Tuesday, February 15, 2022

KANDAR ALANKARAM

 


 ஒரு  திவ்யாலங்காரம் -    நங்கநல்லூர் J K  SIVAN 

எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய, நான் ஒவ்வொரு முறையும்  நமஸ்காரம்  என்று எழுதி மகிழும் ஒருவரை நான் இன்னும் நேரில் பார்த்ததில்லை என்பதால் அவரும்  என் கிருஷ்ணனும்  எனக்கு ஒன்று தான்.  ரெண்டு பேருமே   V .S.  கிருஷ்ணன்கள்  தான்.  ஒருவர்  என்னை  '' V விடாமல்  S சிந்திக்க ''  வைக்கும்  கடவுள்  கிருஷ்ணன்,   மற்றவர்  Vவியக்க  Sசெய்யும்  அற்புத மனிதர் கிருஷ்ணன்.  ரெண்டு  பேரையும் என்றாவது  ஒருநாள் பார்க்க வேண்டும் என்ற ஆவல்  தீரவில்லை. 

முதல் கிருஷ்ணனைப்  பற்றி  பேச   நினைத்தாலும்  முடியாத அளவு  விஷயம் நிறைந்தவர். ரெண்டாமவர்  இப்படியும் ஒருவரா என்று வாய் பிளக்க அதிசயிக்க   வைத்து பேச முடியாமல் செய்பவர்.  ஆங்கிலம், தமிழ் ரெண்டிலுமா ஒருவர் இப்படி எழுதமுடியும்?  

ரெண்டாமவர் சமீபத்தில் தான்  எழுதி வெளியிட்ட  கந்தர் அலங்காரம் புத்தகத்தை அனுப்பி இருந்தார்.  படிக்க படிக்க  பக்கம் பக்கமாக தேன்  சொட்டுகிறது. அருணகிரி நாதர் 107 செய்யுள்களை  கந்தரலங்காரம்  என்று  எழுதி இருக்கிறார் என்று  எனக்கு  இதுவரை தெரியாது.  கந்தர் அலங்காரம் என்றால் அர்த்தமே தெரியாது. ஏதோ சட்டை, பேண்ட், பௌடர், சென்ட் இது தான் அலங்காரம் என்று நினைத்தால் நீங்களும் என்னைப்போல தான்.  அலம் என்றால்  போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிரம்ப நிறைந்தது,  காரம்  என்றால் செயல்.

வாழ்க்கையில் நமது குறைகள் அனைத்தையும் நீக்கி, அருளாளனாக வந்து  தானே நமது மனதில் நிறைந்து வழி நடத்தும்  ஆத்ம ஸ்வரூபன்  கந்தன்.  வேத  வியாசர் அற்புதமாக  எழுதிய ஸ்காந்த புராண நாயகன், ஸ்கந்தன் தான்  தமிழில் கந்தன்.  வாரி வாரி கொடுக்கும் அவன் வள்ளல், அவன் மனைவி வள்ளி. பொன்னன் பொன்னி என்பது போல் என்று சொல்வார்  வாரி வாரி அவன் அருளை பேசிய வாரியார்.  கந்தன் முருகு என்ற என்றும் இளமை  மாறாத  முருகன், தேவசேனாபதி,  தமிழ்க்கடவுள்.  ஒளவையை சுட்ட பழம் வேண்டுமா  சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு மடக்கியவன்.  மாலின் மருகன். 

திருவண்ணாமலையில் அவனைப் பெற்ற  முத்தம்மாவுக்கு முதலில் நமஸ்காரம். முத்தைப்  பெற்ற அம்மா அருணகிரி என  தவம் செய்து பெற்ற  பிள்ளைக்கு  பேர்  சூட்டி வளர்த்தாள் .

 வாழ்க்கை வெறுத்து அருணாச்சலேஸ்வரர்  கோபுரத்திலேறி தற்கொலை செய்ய ஒருசமயம்  அருணகிரி  துணிந்தபோது   முருகன்  அருணகிரியைத் தாங்கி  நமக்கு  திருப்புகழ் மற்றும் கந்தரநுபூதி, கந்தரலங்காரம் எல்லாம் எழுத வைக்க,    காரணமான முத்தம்மா,   நீ  என்றும்  திருப்புகழ் உள்ளவரை  நினைக்கப்படுகிறார். உன் பெயராலேயே ''முத்தைத்தரு பத்தி...'' என்ற  பாடலின் முதலடியை  கந்தன் எடுத்துக் கொடுத்து அருணகிரியின் திருப்புகழ்  துவங்கியது.     

