Thursday, April 21, 2022

 


மாணிக்க வாசகர் -  நங்கநல்லூர்  J  K  SIVAN 

தேடிய  குரு  கிடைத்தார்.

மணிவாசகர்  திருப்பெருந்துறை சென்றது, குதிரை வாங்க சென்றது ராஜா அரிமர்த்தன பாண்டியனுக்காக என்பது ஒரு காரணம்.  உண்மையில்  அது தடுத்தாட்கொள்ளும்  பரமேஸ்வரன் சங்கல்பம்.  மணிவாசகரை  திருப்பெருந்துறையில் அடைக்கலமாகச் செய்ய  அவர் தேடிய குருவை அங்கே  காட்டினார்.  அந்த குரு வேறு யாரும் இல்லை,  திருப்பெருந்துறை ஈசன்  ஆத்மநாதனே, ஒரு விருத்தாப்பிய பிராமணனாக  உருக்கொண்டு குருந்த மரத்தடியில்  அமர்ந்திருந்தார். அவரைக் கண்டதும் மாணிக்க வாசகர் மனதில் தான் வெகுநாளாக தேடிய குரு இவர் தான் என்று பட்டுவிட்டது. அவரிடம்  சரணடைந்து என்னை சிஷ்யனாக்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினார். 

''குருநாதா, பரம்பொருளே, என்னை ஆட்கொண்ட தெய்வமே, என் நெஞ்சம் உருக்கி என்னை சிவமாக்கிய செல்வமே, எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே என்று மணிவாசகர் தனது ஆபரணங்கள் செல்வங்கள் அனைத்தையும் அந்த பிராமண குரு பாதத்தில் சமர்ப்பித்தார். துறந்தவர் துறவியானார். த்யானத்தில் ஆழ்ந்தார். மனம் லேசானது. கண்களில் பரவசம். மணி ப்ரவாளமாக சிவ ஸ்துதி பெருக்கெடுத்தது.    பாடினார். அருமை தீந்தமிழில் சிவனை துதித்து பாடல்கள் மணி மணியாக வெளிவந்து அவற்றை மாலையாக தொடுத்து  சிவனுக்கு சூட்டினார்.

''அப்பனே, வாதவூரா, நீ மணி வாசகனடா. இங்கேயே இரு '' என்று ஆத்மநாதர் அன்போடு அழைத்தார். நமக்கு மணிவாசகர் கிடைத்தார். கண் மூடி குருவை கீழே விழுந்து வணங்கிய மணிவாசகர் கண் திறந்து எழுந்தபோது ப்ராமணரைக் காணவில்லை. கதறினார். பக்தி பரவசமாக தன்னை மறந்த நிலையில் தேடல் தொடர்ந்தது.

ராஜாவின் ஆட்கள் மெதுவாக அவர் குதிரை தேடி வந்ததை நினைவூட்ட ''நீங்கள் திரும்பி செல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்'' என்று ஏதோ ஒரு இயந்திரம் கூறுவதைப் போல் பதிலளித்தார் மணிவாசகர். 

அந்த சிறு பழைய கோவிலில் ஆத்மநாதரை வணங்கிய மணிவாசகர் தான் கொண்டுவந்த பொற்காசுகளை செல்வங்களை செலவழித்து சிதிலமாகி இருந்த அந்த  பழைய  சிறிய  ஆலயத்தை  புதிதாக ஜீரணோத்தாரணம் செய்தார்.   திருப்பெருந்துறையில் சிவன் கோவில் உருவானது. அதி அற்புத  சிலைகள், சிற்பங்கள் நிரம்பிய கலைக் களஞ்சியமாக  இன்றும் காட்சியளிக்கிறது. உலகிலேயே எங்கும் இல்லாத அதிசயமாக  ஆத்மநாதரை  ஆவுடையாராக மட்டுமே  காட்டி  ஆவுடையார் கோவில் என்று பெயர் பெற்று நம்மை மகிழ்வித்து பக்தி பெருகச் செய்கிறது.




No comments:

Post a Comment