Monday, February 14, 2022

ORU ARPUDHA GNANI

 


மஹான்களின்  சரித்திரம்...   -    நங்கநல்லூர்   J K   SIVAN 


சேஷாத்ரி ஸ்வாமிகளைப்  பற்றி சொல்லும்போது மகரிஷி  ரமணரை நினைவு கூறாமல் இருக்க முடியாது.    சேஷாத்ரி ஸ்வாமிகள் சரித்திரத்தை  யாரோ படித்ததை மகரிஷி கேட்டுக் கொண்டிருந்தபோது  அவர் முகத்தில் எத்தனை சந்தோஷம், ஆனந்தம்.  மேலே  மேலே  கேட்க  எவ்வளவு விருப்பம். ஆர்வம்!  தலையை  அசைத்து  கேட்டுக்கொண்டே இருந்தார்.  


ஆஸ்ரமத்தில் இருப்பவர்களை பற்றி ஏதேனும் செய்தி இருந்தால்   சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு ''அதை உரக்க படிச்சு காட்டு''  என்று சொல்லி  அவர்களைக்  கேட்க செய்வார்.  மற்றவர்களை மகிழ்விப்பதில் அத்தனை ஆனந்தம்.


மகரிஷி   எந்த புத்தகத்தை  புரட்டிப் பார்த்தாலும் அதிலுள்ள  விஷயத்தை உடனே  கிரஹித்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவர். எதையும்  உடனே சட்டென்று புரிந்துகொள்பவர். வேகமாக  படிப்பவர். அதில் தவறுகள் இருந்தாலும்  திருத்துவார்.  சுட்டிக்காட்டுவார்.  


 ஒரு புத்தகத்தில்  அச்சிட்ட காகிதத்தில்  முன்  ரெண்டு பக்கத்தில் அதிகமாக மை  சிந்தி    ரெண்டு பக்கங்களிலும் உள்ள  எழுத்துக்களை  படிக்க   முடியாமல் கறை  படிந்திருந்தது.  அதில்  சேஷாத்திரி ஸ்வாமிகளின் விதேஹ  கைவல்யத்தையும்  அதனால்  திருவண்ணாமலை முழுதும்  அடைந்த  துர்பாக்யத்தையும்   விவரமாக   வர்ணித்திருந்தது. ஆனால்  எழுதியிருந்தது என்னவென்றே  படிக்க முடியவில்லை. அதை கவனித்த மகரிஷி அப்போது என்ன சொன்னார்?


''என்ன ஆச்சர்யம் பார்த்தீர்களா?  சில சேஷாத்ரி சுவாமி பக்தர்கள்  அழுகையை அடக்கமுடியாமல் திணறினர். தரையில் உருண்டு புரண்டனர்.  சிலர்  கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓட நெஞ்சம் வெடித்தனர்.  இந்த துயரக்  கண்ணீர்  வெள்ளத்தை  தான் அந்த  சிந்திய மை  குறிக்கிறது.  அந்த  துயரப் பக்கங்களை மையால்  கருப்பாக்கி விட்டிருக்கிறது.   அடாடா,   இதற்கு மேல் எப்படி  அந்த துயரத்தை வெளிப்படுத்த முடியும்?  வார்த்தைகளே இல்லை என்று எப்படிக்  காட்ட முடியும்? என்கிறார்.  எனக்கு இந்த மை  படிந்த பக்கங்கள் கொண்ட புத்தகம் மட்டுமே வேண்டும்.  அதை பைண்ட் செய்து தரச்  சொன்னார். 


