Monday, March 7, 2022

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN


ஒரு சிம்ஹாசனாதிபதி கதை  4

நடாதூர் அம்மாள் எனும் வைஷ்ணவ மகானின்  சரித்திரம் இதுவரை மூன்று பகுதிகள் வெளியாகி இன்று நான்காவது பகுதி துவங்குகிறது.

காஞ்சிபுரத்தில் வசித்து வந்த   நடாதூர்  அம்மாளின்   கனவில் ஒரு நாள் இரவில் காஞ்சி   வரதராஜன் தோன்றி  ''அம்மா,  நீ  எனக்கு வசந்தோத்சவத்துக்கு ஒரு மண்டபம் கட்டித்  தருகிறாயா'?  என்று கேட்கிறான். .

குழந்தை கேட்டால் அம்மா  சும்மா இருப்பாளா?  கஷ்ட நஷ்டங்களை எல்லாம்  சமாளித்து  அவரது முயற்சியால் சீக்கிரமே  ஒரு வசந்த மண்டபம் தயாரானது.

ஒருமுறை  அம்மாள்  சுவாமிகள்  தனது சிஷ்யர்களுடன் நடந்து திருப்பதி திருமலை  க்ஷேத்ராடனம் செல்லும்போது  வழியெல்லாம் அவர்களை பக்தர்களும் பொது மக்களும் வணங்கி சேவித்தது தேவையான உதவிகள் செய்தனர். எனினும்  கண்டாரவன் என்ற  ஒரு பழங்குடி மக்கள்  தலைவனுக்கு  தனது எல்லைக்குள்  இவர்கள் நுழைவது விருப்பமில்லை. அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க  எண்ணம் கொண்டான். தனது மாந்திரீக சக்தியால்  அனைத்து சிஷ்யர்களையும்  மயக்கமடையச்  செய்தான். அம்மாள்  இதை அறிந்து வருந்தினார்.  வரதராஜா  நீ தான்  எங்களை காக்கவேண்டும் என்று  கண் மூடி த்யானித்து  சுதர்சன மந்த்ரத்தை  உச்சரித்தார். தான் இயற்றிய  எதிபுங்கவஸ்தோத்ரத்தை  உச்சாடனம் செய்தார்.  மாந்த்ரிக கட்டு  உடைந்து  சிஷ்யர்கள்  நினைவு பெற்றார்கள்.  இதை தொடர்ந்து  கண்டாரவனுக்கு  அம்மாள் சுவாமிகளுக்கும்  ஒரு  வாதம்  நடந்தது.  தோற்ற  கண்டாரவன் அம்மாள் சுவாமிகளிடம் சரணடைந்தான்.  அம்மாள் சுவாமிகள் அவனை  அன்போடு அணைத்து  ஆசிர்வதித்து பஞ்சசம்ஸ்காரம்  செய்வித்து ஸ்ரீ வைஷ்ணவனாக மாற்றினார். அவன் உதவிய  நிதியை உபயோகித்து  அந்த ஊரை லதா அக்ரஹாரம் என்ற  ஒரு  அழகிய கிராமமாக  உருவாக்கினார் .

அம்மாள்  சுவாமிகள் சிஷ்யர்களோடு நடந்து  ஒரு வழியாக  திருச்சானூர்  அடைந்தபோது சூரிய  வெப்பக் கதிர்கள்  அம்மாள் சுவாமிகளை களைப்புறச் செய்தன. ஒரு வீட்டின்  திண்ணை யில்  அமர்ந்து களைப்பாறினார்கள்.   பசி வாட்டியது.  எங்கிருந்தோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  அங்கே  வந்தார் ஒரு  பெரிய  வெள்ளி  பாத்திரத்தில்  அனைவருக்கும் சேர்த்து  ததியோன்னம் (தயிர்சாதம்)  வழிய வழிய  கொண்டு வந்தார்.  இது  ஸ்ரீநிவாசருடைய  நியமனம்  என்று அளித்தார்.  பிரசாதம் அனைவருக்கும்  விநியோகமானது.  அவர்கள் உண்டு  பசியாறியதும் சற்று நேரத்தில் அந்த   ஸ்ரீ வைஷ்ணவரையும்  காணோம்,  அவர் கொண்டுவந்த   வெள்ளி  பாத்திரமும்  மறைந்தது.    இது என்ன  ஆச்சர்யம் என்று  வியந்த  நடாதூர் அம்மாள்  ஞானி அல்லவா? அவருக்கு விஷயம்  புரிந்து விட்டது.  திடீர் என்று தோன்றி  அன்னம் அளித்த அந்த வைஷ்ணவர்  திருமலை  வேங்கடேசன் தான் என்று  தெரிந்துவிட்டது. 

