Monday, May 16, 2022


 தாய்வழி வம்சம்..   நங்கநல்லூர்  J K SIVAN 



தாத்தாவின் கதை..


நான் எனக்கென்றே  சில விருப்பு வெறுப்பு களைக்  கொண்டவனாக இருப்பதில் தவறில்லை. பழைய  விஷயங்கள் பிடிக்கும். அவற்றில் ஒரு தனி ருசி இருப்பதை ரசிப்பவன்.  எந்த புது விஷயமும் அடுத்த கணத்தில் பழைய விஷயமாகத்  தான் போகும். இது காலத்தின் சுழற்சிக்கு உட்பட்டது அல்லவா? 

என் தாய்வழித் தாத்தா  ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதிகள் பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன். அற்புதமான மனிதர். அவர் செய்த ஒரு மகத்தான  காரியம் அவர் வம்சாவழியை முடிந்தவரை நினைவில் நிறுத்தி குறிப்புகள் எழுதி வைத்தது தான். அவற்றை அவ்வப்போது ஒழிந்த நேரம் படிப்பேன். அதில் ஒரு சுவாரஸ்ய விஷயம் இன்று சொல்கிறேன்.
என் தாத்தாவின் தாத்தா  ரெட்டைப்  பல்லவி தோடி சீதாராம பாகவதர். பல  சமஸ்தானங்களின்  ஆதரவு பெற்று சிறப்புடன் வாழ்ந்த  சங்கீத வித்வான்.  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  தியாகராஜ ஸ்வாமிகளை அடிக்கடி சந்தித்து பேசுபவர். இருவருக்கும்  பரஸ்பர  மரியாதையும் நல்ல நட்பும் உண்டு.  தியாகராஜ ஸ்வாமிகள் வசித்த திருவையாறு கிராமத்தை தாண்டி தான் தனது ஊர்  கார்குடிக்கு  சீதாராம பாகவதர் அடிக்கடி செல்வார். தோடி ராகத்தை உடையார் பாளையம் ஜமீன்தார் யுவரங்க பூபதியிடம் அடகு வைத்து தஞ்சாவூர் மஹாராஜாவால்  கடன் தீர்க்கப்பட்டு மீட்கப்பட்ட விஷயம் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
தோடி சீதாராமய்யரின் மகள் அம்மணி அம்மாள்,  என் தாத்தா வசிஷ்ட பாரதியைப் பெற்றவள். நான்காவது மகன்.  அம்மணிக்கு ஒரு சகோதரன் வெங்கட்ராமன், 16 வயதில் கர்நாடக சங்கீதத்தில் நிபுணன். பல வித்வான்கள் அவனைப் போற்றி புகழ்ந்தார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?  ரெட்டைப்பல்லவிக்கு பிறந்த குட்டிப் பல்லவி என்று பட்டம் சூட்டினார்கள். அதுமுதல் எங்கும்  ''பல்லவி வெங்கட்ராமன்'' என்ற பெயர் நிலைத்தது. மைசூர் மஹாராஜா சமஸ்தானத்தில் பாடி  ராஜாவுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டதால் தோடா விருதுகள் வாங்கினார். மற்றவித்வான்களுக்கு  அசூயை  ஏற்படாதா?  விதியின் வசமாக  வெங்கட்ராமனுக்கு க்ஷயரோகம் வியாதி வந்து முற்றி 20 வயதுக்குள் மரணமடைந்தார். அப்போது  க்ஷய றோகத்துக்கு  (tuberculosis TB )மருத்துவ வசதிகள் கிடையாது.  ஒரே பிள்ளையை பிரம்மச்சாரியாக  20 வயதிலேயே  இழந்த  தாய் ஜானகிக்கு  வாழ்க்கை வெறுத்து விட்டது. 12  வருஷம் விடாமல்  ராமநாமம் கோடிக்கணக்கில்  சொல்லிக்கொண்டு வாழ்ந்த காலத்தில் ஒருநாள் கனவில் வெங்கட்ராமன் தோன்றி  தான் மீண்டும்  பிறப்பதாகவும், சகோதரி அம்மணியின் வயிற்றில் பிறப்பேன் என்று வாக்களித்தார்.  ஜானகியின் பெண் அம்மணிக்கு  நாலாவது பிரசவம் சமயம் அது. வெங்கட்ராமன் என் தாத்தா வசிஷ்ட பாரதிகளாக  பிறந்தார்  என்று நம்பினார்கள். என் மாமா ஒருவருக்கு வெங்கட்ராமன் என்று பெயர். 
அம்மணி குழந்தை பிறந்ததும் தனது தாய் ஜானகி அம்மாள் காலில் போட்டு ''அம்மா  நீ கனவில் கண்ட வெங்கட்ராமன் இது தான் இனி இவன் உன் பிள்ளை '' என்று வணங்கினாள் .  சங்கீதம் தமிழ் இலக்கியம் புராணங்களில் சிறந்த ராம பக்தராக என் தாத்தா வாழ்ந்தார். ஜானகி வசிஷ்டபாரதி என்கிற பேரனை பெற்ற பிள்ளைபோல் வளர்த்தாள்.  என் தாத்தா அவளுக்கு பெற்ற பிள்ளையாக  வளர்ந்து அவள் அவரது 20வது வயதில் மறைந்தபின்  தனது கடைசி காலம் வரை அவளுக்கு தர்ப்பணம் விடாமல் செயது வந்ததும் புரட்டாசி கிருஷ்ணபக்ஷம் த்ரிதியை அன்று ஸ்ராத்தமும் செய்து வந்தார் என்பது  அவரது  பாட்டியிடம் அவர் வைத்திருந்த அபிமானம். 
தாத்தாவின் தகப்பனார்  வைத்யநாதய்யர்  பீதாம்பர வித்தையில் சிறந்தவர். எத்தனையோ  ஊர்களுக்கு சமஸ்தானங்களுக்கு சென்று பீதாம்பர வித்தை நிகழ்ச்சிகள் நடத்தி பீதாம்பரய்யர் என்ற பெயர் பெற்றவர்.இவரைப்பற்றியும் முன்னமே எழுதி இருக்கிறேன்.

No comments:

Post a Comment