Monday, June 27, 2022

ARUT PUNAL

 அருட்புனல்  -  நங்கநல்லூர் J K  SIVAN 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 

7.    பிராமணி வந்தாள்.

எப்போது யார் யாரோ சந்திக்கவேண்டும் என்பது பகவானின் சங்கல்பம்.  குரு தானாகவே முன் பின் தெரியாத சிஷ்யனை தேடி வருவார். சிஷ்யன் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காத குரு தானாகவே தக்க நேரத்தில் வருவார். அது போல் தான் பகவானும் எப்போது பக்தனுக்கு அருள் புரியவேண்டும் என்று சங்கல்பிப்பவன். நமது விருப்பத்தின் படி நடக்கும் காரியம் இல்லை இது.

காற்று  வீசுகின்றபோது செய்தியும் பரவலாக நாலு இடம் போய் தான் சேரும்.   இதைத்தான் நாம்  ''காற்று வாக்கிலே  காதில் விழுந்த சேதி'' என்கிறோம்.

தக்ஷிணேஸ்வரத்தில் நடப்பது காற்று  வாக்கில் அதே போல் கமார்புகூர் வரை  சென்று ராம கிருஷ்ணரின் தாய் காதில்  சேதியாக விழுந்து அவளைத்  துன்புறுத்தியது.  ''ஐயோ,   என்ன ஆச்சு என் கதாதரனுக்கு  ஏன் இந்த மன நிலை, உடல் நிலை , சித்த ஸ்வாதீனம் ஏன்  இழந்து விட்டான்  என்கிறார்கள்?''என்று அந்த  தாய் தவித்தாள். ஆள் மேல் ஆள் விட்டு  ''உடனே ஊருக்கு வா''    என்று ராமகிருஷ்ணரை வரவழைத்து விட்டாள் .

ஊருக்கு வந்த  பின்னாலும்  ராமகிருஷ்ணருக்கு பழைய நண்பர்களோடு ஓட்டுதல் உறவாடல் இல்லை. தனித்தே  இருந்தார். தெய்வீக  ஜுரமும் அதன் சூடும்  அவரை விடவில்லை.

கமார்புகூர் மயான பூமிக்கு செல்வார்.   அங்கே அமைதியாக பாடம் புகட்டும்  மனித வாழ்வின் அநித்தியம், அதன் எண்ணங்களின் நிராசை, ஏமாற்றங்கள் ஆகியவை மனதை நிரப்பியது. இதை எல்லாம் கீழே அழுத்தி விட்டு  பவதாரிணி அவர் மனதை முழுதுமாக  ஆக்ரமித்தாள் .

அம்மாவின் கைச்  சாப்பாடுராமகிருஷ்ணரின்  உடம்பை கொஞ்சம் சரிப்படுத்தியது. பழையபடி  உடல் உருவில் காட்சியளித்தார். ''இருபத்தி மூன்று வயதாகிவிட்டதே. இந்த பயலுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் சரியாகி   விடுவான். இவனை உலக வாழ்க்கையின் ருசிகளை அனுபவிக்க விட்டு மனைவி என்பவள் அவனை மீட்டு விடுவாள் '' என்று தாய் நினைத்தாள் .

மெதுவாக அவனிடம் பேச்சு கொடுத்தபோது    ''நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்'' என்கிறார் ராமகிருஷ்ணர்.

ஐந்து வயது சாரதாமணி அடுத்த  ஊரான ஜெயராம் பட்டி என்ற ஊரில் கண்டு  பிடிக்கப் பட்டாள் . நல்ல பெண்.  அந்தச்   சிறுவயதிலேயே தெய்வ பக்தி கொண்டவள்.சரியான ஜோடி என்று தீர்மானிக்கப்பட்டு ராமகிருஷ்ணருக்கும் சாரதாமணிக்கும் கல்யாணம் நடந்தது. அந்த காலத்தில் குழந்தை திருமணங்கள் நடந்து பெண் ருதுவானதும் கணவன் வீட்டுக்கு வருவாள்.    மற்ற சடங்குகள் அதற்குப் பிறகு நடந்து கணவன் மனைவியாக இல்லறம் நடப்பது தான் வழக்கம்.  அப்போது சாரதா  சட்டம்  அமுலுக்கு வரவில்லை. கணவன் உடலோடு மனைவியை உயிரோடு எரிக்கும் சதி  எனும்  கொடிய  பழக்கம்  வழக்கத்தில் இருந்தது.  

