Saturday, February 5, 2022

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K   SIVAN

111. மஹா பெரியவாளின் அறிவுரை 


காசி  ஹிந்து சர்வகலாசாலை மாணவர்களுக்கு  மஹா பெரியவா  அளித்த  அறிவுரை :

ஒருவன்  ஆத்ம  ஞானம் பெற வேண்டுமானால் முதலில் அவன் தனது ஸ்வதர்மத்தை  பிறழாமல் பின்பற்றவேண்டும்.  இதற்கு  அவனது நித்ய  த்யானம்,  பூஜை, இதெல்லாம் பெரிதும் உதவும்.   ஆத்மாவை அறிவதை  பர  வித்யா என்பார்கள்.  மற்றது  அபர வித்யா.   உங்கள்  சர்வகலா  சாலை  தனது பெயரோடு  நமது சனாதன தர்ம த்தின் அடையாளமாக  ''ஹிந்து'' என்ற வார்த்தையையும்   சேர்த்துக்கொண்டிருப்பது ரொம்ப விசேஷம். அதனால் தான் இந்த கலாசாலையின் புகழ்  உலகெங்கும்  பரவி, அதன்  பெருமை ஞான  ஒளி வீசுகிறது. 

இங்கு கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவனும்,  ஸ்ரீ  மதன் மோஹன்  மாளவியாவின்  அருமை பெருமைகளை  உணர்ந்து  அவரைப்போல்  ஆன்ம ஞானம் உள்ளவர்களாக திகழ்வான்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. அவரது தலைமையில் இயங்கும் இந்த கல்வி ஆலயத்தில்   விஞ்ஞானம் தவிர,  தர்ம  சாஸ்திரம், தத்வ ஞானம்,  நீதி, சிற்ப சாஸ்திரம், வேதாந்தம், ஸ்ம்ருதி எல்லாம் கூட கற்பிக்கப்படுகிறது.   நான் அறிந்து  வியந்தது என்னவென்றால், இங்கே  வானசாஸ்த்ரத்தை ஒரு  வேதாங்கமாக  கற்பிக்கிறார்கள்.  

தர்மத்தின்  பலனை புறக்கண்ணால் காண முடியாது.   வேதமும் ஸ்ம்ருதியும் தான் அவற்றை உணர்த்தி அறிவு வளரமுடியும்.    ஆதி சங்கரர் உபதேசித்தது போல்  ஞானம் என்பதை  வேதங்கள் மூலமோ  அனுபவத்தாலோ தான் பெற முடியும். 

மனித கண்களுக்கும்,  மூளைக்கும்  எளிதில் புலப்படும்    வானசாஸ்த்ர  வளர்ச்சி,  அரசியல், பொருளாதாரம்  ஆகியவையும்  இங்கே  கற்பிக்கப்படுகிறது.  மேலை நாட்டு கல்வி வழி முறை மூலம் அவை போதிக்கப்படுகிறது. இந்த கலாசாலையின் வளர்ச்சிக்கு அதுவும்  பலவிதத்தில் பெரிதும் உதவும்.  மேற்கத்திய  கல்வி முறைக்கும் நமது பாரம்பரிய  கல்வி முறைக்கும்  வித்யாசம் உண்டு, ஒன்றோடொன்று  கலந்து  இணைத்துக்கொண்டு  தடுமாறாமல் இருக்கவேண்டும்.    இரண்டையும் கற்க வேண்டும். இந்த விஷயத்தில் கவனம் தேவை.   புலன்களை ஈர்க்கும் விஷயங்களை நீக்கிவிட வேண்டும்.  நீங்கள்  எல்லோரும்  ஒரு விஷயத்தில் ஜாக்கிரதையாக  செயல்பட வேண்டும்.  மேலை நாட்டாரின்  உடை, ஆடை,  உணவு, பேச்சு  நடத்தை விஷயங்களை  அப்படியே  பின் பற்ற  ஆரம்பித்தால் , கொஞ்சம் கொஞ்சமாக நமது பண்பாட்டையே  அது விழுங்கி விடும். பாரத தேசத்தின் புனிதம் பாழாகிவிடும்.  மேலை நாட்டாரின்  வழி முறையில்  விஞ்ஞானம்  போன்ற வற்றை  பள்ளிகளில்  கற்க  வேண்டாம் என்றால்   அவற்றை  வேறு எப்படி  அறிவது என்று சிந்திக்க வேண்டும்.  நமது பள்ளிகளில்  நமது வழியில் அவற்றை  சரியாக புரிந்து கொள்ள  வகை செய்யவேண்டும்.  

