Tuesday, June 1, 2021

chaitanya

 


நான் உங்கள் வீட்டுப் பிள்ளை  - நங்கநல்லூர்   J .K. SIVAN


எங்கள் வீட்டு பிள்ளை, பிள்ளையோ பிள்ளை   என்றெல்லாம் சொல்லும்போது நமக்கு சினிமா ஞாபகம் தான் வருகிறது. ஒரு மஹான் சொல்லி இருக்கிறார் இந்த வார்த்தையை. அதைப்பற்றி தான் இந்த கட்டுரை.

சைதன்யர் வாழ்ந்த காலத்தில் இது நடந்தது வங்காளத்தில்  ஸ்ரீவாஸ் என்ற பக்தர் வீட்டில்.சைதன்ய மகா பிரபு தனது சிஷ்யர்களோடு அந்த வீட்டில் கிருஷ்ண பஜன் நடத்திக் கொண்டு இருந்தார். அனைவரும் பக்தி வெள்ளத்தில் மூழ்கி ஆனந்தமாக ஆட்டமும் பாட்டமுமாக கிருஷ்ணனோடு ஒன்றி இருந்தனர். ஸ்ரீவாஸ் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி மெதுவாக அவரை அணுகி உள்ளே வருமாறு அழைத்தாள்.

ஸ்ரீவாசின் பிள்ளைக்கு காலரா. சற்று நேரத்தில் மரணம் நிச்சயம்  என்ற நிலை.   ஸ்ரீவாஸ் மனைவி அழுகிறாள்.

"இது இறைவனின் முடிவு. இனி நம்மால் ஆவது ஒன்றும் இல்லையே. ஒரே ஆறுதல் அவன் உயிர் பிரியும் நேரத்தில் நமது வீட்டில் சைதன்ய பிரபுவின் கிருஷ்ண கானம் நடை பெறுகிறது. அதைக்  கேட்டு அவன் உயிர் பிரிய அவன்  கொடுத்து வைத்தவன். அவ்வளவு தான்" 

ஸ்ரீவாஸ் கண்களில் நீர் ஆறாகப் பெருக மனம் ஒடிந்து இதை சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். பிறகு தைர்யமாக கண்களை துடைத்துக்  கொண்டு ஒன்றுமே நடவாதது போல் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் வீட்டில்  கூடத்துக்கு வந்து சைதன்யர் நடத்திக்கொண்டிருந்த   பஜனையில் கலந்து கொண்டு ஆடிப் பாடலானார்.

சில மணி நேரங்களில் அந்த பையன் இறந்து விட்டான் அங்கிருந்த சிலருக்கு விஷயம் கசிந்து விட்டது. ஒவ்வொருவராக பஜனையை மெதுவாக நிறுத்த ஆரம்பித்தனர். வழக்கமாக   எல்லோரும்  ஒலிக்கும் குரல்கள்  ஏன் குறைந்து விட்டது. ஓரிருவர் மட்டுமே  பஜனையில் பங்கேற்கிறார்கள்?

"ஏன் இன்று கிருஷ்ணனின் கானாம்ருதம் வழக்கம் போல் இல்லையே " என  சைதன்யர் 
பஜனையை நிறுத்தி மனதில் வருத்ததோடு கேட்கிறார்.  ஸ்ரீவாஸ் அவர்  எதிரே ஒன்றும்  பேசாமல்  நின்று கொண்டிருந்தார்.

ஒரு பக்தர் துணிச்சலாக    "பிரபு,  இன்று  ஸ்ரீவாஸ்  வீட்டில் இப்போது  ஒரு துக்கமான நிகழ்வு நடந்திருக்கிறது " என்கிறார்.

"அப்படியா? இங்கே என்ன நடந்தது சொல்லுங்கள்" என்று  சைதன்யர்  ஸ்ரீவாசை கேட்டார்.

''சுவாமி, கிருஷ்ண பரமாத்மாவின் பஜனாவளி நடக்கும் இடத்தில் எந்த சோகம் துக்கம் நெருங்கமுடியும் அதெல்லாம் ஒன்றுமில்லை" என மழுப்புகிறார் ஸ்ரீவாஸ்.

அருகில் நின்ற ஒரு பக்தர் சும்மா இருக்கவில்லை :
“ இல்லை  சுவாமி, ஸ்ரீவாசுடைய ஒரே மகன்   ஒரு  மணி நேரம் முன்பு மரணமடைந்துவிட்டான்."

"என்ன,  உங்கள்  மகன்   இறந்துவிட்டானா? ஹே கிருஷ்ணா மஹா ப்ரபோ" என்ற மகான் சைதன்யர் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர்.
"எங்கே அந்த பையனின் உடல்?"  
அந்த பையனின் உடல் கிடத்தி இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.    பாயில் பையனின் அசைவற்ற உடல்.

"என் அருமை செல்வமே என்ன நடந்தது சொல்? என்று சைதன்யர் அந்த உடலை கேட்டார்

"சுவாமி, நான் இந்த உடலை விட்டு மேன்மையான இடம் செல்ல தாங்கள் உதவினீர்கள். பிரபு, என் ஆத்மா தங்கள் சரணார விந்தங்களில் என்றும் நிலைத்திட அருளவேண்டும் "   என்ன ஆச்சர்யம்   இறந்துபோன பையன்  பேசுகிறான்.  அவனது   ஆத்மா பரமானந்தத்தோடு ஒன்று சேருவதற்கு முன் உடலிலிருந்து விடைபெற்றது.

ஸ்ரீவாஸ்- மாலினி தம்பதிகளை அணைத்துக் கொண்டு சைதன்யர் கேட்டார்;

"எதற்கு வருத்தம் இனி உங்களுக்கு, இதோ உங்கள் முன்னால் நான் நிற்கிறேனே ''நான்  உங்கள் வீட்டு பிள்ளை.  உங்கள் மகனாக என்னை ஏற்று கொள்வீர்களா?"

No comments:

Post a Comment