Sunday, September 26, 2021

MUGAIYUR


ஒரு அற்புத  கோவில் தரிசனம்.   --    நங்கநல்லூர்  J K  SIVAN

 முகையூர் கனகபுரீஸ்வரர்  -  

ஒரு மாதத்தில்  திடீரென்று ஒரு  வாரக்  கடைசியில் ரெண்டு நாள்  கிட்டத்தட்ட நூறு கி.மீ. தூரத்தில் உள்ள,  அமைதியான  ஆளில்லாத கிழக்கு  கடற்கரை ஒர வீட்டுக்கு செல்வது வழக்க அனுபவம் பற்றி ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கிறேன்.  கடந்த  ரெண்டு தினங்களாக   சனி, ஞாயிறு  ரெண்டு நாளும்  கடற்கரை மணல், பட்டாம்பூச்சி, நீச்சல் குளம், என்ற வழக்கத்தை விட  ரெண்டு பழையகால கோயில்களையும் பார்க்க முடிந்தது.  ஒன்று ஏற்கனவே ரெண்டு வருஷம் முன்பு  தரிசித்த  ஆலயம்.   நான் இருந்த இடத்திலிருந்து  நான்கு கி.மீ. தூரத்தில்  உள்ளது  முகையூர் கிராமம். 
சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும்போது ECR எனும் கிழக்கு கடற்கரை சாலையில் தலை தெறிக்க வாகனம் ஒட்டி செல்லும் சிலர் ஆபத்தை விலைக்கு வாங்குகிறார்களே, கொஞ்சம் மெதுவாக சென்று வழியில் சில பழைய கிராமங்களில் அற்புத ஆலயங்கள் இருப்பதை நினைப் பதுண்டா? நானே பல முறை சென்றிருந்தாலும்  ரெண்டு  வருஷங்க ளுக்கு முன்பு  ஒருநாள்  முகையூர் எனும் கிராமத்திற் குள் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் மோட்டார் வாகனத்தில் பிரயாணித்து உள்ளே நுழைந்தேன். பகவான் அனுக்ரஹம் இல்லையென்றால் அவனை தரிசிக்க முடியாது. 

முகை என்றால் அரும்பு என்று பெயர். மலையமான் திருமுடிக்காரி எனும் கடையெழு வள்ளல்களில் ஒருவன் நிறைய திருக்கோயிலூர் ஆலயத்தில் பூஜைக்கு இங்கே இருந்து தான் அரும்பு மலர்களை தருவிப்பானாம். இங்கே கிராமத்தார் அநேக பூந்தோட்டங்கள் வைத்து இருந்தது தான் காரணமாம்.

கொஞ்சம் கொஞ்சமாக கிருத்துவ மதம் இங்கே பரவ ஆரம்பித்த காலத்தில் 125 வருஷங்களுக்கு முன்பு செயின்ட் சேவியர் காலத்தில் இங்கே கிருத்துவ மத பிரச்சாரங்கள் அதிகமாக இருந்தது. முகையூரில் கிறித்தவர்கள் அதிகம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். முகையூர் மஹிமை மாதா கோவில் இருக்கிறது. அதற்குமுன் 2000 வருஷங்களுக்கு முன் இருந்த கனகபுரிஸ்வரர் ஆலயம் சிதைந்து பிறகு விக்ரஹங்கள் மண்  மேடிட்டு மறைந்ததற்கும் காரணம் உண்டா இல்லையா?  அந்த ஊர் மக்கள்  எந்த  காரணமும் தேடாமல் மண்ணில் மறைந்த கனகபுரீஸ்வரரை மண்மேட்டிற்குள் தேடி கண்டுபிடித்தார்கள். பல்லவர்கள் காலத்தை சேர்ந்தவர்  இந்த  கனகபுரீஸ்வரர் என்று காதில் சேதி விழுந்தது.

முகையூர் சென்னையிலிருந்து 87 கிமீ தூரம் ECR சாலையில். புதுச்சேரியிலிருந்து 62 கி.மீ. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூர் வட்டத்தில் உள்ள கிராமம்.

