Wednesday, August 18, 2021

SRI RAMANUBHAVAM

 

ஸ்ரீ  ரமணானுபவம் --   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்ரீ ரமண  மகரிஷி,  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்,  தபோவனம் ஸ்ரீ ஞானான
ந்தர்  ஆகியோர்  வாழ்ந்த காலத்தில் திருவண்ணாமலை பகுதி எவ்வளவு அற்புதமான புனிதமான  ஸ்தலமாக இருந்திருக்கும் என்று கற்பனை  எழும் போது  அப்போது வாழ்ந்த பக்தர்கள் எவ்வளவு புண்யம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று மனது வியக்கிறது.  நாம்  அப்போது அங்கு இல்லாமல் போய் விட்டோமே என்று மனம் ஏங்குகிறது.  


ஒரு சம்பவம் சொல்கிறேன்.
 
ஸ்ரீ ரமண மகரிஷி  திருவண்ணாமலையின் மேல் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசித்த காலத்தில் ஒருநாள் ஒரு மாடு மேய்க்கும் பையன் அவரைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்டான்.

 '' சாமி,   நீங்க இந்த மொட்டைப் பாறை மலை  இருக்கீங்காலே,  மேலே ஒண்ணுமே  இல்லையே.  எப்படி என்னத்தை சாப்பிடுறீங்க?''

சிரித்துக்கொண்டே ரமணர் பதில் சொன்னார்.

 ''என்ன செய்யறது பையா. உன்னை  மாதிரி யாராவது ஏதாவது கொண்டுவந்து கொடுத்தால் தான் சாப்பிட முடியும். '' என்கிறார்.

''சாமி நான் ஒருத்தர் கிட்டே வேலை செய்றேன். அவரு சம்பளம் இன்னும் போடலே. குடுக்கலே. கேட்டேன். ரண்டு மூணு மாசத்தில் ஒன்னரை ரூபா சம்பளம் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை உங்களுக்கே தரேன்''

ஆஹா  என்ன  தாராளமான மனசு அந்த படிக்காத சிறுவனுக்கு.  நிறைய  கோடி கோடியாக பணம் உள்ளவர்களுக்கு அடுத்தவர்களும்  பாவம்  பசி தீர வாழவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்களே.   அப்படி ஒரு எண்ணமே மனதில் இல்லாமல் துடைத்து வைத்திருக்கிறது. எண்ணம் இருக்கும்  ஆனால் கொடுக்க மனசு வராது.   எண்ணம் வந்து கொடுக்க மனசு இருந்தாலும் கை  கொடுக்காது.  சில்லறைகளை மட்டும் வீசும். அப்படி சில்லறைகளை வீசினாலும் தடுக்க  ஆயிரம் கரங்கள்.  இது நம் உலகம்.
 
ஒரு இருளர் பிரிவு பையன். ஒருநாள் ஸ்கந்தாஸ்ரமத்தில் மகரிஷியை பார்த்து ஏனோ தெரியவில்லை 'கோ' வென்று அழ ஆரம்பித்தான்.

''ஏன் அழறே,  சொல்லு.  என்னாலே முடியுமா உனக்கு உதவ என்று பார்க்கிறேன்''
 பகவான் கேட்டவுடன்  அந்த பையனின்  அழுகை சுருதி  இன்னும்  உச்சிக்கு  எகிறியது . பெரிதாக அழுதான்.

பக்கத்தில் மகரிஷியின்  பக்தர் பழனிச்சாமி இருந்தார். அவர் கேட்டார்.

 ''அடே பயலே ஏண்டா இங்கே வந்து அழறே. வயிற்று வலி, மார்வலி, மண்டை வலி ஏதாவதா? பசியா? விஷயம் சொல்லு?''

பையன் மகரிஷியை கை நீட்டி காட்டி சொன்னான்:   
 ''அதெல்லாம் இல்லீங்கோ, இவரப் பார்த்தா, அய்யோன்னு பாவமா இருக்குதுங்க. அழுகையா பொங்கி பொங்கி வருதுங்க'' என்றான்.

பகவான் சிரித்தார்.  
''அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. அவன் உள்ளம் இளகி விட்டிருக்கிறது. உள்ளே அவரது கருணை பாய்ந்து புகுந்து அவனது மற்ற உணர்வுகளை விரட்டி முழுதுமாக அன்பால் நிரப்பி இருக்கிறது. அது ஆனந்தமாக வெளியே ப்ரவாஹித்திருக்கிறது.  சிலருக்கு  ரொம்ப சந்தோஷமாக இருந்தால் அழுகை பொங்கி பொங்கி வரும்.  சிலருக்கு  ஆனந்தமான நேரத்தில் அழுகை வரும். நல்ல சேதிகளை கேட்டால் பேச்சு வராமல் கண்ணீர் வடிப்பவர்களை பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் மகரிஷி ரமணர்  ஆஸ்ரமத்தில்  ஒரு சிஷ்யனிடம் ''எனக்கு எழுத ஒரு நோட்டு கொண்டு வந்து தருகிறாயா?'' என்று கேட்டார். சிஷ்யன் மறந்து போனான். அதற்கு பிறகு மகரிஷி நோட்டை பற்றி யாரிடமும் சொல்லவில்லை, மறுபடியும் எவரையும் கேட்கவில்லை.
மூன்று நாளுக்கு பிறகு ஒரு அந்த ஊர் ஜில்லா போர்டு இன்ஜினீயர் மகரிஷியை தரிசிக்க வந்தவர் கையில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தோடு வந்தார். மகரிஷியிடம் பவ்யமாக வணங்கி நீட்டினார்.
''நோட்டு கேட்டீர்களே இந்தாருங்கள்'' என பவ்யமாக வணங்கிக் கொடுத்தார்.
''உன்கிட்ட நான் எப்போ நோட்டு கேட்டேன்?''
''மூணு நாள் முன்னே என் கனவிலே நீங்க வந்து என்னை கேட்டீங்க சாமி''
''நான்  உன் சொப்பனத்தில் வந்தேனா? என்ன கேட்டேன்?''
''ஒரு நோட்டு புஸ்தகம் வேணும்ன்னு''
''அவ்வளவு தானா?''
''இல்லே, அது எப்படி இருக்கணும். நீள அகலம், பக்கங்கள், என்ன மாதிரி இருக்கணும்'' என்று சொன்னீங்க. அதே மாதிரி தேடி கண்டுபிடிச்சு கிடைச்சு கொண்டு வந்திருக்கிறேன் சாமி ''

மகரிஷி மறந்து போன சிஷ்யனைக் கூப்பிட்டார்.

 ''இதோ பார் நான் உன்னைக் கேட்டா இவர் கொண்டு வந்து தந்ததை'' என்கிறார். சிஷ்யனுக்கு மறந்து போனது தேள் கொட்டியது.  அப்போது தான் அவர் நோட்டு வாங்கிண்டு வா என்று சொன்னது ஞாபகம் வந்தது. துடித்தான். 

இன்னும் சிலது கூட இருக்கிறது. அப்பப்போ  ஞாபகம் வரும்  வந்தால் சொல்கிறேன்.

No comments:

Post a Comment