இப்போதே  நான் கவனித்து  கவலைப்படுவது என்ன தெரியுமா?  நமது குழந்தைகளுக்கு  நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுக்கம், கடவுள் பக்தி எல்லாம் முன்பு இருந்தது போல்  இல்லை.  நாளுக்கு நாள்  குறைந்து கொண்டே வருவதற்கும் இந்த  கல்வி முறையில் மாற்றத்தால் தான். 
மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் சிறிது சிறிதாக நமது பண்பாட்டில் கலந்து மாற்றம் தந்து கொண்டு இருப்பது  இதற்கு  ஒரு முக்கிய காரணம்.    அடுத்த தலைமுறைக்கு  அதில் ஒரு  மோகம்  உண்டாகி வருகிறது. 

இவ்வுலகு  அவ்வுலகு  இரண்டிலும்  சுகம்  காண்பதை  தடுக்கும்  சக்தி கொண்டது இந்த மாறுபாடு.
குழந்தைகளுக்கு   சிறுவயதிலிருந்தே, நமது  நாகரீகம், பண்பாடு, பழக்க வழக்கங்களை, தர்மம், சத்யம், ஒழுக்கம்  இதெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியமாகி விட்டது.  நீங்கள் எல்லோரும்  ஒரு முக்கியமான  விஷயத்தை  மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்.  

இந்த  சர்வகலாசாலை   ஆரம்பிக்கப் பட்டபோது, எல்லோருக்கும்  இதன் ஸ்தாபகர்  ஸ்ரீ மதன் மோஹன்  மாளவியா அவர்களின்  தார்மிக வாழ்க்கை,  நேர்மை,  உயர்ந்த கொள்கைகள், சீலம், கடவுள் பக்தி,  ஞானம் , குழந்தைகளின் அவரது எதிர்பார்ப்பு,  எல்லாம்  பெற்றோர்களுக்கும்  நன்றாகத்  தெரியும்.  அவரை முன்னோடியாக,  லக்ஷியமாகக்  கொண்டு  எல்லா மாணவர்களும்   இங்கு கல்வி பெற்று,  வாழ்வில்  முன்னேற வேண்டும் என்று தான்  விரும்பினார்கள்.  மிகச்  சிறந்த  கல்வி,   வாழ்க்கை நெறி,  எல்லாம்  இங்கு  கற்பிக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள். 

 மேல் நாட்டுகாரர்கள்  நமது பண்பாட்டை,   சரித்திரத்தை,  வாழ்க்கை முறையை   ''கிழக்கத்திய  பண்பாடு, கல்வி முறையை  ஓரியண்டல் LEARNING  என்று  பிரித்து  விட்டார்கள்.  இது எல்லோருக்குமே அத்யாவஸ்யம் என்பதால்  எதற்கு கிழக்கு மேற்கு, அது வேறு இது வேறு என்று பிரிக்க வேண்டும்.?

வெளிநாட்டவர்கள்  நமது தேசத்தை  தென்கிழக்கு  ஆசிய நாடு  என்றும்  நமது சாஸ்திர சம்பிர தாயங்களை  கிழக்கத்திய  நெறி முறை என்று பட்டம் சூட்டி விட்டார்கள். அதை அப்படியே  நம் நாட்டவர்களும் ஏற்றுக்கொண்டு அவ்வாறே  நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வது ரொம்ப  ஆச்சர்யம்.  மேல்நாட்டார், எப்போதாவது அவர்களது  கலாச்சாரத்தை,  விஞ்ஞானத்தை,  கல்வி முறையை   மேற்கத்திய  கலாச்சாரம் என்று சொல்லிக்  கொள்வதுண்டா?  நான் ஒரு போதும்  கொள்கைகள் சித்தாந்தங்களில்  வேறுபாட்டை நினைத்து கவலை கொள்ளவில்லை.  அது மாதிரியான தவறான  நோக்கங்கள் இந்த சர்வகலாசாலைக்குள் இடம் பெறக்கூடாது என்பது தான் என் நோக்கம்.

இந்த சர்வகலாசாலையை துவங்கும்போது எண்ணற்ற இடையூறுகளை  எதிர்கொண்டிருக்கிறார்  ஸ்ரீ மாளவியா.  நமது பண்பாட்டின் உயிர்நாடி, ஜீவநாடி,   இது போன்ற கலாசாலைகள்.  இது  மேலை  நாகரிக  பாதிப்பு, ஊடுருவல் இன்றி  ஸ்வதந்திரமாக  செயல் பட வேண்டும்.  மனுநீதி தர்மத்தை விடாமல் பின்பற்றவேண்டும்.  நமது சாஸ்திரங்களை குழந்தைகள் நன்றாக உணர்ந்து கற்கவேண்டும்.   இதற்கு எனது வாழ்த்துக்கள்.  இங்கு கற்கும் மாணவர்கள் அனைவரும்  ஒருமித்து ஆன்மீக சிந்தனைகளோடு  ஒற்றுமையாக  நமது கலாச்சாரத்தோடு கல்வி கற்று  முன்னேற வேண்டும். ஏழ்மை வறுமை நமது தேசத்தை விட்டு நீங்க பாடுபடவேண்டும்.  உலகமே நம்மால் பயன் பெறவேண்டும்.   