அதே  நேரம்  திருமலை ஸ்ரீனிவாசன் ஆலயத்தில்  ஒரு குழப்பம் நேர்ந்தது.  பெருமாளுக்கு முன்   வைத்திருந்த  பெரிய  வெள்ளி பாத்திரம் நிரம்பிய  ததியோன்னம்   நைவேத்யத்தை  எங்கே    காணோம்  என்று  அங்கும் மிங்கும்  ஓடி  தேடிக்   கொண்டிருந்தார்கள்.  அப்போது அசரீரியாக  வெங்கடேச பெருமாளே  '' கவலை வேண்டாம்.  நானே  என் பக்தர் நடாதூர் அம்மாளுக்கும்  அவரது சிஷ்யர்களுக்கும்  பசிக்கு  உணவாக  அதை அளித்துவிட்டேன். அவர்கள் வந்து கொண்டிருக்கி றார்கள்.   தக்க உபசாரத்தோடு அழைக்கவும்''  என்று கட்டளையிட்டார்.  ஆலய அர்ச்சகரும் மற்றவர்களும்  ஓடி  அம்மாள் சுவாமிகள் எங்கு இருக்கிறார் என்று தேடிக்  கொண்டு  ஓடி  வந்துகொண்டிருந்தார்கள்.

''பகவானே,  ஏழுமலை  வெங்கடேசா,  நீயா  எங்களுக்கு  நேரே வந்து  உன் கையாலேயே  பிரசாதம் தந்து எங்கள் பசி  யாற்றியவன் என்று  மனமுருக  அம்மாள் சுவாமிகள் வேண்டினார்.   இதற்குள்  கோவில் சிப்பந்திகள்  காலியாக இருந்த   வெள்ளி  பாத்திரத்தை  ஆலயத்திலேயே கண்டனர் .  எல்லோருக்கும்  என்ன  ஆச்சர்யம் இது  என்று  திகைப்பு  வியப்பு  பக்தி பரவசம். 

வேங்கடேச பெருமாள்  உத்தரவுப்படியே  கோவில் அதிகாரிகள் விரைந்து சென்று  நடாதூர்  அம்மாள் சுவாமிகளையும்  அவர் சிஷ்யர்களையும்  சந்தித்து   ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். வேங்கடேசனுக்கு மங்களாசாசனம் செய்தார் அம்மாள் சுவாமிகள்
பிறகு எல்லோரும்   மனம் குளிர  ஏழுமலை வாசன்  தரிசனம் முடிந்து  காஞ்சி திரும்பினார்கள்.

நடாதூர் அம்மாள்  காஞ்சி திரும்பியபோது  அவருடைய சகோதரி மகன் வேங்கடநாதன் ஐந்து வயது குழந்தை. வேங்கட நாதன் பார்ப்பதற்கு  அழகாக இருப்பான்.  
எல்லோருக்கும் தெரிந்த  பிரபலமான ஒரு சம்பவம் சொல்கிறேன்;

நடாதூர் அம்மாள்  ஸ்ரீ பாஷ்யத்தில்  விஷ்ணு புராண மகிமையை  பிரசங்கம் செய்து கொண்டிருந் தார். அதை இயற்றிய  ஆசிரியர்  பராசரரைப் பற்றி  ஸ்லாகித்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.  ''பாடயி பராசரசதம் '' என்ற இடம் அவர்  உபன்ன்யாசம் செய்து கொண்டிருந்தது. 
அப்போது  அப்புள்ளாரும்  வேங்கட நாதனும்  அவர் எதிரே வந்து  நமஸ்கரித்தார்கள். அதி உன்னதமான ஸ்ரீ பாஷ்யத்தை  பிரசங்கம் செய்து கொண்டிருந்த  நடாதூர் அம்மாளின்   பார்வை  எதிரே வந்து அமர்ந்த   சிறுவன் வேங்கடநாதன் மீது  பதிந்தது. வேங்கட நாதன் பார்ப்பதற்கு  அழகாக இருப்பான்  என்று முன்பே சொல்லி இருக்கிறேனே.

