Thursday, October 14, 2021

PESUM DHEIVAM

 

பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J  K  SIVAN  --

86.   சென்னை  ஆலய  தரிசனம்  

மஹா  பெரியவா சென்னையிலிருந்து விஜய யாத்திரை தொடர்ந்தபோது வழியில் திருவொற்றியூர் சென்றார்.  இந்த ஆலயத்தில் தியாகேசன்  திரிபுரசுந்தரி செய்தார்.  இந்த ஆலயத்திற்கு பல யுகங்களுக்கு முன்பே ப்ரம்மா, வால்மீகி, வாசுகி ஆகியோர் வந்து   தியாகேசனுக்கு பூஜை செய்திருக்கிறார்கள்.  அப்பர், சுந்தரர், சம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் இது. 

சுந்தரர்  சம்பந்தமான ஒரு  விபரமும்  திருவொற்றியூரில் உள்ளது . பெரிய புராணத்தில்  இங்கு வாழ்ந்த  சங்கிலி நாச்சியார் சுந்தரர் திருமணம் பற்றி பாடல்கள்  உள்ளன. 
பட்டினத்தாருக்கு முக்தி கொடுத்த ஸ்தலம். 
2500 வருஷங்களுக்கு முன் வாழ்ந்த ஆதி சங்கரர்  இங்கே வந்து  திரிபுரசுந்தரி யின் உக்கிரத்தை சமணப்படுத்த  ஸ்ரீ  சக்ர ப்ரதிஷ்டை  பண்ணிய  க்ஷேத்ரம். தியாகேசன் ஆலய  கர்பகிரஹம் அருகே  ஆதிசங்கரர் விக்ரஹம்  இன்றும் உள்ளது.  ஆதி சங்கரர் நம்பூதிரி ப்ராமண சமுதாயத்தார் இன்றும் பூஜை செய்கிறார்களா   அரசாங்கம் வேறு யாரையாவது நியமித்துள்ளதா என்று தெரியவில்லை.  சைவ  ஆகம விதியின் படி பூஜைகள், வேதமார்கமாக நடக்கிறது. ஆதி சங்கரருக்குப் பிறகு பல  காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் இங்கே வந்து  நீண்ட காலம் தங்கி, தியானம்  ஜபம், ஆத்ம விசாரம் செய்து,  வழிபட்டிருக்கிறார்கள்.  தெற்கு மாடவீதியில் இருந்த  சங்கர மடம் சிதிலமானதை  மஹா பெரியவா 1933ல்  புதுப்பித்திருக்கிறார்.  இந்த மடத்தில்  ரெண்டு  ஆச்சார்யார்களின் அதிஷ்டானம் உண்டு.  61வது பீடாதிபதி  ஸ்ரீ  மகா தேவேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் (1704-1746) அதிஷ்டா னமும் ரெண்டாவதாக  55வது பீடாதிபதி  ஸ்ரீ  சந்திர சூடேந்த்ர  ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அதிஷ்டானம்.   மஹா பெரியவாவின்  விருப்பப்படி இந்த  ஆச்சார்யர்களின்  அதிஷ்டானங் களுக்கும்  நித்ய பூஜை நடைபெறுகிறது.

மஹா பெரியவா நான்கு மாதங்களுக்கு மேல் சென்னையில் வாசம் செய்தார் அல்லவா?  அப்போது நடுநடுவே,  மைலாப்பூர், கிண்டி,  மாம்பலம் , பார்க்டௌன், கோமளீஸ்வரன் பேட்டையில்  கோமளீஸ்வரர் கோயில், பார்க் டவுனில்   கச்சாலீஸ்வரர் ஆலயம், மல்லிகேஸ்வரர் ஆலயம், புரசை வாக்கத்தில் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்   திருவல்லிக்கேணி ஆலயங்கள் என்று பல  ஆலய தரிசனங்கள் செய்தார்.   அங்கெல்லாம் பக்தர்களுக்கு  அமோகமாக  பெரியவா தரிசனம் கிடைத்தது. 

 நான்  கோமளீஸ்வரன் பேட்டையில் சில வருஷங்கள் வசித்தபோது தினமும் கோமளீஸ் வரனை வணங்கி தியானம் செய்தது நினைவுக்கு வருகிறது. மற்றோரு அற்புத கோவில் எனக்கு பிடித்தது தமிழ் தாத்தா தினமும் சென்று வணங்கிய திருவொட்டீஸ்வரன் பேட்டை,  திரு வல்லிக்கேணியில் உள்ளது.  பட்டணம் என்று சொல்லும் பரக்டவுன் கோவில்களில் பரமேஸ்வரனை தரிசிக்கும் பாக்கியமும், புரசைவாக்கம் கங்காதீஸ்வரன் தரிசனமும்   எனக்கு கிடைத்தது.

