Saturday, July 2, 2022

ARUPATHTHU MOOVAR

 #அறுபத்து_மூவர்  நங்கநல்லூர்  JK  SIVAN

அமரநீதி நாயனார்

கனமான, எடையுள்ள  கோவணம்...!

பழையாறை  சுற்றிலும் வளமை மிகுந்த தோப்பும் துறவுமாக, பச்சை பசேலென்று செழிப்பான மலர் கொடிகள் நிறைந்த தோட்டங்கள்  சூழ்ந்த ஒரு சின்ன அமைதியான கிராமம்.  சோழர் களின் ஒரு கால தலைநகரம்.  ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு என்ற பல பெயர்கள்  இதற்குண்டு.   முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்ற பெயரோடு இருந்து  இராஜேந்திர சோழன் காலத்தில் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்று  பேர் மாறியது.   

பழையாறை சோமேசர் கோயில் , வடகரை பழையாறை - வடதளி   ஒரு யாற்றின்  பாடல்   பெற்ற ஸ்தலம்.. காவிரி நதி தென் கரை   சிவாலயங்களில்  பழையாறை சிவன் கோவில்  24வது. 

 அக்கறை  வடதளியில் சிவனின் பெயர்  தர்ம புரீசுவரராகவும்,  அம்பாள்  விமலநாயகி. பழையாறையில்  சிவன் பெயர்  சோமேசர், அம்பாள்  சோமகலாம்பிகை.  

தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் - ஆவூர் சாலையில் உள்ள முழையூர் கிராமம் வழியாக சென்றால் பழையாறை - வடதளியை  அடையலாம். கும்பகோணம்  ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. . 
அம்மா  விநதை அடிமையாக இருந்தபோது அவளை மீட்க  கருடன் இந்திரனிடம் சென்று அமிர்த கலசம் தூக்கிக்கொண்டு  பழையாறை பக்கம் பறந்தான்.  அங்கே  வழி மடக்கி அசுரர்கள் அவனோடு மோதினர்.  அப்போது  அமிர்தகுடத்திலிருந்து  மூன்று துளி அம்ரிதம் கீழே சிந்தி  அவை  சிவலிங்கம், அம்பாள், புஷ்கரணி யாக உருவெடுத்தன.   கருடன்  அசுரர் களை விரட்டி விட்டு  கீழே இறங்கி புஷ்கரணியில்  ஸ்னானம் செயது சிவனையும் அம்பாளையும் வணங்கினான்.  அந்த புஷ்கரணிக்கு   ஜடாயு தீர்த்தம் என்று பெயர். முடி கொண்டான்  ஆருக்கு பழைய கால பெயர் பழைய ஆறு, பழையாறு , கிராமம் பழையாறை.  வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி . 

இந்த ஊரில் பிறந்தவர்  அறுபத்து மூவரில் ஒருவரான அமர்நீதி நாயனார். தங்க, வைர, பட்டு, பருத்தி வியாபாரி. வைசியர்.  தனவந்தர்.  குறைந்த விலையில் பொருள்கள் வாங்கி உள்ளூரில் நல்ல விலைக்கு விற்றதில்  நிறைய  பானைகளில்  பணம் சேர்ந்தது. அக்காலத்தில் பானைகள் தான்  கோட்ரேஜ் பீரோ. அமர்நீதி  நேர்மையானவர் , நியாயமான விலையில் விற்பவர் .ஆகவே  நல்ல பெயர் அவருக்கு.  சிவனடி யார்களை தேடிச்சென்று அழைப்பார், அவர்களுக்கு உபசாரங்கள் செயது, உணவளித்து, உடைகள் அதாவது கோவணம், மேல் துண்டு எல்லாம் பணத்தோடு சேர்த்து  தானம் செய்பவர். 

கோவிலில்  பண்டிகைகள்,விழாக்களில் பங்கேற்பார்.வாய் ஓயாமல் ஓம் நமச்சிவாய எனும்  பஞ்சாக்ஷரத்தை சொல்லிக்கொண்டேயிருப்பார். 

பழையாறை கிராமத்தை விட்டு   அருகே  நல்லூரில்  சிவாலயம் அருகே  சென்று வாழ்ந்தார். சிவபக்தர்கள் வந்து தங்க ஒரு சத்திரம், மடம் அமைத்தார். வரும் அத்தனை சிவனடியார் களுக்கும் கோவண தானம் பண்ணுவார்.  கல்யாண சுந்தரேஸ்வரனுக்கு  அமரநீதி நாயனாரை ரொம்ப பிடித்தது.

ஒருநாள்  ஒரு சிறு பிரம்மச்சாரி அமர் நீதியின்  மடத்
துக்கு வந்தான். ஜடாமுடி, விபூதி ருட்ராக்ஷ மாலை.
கையில் ஒரு தண்டம். அதன் ஒரு முனையில் சிறு விபூதிபை முடிந்து வைத்திருந்தது. ரெண்டு கோவ ணங்கள் அதில் சுற்றி இருந்தது. அதுவே அவன் ஆஸ்தி.  கண்கள் ஞானத்தின் பிரதிபலிப்பாக  ஜொலித்தது.   அமர்நீதி அந்த  ப்ரம்மச்சாரியை  மரியாதையோடு
  வரவேற்றுஉபசரித்தார், வணங்கினார். பரம சந்தோஷம் அவருக்கு.

