Thursday, May 19, 2022

 #ரமண_ மஹரிஷி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 



சூரி நாகம்மாவின் லெட்டர். 


சூரி  நாகம்மா காலத்தில் பெண்களை  வயதுக்கு வந்த பிறகு  படிக்க வைக்கவில்லை.  ஏதோ தெலுங்கில் எழுத படிக்க தெரிந்ததோடு  பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டது.  எல்லா வீடுகளும் கூட்டு குடும்பங்களாக குறைந்தது எட்டிலிருந்து பதினைந்து டிக்கெட்டுகள்  இருந்தன.  ஆகவே  சமையலுக்கும் வீட்டு வேலை செய்வதற்கும் ஆள்  தேவைப்பட்டபோது  பெண் குழந்தைகள்  பயன் பட்டனர். இளம் வயதிலேயே  கல்யாணம்.  மருத்துவ வசதி பெருகாத காலத்தில் இளம் விதவைகளாக  எத்தனையோ பெண்கள் பரிதாபமாக சமுதாயத்தில்  திக்கற்றவர்களானார்கள்.  நாகம்மா  வீட்டிலிருந்த  பழைய  ஆன்மீக புத்தகங்களை படித்து அறிவைப் பெருக்கிக் கொண்டாள்.  தானே  எழுதவும் ஆசை  வந்து அதை அபிவிருத்தி செய்து கொண்டாள். 
வீட்டைத் துறந்து ரமணாஸ்ரமம் வந்தபின் நாகம்மா முழுதும் ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டாள் . ரமணர் வாக்கு புரிந்தது.  ஒவ்வொருநாளும்  ரமண மஹரிஷியின் அருகே இருந்து அவர் உபதேசங்களால்  ஞானம் பெற்றாள் .   ரமணர் மற்றவர்களோடு பேசுவதை கூர்ந்து கவனித்து  அவற்றை தெலுங்கில் எழுதி வைத்தாள் அதுவே இன்று உலகம் பூரா நம் போன்றோர்களுக்கு  அறிவு புகட்டுகிறது.
தினமும்  கடிதங்களாக  தனது சகோதரனுக்கு தெலுங்கில் அன்றாட  ஆஸ்ரம நிகழ்வுகளை எழுதி அனுப்பினாள் . 273  கடிதங்கள். அவை  பல மொழிகளில் புத்தகமாக வந்தன.
1945  நவம்பர்  22 அன்று ஒரு கடிதத்தில் தெலுங்கு அம்மா என்ன எழுதினாள்  என்பதன் சாராம்சத்தை பார்ப்போம்;
நேற்று யாரோ ஒரு வங்காள  காவி உடை சன்யாசி வந்தார்.  ஹ்ருஷீகேஸானந்த் என்று பெயராம்.  பகவான் பக்கத்தில் காலை  8.30மணிக்கு உட்கார்ந்தவர்  11 மணி வரை நகரவில்லை.  என்னென்னவோ  ஆன்மீக விஷயங்களில்  சந்தேங்கங்களைக்   கேட்டுக்கொண்டே இருந்தார்.  அடாடா  பகவான் அவருக்கு  எப்படி தேனொழுக பதில் சொன்னார் தெரியுமா?  கங்கா ப்ரவாஹம் போல் விடாது தொடர்ந்தது.  நான் எப்படி அதெல்லாவற்றையும்  எழுத முடியும்?  அம்ருதத்தை  பக்தி ரசத்தோடு குடித்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு தான்.   அம்ருத ருசியை பேப்பரில் எழுத முடியுமா?
பகவான் அவருக்கு தனக்கு மதுரையில் மரண அனுபவம் ஏற்பட்டதை பற்றி சொன்னார். அப்போது அவர் முகத்தில் ஜொலித்த  ஆன்மீக ஒளியை என்னால் எழுத முடியவில்லை.  காதார கேட்டேன்.இன்னொரு சமாச்சாரம். நான்  சற்று தூரத்தில்  அந்த  சந்நியாசிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டிருந் தேன். காதில் சரியாக எல்லாமே  விழவில்லை. 
பகவான்  சொன்ன ஒன்று நன்றாக  கேட்டேன்:  
''மரண அனுபவம் பெற்றபோது எல்லா புலன்களும் கட்டையாடக மரத்துப் போய்விட்டது. ஆத்மா மட்டும் உள்ளே  சக்தியோடு இருந்தது. அதன் உணர்வை தெரிந்து கொண்டேன்.  அப்போது தான்  நான்  என்பது வெறும் உடம்பல்ல. அதையும் தாண்டி உள்ளே நிற்கும் ஆத்மா என்று புரிந்தது.  அது அழிவற்றது. உடல் தான் அழிகிறது. எதனுடனும்  சம்பந்தப்படாமல்   தானாகவே ஒளிர்வது ஆத்மா. உடம்பை  எரித்த பின்னும்  இருப்பது.''
இன்னும் நிறைய  சொன்னார்  மகரிஷி. எனக்கு சரியாக காதில் விழவில்லை, புரியவும் இல்லையே . எப்படி எழுதுவது? ஆகவே இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment