Thursday, October 7, 2021

PESUM DHEIVAM


 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN  --


83  பரோபகாரம் என்றால் என்ன?

இன்னிக்கு   நான்  இதை எழுதணும்னு தோணினதும், நீங்கள் இதைப் படிக்க நேர்ந்ததும்  ரொம்ப  பாக்யம் மட்டும் இல்ல, மஹா பெரியவா அனுக்ரஹம்  இருந்தால் மட்டும் தான் நிகழும். நான் ஏன் அப்படி உசத்தியாக சொல்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. 

1932ம் வருஷம்  அக்டோபர் மாசம் 25 அன்று  மஹா பெரியவா   இப்பவும்  மெட்ராஸ் லே இருக்கும் ஒரு பிரபல பள்ளிக்கூடமான  மைலாப்பூர்   PS  ஹை ஸ்கூலில்  இந்த அபூர்வமான  உபன்யாசத்தை நிகழ்த்தி இருக்கிறார். இன்னும் நிறைய இருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக தருகிறேன்.நீங்களும் படித்து மகிழ்ந்து மற்றவர்கள் தெரிந்தவர்களுக் கெல்லாம்  அனுப்புங்கள்.

பெண்ணாத்தூர் சுப்ரமணிய ஐயர் (1860 -1901)  வடாற்காடு, சித்தூரில்  பிறந்தவர்.இங்கிலிஷ் அரசாங்கத்தில் பெரிய உத்யோகங்களை வகித்தவர். நடுத்தர குடும்பத்தில் உதித்தவர்.சிறுவயதில் அப்பா காலமானதும் அம்மாவை காப்பாற்ற  மேலே படிக்கமுடியாமல் உத்யோகம் தேவைப்பட்டது. எப்படியோ  யார் உதவியுடனோ வக்கீலுக்கு படித்து பிரபலமான மைலாப்பூர் வக்கீல் ஆனார். இயற்கை பிடித்ததால் பெரிய அழகிய  தோட்டம் உருவாக்கி பரிசு பெற்றார். வாரிசு இல்லை. திரண்ட சொத்து.  அதை கல்விக்காக வழங்க மனம் வேண்டாமா?  41 வயதிலேயே  மரணம்.   இந்த உபன்யாசத்தில் இவரைப் பற்றியும் சொல்கிறார்  மஹா பெரியவா.

''இந்தியா ஏழைநாடு என்கிறார்கள். இல்லவே இல்லை. ஏழையாக்கியது நாம் தான். இருந்தும் இங்கு இருப்பது போல் பராபர எண்ணம் வேறெங்கும் பார்க்க இயலவில்லை.  மனதில் பிறர்க்குதவவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். அது ஸ்திரமாக இருந்தால் சௌகர்யப்பட்டபோது, வசதி வந்தபோது என்ன உதவ நினைத்தோமே அதை நிறைவேற்றலாம். ஆரம்பத்தில் இங்கே எவரும் எல்லோரும் கல்வி கற்க  பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் நிறுவவில்லை. வெள்ளைக்கார நிறுவனங்களிலும், கிருஸ்தவ கல்விக்கூடங்களில் தான் படித்தோம். இங்கேயே  பிறந்த ஒருவருக்கு ஒரு சிறந்த கல்விச்சாலை நிறுவ மனம் வந்து அது இறைவன் அருளால் செயலாகியது. அது தான் உங்கள் PS  ஹை ஸ்கூல்.  இங்கு கற்கும் மாணவர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நிறுவனர்போலவே  மனதில் பரோபகார எண்ணம் கொண்டு மற்றவர்க்கு உதவ ஸ்திரமாக தீர்மானம் செய்து கொள்ளவேண்டும். மரம் நடுவது, சின்ன கிணறு வெட்டுவது, கோயில்களுக்கு புனருத்தாரணம் செய்ய உதவுவது,  அன்னதானம் அடிக்கடி செய்வது, போன்றவை கூட பிறருக்கு உதவும். பிற உயிர்களுக்கு தர்மம் செய்ததாகும். செலவு என்பது வந்துகொண்டே தான் இருக்கும். கொஞ்சம் பணம் கிடைத்தபோது அதற்கேற்றாற்போல் அதை நலல வழியில் உபயோகிக்க இந்த ஸ்திரமான மனம் ரொம்ப அவசியம். அப்புறம் செய்த்துக்கொள்ளலாம் என்று ஆறப் போட்டால் இந்த பொல்லாத மனது வேறெதிலாவது அந்த பணம் செலவழிய  செய்துவிடும்.   நல்ல  காரியங்களை உடனுக்குடன் செய்து  விடவேண்டும்.  உங்கள் நிறுவனர்  பெண்ணாத்தூர்  சுப்ரமணிய அய்யர் தனது சொத்துக்களை வேறெதற்காவது செலவு செய்து இருந்தால்  இன்று நாம் சந்திப்போமா? அவர் என்றும் அமரராக புகழ் பெறுவாரா?  அவரைப் பற்றி  யாராவது நினைத்துப்பார்ப்பார்களா? 

இப்படி நாம் ஒவ்வொருவரும் தம்மாலான சிறு உதவியாவது, எந்த ரூபத்திலாவது பரோபகார சிந்தனையோடு புரிந்தால் உலகத்தில் துக்கம் துன்பம் என்பதே இருக்காது.  மற்றவருக்கு உதவ வேண்டும் என்று எண்ணுவதே  பரோபகாரம்.    உயர்ந்த எண்ணம். பகவானுக்கு பிடித்தது. துக்க நிவர்த்தி.

நமது இந்த ஜன்மாவில் நாம் ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு காரணத்துக்கு  பரோபகார சிந்தனையோடு ஈடுபட்டால் அது இகலோக க்ஷேமத்துக்கும் பரலோக இன்பத்துக்கும்  அஸ்திவாரமாக அமையும்''




No comments:

Post a Comment