Tuesday, April 26, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN


''ஏனய்யா  இப்படி படுத்து விட்டீர்? என்ன காரணம்?''

GOOGLE   கூகிள்  என்பது ஒரு மஹா விஷய சாகரம் ,  அதில் ஆழமாக மூழ்காமல்  கணுக்கால் அளவிலேயே ஏராளமான அசாத்திய சமாசாரங்கள் அகப்படுகிறதே,  அப்படியானால்  ஆழமாக மூழ்குபவருக்கு கிடைக்கும்  செல்வத்துக்கு கணக்கே இல்லை.  அதில் ஒண்ணே ஒண்ணை  மட்டும் தான் இன்று பதிவிடுகிறேன்.  

எங்கள் தாய் வழி முன்னோர்கள்  ராம பக்தர்கள். அருணாசல கவிராயரின்  ராமநாடக கீர்த்தனைகளை   இதர புராணங்களோடு  சேர்த்து  சங்கீத உபன்யாசம்  காலக்ஷேபம் செய்து  புரவலர்களால்  ஆதரிக்கப்பட்டு பெரும் புகழ் எட்டி ஜீவித்த  குடும்பங்கள்.  பாரதி என்ற பெயர் கொண்டவர்கள். அவர்களில் கடைசியாக   எனது தாத்தா பிரம்மஸ்ரீ வசிஷ்ட பாரதியார் கண் பார்வை குறைந்தவராக இருந்தும் எண்ணற்ற  பக்தி பிரசங்கங்கள் புரிந்தவர், கம்ப ராமாயணத்திலும் மற்ற இலக்கியங்களிலும் கரை கண்டவர்.  மஹா பெரியவா அவரது  பிரசங்கங்களைக்  கேட்டு  மடத்துக்கு அழைத்து  நேரில் பிரசங்கம் செய்ய வைத்து  ''புராண சாகரம்'' என்ற விருது அளித்து கௌரவித்தார். அந்த அற்புத விருதின்  வாசகம்:

''ஸ்ரீமத் சத்வ குண  ஸம்பன்னரான  புதுக்கோட்டை நகர் நிவாஸியான  வஸிஷ்ட  பாரதி அவர்களுக்கு  ஸர்வாபீஷ்டங்களும்  ஸித்திக்குமாறு   நாராயணஸ்ம்ருதி:

 ''முத்து பவழம் முதலியன கடலை நாடி இருப்பது போல் புராணங்களும் அவற்றின் கருத்துக்களும் தங்களிடம் நிறைந்திருப்பதை அறிந்து மிகவும் சந்தோஷித்து  நாம்  தங்களை ''புராண ஸாகரம்'' விருதை அளித்து அனுகிரஹிக்கிறோம்'' ---   நாராயணஸ்ம்ருதி''

இது நிற்க, மஹா பெரியவாளுடைய சங்கீத ஞானம்  எல்லோரும் அறிந்தது  தான். அவர் வீணை வாசிக்கவும் அறிந்தவர்.
இனி அருணாசல கவிராயரின்  பிரபல  ராமநாடக கீர்த்தனைகளில் ஒன்றை எப்படி மஹா பெரியவா ரசித்து  விளக்கினார் என்று அறிவோம். இது தான் நான் யாரோ ஒரு அற்புத மனிதர்  எழுதியதை  கூகிளில் படித்து ரசித்து என் வழியில் உங்களுக்கு  கொஞ்சம் சேர்த்து அளிக்கிறேன்.  

கவிராயர்  ராமாவதாரம்  எல்லாம் முடிந்து அரங்கனாக  ஸ்ரீ ரங்கத்தில்  மஹா விஷ்ணு  ஓய்வெடுப்பதைப் பார்த்து விட்டு  நூறு கேள்வி கேட்கிறார்.  காடு மேடு என்று எங்கெங்கோ அலைந்து எண்ணற்ற ராக்ஷஸர்களை துஷ்டர்களை நிக்ரஹம்  செய்து விட்டு ஸிஷ்ட  பரிபாலனம் செய்தவர்  ஏன் இப்போது  படுத்துவிட்டீர்? என்ன ஆயிற்று உங்க ளுக்கு?  என்று   அரங்கன் படுத்ததற்கு காரணம் கேட்கிறார்.  அந்த பாடல் முழுமையாக கேழே தருகிறேன்.

