Tuesday, November 16, 2021

LAKSHMI THE COW

 ''லக்ஷ்மி  மா''  -   நங்கநல்லூர்  J K SIVAN 


இப்போதிருக்கும்  நண்பர்களில்  எத்தனை பேர்   திருவண்ணாமலை  ரமணாஸ்ரமத்தில்  பகவான் ஸ்ரீ ரமணரையோ அவரை நேசித்த  பசு  லக்ஷ்மியையோ பார்த்தவர்கள்.  இருந்தால் அவர்களுக்கு என் சாஷ்டாங்க  நமஸ்காரம்.

1922ல் தனது  43வது வயதில்  ரமண மகரிஷி அருணாச்சல மலையடிவாரத்தில்  தனது  அன்னை சமாதிக்கு அருகே ரமணாஸ்ரமத்தை அமைத்தார். நான்கு வருஷங்கள் கழிந்து  ஒரு நாள்  ஒரு பக்தர், குடியாத்தம் அருகே இருக்கும்  கிராமம் குமாரமங்கலத்தில்  இருந்து வந்த விவசாய குடும்பத்தவர்  ஆஸ்ரமத்துக்கு வந்ததில் என்ன விசேஷம்?
 நிச்சயம் பெரிய  விசேஷம் இருக்கிறது. சொல்கிறேன்.  
அருணாச்சலம் பிள்ளை  அவர் பெயர். அதுவே  ஒரு  விசேஷம். 
இன்னொன்று அவர் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்த ஒரு பசுவும்  அதன் கன்றுக்குட்டியும்  தான்.  மகரிஷியிடம் தனது பக்தியின் சின்னமாக  இந்த பரிசு.

''அவைகளைத் தடவிக்கொடுத்த  மஹரிஷி , நீயே  இவற்றை திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடு.  இங்கே  ஆஸ்ரமத்தில்  பசு  கோசாலை வசதிகள் எதுவும் இல்லை. எப்படி அவற்றை பராமரிப்பது

'சுவாமி  ரொம்ப  ஆசை ஆசையாக  உங்களுக்கு என் காணிக்கையாக இவற்றை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். நிராகரிக்காதீர்கள். அதைவிட  இங்கேயே  என் கழுத்தை அறுத்துக்கொண்டு உங்கள் முன்னாடியே  என் உயிரை விட்டுவிடுகிறேன்.'' என்றார் அழுதுகொண்டே பிள்ளை.

பகவான்  ரமண மகரிஷியின்  அருகே  இருந்து இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த  இன்னொரு பக்தர்,  ராமநாத பிரம்மச்சாரி   ''சுவாமி, இந்த அடிமைக்கு  உத்தரவு  தாருங்கள்,  இந்த பசுவையும் கன்றையும்  பராமரிக்கும்  பாக்கியம்  எனக்கு  பகவானுக்கு  நான் செய்யும்  கைங்கர்யம். பசுவையும் கன்றையும் ஏற்றுக்கொண்டு வளர்க்க  எனக்கு அனுமதி அனுக்ரஹிக்க  கெஞ்சுகிறேன் ''

பகவான் முகத்தில்  புன்னகை  அவர் பார்வை பசுவின் மேல் விழுந்தது.  அதிர்ஷ்டகார பசு. அன்று வெள்ளிக்கிழமை .  ஆகவே  ஆஸ்ரமத்துக்கு வந்த  அந்த பசுவுக்கு ''லக்ஷ்மி '' என்று பெயர் சூட்டினார் மஹரிஷி. அதன் முகத்தை கழுத்தை எல்லாம்  தடவிக்கொடுத்து ''வா லக்ஷ்மி''  என்று கூப்பிட்டார். 

அடுத்த மூன்று மாத காலம்  பிரம்மச்சாரியிடம்   லக்ஷ்மியும் கன்றும் வளர்ந்தன.  லக்ஷ்மி  விஷமக் காரி. அடங்கமாட்டாள்.  ஆஸ்ரம  தோட்ட  காய்கறி இலைகள் எல்லாம் வெளுத்து வாங்கினாள். பகவானுடைய செல்லம், யார்  என்ன சொல்லமுடியும்? அவள் செய்வது தான் ரைட்.
யாராவது ஏதாவது குரல் உயர்த்தி பேசினால் நேரே  பகவான் முன்னாலே வந்துவிடுவாள்.  நீங்கள் உங்கள் பயிர்களுக்கு வேலி  போட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பகவான் சொல்லிவிடுவார்.
ராமநாத ப்ரம்மச்சாரியை  மற்ற  ஆஸ்ரம வாசிகள் கோபித்து  சண்டை இட்டார்கள்.   அவர்கள் தொல்லை தாங்காமல்  பிரம்மச்சாரி  ஊரில் இருந்த மாடு மேய்க்கும்  பசுபதி என்பவரிடம் லக்ஷ்மியையும் , கன்றுக்குட்டியையும் ஜாக்கிரதையாக  பராமரிக்க  ஒப்படைத்தார். 

