Saturday, January 15, 2022

HUMAN BODY

  நம்ம உடம்பு -  9    -    நங்கநல்லூர்  J K  SIVAN


இன்று  பொங்கல் தினம்.  ரெண்டு விதமான  பொங்கல்கள்  சாப்பிட்டோம்.
 இனிப்பு ஒன்று, சர்க்கரை பொங்கல்,  சாதாரண  வழக்கமான  காலை உணவு  வெண்பொங்கல்,  உப்பு  கொண்டது. ரெண்டுமே  நல்ல சுவை தான். அதை  எப்படி  உணர்கிறோம்?   நமது உடம்பில் உள்ள  நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.   இதை வைத்துக்  கொண்டே அந்த நாக்கு எவ்வளவு இனிமையாக  சுவையாக பேசலாம்.  சாக்கடை கூட மேல்,  என்று கருதும் அளவுக்கு  வார்த்தைகள்,  சுடு சொல் அந்த நாக்குக்கு எப்படி கிடைக்கிறது  என்றால் உள்ளே இருக்கும் மனம், அதில் பிறக்கும் எண்ணம் தான் காரணம்.  அது தான் நாக்கை  அப்படிப் பேச வைக்கிறது.

 ''அவனைப் பார்த்தியா,   எப்படி  நாக்கில்  நரம்பில்லாம பேசுறான்?'' என்று அரசியல் வியாதிகளை பற்றி பேசுகிறோம். உண்மையில்  நாக்கில் எலும்பு தான் இல்லை. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை தான்  நாக்கு எனலாம்.

நமது உடம்பில் கண்  ஒரு  அற்புத படைப்பு. அதைப்பற்றி முன்பே  கொஞ்சம் எழுதி இருந்தேன். ஒரு விஷயம் விட்டுப்போய் விட்டது. அதை இப்போது சொல்லிவிடுகிறேன்.  நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

நமது உடம்பில் நிறைய செல்கள் உள்ளன என்று நான் சொல்லும்போது,   விடாமல் காதில் ஒட்டிக்  கொண்டிருக்கும்  செல் போன் பற்றி அல்ல.  நமது உடம்பில் அதிக செல்களால் உருவான  ஒரு  பாகம் தான் மூளை.    மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது. நம்மால்  வாழ்நாள் பூரா  உட்கார்ந்து இரவும் பகலும் எண்ணினாலும் முடியாத காரியம்.

''என்னப்பா  நன்றாக தூங்கினாயா? ''

''எங்கே சார் தூங்குறது, மனைவியும்  கொசுவும் மாறி மாறி  கடிச்சுண்டு,  தூங்கவிட்டால் தானே''
 கொசுவையாவது பேட்  BAT  வச்சு  அடிக்கலாம்... இன்னொண்ணை ?......

ஒரு உண்மை  தெரிந்து  கொள்ளுங்கள்.  ஒரு மனிதன் தன்  வாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.  எவ்வளவுகாலம் தூக்கத்தில்  வீணாகிறது பார்த்தீர்களா?

பெண்கள் தான் உலகத்தில்  தாய் எனும்  விசேஷ அந்தஸ்தைப்  பெற்றவர்கள்.  ஒரு ஆச்சர்யமான விஷயம்  தெரிந்து  கொள்ளுங்கள்.  ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகள்  எவ்வளவு சின்னது என்பதை விளக்க :   ஒரு டீ        ஸ்பூனில் 10 லட்சம் கரு முட்டைகளை  நிரப்பலாம். அவ்வளவு துக்கிணியூண்டு .  அதில் ஏதோ சிலது தான் பூதாகரமான மனிதனை,  குணத்தை சொல்கிறேன், உடம்பின் அளவை அல்ல உருவாக்குகிறது.

சாதாரணமாக  70 கிலோ எடையுள்ள  ஒரு மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். தாராளமாக  அப்பப்போ  ரத்த தானம் செய்யலாம்.  ஊறிக்கொண்டே இருக்கும்.  உடம்புக்கு ஒண்ணும் ஆகாது.  ரத்த தானத்தால் இன்னொரு உயிர் வாழ உதவலாம்.

ஒரு வெள்ளைக்கார  டாக்டர் கண்டுபிடித்த ரகசியத்தைப்  போட்டு உடைக்கிறேன். பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது.  என் பெண் வாசகர்கள் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம்.

பாரதியார்  மார்பு துடிக்குதடி என்று பாடுவாரே ,  அந்த  இதயம் நம் உடம்பில்  ஒரு நாளைக்கு சுமார் 1  லட்சம் தடவை ''லப் டப்''  செய்கிறது. வருஷத்திற்கு 4 கோடி தடவை.  லப்  டப்  தான்  SYSTOLIC & DIASTOLIC  pressure . ரத்த ஓட்டத்தின்  குதித்தல். 

நமது தோலை உரித்து வெயிலில் காயப்போட  உணர்த்தினால் அதன் அளவு என்ன தெரியுமா? கிட்டத்தட்ட  நமது உடம்பில் உள்ள தோலின் பரப்பளவு  20 சதுர அடிகள்.   அந்த  தோல் மாட்டுடையதோ, ஆட்டுடையதோவாக இருந்தால் ஏதேனும் நல்ல  உபயோகம் உண்டு.  நம் தோலால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
 

No comments:

Post a Comment