Sunday, July 3, 2022

YAKSHA PRASNAM

 


யக்ஷ ப்ரஸ்னம்   -  நங்கநல்லூர்   J K  SIVAN


இந்த பகுதியோடு  யக்ஷன் யுதிஷ்டிரனை கேட்ட அவசர கேள்விகளிகளுக்கு அவன் அவசியமான  பதிலைக் கொடுத்ததை நிறைவு செய்கிறேன்.  காலத்திற்கு பொருந்தாத ஒரு சில கேள்வி பதில்களை நான் தொடவில்லை. 

104 . எதை  ஒருவனின் ஆர்வம்  எனலாம்?
எதன் மூலம்  ஒருவன்  அடுத்தடுத்து  பிறப்பு  இறப்பு  அடைய நேரிடுகிறதோ அதை.
 
105. எதைச்   செய்வதை |ஒவ்வாத  போட்டி மனப்பான்மை என்கிறோம்?
 எதைச்செய்ய நினைத்தாலும், செய்தாலும்,  மனதை அடுத்தவர் செய்வதிலேயே  செலுத்தி, மனதைப்  பாழ் படுத்திக் கொள்வதை.
 
106. எது  டம்பம்?
அறியாமை.

107. எவனை ஏளனத்துடன் பார்க்கிறோம் ?
நான் மட்டுமே  தர்மத்தைக்  கடைப்பிடிப்பவன் என்று  டமாரம் அடிப்பவனை.
 
108.  எதை  அத்ரிஷ்ட தேவதை  என்கிறோம்?
 நாம்  செய்யும்  தான தர்ம பலனை.
 
109. எதை  துர்க்குணம்  என்கிறோம் ?
 மற்றவரிடம் குறை காண்பதை. அபாண்டமாக  பேசுவதை
 
110. செல்வம்,  ஆசை,  தர்மம்  இவை  எப்போது ஒன்று கூடமுடியும்?
 இல்லற வாழ்வில்  கணவன் மனைவி   இருவருமே ஒரே  நோக்கோடு பரோபகார சிந்தனையோடு ஒருமித்து  சேவை செய்யும்போது  எதிர் மறையானவை  கூட  ஒன்று கூடிவிடும்..

111. மீள   முடியாத நரகத்துக்கு  எவன்  செல்வான்?.
 மீள முடியாத  நரகமே  அடுத்தடுத்து  பிறப்பது தான்.
ஒரு ஏழையை  வலியச்சென்று  உசுப்பி விட்டு,  அவனுக்கு  நிறைய  தானம் செய்வதாக  ஆசை காட்டி  ஏமாற்றுபவன்,  
வேதம்  சொல்லும் விதிப்படி அனுசரிக்காமல் பொய்யுரைப்பவன்,  
தானும்  அனுபவிக்காமல்  பிறர்க்கும் உதவாத செல்வமுடையவன்  
- இது போன்றவர்கள் கட்டாயம்  இந்த மீளா  நரகம்   செல்வார்கள்.
 
112 பிராமணன்,  பிராமணீயம்  என்கிறோமே  அது  எதால் உருவானது?   ஒரு  குறிப்பிட்ட  குலத்தில்  பிறப்பதாலா,  குணத்தின் அடிப்படையிலா, வேதங்களையும்  சாஸ்திரங்களையும்  கற்பதாலா?
 
'' யார் வீட்டிலோ  பிறப்பதாலோ,  படிப்பதாலோ ஒருவன்  பிராமணன்  ஆகமாட்டான்.  அவனது  அடிப்படை நல்ல குணமே, நல்ல  எண்ணமே, நற்செய்கையே  பிராமணீயம்,  அதைக் கடைப் பிடிப்பவனே  பிராமணன்.   எவன்  வேதங்களை அறிந்து அதன் படி  நடக்கிறானோ,  நல்ல பண்புகளை  உடையவனோ, புலனடக்கம்  கொண்டவனோ,  அவன் பிராமணன்.

113.   இனிய  வார்த்தைகளையே  பேசுபவன்  என்ன  பெறுகிறான்?
அவனை  அனைவரும்  நாடுகிறார்கள், மதிக்கிறார்கள்.
 
114.  எதையும்  ஆலோசித்து செயல்புரிகிறவன்  என்ன அடைகிறான்?
 எதிலும்  வெற்றி  அவனை அடைகிறது.
 
