Friday, April 16, 2021

THANK YOU KRISHNA

 

  • நன்றி கிருஷ்ணா, நன்றி    -   நங்கநல்லூர்   J K  SIVAN 


  • கிருஷ்ணா,  நான்  பெரும்  பணக்காரனடா, உன்னருளால்.  ஏன் தெரியுமா?

  • என் வீட்டில் எனக்கு அடுத்த வேளைக்கும் தேவையான  உணவு இருக்கிறது.  நாளைக்கு  மாற்றி போட்டுக்கொள்ள  ஒரு  சொக்காய்,  இடுப்பில் சுற்றிக்கொள்ள  ஒரு   வேஷ்டி இருக்கிறது.  நாளை இரவும் தூங்க  எனக்கு மேலே  ஒரு கூரை இருக்கிறது. சுகமாக தூங்க ஒரு  கடகடா  மின் விசிறியும் இருக்கிறதே.   உலகத்தில்  இதெல்லாம் இல்லாமால் தடுமாறிக்கொண்டு  முக்கால்வாசி பேர் இருக்கிறார்களே.   அவர்களை பார்க்கும்போது  நான் பணக்காரன் இல்லையா?

  • இன்னொரு காரணம் சொல்லட்டுமா?  இப்போது தான் கொரோனாவால் வெளியே போக முடியவில்லை. எப்போதும் என் மணி பர்சில்  இருபது  முப்பது ரூபாய், சில்லறைகள் இருக்கும்.  எங்கு வேண்டுமானாலும் நடந்து போய்  ஒரு  வாழைப்பழம் வாங்கி கூட  சாப்பிட முடியும். வேர்க்கடலை பத்து ரூபாய்க்கு வாங்கி கொரித்துக்கொண்டே நடக்க முடியும்.  இந்த அளவு பணம் இருப்பதால்  உலகத்தில்  18 சதவிகித  செல்வந்தர்களின் நானும் ஒருவன் என்று  பொருளாதார குறிப்பு சொல்கிறதே.  எனக்கு பெருமையாக இருக்கிறது.

  • இன்று வெள்ளி,  ஞாயிறு வரை தாண்டமுடியாத எத்தனையோ பேரை  விட  நோய் நொடியின்றி மெதுவாக நடக்கும் நான்  அதிர்ஷ்டக்காரன் தான்.  இருமல் இருக்கிறது. இருந்து தொலையட்டும். உயிருக்கு அதால்  ஆபத்தில்லையே.

  • நண்பர்களே,  நீங்கள் எழுதும் கட்டுரைகளை வாசிக்க கண் இருக்கிறது.  கொஞ்சம் பெரிய  எழுத்தாய்  அளவு  FONT  மாற்றி  கணினியில் படிக்கிறேன்.  அடடா  உலகத்தில்  மூன்று  பில்லியன் மக்களுக்கும் மேலாக  எதையும் பார்க்க முடியாத, படிக்க முடியாதவர்கள்,  மனநோய் காரணமாக  படிக்க புரிந்து கொள்ள முடியாதவர்கள் எல்லாம்   இருக்கிறார்களே.   அவர்களை விட  நான்  அதிர்ஷ்டக்காரன் இல்லையா?

  • இதெல்லாம் பார்க்கும்போது  கிருஷ்ணா  எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?

  • ஏன்  நிறையபேர்  எப்போதும்  ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  தாங்கள் ரொம்ப துன்பப்  படுவதாக அழுகிறார்கள்.    உனக்கு நன்றி  சொல்ல  ஆயிரமாயிரம்  விஷயங்கள் இருக்கிறதே.  மேலே  சொன்னது  துளியூண்டு தானே.  யோசித்தால்  இன்னும் ஆயிரமாயிரம் விஷயங்கள்  உனக்கு   நன்றி சொல்ல  விஷயங்கள் இருக்கிறதே. நன்றி டா கிருஷ்ணா. 

  • எங்கோ  சினிமாக்காரர்கள்,  கிரிக்கெட், விளையாட்டுக்காரர்களை, அரசியல் வாதிகளை யெல்லாம்
  •  போட்டோவுக்கு   மாலை போட்டு,   கட்டவுட்     CUTOUT  வைத்து பால் அபிஷேகம் பண்ணுகிறார்கள், ஒரு 

  • கணமாவது  எங்கோ பனிமலையில் நமது நாட்டுக்காக  எந்நேரமும் இரவு பகல் மரணத்தை எதிர்நோக்கி, துளியும் அஞ்சாமல் நம் எல்லைகளைக் காக்கும் அந்த  முகமறியாத   பச்சை உடை ராணுவ வீரர்களை நினைத்து வணங்குகிறோமா?     நம் உயிர், உடமை , சுதந்திரத்தைக்  காக்க தானே  அவர்கள்  கண் விழித்து காவல் புரிகிறார்கள்.  ஜெய் ஹிந்ந்   பாரதமாதா கி ஜெய் .. ராணுவ வீரர்களே உங்களுக்கு கோடி நமஸ்காரம்.

  •  ஆங்கிலத்தில்   ஒரு வாசகம் உண்டு.  IGNORANCE  IS  BLISS  என்று.  அறியாமை  சந்தோஷமாக இருக்க   ஒரு ஆசிர்வாதமா?   அப்படியென்றால்  ஒன்றுமே தெரியாவிட்டாலும், ஏன்  அநேகர்  சந்தோஷமாக இல்லை?  நான்  உலகத்தில் ஒருவனாக இருந்தாலும் கிருஷ்ணா  நீ தான்  என் உலகமே.

  •  நன்றி ஒன்று தான் என்னிடம் இருக்கிறது உனக்குத் தர.  என் இதயத்தை என்றோ தந்துவிட்டேன், அதில் தான் நீ குடியேறிவிட்டாயே.

  • No comments:

    Post a Comment