Sunday, December 12, 2021

KUDHAMBAI CHITHTHAR

 குதம்பை சித்தர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஆனந்தம் பேரானந்தம். 

குதம்பை சித்தர்  சுலப சித்தராக இருக்கிறார். நன்றாக  எளிதில் புரிகிறார்.  சொல்வதும் அற்புதமாக சுருக்கமாக இருக்கிறது.  ரெண்டடியில் யார்  இவ்வளவு அழகாக தத்துவம் பேச முடியும். ஆகவே  நமது தமிழ்  சினிமாக்காரர்கள் கூட விடுவதில்லை.   என்  சின்னவயதில் தெருவெல்லாம் சிதம்பரம் ஜெயராமன் பாடிய  பராசக்தி பட  சிவாஜி கணேசன் முதலில் தோன்றி ஆடிப்பாடிய  பாட்டு   ''குதம்பாய், காசு முன் நில்லாதடி'' என்று கூம்பு போன்ற ஒலிபெருக்கி காதை பிளக்கும்.

குதம்பை சித்தாரால்  மட்டும் எப்படி  இவ்வளவு அற்புதமான  எல்லோருக்கும் புரிகிற தமிழில் தத்துவங்களை ரெண்டு வரிகளில் அள்ளி வீச முடிகிறது.  சிறந்த  ஞானி. கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயாமத்தை பின்பற்றும் ஒருவருக்கு எந்த யோகமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.

வேகமடக்கி விளங்கு மெய்ஞ்ஞானிக்கு
யோகந் தானேதுக் கடி” - 

என்று அவர் கேட்பது நியாயமாகத்தானே படுகிறது.  உலகில் அஞ் ஞானம் ஒழிந்திட யார்க்கும் இரங்கும்  கடவுளை ஏத்தி - நலமார்
குதம்பாய் மெய்ஞ்ஞானம் கூறவே நன்கு
நிதம் பார்த்து நெஞ்சில் நினை.

அஞ்ஞானம் ஒழியவேண்டுமா? எல்லோருக்கும் பொதுவான அந்த பகவானை வேண்டு. கடவுள் பக்தி இருந்தாலே கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம ஞானம் வளரும்; குதம்பாய், நீ இதை தினமும் அனுசரி என்கிறார் சித்தர்.

பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.

சர்வமும் அறிந்த ப்ரம்ம ஞானிக்கு இங்கே பூமியில் பிறக்கவேண்டிய அவசியமே இல்லை. அவன்  பூமியில் இனி பெற வேண்டியது ஒன்றுமே இல்லை.  பூமி எனும் உழகைத் துறந்தவன் என்று சொல்லும்போது  அதில் நிரம்பி  இருக்கும்  மாயை அவனை அணுகாது,  அவன் செய்யவேண்டியது ஒன்றுமே இல்லை. அடையவேண்டியதை அடைந்தவனுக்கு  அப்புறம் இங்கே என்ன வேலை?

போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி.

ஜனன மரணங்கள்,  பிறப்பு இறப்பு எனும் நோய் இல்லாதவனுக்கு  பூமியில்  என்ன இருக்கிறது? அவன் பிறவிப்  பெருந்துயர் நீங்கியவன் அல்லவா , இறைவனடி சார்ந்தவன் ஆயிற்றே, நம்மைப் போல் அவனுக்கு  இனி பிறப்பேது, இறப்பேது? அவன் அதையெல்லாம் கடந்த, அப்பாற்பட்ட 
ஜீவன் முக்தன்.

செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி.

உப தேவதைகள் நம்மைப்போல்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்குபவர்கள்.  அவர்களையே நம்பி தொழுது பரமனை துறந்தவர்களுக்கு  எங்கிருந்து முக்தி வரும்.   நீ  யாரைத் தொழுகிறாயோ, அந்த தெய்வம் என்னுள் இருப்பது என்று கீதையில் கண்ணன் சொல்வது இப்போது புரியும்.  சில்லறை தேவதைகள் எல்லாமே  பரமாத்மாவை ஆதாரமாக கொண்டவை.  செத்து செத்து மீண்டும் ரேஷன் கடையில் மாதாமாதம் ஒரு கிலோ  உளுத்தம்பருப்புக்கு க்யூவில் நிற்கவேண்டியது தான்.

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி

இது எவ்வளவு அற்புதமான வார்த்தை அனுபவியுங்கள். பற்றற்றான் பற்றினை பற்றுக என்று வள்ளுவர் சொன்னதை தான் சித்தர் இங்கே சொல்கிறார். பற்றுகள் ஒன்று மில்லாத பரந்தாமனை பந்த பாசங்கள் ஆசை நேசங்களை விட்டு தேடு. கிடைப்பான். விடாதே பிடித்துக்கொள்ள. உனக்கு எந்த குறையும் இல்லை. .குற்றமும் இல்லை. கர்மங்கள் தொலையுமே.

காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.

காண்பவை யாவும்  நிஜமல்ல. நிழல்,  மறையக்கூடியவை, மாயையின்  தோற்றம் என்று அறிந்தவன், திட சித்தன்.  விருப்பு வெறுப்பற்றவன். அவன்  உலக மாயையிலிருந்து விடுபட்டு சத்ய ஸ்வரூபமாக இருக்கும் பிரமத்தை மனதில் பிடித்தவன்  என்பதால்  உலக  இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட  தூய நித்ய  சித்தானந்தம் எனும்   பேரானந்தம் அனுபவிப்பவன்.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக இருக்கும் பரம்பொருளை சந்தோஷமாக மனதில் உணர்வாய்  பெண்ணே.  உனக்கு  வேறென்னடி  அப்புறம்  வேண்டும்?  நம் மனதே அப்படிப்பட்ட  அற்புத  ஆனந்த  பெருவெளி ஆகிவிட்டால் அதில் உள்நோக்கி  ஆழ்ந்து அனுபவி. ஆனந்தம் பெறுவாயடி .

தொடரும் 

No comments:

Post a Comment