Monday, March 28, 2022

SAKUNTHALA OLD TAMIL FILM

 





என்னைவிட  வயதான ஒரு படம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 

எண்பது வருஷங்களுக்கு  முந்தி எடுத்த ரொம்ப  பழைய  ஒரு கருப்பு வெளுப்பு படம்   யூட்யூபில் பார்த்தேன்.  எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சகுந்தலையாக,  பிரபல  சங்கீத  வித்வான் GN  பாலசுப்ரமணியம்  துஷ்யந்தனாக  நடித்தது என்பதை விட  தோன்றியது தான் பொருத்தமான வார்த்தை.  ரெண்டு பேருமே  ஒருவருக்கொருவர்   கர்நாடக சங்கீதத்தில் சளைத்தவர்கள் இல்லை. கிட்டத்தட்ட  ரெண்டரை மணிநேரம்  ஒரே பாட்டு மழை.  ஆரம்பத்தில் ''மனமோகனங்க அணங்கே .. என்று ஆரம்பித்து  கடைசியில் அதையே பாடி முடித்த  GNB   குரல் அசாத்தியம்.

நான் பிறந்த சில மாதங்களுக்கு பிறகு MSS  ம்   ஸ்ரீ T சதாசிவமும் சேர்ந்து ராயல் டாக்கீஸ் என்று ஒன்றை நிறுவி எடுத்து,  எல்லிஸ்  ஆர். டங்கன்  டைரக்ட் செய்த படம் அது.  திரைக்கதை வசனத்தை  சதாசிவம்  எழுதினார்  என்று சொல்வதை விட சில பிராமணர்களை  ஆணோ,  பெண்ணோ, வீட்டில் பேசுவதை அப்படியே ரெக்கார்டு செய்து  படமாக்கி விட்டார்கள் என்று தான் தோன்று கிறது.  இப்போது கேட்பதற்கு  கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.   நாம்  யூ ட்யூபில் பார்ப்பது 1976ல்  படமாக்கிய பிரதி.

படம் முழுக்க  யார்  வாயைத் திறந்தாலுமே   பேசமாட்டேன் என்கிறார்கள்.  பாட்டு தான் பாடுகிறார்கள். அப்புறம்  வசனம் எங்கே? மேலே சொன்னபடி  வசனத்துக்கு பாட்டே  தேவலை என்று ஆகிவிட்டது.  .என்னைப்  

பொறுத்தவரையில்  GNB   பார்ப்பதற்கு  பிற்காலத்தில் கம்பீரமாக அழகாக இருப்பாரே, எப்படி இதை படத்தில்  நோயாளியாக?  நெட்டையான  தேகம்.  மேல் வரிசை முன் பல்  ஏன்  துருத்திக்கொண்டு இருப்பது போல்  படத்தில் தெரிகிறது?  G.N.B யை ரசிக ரஞ்சனி சபாவில் பிற்காலத்தில் பார்க்கும்போது அப்படி இல்லையே. அப்புறம் பொய்ப் பல்லோ ? அவர் குரலுக்கு  நான்  லை ரசித்துக் கேட்டிருக்கிறேன். இந்த படத்திலும் அவர் நிறைய பாடுகிறார்.  மனமோகனாங்க  என்ற பாட்டு பிரபலம். அவர் முகத்துக்கும்  மீசைக்கும் சம்மந்தமில்லை. எப்படி  மூன்று மணி நேரம் இதை பார்த்தார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை அந்த காலத்தில் இது  யதார்த்தமான  பேச்சு, பழக்கம், காதல் சேஷ்டைகளோ என்று தோன்றியது. பழைய கால  தாத்தா பாட்டிகள் ''மடி'' யாக  காதல் பண்ணிய காட்சிகள். காமெடி இப்போது நம்மால் ரசிக்க முடியாத அளவில் அப்போது இருந்திருக்கிறது.  காலம் மாறினால் எப்படி  மனோ பாவம் மாறுகிறது என்பதை ''சகுந்தலை'' படம் நிரூபித்தது.  

எம்.எஸ். எஸ். தாமரைக்குளத்தில் காலை விட்டு அசைத்துக் கொண்டு  பாடுவது, எழுந்து  ஒரு 10% டான்ஸ்  ப்ரதக்ஷணமாக ஆடிக்கொண்டு,  பிறகு ,  மலர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு நீளமாக  பாடுவதை  கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வேண்டியிருந்தது.  வயதான MSS  இன்றெல்லாம் பார்க்கும்படியாக  இருந்தாரே  அவரா  ''இப்படி'' என்று சொல்லும்படியாக,  கண் மட்டுமே  அவரை அடையாளம் காட்டியது.  கேட்கும் அளவுக்கு பார்ர்ர்ர்ர்க்க  எனக்கு ரசிக்கவில்லை..... என்ன செய்வது?

No comments:

Post a Comment