Wednesday, June 29, 2022

SWAMIDESIKAN


 


#சுவாமி_தேசிகன்   - நங்கநல்லூர் J K SIVAN
அடைக்கலப்பத்து  --    பாசுரம்  8

ஒவ்வொரு விடியற்காலையும் தூப்புல் கிராம அக்ராஹாரத்தில் அந்த கணீர்  வெண்கல குரல் கேட்கும். அற்புதமான ஸ்லோகங்களை பக்தி பாவத்தோடு பாடிக்கொண்டு உஞ்சவிருத்தி எடுத்து வரும் அந்த முதியவரை கால் அலம்பி நமஸ்கரிக்க காத்திருப்பார்கள்.  ஏற்கனவே  அங்கிருந்த வைணவர்
கள் முடிவெடுத்தாயிற்று. இன்று ஒரு வித்தியாச பிக்ஷை பண்ணவேண்டும்.  அவரை மகிழ்விக்க வேண்டும் என்று. 
ஆகவே அன்று வழக்கத்தை காட்டிலும்   அநேகர் ஆர்வமாக  சுவாமி தேசிகர் வரவை எதிர்நோக்கி இருந்தனர்.  தூப்புல் கிராமம்  சிறியது. ஒரு சில  தெருக்கள்மட்டுமே  கொண்ட அக்ரஹாரம்.  அன்று ஏன் அநேகர்  என்ற  காரணம்  அவர்களுக்கு தெரியும். வழக்கம் போலவே  
தனது  உஞ்சவிருத்தி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு  ஸ்வாமிதேசிகர்  அந்த தெருவில் நுழைவதற்கு முன்பு கணீரென்று  காஞ்சி  வரதராஜ பெருமாள் மீதான ஸ்லோகம்   இசையோடு  அந்த அக்ரஹாரத்தில் நுழைத்து விட்டது.   ஒவ்வொரு வீட்டு வாசலிலும்  அக்ஷதையோடு  ஆண்களும் பெண்களுமாக  பிக்ஷை இடுவதற்கு நின்று   கொண்டிருந்தார்கள்.அவர்களது அக்ஷதையில் விசேஷமாக இன்று பொன்னாலான அரிசி  தானியங்களும் மணிகளும்  கலந்திருந்தன.  

இந்த காலத்தில்  நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்  ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன்.  தானியம்  விற்பனை செய்யும் வியாபாரிகள்  அரிசி பருப்பு   எடை கூட வேண்டும் என்பதற்காக பொருத்தமான  கற்களையும்  பிளாஸ்டிக் பொருள்களையும் வாங்கி  அந்த அரிசி  பருப்பு தானியங்களோடு கலந்து விற்பனை  செய்கிறார்கள் என்று படிக்கிறோம், யூ ட்யூப் வீடியோ பார்க்கிறோம்.   இதற்கென்றே தானியங்களில் கலக்கும் அதே நிற கற்கள் விற்பவர்களிடம் இருக்கும். நல்லவேளை கலப்படத்தில் கலப்படம் இல்லை.  நியாயமாக கலப்பட கல்  விற்பனை செய்து பணம் சம்பாதித்து வீடு கட்டுகிறார்கள்.

அன்று வழக்கத்தை விட   சீக்கிரமாகவே சுவாமி தேசிகனின் உஞ்சவிருத்தி பாத்திரம்  நிரம்பிவி விட்டதால்  அவர்  வீட்டுக்கு திரும்பினார்.

'' அம்மா கனகவல்லி,  பெருமாள் அனுக்ரஹம் ,   இன்று   சீக்கிரமே திரும்பி விட்டேன்.   இந்தா இதை வைத்து  இன்று பிரசாதம் தயார் செய். வரதனுக்கு  ஆராதனை செய்து பிரசாதம் உண்போம்.''  என்கிறார்  தேசிகன்.

கனகவல்லி  பாத்திரைத்தை வாங்கி பார்த்தவள்  அதிசயித்தாள் .'

'' நாதா, இன்று  என்ன  அக்ஷதையில்  பல பளபளவென்று ஏதேதோ   கலந்திருக்கிறதே''  என்றாள்  மனைவி கனகவல்லி.

