Thursday, June 16, 2022

 


ஏக  வில்வம்  சிவார்ப்பணம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

நமது முன்னோர்கள் நமக்கு  ரெண்டு  பத்ரங்கள் (இலைகளை) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ரெண்டுமே  மிக மிக புனிதமானவை. ஒன்று  சைவத்துக்கு  மற்றொன்று வைணவத்துக்கு.  ரெண்டுமே  மூலிகைகள், வியாதியை  குணப்படுத்துபவை.  இரண்டுமே  தெய்வமாக போற்றி வணங்கப்படுபவை. என்னய்யா இது? ஒரு சாதாரண   இலைக்கா இவ்வளவு உயர்ந்த  மதிப்பு?  ஆமாம், அதன் பெயர் சொன்னால்  கைகூப்பி வணங்கி  ஒப்புக்கொள்வீர்கள்.  ஒன்று வில்வம், மற்றொன்று துளசி. 

வில்வத்தை பற்றி மட்டும் கொஞ்சம் சொல்கிறேன்.
ஏழு ஜென்ம பாவத்தையும் தீர்க்கும்  மருந்து  வில்வம். சிவனை அர்ச்சிக்க  உகந்தது.  பரமேஸ்வரனின்  இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவம்  மூன்று தள வில்வம்.  முக்கியமாக  அநேக  சிவாலயங்களிலும்  ஸ்தல விருக்ஷம். வேத சாஸ்திரங்கள், புராணங்கள்  கூடை கூடையாக  இதன் மஹிமையை விளக்குகிறது. மூன்று தள வில்வம் திரிசூலத்தை அடையாளம் காட்டுகிறது.  எதிர்க்க முடியாத ஆயுதம் சிவனின் திரிசூலம். அதேபோல  வில்வம் தீர்க்காத வியாதியே இல்லை.

பிரளய காலத்தில் வேதங்கள் ஒன்று கூடி  ''பரமேஸ்வரா  நாங்கள் அழியாமல் காக்கவேண்டும்'' என்று வேண்டியபோது,  நீங்கள்  திருவைகாவூர் ( திருகருகாவூர்)  ஸ்தலம் சென்று அங்கே வில்வ மரத்தின் வடிவில்  தவம் செய்யுங்கள் என்று கூறியதாக புராணம் சொல்கிறது.  அந்த ஊருக்கே  வில்வாரண்யம் , வில்வக் காடு என்று பெயர். 
வில்வத்தில் பலவகைகள் உண்டு. மஹா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என்பவை அவை.  அவற்றில் மூன்று தள  வில்வமே  சிவபூஜைக்குகந்தது.  ஐந்து, ஏழு தள  வில்வங்கள் இருக்கின்றன.  

சிவபூஜைக்கு  வில்வம்  சூரியோதயத்துக்கு முன்பே பறித்து வைப்பது வழக்கம்.  கொஞ்சம் ஜலத்தை வில்வத்துக்கு  ப்ரோக்ஷணம் செய்துவிட்டு,  தெளித்து விட்டு, அர்ச்சனை செய்வார்கள்.  மஹா சிவராத்திரி அன்று வில்வத்துக்கு ' டிமாண்ட்'  பற்றி கேட்கவே வேண்டாம். லிங்காஷ்டகம் பாராயணம் பண்ணி வில்வம் அர்ச்சித்தால் போதும். ஏழேழு ஜென்ம பாபம்  தொலையும்.   வில்வ இலை பறித்து வைத்து உலர்ந்த வில்வத்தை  ஆறு மாசம் கழித்து கூட அர்ச்சிக்கலாம்.  வீட்டில்  வில்வமரம் வளர்த்தால் அஸ்வமேத யாகம் பண்ணிய பலன். ஆயிரம் பேருக்கு அன்னதான பலன்,  கங்காஜல ஸ்னான பலன். 108 சிவாலய தரிசன பலன்.  ''ஏக வில்வம் சிவார்ப்பணம்''  என்று சொல்லி அர்ச்சிப்பது  லக்ஷம்  ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சித்ததற்கு இணை.   வில்வ மர காற்றை ஸ்வாசித்தால் உடலுக்கு அதீத சக்தி.

வில்வ மரத்தில் இலை பறிக்கும்  போது   வில்வமரத்தின் அனுமதி பெற்று பறிக்க ஒரு குட்டி ஸ்லோகம் சொல்வது வழக்கம். 

“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”

''முக்தி அருள்வதும், மோக்ஷ உருவமாகவும், த்ரிமூர்த்திகளின்  வடிவமாகவும்   அளவற்ற ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாக்ஷம் அருளுவதுமான வில்வ மரமே  உன்னை மனப்பூர்வமாக  நமஸ்கரிக்கிறேன்.   ஹே  வில்வ விருக்ஷமே ,  நீ  இறப்பு பிறப்பு  வியாதிக்கு  ஒளஷதமல்லவா.?  உன்னிடமிருந்து உன்னுடைய 
கிளைகளிலிருந்து த்ரிதளமான  மூன்று இதழ் வில்வ இலைகளை  பரமேஸ்வரன் பூஜைக்காக கிள்ளி பறிக்கிறேன்.  உன்  அனுகிரஹத்தோடு  பறிக்கிறேன்'' .

வில்வாஷ்டகம் ஒருநாள் எழுதுகிறேன்.


No comments:

Post a Comment