Friday, March 11, 2022

AN OLD BOOK

 


 ஓரணா  புஸ்தகம்  பேசியது:    நங்கநல்லூர்  J K   SIVAN 


கு. கண்ணையா என்ற  வேலூர் காரருக்கு   நூறு வருஷங்களுக்கு முன்பு  ஒரு புத்தகம் எழுத தோன்றியதால், வேதங்களை ஆராய்ந்து அது என்ன சொல்கிறது என்று தமிழில் சொல்லவேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது.  எழுதியதை புத்தகமாக்கினார்.  வேலூர் நன்னெறி நூற்கழகம் அதை ஓரணா புஸ்தகமாக்கிவிட்டது.  

படித்துப்  பார்த்தேன். அற்புதமாக இருக்கிறது.   வேதங்கள் மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை. வேதகால ரிஷிகள் அவற்றை உணர்த்து பொருளுரைத்தார்கள்.  இப்படித்தான் நமது சனாதன தர்மம்  *ஹிந்து மதம்''  என்று அடையாளம் பெற்றது. இதற்கு ஒருவர்  மூல காரணம் அல்ல. பலர். மற்ற மதங்களில் யாரவது ஒரு வர தான் அதை தோற்றுவித்தவராக இருப்பார்.  நாம் அப்படியல்ல. 

 உலகத்தில் எல்லோரும் அமைதி, ஆனந்தம் பெரும் வழியை வேதங்கள் சொன்னாலும் இன்றும் கூட, இன்னும் கூட,  நாம் அதை தெரிந்து கொள்ளவில்லை.  

ஒவ்வொரு மனிதனும் எதன் மேல் ஆசைப்படுகிறான்?.  கொள்ளுப்பேரன் வரும் வரை இருந்தாலும் இன்னும் அதிக காலம் வாழ ஆசை தான்.   ''ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும்'' ... அந்தக்  காலத்தில் முக்கால்வாசி மக்கள் நூறு வயது தாண்டியவர்கள்.  இப்போது அது பெரிய சாதனை.   செல்வம் , உலக வசதிகள், எவ்வளவு இருந்தாலும்  இன்னும் இன்னும்  இன்னும் வேண்டும்.... என்ற  வெறி,  பேராசை, நிறைவேறாத ஏமாற்றத் தால் வரும் துன்பத்தை தான் கொடுக்கிறது.

தற்கால விஞ்ஞானிகள்  கொஞ்சம் கண்டுபிடித்ததற்கு முன்பேயே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் நமது ரிஷிகள் யோகத்தால், தியானத்தால்  பஞ்ச பூதங்களின்  சக்தியை, அவற்றால் உருவாகும் மனித இனத்தின்  பெருமையை உணர்ந்து போற்றி  இயற்கையை  தெய்வமாக வழிபட்டவர்கள்.  

சோஷியலிசம் என்ற  சமதர்மத்தை ரஷ்யா  கண்டுபிடிக்கவில்லை. ரிஷிகள் தான் உணர்ந்தவர்கள்.  வேதம் சமதர்மத்தை பற்றி கொள்ளை கொள்ளையாக  ஸ்லோகங்களில் சொல்கிறது.

மோக்ஷம் பெறுவது என்றால்  இறந்தவுடன்  எங்கோ மேலே பறந்து போய் ஒரு இடத்தில் சௌகர்யமாக உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது அல்ல.  எல்லா விருப்பங்களும் நிறைவேறிவிட்டது என்ற மன திருப்தி, போதும் போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்ற  நிறைவு,  அன்பு  ஒன்றே  ஹ்ருதயத்தில்  ரொம்பி, சதா ஆனந்தத்தில் திளைப்பது.    அதை இங்கு கூட  பெறமுடியும். இறைவனோடு ஒன்று சேர்வது. இல்லறத்திலேயே  எல்லோரிடமும் அனுப்பு செலுத்தி பலமடங்கு அன்பை அவர்களிடமிருந்து பெற்று,   இருப்பதை கொடுத்து  தனக்கென வாழாத  நம்  முன்னோர்   ஆனந்தம் எய்தியவர்கள் . பெறுவதை விட கொடுப்பது தான்  மனதுக்கு  எப்போதும்  ஆனந்தம் தரும்.

வீடு  பேறு  என்பது மோக்ஷம்.  வீடு என்றால்  இப்போது போல வெறும் கான்க்ரீட் மாடிக்கட்டிடம் இல்லை. இந்தியாவில் பல இடங்களில்  அந்தக்கால  வெள்ளைக்காரன் கட்டி வாழ்ந்த   பங்களாவை பார்த்திருப்பீர்கள்,  இயற்கை சூழ்ந்தது.  மரங்கள் செடிகள், கொடிகள்  புல் ,  பச்சை பசேல் என்று, நீரோடை கூடிய  விசாலமான ஆனந்த நிலையம்.  

மனிதன் கடனாளி தான்.  அவனுக்கு என்று எது சொந்தம்?  எல்லாம் இயற்கையிடமிருந்து பெற்றது தான்.  ஆகவே  எவன் கடனை ஒழுங்காக காலம் தாழ்த்தாமல் திருப்பிக் கொடுக்கிறானோ அவனுக்கு தான் மதிப்பு,  சுகம்,  ஆனந்தம் எல்லாம். நாம் நம்மால் இயன்றதை பெற்றோருக்கு, ஆசானுக்கு, பகவானுக்கு, மீதி  தான தர்மமாக  பிறருக்கு வழங்கவேண்டும் என்கிறது வேதம். அப்படி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். 
  கொடுக்க கொடுக்க தான் செல்வம்   நீரூற்று போல் பெருகும்.  அவர்கள் நூறு  வயது வாழ்ந்த ரஹஸ்யம் இது தான்..  மாரடைப்பு  அகால  மரணம் அப்புறம் தான் நம் காலத்து சமாச்சாரம்.  

அப்போது  பெற்றோர்  ஆசிரியர்  பெரியோரிடம்  மரியாதை பய பக்தி இருந்தது.  கூட்டுக்குடும்பமாக  வித்தியாசமின்றி ஒற்றுமை பாசத்தோடு வாழ்ந்தார்கள்.  இப்போது போல் அம்மா அப்பாவை  பங்கு போட்டுக் கொள்ளவில்லை, அனாதை இல்லத்தில் தள்ளவில்லை.அவர்களை சுமையாக நினைக்கவில்லை.

அப்போதெல்லாம்  பௌத்த சமண மதம் இங்கே வேரூன்றாததன் காரணம்,  நம் முன்னோர்கள் அஹிம்சை, அன்பு, ஒற்றுமை  பக்தி, தியாக மனப்பான்மை ஆகியவற்றை அன்றாட வாழ்வில் கொண்டிருந்தது தான்.  சமூகத்தில்  ஒழுக்கம் நேர்மை நியாயம், கிரமம்  இருந்தது.   இருப்பதை   எல்லோரும்  நிறைவோடு பகிர்ந்து கொண்ட அக்காலத்தில் கொலை, கொள்ளை, திருடு  குற்றங்கள் வெகுவாக இல்லை.   உடல் உள்ளம் இரண்டுமே சுத்தமாக இருந்ததால் நோய் நொடி இல்லை.
 

No comments:

Post a Comment