''ஐயா, நீங்கள் தான் அமரநீதியா?  கேள்விப்பட்டேன்.  மிகவும் நல்ல காரியம் செய்கிறீர்கள், சிறந்த தர்மம். உண்மையான சிவபக்தர் நீங்கள். நானே உங்களைத் தேடி தான் இந்த ஊருக்கு வந்தேன் ''

''சிவனடியாரே நான் பாக்கியவான். வாருங்கள் உணவருந்தி வாழ்த்துங்கள்''.

''எதிரே இருக்கும்  ஏழு சமுத்திரம் எனும் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, நித்ய கர்மாநுஷ் டானம்   பூஜை  முடித்துக் கொண்டு வருகிறேன். மழை தூறுகிறது. இதோ இந்த  என் உலர்ந்த கோவணங்களை மழையில் நனையாமல் காய்ந்த வஸ்த்ரங்களாக வைத்திருங்கள். இந்த கௌபீனம் (கோவணம்) மிகவும் முக்கியமானது எனக்கு. ஆகவே ஜாக்கிரதை.  வந்து வாங்கிக் கொள்கிறேன்''--ப்ரம்மசாரி சிவனடியார் .

சிவனடியாரின்  கௌபீனத்தை  அமர்நீதி  ஜாக்கிரதை யாக  தனது அறையில் வைத்திருந் தாலும் சிவனடியார்  வந்து கேட்கும்போது  கோவணங்களைக்  காணோம்.!

''சுவாமி நான் வேறு தருகிறேன்''
''எனது கௌபீனம் தான் வேண்டும். கோடானு கோடி பணம் கொடுத்தாலும் வேண்டாம். இப்போதே என் கௌபீனம் எனக்கு வேண்டும். கொண்டுவா''

கடைசியாக ஒருவழியாக  சிவனடியார்  ''அமர்நீதி, உனக்காக  நான் விட்டுக்  கொடுக்கிறேன். இதோ என்  இன்னொரு கௌபீனம். இதன்  சரியான எடையாக
 இன்னொரு கௌபீனம்  நீ  கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்''. பிரம்மச்சாரி கௌபீனம் தந்தார்.

 ''சரி சுவாமி ''
தராசு கொண்டுவந்து ஒரு தட்டில் பிரம்மச்சாரி கொடுத்த கௌபீனம், இன்னொன்றில் எவ்வளவு தான் புதிய கௌபீனங்கள் வைத்தாலும், செல்வம், பொன் பொருள்  சகலமும் வைத்தும்  தராசு தட்டு கீழே இறங்க வில்லை.  இவ்வளவு கனமானது, எடை கொண்ட தா
 சிவனடியார் கோவணம்?   எவ்வளவு விலையுர்ந்த
 பொருள் வைத்தும்  சிவனடியார் கோவணத்தை எடைக்கு அது சரியில்லையே....  கல்யாண சுந்தரேஸ் வரர் சோதிக்கிறாரா? 

''என்னப்பா, பரமேஸ்வரா!   அமர்நீதி பிரம்மச்சாரி கால்களில் விழுந்து வணங்குகிறார்.

' குருதேவா, ஒரு கோரிக்கை,  என்னை, என் மனைவி என் குழந்தைகள் எல்லோரையும் கூட அந்த தட்டில் இருக்க அனுமதிக்கவேண்டும். அப்போதாவது ஈடு கட்ட முடிகிறதா என்று பார்க்கவேண்டும். அனுமதியுங்கள்''  என்கிறார் அமரநீதி.

''சரி உன்னிஷ்டம்..''என்கிறார்  சிவனடியார்.

''கல்யாண சுந்தரேஸ்வரா,   நான் இதுவரை செய்த  தான தர்மங்கள் சிவனடியாரிடம் கொண்ட அன்பு, பக்தி, பாசம்  எல்லாம் உண்மையாக இருந்தால், இதோ நான், என் குடும்பமே என் சகல சொத்துக்களோடு இருக்கும் இந்த தராசு தட்டு,  சிவனடியாரின் கோவணம் வைத்த அடுத்த தட்டுக்கு சமமாகட்டும்.''

சிவன் மனது வைத்தான். தட்டுகள்  சமமாயின. இந்த அதிசயத்தை அங்கு கூடியிருந்த  சிவனடியார்கள் கண்டு  சிலையானார்கள்.  அமர்நீதி நாயனாரின் சிவ பக்தி உலகம் அறிய சிவனே செய்த திருவிளையாடல் இது. 

தேவர்கள் விண்ணவர்கள்  பாரிஜாத மலர் மழை பொழிந்தார்கள். ப்ரம்மச்சாரியை எங்கே காணோம்? 

 ரிஷபாரூடராக  பார்வதி பரமேஸ்வரன் அல்லவோ  அங்கே காட்சி தந்தார். 

''அமரநீதி, உன்னுடைய  தூய சிவபக்தி,  சிவனடியார்க்கு  நீ ஆற்றும் தொண்டு எம்மை மகிழ்விக்கிறது. உனது கௌபீன  தானம் சிறந்த தொண்டு. அதை தொடர்ந்து செய்.  தக்க நேரத்தில் நீ என்னை சேர்வாய் ''  -- பரமேஸ்வரன்  அனுக்ரஹித்தார். 

No comments:

Post a Comment