Sunday, December 5, 2021

SWAMI SIVANANDA SAYINGS

 ஸ்வாமி சிவானந்தா --  நங்கநல்லூர்  J K  SIVAN 


கொஞ்சம் யோசிப்போம். 

பத்தமடை  குப்புஸ்வாமி ஐயர்  எங்கள் அஷ்ட ஸஹஸ்ர வகுப்பை சேர்ந்த  ஒரு டாக்டர். பூர்வ ஜென்மத்தில் ஒரு மஹா யோகி போல் இருக்கிறது. மலேசியாவில் பல வருஷம் டாக்டராக பணியாற்றியவர்  ஒருநாள் சன்யாசியாகிவிட்டார். வடக்கே  இமயமலையில் தவம் செய்ய புறப்பட்டவர்   ரிஷிகேஷில்  சுவாமி சிவானந்தாவாக மாறிவிட்டார் என்று ஒரு  வரியில் அவர் சரித்திரம் முடித்துவிட்டு அவரது அருளுரைகள் சிலவற்றை அறிவோம்.

அழுதுகொண்டே தான் இந்த உலகத்துக்கு வருகிறோம்.  வெளியே  ஆவலாக  பெற்றோர் மற்றோர் யாவரும் உள்ளே  அழுகுரல் கேட்க  தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த அழுகுரல் ஒரு ஆனந்தத்தை தருகிறது. ஒரு புதிய உயிர் பூமியில் நமது வம்சத்தில் ஆஜராகிவிட்டது.
அப்படித் தனியாக  அழுதுகொண்டே வந்தவன் தான் எவரும் தொடர்ந்து வராமல்  தனியே  போகிறான். அப்போது அவன் அழவில்லை, மற்றவர்கள் அழுகிறார்கள்.
இருக்கும் அழுகையில் தொடங்கி அழுகையில் முடியும் வாழ்க்கையை ஆனந்தமயமாக்கிக் கோல் அநேக வழிகள் இருக்கிறதே. அதில் ஒன்று தான்  நாம சங்கீர்த்தனம்,  பஜனை.  பாடுபவன் கேட்பவன் இருவருமே  மகிழும்  வழி. இறைவனை நினைக்கும் வழி.

சொத்துக்காக, உரிமைக்காக, வாஸ்துக்காக  அண்ணன் தம்பி, அக்கா  தங்கை சண்டையே வேண்டாம்.  அந்த நேரத்தை உருப்படியாக  மனம்  இந்திரியங்கள்  இவைகளோடு போராடி, சண்டை போட்டு ஜெயிக்கலாம். 

சொந்தக்காரன் மண்டையைப்போட்டால் எதற்கு குய்யோ முறையோ என்று அழவேண்டும்? அது என்றோ ஒருநாள் நிகழப்போகிறது என்று ஜென்ம ஜமாந்தரமாகவே  எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே, அதில் என்ன அதிர்ச்சி.  அட்வான்ஸ்  நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற ஒரு குறைக்கு அர்த்தமில்லை?  யாருக்கு கொடுத்தது இதுவரை?  சரி அப்படி கொடுத்தால்  தயாராக இருக்கப்போகிறோமா? எப்படியெல்லாம் அதை தவிர்க்க முடியுமோ அப்படியெல்லாம் இரவு பகலாக ஒரு வினாடி கூட  வீணாகாமல்  வழி தேடுவோமே. சிலர்  எப்படியும் விடுதலை  நிச்சயம் என்று தெரிந்ததால் மேலும் மேலும் குற்றங்கள் செய்யவும் வாய்ப்பு உண்டே. மனித மனத்தை யார் அறிவார்?  அழுவதாக இருந்தால் ''பகவானே  உன்னை நெருங்கவேண்டும் முடியவில்லையே'' என்று அழலாம்.

வாழ்க்கையில்  குடும்ப உறவுகள்  சுயநல அடிப்படையில் வளர்பவை. அக்கா தங்கை, அண்ணன், தம்பி, கணவன் மனைவி, அப்பா அம்மா எல்லாமே. அன்பு இருந்தால் அது சுயநலம் கலந்து தான் இருக்கிறது. மரணம் எல்லாவற்றையும் விழுங்க வல்லது  நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே கண்ணை விழித்துக்கொண்டு உருப்படியாக  பாதையை அமைத்துக் கொள்வோம். அதன்வழி இறைவனைத் தொடர்ந்து நடப்போம்.

உலகத்தின்  வேகத்தில் மானுட வாழ்க்கை ரொம்ப குறுகிய நேரம். ஜபம் தியானம், கீர்த்தனம் பஜனை இவற்றை தடுக்க குறுக்கிடுவது.  வாழ்க்கை ஒரு கோவில் திருவிழா மாதிரி. சில நாட்களுக்கு மட்டும்.   அதில் பொம்மலாட்டம் சில வினாடிகள் தான் நாம்.  தேகத்தை நீர்மேல் குமிழி என்று ஞானிகள் சொல்கிறார்களே எவ்வளவு  கரெக்ட்.

பகவானோடு ஒன்றி விடுவது தான் சமாதி நிலை. ஆத்மாவுடன் சங்கமம். யோகிகள் ஞானிகள், மஹான்கள் இந்த ஆனந்தத்தை ஞானத்தை அனுபவிப்பவர்கள்.

பக்தி யோகம் என்பது  சம்சார  சாகரத்தில் அக்கரை  சேர்க்கும் படகு.
ஞானயோகம்  என்பது  ஆற்று வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்து  நீந்தி அக்கரை  சேர்வது.
ஞானி  தன்னை வென்று ஞானம் அடைபவன்.  பக்தன் தன்னை அர்ப்பணித்து,  சரணடைந்து,   தரிசனம் பெறுபவன்.
காண்பது,  காட்சி, காண்பவன்  மூன்றும் கடந்தவன் பெறுவது நிர்விகல்ப சமாதி. 
விழிப்பு,  தூக்கம், கனவு  எனும் மூன்று நிலைகளும் தாண்டி நான்காவது நிலை துரீயம்.  அதில் திளைப்பவன் ஜீவன் முக்தன் .
தேஹ நினைப்பே ஒழிந்தவன் அடைவது விதேகமுக்தி.
ஸ்வரூபணங்கள் கொண்டது ஜீவன் முக்தி.  அரூபணங்களாக  உள்ளது விதேக முக்தி.
இந்திரிய சுகம்  சாச்வதமில்லை,  மாயை, கற்பனை வடிவம். கடுகளவு சுகத்துக்காக  மலையளவு துன்பத்தை சுமக்க வைப்பது.  இத்தகைய இந்திரிய சுகத்தால் ஆசையைப்  பூர்த்தி செய்யவே முடியாது.''இன்னும்  இன்னும்''  என்று  தேடி அலைய வைத்து, நிம்மதியை அழிக்கும். 
ஆகவே  தான்  சொல்கிறேன்.  இந்திரியங்களும், அவை தரும் சுகமும்  ப்ரம்ம ஞானம் அடைவதற்கு முதல் எதிரி. இது தான் பிறப்பு இறப்புக்கு  காரண கர்த்தா.

இன்னும் நிறைய  சொல்லலாமா?

No comments:

Post a Comment