115 நிறைய  உள்ளவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?
 அவனைப்போல்  சந்தோஷமானவன் வேறு யாரும்  இல்லை.

116.தர்மத்தை கடைபிடித்தால்  என்ன கிடைக்கிறது
  முக்தி கிட்டும்

117. எவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது.?
 எவனுக்கு  கடனே  கிடையாதோ,  எவன்  வெளி தேசங்களுக்கு செல்லாதிருக்கிறானோ,  எவன் பச்சிலையையே  சமைத்து உண்கிறானோ, அவனே உண்மையில் சுகவாசி. சந்தோஷ
மானவன்.

 118. எவன் முட்டாள்?
 அன்றாடம் அருகிலிருந்தோர், தெரிந்தோர் எல்லாம் ஒருவர் பின் ஒருவராய் இறப்பதைக் கண்டும்,  தாங்கள்  சாஸ்வதம் என்று நினைப்போர் வடிகட்டின முட்டாள்களே.

119. எதைப் புரிந்து கொள்ள முடியாது.?
தர்மத்தை வேதங்கள்  சொல்வதும்  ரிஷிகள் விளக்குவதும்  தவிர்த்து  தான்  எதையோ  புரிந்து கொண்டு  விளக்குபவனைப்  புரிந்துகொள்ளமுடியாது.

120.   எது  அன்றாடம்  நிகழ்வது?
இந்த  உலகம் ஒரு  பெரிய பாத்திரம்.  ஆகாசம்  அதன் மூடி.  காலம்  என்கிற  சமையல்காரன்  அசையும், அசையா, வஸ்துக்களை அதில் போட்டு, இரவு பகல் என்கிற விறகை,  சூரியன்  என்கிற  தீ மூட்டி , எரித்து, சமைத்து அதை பருவங்கள், மாதங்கள்  என்கிற  கரண்டியினால்  கிளறுகிறானே  இது  தான்  அன்றாடம் நிகழ்வது.

121. உண்மையில் எவன்  "புருஷன்" என்று  சாத்திரங்கள்  கூறுகிறது?
 பயனோ பலனோ எதிர்பாராது  உழைப்பவன்  புருஷர்களில்  உத்தமன் அதனால் மண்ணிலும் விண்ணிலும்  புகழ் எய்துகிறான்.

122. எவன்  எதிலும்  நிறைந்து  காணப்படுகிறான்?
விருப்பு  வெறுப்பு,  சுகம், துக்கம்,  வருவது, வந்தது, வரப்போவது இதெல்லாவற்றையும்  ஒரே சமநிலையில் எவன் எதிர்கொள்கிறானோ அவனே  பிரம்ம ஞானி (பிரம்மத்தை  அறிந்தவன்) என்கிற  சர்வ வியாபி.
++
நன்றி யக்ஷா,  உன்னுடைய அவசரமாக கேட்டாலும்,  அன்றாடம் உதவும் நல்ல விஷய சம்பந்த கேள்விகளுக்கு. அதே போல் உன் தாகத்தை லக்ஷியம் செய்யாது எங்களது அறிவு தாகத்தை தீர்த்த, அவசியமான, அறிவு பூர்வமான  அக்ஷர லக்ஷ பதிலகளை கொடுத்த யுதிஷ்டிரா, உனக்கு  கோடி நமஸ்காரம்.  

பல்லாயிரம்  வருஷத்துக்கு  முன்பு  தர்மன்  இருந்து, அவனை  யக்ஷன்  இந்த  கேள்விகள் கேட்டு,  இந்த  பதில்கள் வெளிவந்ததாக  எழுதப்பட்டு,  அது இன்றும் பெரும்பான்மையான  பிரச்சினைகளுக்கு  நமக்கு வாழ்வில்   உதவும்போது   வேதவியாஸருக்கு எப்படி  நன்றி   சொல்லி  போற்றுவது  என்று  வார்த்தைகளைத்தேடிக்கொண்டுஇருக்கிறேன். நான்  யுதிஷ்டிரன் இல்லையே  உடனே பட்டென்று எடுத்துரைக்க!!

யுதிஷ்டிரனின் அறிவை மெச்சி  தர்மதேவதை அருளால்  இறந்த  பாண்டவர்கள் நாலுபேரும் உயிர்பெற்று, நல்ல தண்ணீர்  வயிறு முட்ட  குடித்து ஐந்து பாண்டவர்களும்   நல்லபடியாக  திரும்பினார்கள்.

No comments:

Post a Comment