தேசிகர்  அக்ஷதை பாத்திரத்தை பார்த்தார்.   இது வரை அவர் அதை பார்க்கவில்லையே.  அதில் அரிசி, தானியங்களோடு   பொன்னும் மணியும் கலந்திருந்ததை கண்டு முகம் வாடியது.  ஒரு குச்சியால்  ''இந்த புழு பூச்சிகளை அப்புறப்படுத்து முதலில் '' என்கிறார்.  ஜன்னல் வழியே  பக்தர்கள்  அடியார்கள் கொடுத்த பொன்னும் பொருளும் வெளியே தூக்கி  எறியப்படுகிறது. இதை   கவனித்துக் கொண்டிருந்த பக்தர்கள் கண்களில் நீர் வழிய அவரை வணங்குகிறார்கள்.
இதனால் அன்று அவர்களது உணவுக்கு தேவையான அரிசியும் குறைந்து விட்டது. அரைப்பட்டினி.
இப்படி வாழ்ந்தவர்கள்  தேசிகர் தம்பதிகள்.   1317ல் அவர்களுக்கு  வரதராஜ பெருமாள்  அனுகிரஹத்தால் பிறந்த மகன் வரதாச்சார்யன்.எப்படிப்பட்ட  அப்பா!  அவரைப் பின்பற்றி வளர்ந்தான் வரதாச்சார்யன்.
அவனுக்கு கருட மந்திரம் உபதேசிக்க  திருவஹீந்திரபுரத்தில் கருடனை நோக்கி தவம் இருக்கிறார். கருடன் வேத ஸ்வரூபி அல்லவா?  பல நாள் விரதம். அங்கே  பெருமாள் சந்நிதிக்கு எதிரே ஒரு சிறு குன்றின் மேல் ஏறி கருட த்யானத்தில் ஆழ்கிறார். கருடன்  நேரில் வந்து காட்சி தந்து,  சுவாமி தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் செய் கிறார்.  

கருடனை வணங்கி நமஸ்கரித்து  பின்னர்  தேசிகன்  கருடன் உபதேசித்த ஹயக்ரீவ மந்த்ர ஜபம் செய்கிறார். தேசிகன்  விருப்பப்படி ''என் நாவை விட்டு நீங்காதே ஹயக்ரீவா''  என்ற வேண்டுகோளை ஏற்ற  ஹயக்ரீவர், தேசிகன்   நுனி நாக்கில் தங்குகிறார்.

''இந்தா  இதை பெற்றுக்கொள். என்னை தினமும் உபாசி '  என்று  ஹயக்ரீவர்  தனது  உருவ  விக்கிரஹத்தை  தேசிகனுக்கு அளிக்கிறார். இன்றும்  அதை தரிசிக்க  நீங்கள் உடனே திருவஹீந்திரபுரம் செல்லவேண்டும்.  தேவநாத சுவாமி ஆலயம் பிரசித்தமானது. பலமுறை சென்று தரிசிக்க எனக்கு பகவான் அனுக்ரஹம் கிடைத்தது என் பாக்யம். 

சென்னைக்கு சற்றே தூரத்தில் கடலூர்  அருகே  இருக்கும்  திருவஹீந்திரபுரம்.  வாய் சுளுக்கிக்கொள்ளுமே என்று பயந்து திருவந்திபுரம்  என்று சுருங்கிய பெயர்.  ஆழ்வார்கள் கொண்டாடும் இந்த க்ஷேத்ரத்தில்   ஹேமாம்புஜவல்லி சமேத தேவநாத பெருமாள் அருள் பாலிக்கிறார்.  தாயாருக்கு செங்கமலவல்லி,  வைகுண்டநாயகி,  அமிர்த வர்ஷிணி   என்றும் திருநாமங்கள்.  

ஆலய  வாசலில்  எதிரே ஒரு சிறு குன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று.    ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய  சோழர்கள் கட்டிய  ஆலயம்.   குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு, பட்டயங்கள் உள்ளன. ஐந்து நிலை  ராஜகோபுரம்.  ஹயக்ரீவர் (குதிரை முக  பெருமாள்) ஆதி சேஷன் (வஹீந்திரன் என்று ஒரு பெயர்) இந்திரனை வழிபட்ட ஸ்தலம் என்பதால்  திருவஹீந்திர புரம்.

தேவநாத பெருமாள் சந்நிதி எதிரே உள்ள   அந்த சிறிய குன்றுக்கு  ஒளஷத கிரி என்று  பெயர். இங்கே கெடிலம் என்ற நதி ஆலயத்தை ஒட்டி,  தெற்கு வடக்காக  ஓடுகிறது.  இது மாதிரி வடக்கு  நோக்கியோடும் நதிகள் உத்தரவாஹினி எனப்படும்.

அடைக்களப்பத்து 8 வைத்து ஸ்லோகம்  அறிவோம்:
திண்மை குறையாமைக்கும், நிறைகைக்கும் தீவினையால்,
உண்மை மறவாமைக்கும், உள மதியில் உகக்கைக்கும்,
தன்மை கழியாமைக்கும், தரிக்கைக்கும், தணிகைக்கும்,
வண்மையுடை அருளாளர், வாசகங்கள் மறவேனே ||8||

எனக்கு உன் மீதுள்ள பற்று, நம்பிக்கை சற்றும் குறையாமல் இருக்க உன்னருள் வேண்டுகிறேன் அத்திகிரிசா. எனக்கு ஞானம் தா. எனது முன் வினை பாபங்கள் உன்னை நான் விடாமல் நினைத்து உன் அருள் பாடுவதை மறக்காமல், தடுக்காமல், செய்யவேண்டும். பரிபூர்ணமாக உன்னை சரணடைகிறேன். எனக்கருளவேண்டும் என்னப்பனே. சதா உன் நினைவில், சம்சார பந்தங்களின் தொடர்பு இன்றி நான் வாழ நீ அருளவேண்டும் கஞ்சி வரதராஜா.

No comments:

Post a Comment