ஒருநாள் பசுபதி  லக்ஷ்மியை  கன்றுக்குட்டியுடன்   ஆஸ்ரமத்துக்கு  அழைத்து வந்து விட்டு திரும்ப கூட்டிச் செல்லப்பட்டாள். அவ்வளவு தான்,  அன்றுமுதல்  அவளுக்கு பசுபதி வீட்டிலிருந்து  ஆஸ்ரமத்துக்கு வழி தெரிந்து விட்டதால்   தினமும்  ஆஸ்ரமத்துக்கு  தானே கன்றுக் குட்டியுடன்   வரத் தொடங்கினாள் . பகவான் அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலி அருகேயே  சுகமாக அமர்ந்து கொள்வாள்.   மகரிஷி கையால் கொடுக்கும் ஆகாரத்தை தவிர வேறெதுவும் தொட மாட்டாள். அவர் கொடுக்கும் வாழைப்பழம் ஒன்று தான் ஆகாரம்.    ஒருவேளை கடிகாரத்தை முழுங்கி இருப்பாளோ?   எப்படி சரியாக தினமும் சாப்பாட்டு நேரத்தில் டாண்  என்று மகரிஷி முன்னாலே வந்து நிற்பாள். சாப்பாடு மணி அடிக்கும்  இடமில்லையே  அந்த ஆஸ்ரமம்.  தினமும் சாயந்திரம் அரை மனதுடன் பசுபதியின் வீட்டு  தொழுவத்துக்கு திரும்புவாள் .

மூன்றாவது  கர்பம்.   நிறைமாசம்.  லக்ஷ்மிக்கு  ஸ்ரமம் தாங்கமுடியவில்லை.  கண்களில் நீர் மல்க  ஆசிரமத்திலிருந்து பசுபதி தொழுவத்துக்கு போக  மனம் இல்லை. மஹரிஷி  முன் நின்றாள்.  ம்றதுவாக அவள் முகத்தை தடவிக்கொடுத்து 

''என்ன சொல்றே  லக்ஷ்மீ,  தொழுவத்துக்கு போக மனசில்லையா. இங்கேயே இருக்கணுங்கிறியா?நான் என்ன செய்யமுடியும்? ''

அருகில் உள்ளவர்களைப்  பார்த்தார்.   “பார்த்தீர்களா,  லட்சுமி அழுகிறாள். போகமாட்டேன் என்கிறாள்.எந்த நிமிஷமும் பிரசவிப்பாள். பசுபதி  தொழுவம் ரொம்ப தூரம்.   அவளால் நடந்து போய்  காலையில் இங்கே வர  முடியாது  போலிருக்கிறது. இங்கே வராமலும் அவளால் இருக்க முடியாது. என்ன பண்ணுவாள்?”.

ஒருவழியாக சமாதானம் செய்து அனுப்பினார். அன்றிரவு பிரசவம்.   என்ன கஷ்டமோ, நிர்பந்தமோ, பசுபதிக்கு  லக்ஷ்மியையும் அவள் மூன்று கன்றுக்குட்டிகளையும் சமாளிக்க முடியவில்லை. அந்த இரவே,  அவள் குடும்பத்தை அழைத்துக்கொண்டு  பசுபதி ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.  பரம  சந்தோஷத்தோடு லக்ஷ்மி  மகரிஷி காலடியில் அமர்ந்து விட்டாள். எழுந்திருக்கவே இல்லை.  தனது வலக்கரத்தை அவள் தலையில் வைத்து  அழுத்தினார்  மகரிஷி.

''இனிமே  இங்கேயே என்னோடு இருக்கியா?''  என்று கேட்டார்.
லக்ஷ்மி  கண்கள் ஏதோ மயக்கத்தில் இருப்பது போல் மூடி இருந்தது. அருகில் இருந்தவர்களிடம் பகவான் என்ன சொன்னார் தெரியுமா:

''லக்ஷ்மி கடமை முடிந்தது.  அவள் 3 கன்றுகளையும் என்னிடம் ஒப்படைத்து விட்டதில் எவ்வளவு மகிழ்ச்சி பாருங்கள்.  முன் ஜென்மத்தில் நிறைய தபஸ் பண்ணி இருக்கிறாள்.  விட்டுப்போன  தபசையும்  இந்த ஜென்மத்தில் இங்கே முடித்து விட்டாள் ''

ஒரு அதிசயம் என்ன தெரியுமா. லக்ஷ்மிக்கு மொத்தம்  ஒன்பது பிரசவம்.  அதில் நான்கு மகரிஷி ஜெயந்தி அன்று நடந்தது தான். தினமும்  கோசாலாவுக்கு போவார். அவளுக்கும் அவருக்கும் ரொம்ப நெருங்கிய தொடர்பு. நேராக  கோசாலையிலிருந்து அவர் எங்கே தியான ஹாலில் இருக்கிறாரோ அங்கே போய் அவர் அருகே அமர்ந்து கொள்வாள். பக்தர்கள் கூட்டத்தைப் பற்றி அவளுக்கு லக்ஷியமே  இல்லை.

