Wednesday, March 30, 2022

SURDAS

 

ஸூர்தாஸ்  - நங்கநல்லூர்  J K  SIVAN 

அன்பும் எளிமையும் நீ தானடா.

ஒரு காரியம் செய்வோம். உலகத்தில் இருக்கிற  எளிமை ,அன்பு, அத்தனையையும் சேகரித்து,   இது போல  வேறு எங்கும் எதுவும்  கிடையாது என்று சொல்லும்படி ஒரு  உருவம் அமைத்தால், அதைப் பார்த்து விட்டு எல்லோரும் எப்படி  உரக்க கோஷமிட்டு அடையாளம் கண்டு கொள்வார்கள்  தெரியுமா?  ''ஹரே கிருஷ்ணா,  ஹரே கிருஷ்ணா ''என்று தான்.  உலகத்தில் அதிகம் பேசப்படும் ஒரே பெயர்  ''கிருஷ்ணன் கிருஷ்ணன் கிருஷ்ணன்'' என்ற   ஒன்றே தான். இதில் என்ன சந்தேகம்?


இதை எப்படி நம்பலாம்?  அதற்கு ஒரு குட்டி சம்பவம் சொல்லட்டுமா?

கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் போனான். பாண்டவர்களுக்காக தூது சென்றான். அவர்களுக்கு ஞாயம் கிடைக்க, கௌரவர்களுக்கு நியாயம் எடுத்து சொல்ல, யுத்தம் வேண்டாம் சமாதானமாக இருவருமே வாழுங்கள் என்று எடுத்துச் சொல்ல... ஆனால் யார் கேட்டார்கள்?
அவன்  ஹஸ்தினாபுரம் வந்தபோது  ''சரி, ஏதோ கிருஷ்ணன் இங்கே வந்துவிட்டான், என்ன செய்வது?. நமக்கும் வேண்டியவன். ஆகவே அவனுக்கு தங்க ஒரு நல்ல வசதியான அரண்மனை. நல்ல அருமையான சுவையான சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தான் துரியோதனன்.
கிருஷ்ணன் தேர் ஹஸ்தினாபுரம்  வந்தவுடன்  ''வரணும். வரணும். எங்கள் ராஜோபசாரத்தை ஏற்று இந்த கௌரவர்களை கௌரவிக்கவேண்டும்'' என்று துரியோதனன்  நீலித்தனமாக உபசரித்தான்.

''இல்லை துரியோதனா , நான் விதுரன் குடிசைக்கு செல்கிறேன்'' என்று நிராகரித்து கிருஷ்ணன் விதுரன் ஆஸ்ரமத்துக்குச் சென்று அங்கே அவன் அளித்த  காய் கனி கிழங்குகளை, வேர்களை உண்டான். எளிமையான சாத்வீக உணவே போதும் என முடிவெடுத்தான். அவனுக்கு உணவு பெரிதல்ல. யார் எப்படி அதை அளிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். ஒரு சிறு இலை, ஒரு சொட்டு ஜலம், ஏதாவது காய்ந்த கனியாக இருந்தாலும் அன்பாக பக்தன் எதை கொடுத்தாலும் திருப்தி அடைபவன் அல்லவா?

இந்த  எளிமை, பக்தர்களிடம் பூரண அன்பு,  கிருஷ்ணனின்  இந்த  பிறவியில் மட்டும் அல்ல, அதற்கு முந்தைய ராமன் பிறவியிலும்  உண்டு.  ராமன் தண்டகாரண்யவனத்தில் சபரி எனும் முதிய பக்தையை சந்திக்கிறான். தேவர்கள் முனிவர்கள்  தங்களிடம் ''வருவானா என்று காத்திருக்கும்படியான  ராமன் என்னிடம் வந்திருக்கிறான் அவனுக்கு என்று நல்ல பழங்களை தரவேண்டும். எப்படி நல்ல சுவையான பழம் என்று கண்டுபிடிப்பது. பார்ப்பதற்கு அழகாக கவரும்படி இருக்கும்,  ஆனால்  கடித்தால் புளிக்கும். ஆகவே நாம் ஒரு ஓரத்தில் துளியூண்டு கடித்து சுவையானதாக இருந்தால் அதை ராமனுக்கு என்று தனியாக எடுத்து வைப்போம் என்று ஒவ்வொரு பழமாக கடித்து சுவைத்து ராமனுக்கு அளித்தாள் சபரி. அது தான் ராமனுக்கு பிடித்தது. அவன் எச்சில் என்று பார்க்கவில்லை. சபரி மேல் கோபம் கொள்ளவில்லை. மோக்ஷம் கொடுத்தான். அத்தனை எளிமை அன்பு....போதுமா"?

கிருஷ்ணனுடைய  எளிமைக்கும் அன்புக்கும் இன்னொரு உதாரணமும் தரட்டுமா?
அவன் இப்போது மாடு மேய்க்கும் பிருந்தாவன கோபர்களில் ஒருவன் அல்ல. மதுராபுரி மன்னன். துவாரகை அரசன். பல ராஜ்ஜியங்கள் அவனுடைய ஆளுமைக்கு அடக்கம். மஹா வீரன். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். மஹா சக்தி  வாய்ந்தவன்.

அவன் என்ன செய்தான்?. மஹா பாரத யுத்தத்தில் அவனுடைய வ்ருஷ்ணிகுல யாதவ குல நாரா யணி சைன்யங்களை அப்படியே கௌரவர்களுக்கு கொடுத்துவிட்டு வெறும் கையனாக பாண்ட வர்களுக்கு உதவ வந்தான். அர்ஜுனனுக்கு தெரியும். கிருஷ்ணன் மட்டுமே போதும். அவனுடைய  நாராயணி  சைன்ய உதவி வேண்டாம் என்று. ஆகவே கிருஷ்ணா,  நீ எனக்கு கொஞ்சம் தேர் ஒட்டு அது போதும். நான் உன்னருகே இருந்து கொண்டு உன்னோடு பேசிக் கொண்டு யுத்தம் புரிகிறேன். பார் என் வீரத்தை அப்போது '' என்றான் அர்ஜுனன்.

அவ்வளவு பெரிய மஹாராஜா கிருஷ்ணன், கர்வம் கொள்ளாமல், அகம்பாவம் இன்றி,  எளிமையாக அன்பாக, சாதாரண  ஒரு  தேரோட்டியாக கீழே தேர் தட்டில் அமர்ந்து குதிரை ஓட்டினான்.

இந்த அன்பால் தான் பிரிந்தாவனத்தில்  எண்ணற்ற கோபியர்கள் தங்கள் இதயங்களை அவனிடம் பறிகொடுத்தவர்கள்.

ஸூர்தாஸ் இதை தெரிந்து வைத்திருப்பவர். அதனால் தான் தனக்கும் அவன் அன்பில் பங்கு கேட்கிறார். கெட்டிக்காரர். கண் எதற்கு? துரியோதனன் போல் முட்டாள் தனமாக எதையாவது கேட்பதற்கு தான் அது வேண்டும்..

No comments:

Post a Comment