ரெண்டு  மூன்று வருஷங்களுக்கு முன்பு தான் இந்த ஆலயத்தின் பிரதான மூல விக்ரஹம் மண்ணிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.  அதிலிருந்து  கனகபுரீஸ்வரர் தலைமேல்  ஒரு சிறு  ஓலைக் கூரை தான்  ஆலயம் என்று  சில வருஷங்கள் வரை நீடித்தது.,  அப்புறம்  யாரோ சிலரின் முயற்சியில் இது தனியார்  ஆலயமாக பெரிதாக எழுந்துள்ளது.  அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. அறங்காவல் துறைக்கும்  தமிழக  ஆலயங்களுக்கும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் போட்ட முடிச்சு உறவாக தான் இருக்கிறது.  வளர்ச்சியை விட  க்ஷீண நிலை வேகமாக வளர இந்த உறவு போதும்.   
2019ல்  ஜூலை 8 அன்று  காலை  பத்துமணிக்கு   முதன் முதலில்  நான் சென்றபோது முகையூரில் எங்கு பார்த்தாலும்   நிறைய கலர்  கலராக கொடிகள் கட்டப்பட்டு, ECR  தெருவிலேயே  நிறைய ஜனநடமாட்டம்.   விசாரித்ததில் அங்கே ஒரு அங்காளம்மன்  கோயிலில் கும்பாபிஷேக விழா என அறிந்தேன்.  சில சிவாச்சாரியார்கள்  எங்கிருந்தெல்லாமோ வந்து  கூடி  யாகசாலையில்  மும்முரமாக இருந்தார்கள். வேத  மந்திரம்  ECR தெருவெல்லாம் ஒலிபெருக்கியில்  அம்மன் பாடல்களுடன்  கலந்து  ஒலித்தது.  அண்டை அசல்  ஊர் ஜனங்களும்  நிறைந்து காணப்பட்டுமுகையூரில் ஜனத்திரள். எல்லோருக்கும் அன்னதானம் உண்டே.  
அம்மன்  ஆலயத்திலிருந்து  ஒரு  கி.மீ. தூரத்தில் உள்ளே தான் கனகபுரீஸ்வரர் சிவாலயம்.  வெகுகாலம் ஆலயம் சீரழிந்து,   கரைந்து,  மண்மேடிட்டிருந்த  இந்த   பல்லவ  கால  கனக புரீஸ்வரருக்கு  அற்புதமான பெரிய ஆலயம்  மீண்டும் கிடைத்தது.  .பக்தி  என்பது  நல்லகாலமாக வசதி படைத்த மக்கள்  சிலர்  மனதில்  இன்னும் நிறைய  பதிந்து இருக்கிறது.  இவர்கள் தான் உண்மையில் அறங்காவலர்கள்.  மாதத்திற்கு ஒருமுறை வந்து சீல் வைத்த உண்டியலை காலி செய்ய மட்டும் வருபவர்கள் அல்ல.  இத்தகைய நல்ல  மனம் கொண்ட  பக்தர்களாலேயே  பல ஆலய  புணருத்தாரணங்கள்  சீரமைப்புகள்   நடைபெற்று  காலத்தால் சிதைந்த பல ஆலயங்கள் புத்துரு பெறுகிறது.   முகையூரில் இதை அனுபவித்தபோது மனதுக்கு ரொம்ப திருப்தி. 
கனகபுரீஸ்வரர்  அழகான  பெரிய லிங்கம். அம்பாள் ஸ்வர்ணாம்பிகை. வெகு அழகாக நேரில்  எதிரில்  நிற்பது போல்  தரிசனம் கொடுக்கிறாள்.  தக்ஷிணா மூர்த்தி, வள்ளி தேவசேனாபதி சமேத ஷண்முகம் , காலபைரவர், ஆதி கால விநாயகர் புது விநாயகர் இருவரும் உள்ள சந்நிதி. லிங்கோத்பவர் , பூர்ணா புஷ்களா சமேத சாஸ்தா, சண்டிகேஸ்வரர் கோஷ்டங்களில் சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.   ரெண்டு வருஷம் முன்பு  நிர்வாகிகளால்  நியமிக்கப்பட்ட ஒரு  மராத்தி அர்ச்சகர் தமிழ் தெரியாமல் பக்தி  ஸ்ரத்தையோடு மந்திரங்கள் சொல்லி ஆரத்தி காட்டினார். இன்னும் கொஞ்ச நாளில் தமிழும் கற்று இங்குள்ள பழக்கங்களும் ஒட்டிக்கொள்ள நிறைய வாய்ப்புண்டு.
ஆகவே  பேச்சு வாக்கில்  ஒரு  முகையூர்வாசி நண்பரோடு பேசும்போது  என்னை முகையூர் அழைத்துச்செல்ல முன்வந்தார்.  ரெண்டு நாள் முன்பு  அவரது  ஸ்கூட்டரில் பின்னால்  உட்கார்ந்து  கொண்டு செல்லும்  வாய்ப்பு கிடைத்தது.  ஆபத்தான விஷபரிக்ஷை.  ECR  தெரு எமபட்டினம். குருகலான தெருவில்  இருபக்கமும் எதிரெதிராக வேகமான வண்டிகள் பறக்கும் இடம்.  சிலர் போதையிலும் இருப்பார்களாம்.  சாயந்திரம்  ஆறு மணிக்கு சிறு  மழைத்துளிகள் இன்னும் மழையாக வலுக்காவிட்டாலும்  பார்வையை மறைத்தது.   சாலையின் ஓரங்கள் ஒதுங்க முடியாத பள்ளங்கள் வேறு. ஸ்கூட்டர் ஒட்டியும் ஒரு வயதானவர். 
 முகையூரில்  கனக புரீஸ்வரர் ஆலயத்தில் நான் சென்றபோது  என்னைத்தவிர வேறு  எவருமில்லை.  வெறிச்சோடி இருந்தது. 
கற்பக நந்தி ஜம்மென்று இருக்கிறார். எங்கும் இல்லாதபடி தனது முன்னங்காலை உள்ளடக்கி மடக்கி  கொம்புகளே இல்லாத நந்தி. இப்படி ஒரு நந்தி அடிக்கடி பார்க்க முடியாதே.  காதை  கழுத்தோடு ஒடுக்கி, மந்திரங்களை கேட்பதால்  நந்திகேஸ்வரர் கண்கள் அரை மூடி தியானத்தில் காண்கிறார்.  நந்தியின் நாக்கு நுனி   மூக்கின்  ஒரு துவாரத்தில் நுழைந்துள்ளது. 
பதினைந்து நிமிஷம் நின்று அவர் அருகே தியானம் மனதார  தியானம் செய்தேன்.  அப்போது  மூக்கில் ஒரு துவாரத்தில்  மட்டும்  மூச்சு உள்ளே சென்று ஸ்வாசம் அதிலிருந்து  மட்டுமே உள்ளும் வெளியுமாக வருவதை உணர முடியுமாம்.  இது  நிறைய  பேர் அனுபவமாம் .  பக்திக்கு  கடவுள்  நம்பிக்கை மட்டுமே வேண்டும்.  நம்பிக்கையை  பரீக்ஷித்து பார்ப்பது பக்தனுக்கு தேவையற்றது.

