் லும் வார்த்தைகளில்  மிக உத்தமமான, மேன்மை மிக்கது உன் திருநாமம் ''ஓம் நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷரம்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3

மலை போல் விறகுகள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சின்ன  தீக்குச்சி கொடுத்து வைத்தால் போதும். அத்தனையும் பஸ்பமாகிவிடுமே. அதுபோல்  இந்த உலகில் பிறந்து நாம் அனைவரும் செய்யும் அத்தனை பாபங்கள் எல்லாமே  ''ஓம் நமசிவாய' என்ற ஒரு சொல்லினால் நீங்கிவிடுமே .

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.4

''இதோ பார்  சிவா,  நீ இருக்க நான் வேறு யாரிடமும் சென்று கெஞ்சி  ''என்னைக் காப்பாற்று'' என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே.  பெரிய  ஒரு  மலை யின்  கீழே  மாட்டிக்கொண்டு நசுங்கினா லும்,  அந்த நேரத்திலும்  பூப்  போல  என்னை ஜாக்கிரதையாக  வெளியேற்றி என் பயம் நடுக்கத்தைஎல்லாம் தீர்ப்பது உன் திருநாமம் ''ஓம் நமசிவாய''  ஒன்றே தான். 

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5

மஹா பெரியவா எப்போதும்  எதை சொல்லும்போதும்  ''சிவ சிவா'' என்று சொல்லவேண்டும் என்பார். அப்படி சொல்லி உன் விபூதி அணிவது  சகல  விரதம் இருப்ப வர்களின் அணிகலனாக  இருக்கிறது. சிரம் கை கால் கள், வயிறு  இதயம்  போன்ற ஆறு அங்கங்களை இறைவனை தொழுவதற்கு அர்ப்பணிப்பதும் வேதம் ஓதுவதும் அந்தணர்க்கு அணிகலன்.  உனது நீள  ஜடாமுடிக்கு  பிறைச்சந்திரன் அணிகலன்.  நமக்கெல் லாம்  உயர்ந்த அணிகலன் எப்போதும் ''ஓம் நமசிவாய'' என்று சொல்வது ஒன்றே.

சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6

சிவன் சுலபமாக  அடையக்கூடிய  கடவுள். எளிதில் மகிழ்ந்து கேட்பதை வாரி வழங்கும் வள்ளல்.  அவனைச் சரணடைந்தால் ஒரு துன்பமும் அணுகாது.  சதா அனை வருக்கும்   நலமளிப்பவன், சிவம் என்றாலே மங்கலம்  என்று தான் பொருள். குலம் கோத்ரம் முக்கியகமில்லை, யாராயிருந்தாலும்  ஒரு தரம் ஓதினாலே  நற்பலனை அளிப்பது ''ஓம் நமசிவாய'' எனும் ஐந்தெழுத்து மந்திரம். 

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.7

எல்லோரும் எங்கே கும்பலாக  ஓடுகிறார்கள் என்று நானும்  அவர்கள் பின்னே ஓடினேன்  அவர்கள் சிவபக்தர்கள்  மோக்ஷமடைய சிறந்த வழி தெரிந்து செல்கிறவர்கள்.  அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்தேன்.  அடடா,  ''ஓம் நமசிவாய'  என்றல் லவோ செவியினிக்க, நாவினிக்க  சொல்கிறார்கள். நானும் விடாமல்  சொல்கிறேன்.  நான்  அந்த ஐந்தெழுத் தைப் பிடித்துக்கொண்டபோது  என்னைவிட  அது  கெட்டியாக என்னை அணைத்து நன்மைகளை வாரி வழங்குகிறதே.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8

வீட்டில்  ஏற்றி வைக்கும் தீபம்  அங்குள்ள இருட்டை சட்டென்று நீக்குகிறது. அதைவிட வேகமாக  ''ஓம் நமசிவாய'' என்ற  சொல்  உள்ளே புகுந்து பளிச்சென்று ஒளி வீசி, என் உள்ளமெனும் அகத்தில் உள்ள அஞ்ஞான மாயை இருட்டுகளை நீக்குகிறதே.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.9

நானறிந்தவரை   எல்லா நெறிகளிலும் முதல் நெறி  நன்னெறி  சிவ நெறி.  முக்கண்ணன் அதன்  தலைவன் த்ரிநேத்ரன் எனும் முக்கண்ணன்.  அவன் தாள் சரணடைந்தார்க்கு நல்வழி காட்டுவது   'ஓம் நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷர மந்திரம்.

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே  10.

ஓரு  ரகசியம்  சொல்கிறேன். இதை நீங்கள் எல்லோ ரிடமும் தாராளமாக சொல்லலாம், சொல்லவேண்டும்.  அர்த்தநாரீஸ்வரர் எனும் உமையொரு  பங்கனின்  சக்தியே அவன் இடப்பக்கம் உள்ள  மான் போன்ற அழகிய  சக்தி தேவி உமா.  உமா மகேஸ்வரன்  திருவடிகளை மனதில் பொருத்தி மனமாரக் கை தொழுது வணங்கி  அடி வயிற்றிலிருந்து  சுத்தமாக 'ஓம்  நமசிவாய'' என்று சொல்லிப்பாருங்கள்.  வாழ்நாளில் எந்த வித துன்பமோ துயரமோ நெருங்காது. அப்பர் தரும்  காரண்டீ இது.

No comments:

Post a Comment