அவன் உன்னிப்பாக  ஸ்ரீ பாஷ்ய விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தது  நடாதூர் அம்மாளுக்கு ஆச்சர்யம்  அளித்தது.  இவ்வளவு சின்ன குழந்தைக்கு  என்ன  ஆர்வம் ! செக்கச் சிவந்த உடல், நெற்றியிலே  ஸ்ரீ சூர்ணம். தலையில் அழகிய அளவான  சிறு  குடுமி..அதில் அழகாக ஒரு   ராக் கொடி  (சிகையில் சூடும் ஆபரணம்)..தெய்வீக களை.  வேங்கடனாதனுடைய  பிரம்ம தேஜஸ்  காந்த சக்தியென  அவரை கவர்ந்ததால்  பிரசங்கத்தை நிறுத்தி விட்டு  அந்த குழந்தைப் பையனை அழைத்தார். உச்சி முகர்ந்து ஆசி அளித்தார்.  
''இந்த தெய்வீக குழந்தை யார்?'' என அப் புள்ளாரிடம்  கேட்டார்.
''என் சகோதரி திருமலை  யாத்ரை சென்றபோது பிறந்த குழந்தை இவன். அவள் கனவில்  திருமலை வெங்கடேச பெருமாளின்  ஆலய  பெரிய  கண்டாமணியை  அவள்  விழுங்குவது போலவும் அதுவே  குழந்தையாக பிறப்பது போலவும்  கனவும் கண்டாள். ஆகவே இவனுக்கு வேங்கடநாதன் என்று நாமகரணம்''.
''ஆஹா   இப்போது தான் இந்த பாலகன் இவ்வளவு தேஜசுடன் இருக்கும்  காரணம் புரிகிறது'' என்கிறார்  அம்மாள் சுவாமிகள். .
அதற்கப்பறம் அவரால்  ஸ்ரீ பாஷ்யம்  பிரசங்கம் தொடர முடியவில்லை.
''அடடா, மறந்து போய்  விட்டதே.  கடைசியாக  என்ன  சொல்லிக்கொண்டிருந்தேன் , எங்கு நிறுத்தி னேன்?  ஞாபகம் இல்லையே?'' என  யோசித்தார் நடாதூர்  அம்மாள் ஸ்வாமிகள். 
அப்போது தான் அந்த ஆச்சர்யம் நடந்தது.   சிறு பையன் வேங்கட நாதன்  தானாகவே  அவர் கடைசியாக உபன்யாசத்தில் சொல்லி நிறுத்திய  ஸ்லோகத்தை அப்படியே   திருப்பி சொன்னான்.   
''பாடய  பராசரசதம்''  வேங்கடநாதன்  மழலை மொழியில்  கணீரென்று  வெளிவந்தது.
''பகவானே, என்னே  உன் அருள்!''  
நடாதூர்  அம்மாள்  சுவாமிகள்  அதிசயித்து  மகிழ்கிறார். ''இவன் ஒரு அவதாரம்.. இவனால் வைஷ்ணவ சித்தாந்தம்  பரிமளிக்கப் போகிறது. இவன்  வேதாந்தத்தை நிலை நாட்டப் போகிறான்.  எனக்கு  வயதாகிவிட்டது.  இனி  நீயே  இந்த பிள்ளையின் குருவாகி அவனை  ஜாக்ரதையாக போஷித்து   ஸ்ரீ பாஷ்யம்  கற்பிக்கவேண்டும்''   என்று  அப்புள்ளாரிடம்  பொறுப்பை அளிக்கிறார். வேங்கட நாதன்  பிற்காலத்தில்  ஸ்ரீமத்  வேதாந்த தேசிகரானது நாம் எல்லோரும் அறிந்த  அற்புத  சரித்திரம்.
நடாதூர் அம்மாள்  தன்னை   எந்த ஸ்லோகத்தால்  வாழ்த்தினாரோ  அந்த ச்லோகத்தையே  தனது ''சங்கல்ப சூர்யோதயம்''  என்ற நூலில் சுவாமி தேசிகர் குறிப்பிடுகிறார்.  அம்மாள்  சுவாமிகளின் அனுக்ரஹத்தாலேயே  வேங்கடநாதன் வேதாந்த தேசிகனானான் என்பதை  தன்னுடைய  நூல்களான,  ''அதிகாரண  சரவளி, தத்வ முக்த கலாபம், நியாய சித்தாஞ்ஜனம், தத்வதிகா'' ஆகியவற்றில்     ஸதாபிக்கிறார்.  



No comments:

Post a Comment