Monday, October 3, 2022

MY ANCESTORS

 



பழங்கதை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 



என்  அம்மா வழி தாத்தா பிரம்மஸ்ரீ  புராணசாகரம்  வசிஷ்ட பாரதிகள் இளவயதில் கண் பார்வை இழந்தாலும்  அவரது புலமை, ஞாபக சக்தி அவரை கடைசி வரை  சிறந்த  கம்ப  ராமாயண, இதிகாச, தமிழ் இலக்கிய  உபன்யாசகராக சேவை புரிய வைத்தது ஈஸ்வர அனுக்ரஹம். எனது மாமாக்களில் ஒருவர்  வெங்கட்ராமய்யர்  தாத்தாவை ஜாக்கிரதையாக எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர்.  மஹா பெரியவாளுக்கு தாத்தாவின்  புராண உபன்யாசங்கள் பிடிக்கும். மடத்தில் வந்து உபன்யாசம் பண்ண சொல்வார்.  புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் இன்றும் இருக்கும்  என் மாமாவின் இல்லத்தில், அந்த காலத்தில் தாத்தா வசித்தபோது மஹா பெரியவா  விஜயம் செய்திருக்கிறார்.

சங்கீத திரி மூர்த்திகளில் ஒருவரான திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்தவர் தாத்தாவின் தாத்தா, தோடி  சீதாராமய்யர்.   அவர் அற்புதமாக பாடும் தோடி ராகத்தை வீட்டுச் செலவுக்கு பணம் இன்றி உடையார் பாளையம்  ஜமீன்தாரிடம்  13 ரூபாய்க்கு ( ஒரு வராகன்) அடகு வைத்து தஞ்சாவூர்  மராத்திய ராஜாவால் மீட்கப்பட்டு மீண்டும் தோடி ராகம் பாடிய  தோடி சீதாராமய்யரின் பெயரை தாத்தாவின் மூத்த சகோதரருக்கு வைத்திருந்தது.  அடுத்தது ரெண்டு பெண்  குழந்தைகள், ஒன்று  பிறந்து சில நாட்களில் இறந்தது. அடுத்த பெண் குழந்தைக்கு சாரதா என்று பெயர்  வைத்தார்கள். அப்புறம்  நான்காவது குழந்தையாக பிறந்தவர் தாத்தா. ஆங்கிரஸ  வருஷம் வைகாசி 17, திங்கட்கிழமை.  மூல நக்ஷத்திரத்தில் ராத்திரி   தாத்தா  பிறந்தார்.  அன்று  வாசலில் தஞ்சாவூர் ஸப்தஸ்தான  உத்சவ  வசிஷ்டேஸ்வர  சுவாமி பல்லக்கு  வந்த போது  ஜனனம்  என்பதால்  வசிஷ்டேஸன்  என்று நாமகரணம். பாரதிகள் என்பது குடும்ப பட்டப்பெயர். அவரை உலகம் வசிஷ்ட பாரதிகள் என்றே அறியும்.

தாத்தாவின் மூத்த அண்ணா  சீதாராம பாரதி 16வயது வரை ஆங்கிலம் பயின்றார். பிறகு தமிழ் தெலுங்கு முதலிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றார். சங்கீதம் அவசியமாக அக்காலத்தில் அநேகர் கற்று  தேர்ந்தார்கள் . ஹைதராபாத்  ராஜா  சர்  கந்தசாமி மந்திர்  என்ற பாடசாலையில் சங்கீத ஆசிரியராக இருந்து   ஊர் திரும்பி 20 வயதில்  குடுமியாமலையைச்  சேர்ந்த   ஜானகி அம்மாளை  கல்யாணம் பண்ணிக்கொண்டார்.  அவருடைய  சந்ததிகள் யாரென்று எனக்கு இன்னும் தெரியவில்லை.

தாத்தா  வசிஷ்டரின்  ஜாதகத்தில் வாக் ஸ்தானத்தில்  புதனும்  சுக்ரனும் இருப்பதால் சிறந்த  வாக் சாதுர்யம் இருக்கும், பெருமைகள் சேரும் என்று ஜோசியர் சொன்னது ரொம்ப சரியானது.. அங்கத்தில் ஊனம் என்று சொன்னது அவர் பின்னர் கண் பார்வை இழந்ததை சரியாக சொல்லி இருக்கிறது.  சீதாராம பாகவதர்  தாத்தாவோடு அநேக  பிரசங்க, உபந்யாஸங்களில் கலந்து கொண்டு  ஊர் ஊராக தாத்தாவுக்கு துணையாக அழைத்துச் சென்றவர். 

எனது முதல் மாமாவிற்கு சீதாராமய்யர் என்று பெயரை  தனது தாத்தா ஞாபகமாக வைத்தார் வசிஷ்டபாரதிகள். . 




No comments:

Post a Comment