சென்னையை விட்டு  புறப்படும்போது மஹா பெரியவாவின் உபதேசத்தில் சில துளிகள்: 
“உண்மையை பேசுங்கோ, பொய்  வேண்டாம், தர்மத்தை கடைப்பிடிங்கோ,   மாதா பிதா குரு ஆகியோர் தான் ப்ரத்யக்ஷ தெய்வங்கள். அவர்களை வணங்குங்கோ. வேதம் இதை தான் சொல்றது.
 நம்மமுடைய  தெய்வ வழிபாட்டுக்கு சௌகர்யமாக  ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே  ஆதி சங்கரர்  ஷண்மத ஸ்தாபனம் பண்ணி இருக்கிறார். அதில் முக்கியமானது சைவம் வைஷ்ணவம், சௌரம், சாக்தம், கௌமாரம், காணபத்யம் எல்லாம்  அவரவர்  உபாஸனா விருப்பத்தை பூர்த்தி செய்ய. 
சத்யம், தர்மம் பற்றி வேதம் சொல்வதை தான்  அவரது கேள்வி பதில் என்ற அருமையான புத்தகம் தான்  ''ப்ரஸ்னோத்ர ரத்ன மாலிகா''  

 இதை  தமிழில் ''காலடியில் கிடைத்த கை விளக்கு ''என்ற தலைப்பில்  ஆசார்யாளின் கேள்வி பதிலாக எளிதாக கொடுத்துள்ளேன்.  ஒரு பகுதியாக  ஆங்கிலத்திலும்  இந்த கேள்வி பதிலை அந்த புத்தகத்திலேயே தமிழ் தெரியாதவர்களுக்காக  எழுதி இருக்கிறேன்.

 இந்த  சிறிய  புத்தகம் வேண்டுமென்போர்  என்னை அணுகலாம் 9840279080 நம்பரில்  வாட்ஸாப்பில் உங்கள் பெயர் விலாசத்தை கொடுக்கலாம்.  நேரில் வருவோர் நங்கநல்லூரில் வந்து பெறலாம்.  பிற உயிர்களுக்கு உதவுவது, நன்மை புரிவது,  தான் ஸத்யம்,  நமது முன்னோர்  பின்பற்றிய  ஸத் காரியங்களை தர்மங்களை பிறழாது தொடர்வது தான் நமது தர்மம். மாதா பிதா  குரு  நமக்கு அம்பாள், ஈஸ்வரன்  தக்ஷிணாமூர்த்தி தான்.  கிருஷ்ண பகவானும்  குரு, கீதாச்சார்யன் அல்லவா?  இவர்களை எந்நேரமும்  மனதில் நினைத்து வழிபடவேண்டும்.  வேதம்  குறிப்பிடும்  யாக யஞங்ளை செய்ய வேண்டும்,  அனுஷ்டானங்களை விடக்கூடாது. எளிய  ஆடைகள் வஸ்திரங்கள் போதும். செலவினங்களை குறைத்துக் கொள்ளலாம். மிகுந்த பணத்தை ஏழை எளியோர்க்குதவ  செலவழிக்கலாம்.  எத்தனையோ பட்டினி கிடைக்கும் வயிறுகளுக்கு  ஒவ்வொருவரும்  வாரம் ஒருமுறையோ, மாதம் இருமுறையோ முடிந்தவரை கொஞ்சம்  அன்ன தானம் செய்யலாம்.
   வெள்ளி  செவ்வாய் கிழமைகளில் கிராம தேவதைகளுக்கு  நைவேத்தியம் செய்து கூழு , , கஞ்சி அங்கே உள்ள  ஏழைகளுக்கு  அளிப்பது ரொம்ப த்ரிப்தியை அளிக்கும் கார்யம்.  எந்த வகுப்பாக இருந்தாலும், எல்லோருக்கும் பக்தி அவசியம்.  பெண்களுக்கு உதாரணமாக இருந்த  திலகவதியார், மங்கையர்க்கரசி போன்றோரிடம் பொறுமை,  தொண்டு மனப்பான்மை கற்றுக் கொள்ளவேண்டும்.  பிழை, தவறு செய்த ஆண்களை திருத்தி உன்னதர்களாக்கியவர்கள் இவர்கள்.

ஒரு குடும்பத்தில் பக்தி வளர்வது அந்த வீட்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது. பெண்கள் நிச்சயம் இதை உணர்ந்து குல விளக்காக திகழ வேண்டும். இதனால் நமது பாரம்பரியம் தொடரும், சமூகம் ஒழுக்கத்தில் முன்னேறும், வாழ்வு வளம்பெறும்.''

இனி மஹா பெரியவா கும்பகோணம் மஹாமஹ வைபவத்துக்கு சென்ற விஷயம் அறிவோம்.


தொடரும் 

No comments:

Post a Comment