இந்த ஆலயத்தின் மற்றொரு அற்புத விக்ரஹம் பழைய விநாயகர். மூன்று தும்பிக்கை கொண்டவர்!! வழக்கமான தும்பிக்கையோடு இரு பக்கங்களிலும் இரு தும்பிக்கைகள் வஸ்த்ரத்தால் மூடப்பட்டு கண்ணுக்கு தெரியவில்லை. அபிஷேகத்தின் போது பார்க்கலாமாம். 
ஆலய  வாசலில் ஒரு அரசமரத்தடி விநாயகர் அருகே ஒரு குழாய். ரெண்டு எவர் சில்வர் குடங்கள் அவர் அருகே மேடையில் வைத்திருக்கிறார்கள். யார் என்ன வேண்டுகிறோமோ அதை வேண்டிக் கொண்டு மனதில் நம்பிக்கையோடு  ஸ்ரத்தையாக அந்த குடத்தில் உள்ள  நீரை கொஞ்சம் அந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து அருகே வைக்கப்பட்டிருக்கும் சந்தன குங்குமத்தை அவருக்கு இட்டுவிட்டால்  21 நாளில் மீண்டும் வந்து அவரை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறி யிருக்குமாம். இது ஒரு புது விஷயம். இதுவரை நான் எந்த ஆலயத்திலும் கேள்விப்படாதது.

இந்த நாடு, மக்கள்  எல்லாமே தர்மம்  பக்தி  கொண்ட  நல்ல தலைவர்களால் நீண்டகாலம் ஆளப்பட்டு எல்லோரும் சுபிக்ஷமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த விநாயகருக்கு கொஞ்சம் அபிஷேகம் செய்து சந்தன குங்குமம் இட்டேன். எல்லோரும் நன்றாக இருந்து நாடும் நன்றாக சுபிக்ஷமாக இருந்தால் எனக்கும் தானே அந்த பலன்.

தஷிணாயன காலத்தில் சூரியன் இங்கே காலை 6.00மணிக்கு ஸ்ரீ கனகபுரீஸ்வரரை வழிபடும் காட்சி அப்போது வருபவர்கள் நேரில் கண்டு அதிசயிக்கலாம். இந்த ஆலயத்தை பற்றி ஒரு சிறு வீடியோ காட்சி  வலை தளத்தில்  கிடைத்தது அதையும் இணைத்திருக்கிறேன். https://www.youtube.com/watch?v=vVRu2dqCb20    முகையூர் செல்லாதவர்கள், செல்ல முடியாதவர்கள் கனகபுரீஸ்வரர் ஆலயத்தை இருந்த இடத்திலிருந்தே தரிசிக்க ஒரு நல்ல வழி அல்லவா?

No comments:

Post a Comment