எங்கள் குடும்பத்தில் சக கமனம்  எனப்படும்  ஸதி எனும்  உடன்கட்டை ஏறுதல் இருந்திருக் கிறது.  சில எள்ளுப்பாட்டிகள்  உயிரோடு வாழும்போதே  கணவனோடு  மறைந்தவர்களா, மறைக்கப்பட்டவர்களா  என்பது தெரியவில்லை. அவர்களை சுமங்கலிப்பெண்டுகள் என்ற சடங்கில் மரியாதையோடு வணங்குகிறோம்.

சாரதாமணியின் வாழ்க்கையில் நடந்த  குழந்தைத்  திருமணம்  '' இல் வாழ்க்கை '' என்பது இல்லாததாக,  ஒரு கனவாகி விட்டது.

ஒன்றரை வருஷகாலம் கமார்புகூரில்  தங்கியபின் ராமகிருஷ்ணர் தக்ஷிணேஸ்வரம் திரும்பினார். பவதாரிணி ஆலயத்தை மிதித்ததும் பழையபடி அல்ல, இன்னும் கூடுதலாகவே  அவருக்கு சமாதி அனுபவங்கள், அழுகை, அன்னையை நாடல், தேடல், திகுதிகுவென  உள்ளே அக்னி,  தூக்கமின்மை, எல்லாமே அதிகரித்துவிட்டது.

என் கையில் ஒன்றில் ஒரு ரூபா நாணயம், மற்றொன்றில்  ஒரு கைப்பிடி மண்  -- இது ரெண்டுமே பிரயோஜனம் இல்லாதது. இதனால் என் அன்னையை காணமுடியாது என்று கங்கையில் ரெண்டையும் வீசி எறிவார்.  ஒரு ரூபாய் அப்போது மிக பெரிய பணம். இப்போதைய நமது ஒரு ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்று கூட சொல்லிப் பார்க்கலாம். சுத்தமான வெள்ளைக்கார  ராஜா  ராணி தலை போட்ட கனமான வெள்ளி நாணயம்  ஆயிற்றே.

மனதில் சுத்தமாக பெருக்கி மெழுகி துடைத்தது போல் பக்தி ஒன்றே இருந்தது. பார்க்கும் பெண்கள் யாவருமே பவதாரிணியாக எப்படி தோற்றமளிக்கிறார்கள் என்று வியந்தார்?! நமக்கு அந்த பக்குவம்  பல ஜென்மங்களுக்கு அப்புறமும் வருமா என்பது சந்தேகம் தான்.

ராமகிருஷ்ணருக்கு நீண்ட கூந்தல்.    பெண்கள் மாதிரி. அதால் ஒரு தாழ்ந்த குலத்தவன் வீட்டை பெருக்கினார் என்று சரித்திரம் கூறுகிறது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அவர் மனதில் ஜாதி வித்யாஸம், ஏழை பணக்காரன், ஆண்  பெண்  வேறுபாடு எதுவுமே இல்லை.

மரத்தடியில் சிலை போல் அமர்வார். பறவைகள் தலையில் வந்து உட்காரும். அலகால் ஏதாவது தானியம் கிடைக்கிறதா என்று வயல் போல் நினைத்து தேடும். பாம்புகள் சாவதானமாக உடலில் ஊரும். பகல் இரவு இரண்டும் ஒன்றேயாகி பவதாரிணி நினைப்பு ஒன்றே  கண் முன்னே படமாக ஓடியது.  

ஒரு தாடிக்கார  சந்நியாசி  ராமகிருஷ்ணன் உடலில் இருந்து வெளிப்பட்டார்.  ''ஆகா,   இந்த சந்நியாசி தானே முன்பு  ஒருமுறை கூட,  என்னுடலில் இருந்து வெளிப்பட்டு ஒரு பாபியை சூலத்தால் கொன்றவர்.  அவரே இப்போதும்   உடலில் இருந்து வெளி வந்து ''அடே ,மனதை அவள் மேல் நிலை நிறுத்து'' என்று கட்டளையிடுகிறார்.   அடிக்கடி வருவார், தூர தேசங்களுக்கு சென்று அங்குள்ள சேதிகள்  சொல்வார்.