1915ல்  மகரிஷியை பார்த்த  பக்தர்  குழுமணி  நாராயண  சாஸ்திரிகள்  சாஸ்திரங்கள், வேதம் உபநிஷத் கற்றவர்.    பக்தர்.   சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றி  விஷயம் அறிந்தவர்.  ஆனால்  நேரில் சேஷாத்ரி ஸ்வாமிகளை  தரிசித்ததில்லை.  ஐந்து ஆறு வருஷங்கள் கழித்து  திருவண்ணாமலை வந்தவர்  சேஷாத்ரி ஸ்வாமிகளை 1921ல்  நேரில்  தரிசித்தார்  அதற்கு பின்  அவர்  ஸ்வாமிகளை விட்டு  அகல  வில்லை. நிழலாக கூடவே 9 வருஷங்கள் இருந்தார்.  சேஷாத்ரி ஸ்வாமிகள் முக்தி அடையும் வரை  அவரை தொடர்ந்து  சென்று  தரிசித்தவர்.  இது சேஷாத்திரி ஸ்வாமிகள்  அருள் இல்லை  யென்றால்   இது நடந்திருக்காது.  ஸ்வாமிகள்   எவரையும்  கிட்டே  அணுக விடாதவர்.   குழுமணி சாஸ்திரிகள் மட்டும்  தான்  ஸ்வாமிகளை அருகில் இருந்து  கவனித்து   அவர்  நடை உடை பாவனை, பேச்சு அநுஞை   ஆசிர்வாதம்,     அவர்   எல்லோரிடமும்  பழகுகிகியது, பேசியது,  கோபித்தது, வாழ்த்தியது,  மகிழ்ந்தது,  அருளாசி வழங்கியது  பற்றிய   ஞானியின்     குணாதிசயங்களை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியவர்.  


ஸ்வாமிகள் யாரை எல்லாம்  சந்தித்தார், என்ன பேசினார், என்ன ஆசி வழங்கினார், அவர்  உணர்ச்சிகள்  எல்லாவற்றையும்  கவனித்து எழுதி வைத்தவர்  ஸ்ரீ குழுமணி நாராயணஸ்வாமி  சாஸ்திரிகள்,    ஸ்வாமிகள்  ஒரு பிரம்மாண்டமான சமுத்திரம் என்கிறார். அங்கும் இங்குமாக ஒரு சிறு துளி தான்  கிரஹிக்க முடிந்திருக்கும் அவரால்.  ஸ்வாமிகள் ப்ரம்மமயம் ஆயிற்றே.  அது தான்  கசிந்து நமக்கு  புஸ்தகமாக கிடைத்திருக்கிறது.  மற்றவர் கண்களுக்கு  ஸ்வாமிகள் ஒரு பித்தனாகவே காட்சியளித்தார்.


குழுமணி நாராயணஸ்வாமிகள் எழுதிய  சேஷாத்ரி  ஸ்வாமிகள் பற்றிய சரித்திரத்தை ஒருவாறு புரிந்து கொண்டபிறகு தான்  நான் எனது  ''ஒரு அற்புத ஞானி''யை  காமா சோமா என்று ஒருவாறு  அவரை வணங்கி எழுதினேன்.


ஸ்வாமிகள் எங்காவது ஒரு வார்த்தை காலையில் சொன்னார் என்று  வைத்துக் கொள்வோம். அது எதற்காக  ஏன், எப்படி  எதனால்  என்று பொழுது சாய்வதற்குள்  காரணம் காரியம்   எல்லோருக்கும் தெரிந்துவிடும்.  அவ்வளவு தீர்க்க தரிசி. திரிகால ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள்.


அவரது ஒரு வார்த்தையை  முப்பது பக்கங்களாலும்  எந்த  சாஸ்த்ர விற்பன்னர், பண்டிதராலும் கூட  விளக்கமுடியாது.   அவரது ஒவ்வொரு வார்த்தையும், செயலும்  தெய்வீகம் பொருந்தியது.  தவவலிமை வாய்ந்தது.  சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய்ந்தால்  கொஞ்சம்  புலப்படுவது.  கண் காணாமல்  எங்கிருந்தோ வேண்டிக்கொள்ளும்  பக்தர்களின் மனோபீஷ்டத்தை  இருந்த இடத்தில் இருந்தே  நிறைவேற்றியவர். குறைகளைத்  தீர்த்தவர்.