2வது   VS கிருஷ்ணன்  எழுதிய  ''கந்தரலங்காரம்''  பாடலும் பொருளுமாக  உள்ள  புத்தகம்  சில தினங்களுக்கு முன் என்னிடம் வந்தபோது  தான் முதன்முறையாக  கந்தரலங்காரத்தின்  சுவை அறிந்தேன்.  ஆஹா  எவ்வளவு அருமையாக  ஒவ்வொரு செய்யுளும் எழுதி விளக்கி இருக்கிறார்.  நன்றி  உனக்கு  முதல் VS  கிருஷ்ணா,  ரெண்டாவது VS கிருஷ்ணனை எனக்கு  அறிமுகப்படுத்தற்கு.  நன்றி 2வது  VS கிருஷ்ணன் ஸார்  இந்த அற்புத புத்தகத்தை அனுப்பியதற்கு.

ஒரே ஒரு  கந்தரலங்காரம் செய்யுள்  எல்லோருக்கும் தெரிந்ததை மட்டும்  சொல்லி முடிக்கிறேன். 

38வது  பாடல்:  
''நாளென் செயும் , வினைதான் என் செயும் எனை  நாடிவந்த 
 கோளென் செயும் , கொடுங்  கூற்றென் செயும் , குமரேசரிரு 
 தாளும்  சிலம்பும்  சதங்கையும் தண்டையும் சண்முகமும் 
 தோளும்  கடம்பும்  எனக்கு முன்னே  வந்து தோன்றிடினே''   

இதுவரை  ஒண்ணும்  செய்யா மண்ணாக இருந்தாய். பரவாயில்லை, இதோ உன் முடிவு நெருங்கிவிட்டது. இதுவரையிலும்  ''அவன்''    திருப்பாதங்களை கெட்டியாக  பிடித்துக்  கொள்ள முடியாமல் போய்விட்டால்  என்ன?  பரவாயில்லை. இதோ இப்போதே  ஒரு காரியம் செய்.  அடே  கந்தா, முருகா, வாடா, என்று மனமார அவனை  நினை.   உளமார நினைத்த உன் முன்னால்   ஆறு முகங்கள், பன்னிரண்டு  கரங்கள்,  ரெண்டு அழகான தாமரைத் திருவடிகள், அதை அலங்கரிக்கும், தண்டை,  சிலம்பும் கடம்புமாக  வந்து நிற்கிறானே  தெரிகிறதா.  அது போதும்.   அப்போது  உன்னைப்  பிடிக்க வந்த  நவக் ரஹங்கள் என்ன செய்யும்,  கர்ம வினைப்பயன்  என்ன செய்ய முடியும்,  கையில் பாசக்கயிற்றோடு உன்னைக் கட்டி இழுத்துக் கொண்டு போக வந்த எருமைவாகனன் எமன்  ''இவனை நெருங்க முடியவில்லையே  என்ன செய்வது என்று விழிப்பானே, சரி அகப்படுபவன் வேறு எவனையாவது பிடித்துத் தொலைவோம் என்று திரும்பிவிடுவான்  என்கிறார் அருணகிரியார்.
கந்தனை நினைப்பவனுக்கு எல்லா நாளும் நல்ல நாளே. அவன் திருப்புகழ் பாடுபவன் முன் அஞ்சேல் என வேல் தோன்றும். ஒரு கால் நினைக்கின் அவன் இருகாலும்  தோன்றும்.  உண்மைதான்.

இந்த புத்தகம் வேண்டுவோர்  ஸ்ரீ  V S கிருஷ்ணனை தொடர்பு கொள்ளலாம்.   212 பக்கங்கள்  விலை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றாலும் குறைந்தது ரூபாய்  200  போதும். தொடர்பு கொள்ள  அவர் தொலைபேசி: 9894194585  வாட்சப்பில் இருக்கிறார்.  


    


No comments:

Post a Comment