அரசியல் முன்னேற்றத்துக்கு அநேக  தலைவர்கள் இருக்கிறார்கள்..  பொது மக்களிடமும்   அரசியல் தலைவர்களிடமும்  நமது ஆன்மீக  கருத்துகள் பற்றி நிறைய  வேற்றுமைகள், வேறுபாடுகள்  இருந்து வருகிறது. அரசியல் முன்னேற்றத்துக்கு  நமது  ஆன்மீக முறைகள், தெய்வ நம்பிக்கை குறுக்கே நிற்பதாக ஒரு  எண்ணம் அவர்கள் மனதில் வலுத்து வருகிறது.  அரசியல் தலைவர்களிடம்  நல்ல ஒழுக்கம், மனசாட்சி, நம்  தொன்று  தொட்ட தார்மீக  பண்பாடு,  தெய்வ நம்பிக்கை எல்லாம் அவசியம் இருக்க வேண்டும்.  இங்கு  உருவாகும்  மாணவர்கள்  உயர்ந்த ரக  கல்வி பெற்று, பண்டிதர்களாக  வெளிவரவேண்டும்.  அவர்களை ராஜரிஷி போன்றவர்களாக நம் நாட்டு முன்னேற் றத்துக்கு  வரவேற்கிறேன்..
 
அறுபது எழுபது வருஷங்களுக்கு  முன்பு  ஒவ்வொரு  சாஸ்திர  பண்டிதரின் வீடும் ஒரு கலாசாலை போன்று  திகழ்ந்தது.  நிறைய  மாணவர்கள்  குருவிடம்  கல்வி கற்றார்கள்.  கல்வி கற்பதற்கு  குருவும் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை.  அவர்களும் குருவுக்கு எந்த வித  பணம் கட்டி,  சம்பளமாக,  FEES  தரவுமில்லை,  குருமார்கள் அதைப் பெறவுமில்லை.  அதை ஒரு   வாழ்க்கை லட்சியமாக, கடமையாக செய்தார்கள்.  குருபக்தி வளர்ந்தது. கல்வியும் சிறப்பாக கற்பிக்கப்பட்டது.  இப்போதுள்ளமாதிரி எல்லோரும் ஒரு இடத்தில் கூடி கல்வி பெறவில்லை.   ஆங்காங்கே  தமது  இருப்பிடத்துக்கு அருகே உள்ள   குருவின் இல்லத்தில் குருகுல வாசம் பெற்று கல்வி பயின்றார்கள்.  அன்றாட உணவுக்கு  அண்டை அசலில்  தினமும்  உஞ்சவிருத்தி எடுத்து  ஜீவித்தார்கள்.  ராஜாக்கள்,  நில சுவான்தார்கள், பிரபுக்கள்  ஆசிரியர்களை, பாடசாலையை, மாணவர்களை  பராமரிக்கும் பொறுப்பை தாமாகவே முன் வந்து ஏற்று உதவினார்கள். இதை ஒரு கடமையாக  அவர்கள் உணர்ந்தார்கள்.  மாணவக்கர்களுக்கு கல்வி அறிவைப் பெற உதவுவது தமது தலையாய கடமை என்று குருமார்கள் உணர்ந்து செயல்பட்டார்கள்.   கல்வி தரவோ பெறவோ  காசு உள்ளே நுழையவில்லை.  

ஆசிரியர்கள், குருமார்கள் அவரவர்களின்  ஊர்களிலேயே வசித்தார்கள்.  ஒவ்வொரு கிராமத் திலேயும்  ஒரு  ஆசிரியர், குரு  வாழ்ந்து  அந்த ஊர் மக்களின்  குழந்தைகள் அவரிடம் கல்வி பயின்றார்கள். 

ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்துக்கும்  ஆரிசியர் கவனத்தோடு  பாடுபட்டார்.  அவரவர்கள் திறமை,  புத்தி கூர்மை  ஒழுக்கம்,  பக்தி,  நற்குணம்,  திறனை  அறிந்து அதற்கேற்ப  அவர்களை  ஊக்குவித்து சமூகத்தில் சிறந்தவர்களாக  அளித்தார்கள்.  மாணவர்களை தமது குழந்தைகளாக  அன்போடும் பாசத்தோடும்  வளர்த்து  சுயநலம் இன்றி  கல்வி போதித்தார்கள்.  மாணவர்களிடம்  அசையாத குருபக்தி இருந்ததற்கு இது தான் காரணம்.  கல்வியோடு  ஒழுக்கம், நல்ல  பண்பாடும் ஒவ்வொருவரிடமும்  வளர்ந்தது.  எந்த கட்டுப்பாடும் இன்றி தமக்கு தெரிந்த  தர்ம ஞாயம் அனைத்தும் ஆசிரியர்கள்  போதிக்கவும்  முடிந்தது.'' 


No comments:

Post a Comment