எனக்கு ஒரு வருத்தம்.  நாற்பதாண்டுகள்  திருவண்ணாமலையில் மஹான் சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்ந்திருந்த காலத்தில் அவரது அனுபவங்களை, அதிசயங்களை அறிந்தவர்கள் நிறைய பேர் இருந்திருக்க வேண்டுமே.    ஏன்  வெளியே ஒன்றுமே தெரியவில்லை?   அவரை மஹான்  என்று ஏற்றுக்கொண்டதோடு சரியா?  அதற்கு காரணம்   அவரை எல்லோராலும்  சரியாக  புரிந்து கொள்ள இயலாது.


நம் வீட்டுக் கொல்லை  வேப்பிலையின் மஹிமையை  நாம் அறிவதில்லை. எங்கோ செய்த மருந்தை தேடுவதைப் போல் இருக்கிறது.  அதே மாதிரி தான் ரமண மகரிஷி மகிமையும். எங்கோ இருக்கிற  பால் ப்ரண்டன் அவரை சந்தித்து  புத்தகம் எழுதி  பரப்பிய பிறகு தான் அவர்  மஹத்வம் உள்ளூர்க்காரர்களுக்கே  தெரிந்தது.   குழுமணி சாஸ்திரிகளைத்தவிர  எந்த பால் ப்ரண்டனும் சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹத்வத்தை வெளிக் கொண்டுவரவில்லையே.


மகரிஷி ரமணர்,  ப்ரம்ம ஞானி சேஷாத்ரி  ஸ்வாமிகள் போன்றவர்களை பற்றி முழு விஷயமும் எழுத எவராலும் முடியாது. அவரது வார்த்தைகள்,   அவர்கள்  மனதில் நினைத்தது, செயல்,  காரணம், காரியம் சகலமும் தெரிந்தால் தானே  அவற்றை வெளி உலகுக்கு சொல்லமுடியும். அந்த அளவு ஞானம், சக்தி எழுதுபவருக்கும் இருந்தால் தானே  அது முடியும். 


குருடன்  யானையை  விவரித்தது போல்  தான் ப்ரம்மஞானிகளை ஒன்றுமறியாத என் போன்றோர்  விளக்கி பக்தர்களுக்கு சொல்ல இயலும். அதனால் தான் அதிகம் யாரும் இவர்களைப்  பற்றி எழுதவில்லையே என்று  புரிகிறது.  இன்றைக்கும்  இந்த  திருவண்ணாமலை  யோகிகளை ,ஞானிகளை  சரியாக முழுதும் புரிந்துகொண்டவர்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.  


ஏதேதோ தாங்கள் ஆங்காங்கே கண்டதை கேட்டதைப் பற்றி மட்டும் எழுதியதற்கே இத்தனை தெய்வீகம் என்றால் முழுமையை எடுத்துச் சொல்ல இன்னொரு வேத வியாசர் தான் வரவேண்டும்.


ஞானிகள்  தெய்வ ஸ்வரூபம்.  மஹா பெரியவாளை போல் பேசும் தெய்வங்கள்.   நமது

 நிலையை அறிந்துகொண்டு  இந்த  கருணை தெய்வங்கள் அருளுவதால் ஏதோ  சில தெரிந்த விஷயங்களை,   புரிந்து கொண்ட வரை,   எழுதி, பேசி,   பரப்புகிறோம்,   அதற்கே தெய்வம்  மனமிரங்கி, பக்தர்களுக்கு மன  அமைதி, நோய் நிவாரணம், முக்தி என்று தாராளமாக அருள்கிறது.



குழுமணி நாராயணசாமி  சாஸ்திரிகளால் ,  சேஷாத்ரி ஸ்வாமிகளை பற்றி  அவரருளால் தான்  நமக்கு எத்தனையோ விஷயங்களை சொல்ல முடிந்தது. ஆனால் அது முழுதுமானது என்று யாராலும் சொல்ல  முடியாது. ஒவ்வொரு  பக்தரின் தனி அனுபவம் ஒன்றே  அதை கொஞ்சம்  அறிய உதவும்.

No comments:

Post a Comment