ஒருநாள்  ஹாலுக்கு வந்த லட்சுமி தனது  தலையை மகரிஷி மடியில் வைத்து அழுதாள். தாயன்போடு தடவிக்கொடுத்தார். 
''யார் என்ன பண்ணா,  உனக்கு சொல் ?அழுகையை நிறுத்து. நான் உன் சிநேகிதன் இருக்கேனே.  சொல்லு''
அழுகை நின்றது.  அவரை நாக்கால் முகத்தில் நக்கிவிட்டு நிம்மதியாக போனாள் .ஒவ்வொரு பிரசவம் ஆன   பின்னும் ஹாலுக்கு  நடந்து வருவாள். அவர் முன் சத்தமில்லாமல் அமர்வாள். 

''என்ன  லக்ஷ்மி,  உனக்கு இன்னொரு குழந்தை பிறந்ததை சொல்ல வந்தியா?. நான் கோசாலைக்கு வந்து அதை பாக்கறேன்.''

ஒரு தடவை லக்ஷ்மியைப் பற்றி பேசும்போது  மஹரிஷி  ''சின்ன பசுவா வந்தநாளிலிருந்து அவள் நடந்து கொண்ட முறை ரொம்ப  விசித்திரம். தினமும் வந்து தலையை என் காலில் வைத்துவிட்டு தான் போவாள். கோசாலை  கட்டும்  ஆரம்ப   நாள்  அன்று அவளுக்கு ரொம்ப ஆனந்தம். என்னை அழைத்துக்  கொண்டு அங்கே போனாள்.   க்ரிஹ ப்ரவேசம் பண்ணிய அன்றும்   நேராக என்னிடம் வந்து என்னோடு தான் அங்கே சென்றாள்.  நிறைய சந்தர்ப்பங்களில் அவள் நடந்து கொண்டது ரொம்ப ஆச்சர்யம். அவளது  அறிவு  பாராட்டக்கூடியது. அவளை நான் ஒரு சாதாரண பசுவாக பார்க்கவில்லை.''

பக்தர்கள்   லக்ஷ்மிக்கும்  பகவானுக்கும்  ஏதோ முன் தொடர்பு இருந்திருக்கிறது என்று வியந்தார் கள்.ஒருவேளை  லக்ஷ்மி தான் பகவானுக்கு சாகும் வரையில்  சமையல் பண்ணி கொண்டு வந்து உதவிய   ''கீரை பாட்டியோ''?  என்றார்கள்.

1948  ஜூன் 18.  கோசாலையில்  லக்ஷ்மி  படுத்துக்கொண்டிருந்தாள் . அருகே  மகரிஷி அமர்ந்தார். இரு கரங்களாலும்  அவள் தலையைத்தூக்கி ஒரு கரத்தால்   அவள் முகத்தை, கழுத்தை , தொண்டை யை  தடவினார்.  இடது கரத்தை தலையை வைத்து  வலது கர விரல்களால்  தொண்டையை மெது வாக தடவினார். மார்பு வரை  மெதுவாக  அழுத்தி தொட்டார்.  சில நிமிஷங்கள் இப்படி  நடந்தது.

''லக்ஷ்மி  என்னம்மா சொல்றே. நான் இங்கேயே உன்னோடு இருக்கணுமா சொல்லு இருக்கேன். வேண்டாம்  நான்  போலாம் என்றால்  சொல்லு  ஹாலில் நிறைய பேர் எனக்காக காத்துண்டு இருக்கா.   அங்கே போறேன். அங்கே இருந்தாலும் நான் உன்னோடே தான் இருப்பேன். கவலை வேண்டாம் உனக்கு''
அவள் கண்கள் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தன.  
ஒருமணி நேரத்துக்கு மேலே  மஹரிஷியும்  லக்ஷ்மியும் மெளனமாக கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர்  பார்த்துக் கொண்டிருந்தார்கள். லக்ஷ்மியின் ஸ்வாசம்  நிதானமானது. 
''கவலைப் படாமல் இரு '' என்று சொல்லிவிட்டு  பகவான் ஹாலுக்கு சென்றார். அவர் திரும்பிச்  செல்வதை வெகுநேரம்  லக்ஷ்மி  பார்த்துக்கொண்டே இருந்தாள். கண்களை நீர் மறைத்தது. ஒரு நீண்ட பெருமூச்சு தொடர்ந்து நின்றது. அமைதியானாள். 
மஹரிஷியின் செல்ல லக்ஷ்மி  இனி இல்லை.

அப்புறம் என்ன. தெரிந்த கதை தான்.  பக்தி ஸ்ரத்தையோடு  லக்ஷ்மிக்கு  ஈமக்ரியைகள் நடந்து. ஒரு கருங்கல் சிலையாக இன்றும் நாம் வழிபட காட்சி தருகிறாள்.

ரமணாஸ்ரமத்தில் வெகுநேரம் அவள் சிலை முன் நின்று  கண்மூடி  தியானித்தது நினைவுக்கு வருகிறது.





No comments:

Post a Comment