''தியானத்தில் மூழ்கினால் உன் மனதே உனக்கு குருவாகி வழி நடத்தும் '' என்று பிற்காலத்தில்  ராமகிருஷ்ணர்   சொன்னது இதை   நினைவில்  வைத்து தான்.

1861ல்  ராணி ராஸமணி காலமானாள். மதுர்பாபு முழுப்பொறுப்பேற்றார். ராமகிருஷ்ணருக்கு சகல வசதிகளும் செயது தந்தார். மனதில் நினைத்ததை நடத்தி வைத்தார்.

காலம் சென்றது. கிழக்கு வங்காளத்திலிருந்து தக்ஷிணேஸ்வரத்துக்கு  ஒரு பிராமண சன்யா சினி ஒருநாள் வந்தாள்.  ஐம்பதுக்கு மேல் வயது இருக்கும். உடலை சீராக  . காவி யுடை தரித்த வள்.  ரெண்டு மாற்று துணிகள், சில புத்தகங்கள் ஜோல்னா பையில். இது தான் இந்த உலகில் அவளது மொத்த சொத்து.

அந்த பெண்மணி  தாந்த்ரீக சக்தி மிக்கவள். முகத்தில் ஒரு தனி தெய்வீக களை.  யாராயிருந்  தாலும்  அவளைக் கண்டதும்  வணங்க வைத்தது. வைஷ்ணவ சம்பிரதாய வழிபாட்டுமுறைகள் தெரிந்தவள். ஒருவேளை பவதாரிணி தக்க நேரத்தில் அவளை ராமக்ருஷ்ணரிடம் அனுப்பி னாளோ?  ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் ஒரு மாறுதல்  உண்டாயிற்று அந்த  சன்யாசி னியைக் கண்டதிலிருந்து.  

'தாயே  வாருங்கள், உங்களை பார்த்தாலே  என்  அன்னை  என் எதிரில் வந்தது போல் தோன்றுகிறது என உபசரித்து வணங்கினார்  ராமகிருஷ்ணர்.  என் மனம் சதா சர்வ காலமும் நீ எங்கே இருக்கிறாய் என் முன்னே வா, பேசு,   உன்னோடு என்னை அழைத்துச்  செல் என்று தேவி பவதாரிணியை நாடுகிறது.  

''அம்மா  நீங்களே சொல்லுங்கள் நான் பைத்தியமாகி விட்டேனா?'' ஏன்  என்னை எல்லோரும்  பைத்தியம் என்கிறார்கள்?''

''மகனே, உலகில் எல்லோருமே பைத்தியங்கள் தானப்பா. பணத்தைத்  தேடி, பெண்ணையும் பொன்னையும்  தேடி, வசதிகளைத்  தேடி, பேர் புகழ் தேடி, சொத்து சுதந்திரங்களை தேடி ராவும் பகலும்  பேயாக அலையும் பைத்தியங்கள். நீ கடவுளை நாடும் பைத்தியம். உனக்கு வேதங்கள்  சொல்லும் மஹா பாவம் (BHAVAM ) சித்தியாகிறது. இப்படிப்பட்ட மனோ நிலையில் தான் ராதை  யிருந்தாள் . சைதன்ய மஹா பிரபுவும் இருந்தார் ''  என்றாள்  பிராம்மணி.  பிராம்மணி  என்று தான் அவளை எல்லோரும் அழைத்தார்கள்.

பிராம்மணி ஸ்ரீ ராமகிருஷ்ணரை தனது குழந்தையாக கருதினாள். அவரும் அவளை பவ தாரிணி தாயாக  நேசித்தார்.  அவருடைய நாம சங்கீர்த்தன  கீர்த்தனைகளை ரசித்தாள். ராமகிருஷ்ணரால் உலகம் ஆன்மீக அலைகளை பெற்று உய்யப் போகிறது என்று உணர்ந்தாள்.

No comments:

Post a Comment