Tuesday, August 9, 2022

HANUMAN AND SANI

 சனியும்  அனுமனும் .  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒரு  சின்ன கதை.  

எப்போதோ  ஒரு ஊரில் அக்னி பகவான் சிவனை வழிபட்டதால்   அந்த  க்ஷேத்ரத்தின்  பெயர்  அக்னிவனம் ஆயிற்று.  அங்கே உள்ள கோவிலில் பரமேஸ்வரன் பெயர்  அக்னீஸ்வரர்.

தமிழில்  சொல்வதானால் அந்த ஊரின் பெயர் கொள்ளிக்காடு.   அங்கே  சூர்யன், அவன் மனைவிகள்   உஷாதேவி , சாயா தேவி  ஆகியோருடன் சென்று  அக்னீஸ்வரரை  வழிபட்டான்.  பின்னர்  உஷாதேவிக்கு  யமதர்மனும், சாயா தேவிக்கு சனிஸ்வரனும்  மகன்களாக பிறக்கிறார்கள். 

சனிக்கு ரொம்ப வருத்தம்.  ''என்ன இது  அக்ரமமாக இருக்கிறதே.  பூலோகத்தில் ஜனங்கள்  தானாக வரவழைத்துக் கொண்டு  படும் துயரம், துன்பத்துக் கெல்லாம்  நானா  காரணம்?   ஏன்  என் தலை உருள்கிறது? '  இந்த மனத் தாங்கலை   சனீஸ்வரன் அக்னீஸ்வரரிடம்  சொல்லி  வருந்தினான்.

''அப்பனே, சனிஸ்வரா,  நீ  ஒரு க்ரஹம்.    யாருக்கும்  வஞ்சனை இல்லாமல்  உனது  கடமையை
ச் செய்பவன்.  இனிமேல்   இங்கேயே  நீ இரு.   இந்த  அக்னிபுரி  இனி பொங்குசனி அருள்கின்ற  க்ஷேத்ரம் ஆகட்டும்.  இங்கு வரும் பக்தர்களுக்கு  உன்னால் நல்லதே நடக்கட்டும் ''  என்று  அருள் பாலித்தார்  அக்னீஸ்வரர்.  

அதற்குப் பிறகு கேட்கவேண்டுமா?  அக்னிபுரி எனும்  திருக்கொள்ளிக் காட்டுக்கு அநேக வண்டிகள் பறந்து செல்கின்றன. நானும்   சில வருஷங்களுக்கு முன்பு  முதன்முறையாக  அங்கு சென்று பொங்கு சனியை தரிசனம் செய்து அவன் என்னை பிடிக்கவேண்டாம்  என்று பிரார்த்தனை  செய்து  கொண்டேன்.  

சனீஸ்வரனைப் பற்றி சொல்லும்போது இன்னொரு விஷயம்  ஞாபகத்துக்கு வருகிறது. 

செங்கல்பட்டில்  கோதண்டராமர் ஆலயத்தில் வடமேற்கே சனீஸ்வரன் சந்நிதி. வழக்கமாக  கோவில்களில் அந்த இடத்தில்  மஹாலக்ஷ்மி இருப்பாள். எனவே தான் அங்கே  இருக்கிற சனிபகவான்   பொங்கு சனியாக வாரி வழங்குகிறார்.

 வழக்கமாக இருக்கும் வில் அம்பு, சூலம், சாட்டை இல்லாமல் இங்கே சனீஸ்வரன் கையில் கலப்பை. கலப்பை ஏர் உழும் கருவி. வளமை , செழிப்பின், சின்னம்.

வடகிழக்கே  பைரவர்.  சனியின் குரு. இப்போது புரிகிறதா ஏன் குரு பார்வைக்கு  குருப்பெயர்ச்சிக்கு கூட்டம் ஏன் அம்முகிறது இங்கே  என்று ?

லட்சுமி கடாக்ஷம் வந்து போகும். யாரும் நிலையாக என்றும் அதைப் பெற முடியாது.  குபேர சம்பத்து அப்படியல்ல. அதை சனீஸ்வர பகவான் ஒருவன் தான் தரமுடியும். திருநள்ளாறு அதிசயங்கள் பற்றி தான் நிறைய படிக்கிறோமே.

 இந்த  செங்கல்பட்டு  கோதண்டராமர் கோவிலில் ஒரு ஆஞ்சநேயர் சந்நிதியும்  இருக்கிறது. அங்கே  சனீஸ்வரனை தனது காலின் கீழ் பிடித்து வைத்துக்  கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர். ஏனென்றால் ராம காரியமாக ஆஞ்சநேயர் சென்றுகொண்டிருக்கும்போது சனீஸ்வரன் அவரைப்  பிடிக்க வருகிறான்.

''ஹனுமா, கொஞ்சம் நில்''

''சனீஸ்வரா  எதற்கு என்னை நிறுத்துகிறாய். சீக்கிரம் சொல், நான் ராம காரியமாக சென்று  கொண்டிருக்கிறேன்''

''ஆஞ்சநேயா  நான் உன்னைப் பிடித்தே   ஆக வேண்டும். அது என் கடமை ''என்றான் சனீஸ்வரன்.

 ''ஆஹா  அப்படியே  ஆகட்டும், சனீஸ்வரா, நீ அப்புறம் வா நான் பிடிபடுகிறேன். உன் கடமையை நீ செயகிறாய் . நான் என் கடமையை இப்போது முக்கியமாக செய்து  கொண்டிருப்பதால் பிறகு வாயேன்''  -- ஆஞ்சநேயர்.

''இல்லை இப்போதே என் கடமையை நான் செய்யவேண்டுமே '' - சனீஸ்வரன்

''சரி, அப்படியென்றால்  நீ என்னைப் பிடித்துக்கொள். உன் வேலையை நீ செய்.  நானும் என் வேலையைச்  செய்கிறேன். நீ என்னைப்  பிடித்தாலும்  நான் உன்னை பிடித்தாலும்  பிடிப்பு ஒன்று தானே''  என ஆஞ்சநேயர்  சனீஸ்வரனை வாலால் சுருட்டிக்  கட்டிக்கொண்டு  வானில் வேகமாக  பறக்கிறார்.

சனீஸ்வரன் மெதுவாக செல்பவன்.  உயரத்தில் வேகமாக  பறந்தபோது  மூச்சு திணறியது. கண்கள் இருண்டது .
''ஆஞ்சநேயா, என்னை இறக்கி விட்டு விடப்பா.' நான் அப்புறம் வருகிறேன்''  என்று சனீஸ்வரன் சொல்ல,
 ''இல்லை, ஒரேயடியாக என்னை பிடித்து விட்டுப்போ. இன்ஸ்டால்மென்டில் வேண்டாம் '' என்று ஹனுமான் சொல்லி  சனீஸ்வரன் போகாமல் இருக்க தனது காலடியில்  அவனைப் போட்டு  மிதித்துக்கொண்டிருப்பது போல் அந்த ஆஞ்சநேயர்  விக்கிரஹம்  அபூர்வமாக  கோதண்டராமர் கோவில்  ஆஞ்சநேயர் சந்நிதியில் உள்ளது. 

அங்கே சென்றால் நீங்கள் ஆஞ்சநேயர் சனி இருவரையும் தரிசிக்கலாம்.  பிடிபடாமல் திரும்பலாம்.

No comments:

Post a Comment