இராகம் : மோகனம்
தாளம் : ஆதி
பல்லவி
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா-ஸ்ரீரெங்கநாதரே - நீர்
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா

அனுபல்லவி
ஆம்பல் பூத்தசய பருவத மடுவிலே
அவதரித்த இரண்டாற்று நடுவிலே

சரணம்
கோசிகன் சொல் குறித்ததற்கோ-அரக்கி
குலையில் அம்பு தெரித்ததற்கோ
ஈசன்வில்லை முறித்ததற்கோ-பரசு
ராமன் உரம் பறித்ததற்கோ

மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்
வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத்
துறை கடந்த இளைப்போ

மீசுராம் சித்ரகூடச் சிகரக்கல்
மிசை கிடந்த களைப்போ
காசினிமேல் மாரீசன் ஓடிய
கதி தொடர்ந்த இளைப்போ

ஓடிக் களைத்தோ தேவியைத்
தேடி இளைத்தோ-மரங்கள் ஏழும்
துளைத்தோ-இலங்கை என்றும்
வளைத்தோ-கடலைக் கட்டிக்
காவல் மாநகரை இடித்த வருத்தமோ
ராவணாதிகளை அடித்த வருத்தமோ

இறைவனை துதிப்பதில்  இது ஒரு வழி.  ஸம்ஸ்க்ரிதத்தில் நிந்தா ஸ்துதி எனப்படும்.   நையாண்டியாக கேள்விகள் கேட்டு துளைப்பது.  இறைவனுக்கும் இது பிடிக்கும்.

ரொம்ப பெரிய  பதிவு ஆக இது வரும் என்பதால்  ஒரே ஒரு நையாண்டி பாடல், நிந்தா  ஸ்துதிக்கு உதாரணமாக சொல்லி நிறுத்திவிட்டு பின் தொடர்கிறேன்.  காளமேகப்புலவரின்  இப்படிப்பட்ட  பாடல்கள் பிரபலமானவை. ஒன்றே ஒன்று உதாரணத்துக்கு:

"சிவபெருமானை   சிதம்பரம் நடராஜனாக  அலங்காரம் அர்ச்சனை ஷோடசோபசாரம்  நைவேத்யம், யானை மேல் ஊர்வலம் பூம் பூம் என்று  எக்காளம்  எனும் வாத்தியம், பேரிகை முழக்கத்தோடு  கண்டு களித்த காளமேகத்துக்கு  குத்தலாக  ஒரு  பாடல் பாட தோன்றியது.  

 ''நச்சரவம் பூண்ட தில்லை நாதரே, தேவரீர்
பிச்சை எடுத்து உண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்கடல்போல் தான் முழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்?

சிவனே,  நீர்  அணிவதோ யாரும்  தொடாத  ஒரு ஆபரணம். கொடிய விஷம்  காக்கும் பாம்பு. தலையில் கழுத்தில் கையில் அது தான்.  அடுத்த வேளை  சாப்பாட்டுக்கு நீர்  கையில் கபாலம் எனும் மண்டையோட்டை எடுத்துக்கொண்டு  பிச்சை எடுப்பவர்  உமக்கு எதற்கய்யா, இந்த  எக்காள வாத்யம், யானை வாகனம், ஹோ என்று கடலலை  போல் சப்திக்கும் பேரிகைகள்  உமக்கு தில்லை எனும் சாம்ராஜ்யம்? எண்ணற்ற பக்தர்கள் சமூகம்?

தொடரும் 

No comments:

Post a Comment