Friday, April 30, 2021

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

''நிர்குண உபாசனை ''


இன்றும்  எனக்கு  ஒரு  ஆனந்தமான அனுபவம்.  மஹா பெரியவா படமாக  என் முன்  அபயஹஸ்தத் தோடு  அருளாசி வழங்கி கொண்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் முறை அவரைப் பார்த்துக்கொண்டே   இருக்கிறேன். கணக்கில் அடங்காது. எண்ணிக்கை இல்லை.  ஒரு விஷயத்தை, இதுவரை  நான் அறியாததை என் நண்பர்  ஸ்ரீ ராம் எனும்  பெரியவா பக்தர்  எனக்குக்  காட்டிக்கொடுத்ததை  என்றும் மறவேன்.  நான் பார்த்துக்கொண்டிருக்கும்  மகா பெரியவா படத்தில்  அவர் முகம் அருகே வெள்ளையாக மங்கலாக  ஏதோ சுவரோ, வான்வெளியோ, ஏதோ  தெரிகிறது. அதை இடை இடையே  செடிகொடிகள்  மறைத்திருப்பது போல் தெரிகிறது. 

''அதை உற்றுப்பாருங்கோ  என்ன தெரிகிறது ? -- ஸ்ரீராம்.   
உற்றுப்பார்த்தேன். 
''ஒன்றுமே தெரியவில்லையே ஸ்ரீ ராம்''
''இப்போ பாருங்கோ,  பக்கமா சாய்ந்துகொண்டு  தாடி மீசையோடு  பெரியவா தம்பி  சிவன்சார் தெரிகிறாரா?????''
''  ஆமாம்  சார்..என்றேன்...  (படம்  இணைத்திருக்கிறேன்.  சிவன் சார் முகம்  கலரில்  மார்க்  பண்ணி இருக்கிறது)
இது   ஒரு கண்முன் இருந்தும் தெரியாத சமாச்சாரம்.  மஹா பெரியவா விஷயங்கள் எல்லாமே அதுபோல் தான். எதையும் மேலெழுந்தவாறு நாம்  கவனிக்கிறோம், பார்க்கிறோம். ஊன்றி கவனிக்கும் சக்தி இருந்தும் உபயோகிப்பதில்லை.
பரமேஸ்வரன் போல் நமக்கு  நெற்றிக்கண் இல்லையென்றாலும் ஞானக்கண் என்று ஒன்று உள்ளே இருக்கிறது. அதை நாம் எவருமே யூஸ் பண்ணுவதில்லை.  

இதோ மஹா பெரியவா சொல்வதைக் கேளுங்கள்: 

''இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வச்சிருக்கு.   "இதைப் பார், மஞ்சளாக இருக்கிறது" என்று நான் சொன்னால் இது மஞ்சள் தான்  என  பார்க்கிறீர்கள்.  அதற்குமேல் மனஸில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் ( reaction ) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக  இருக்கு ''  என  நான்  சொன்னால் நீங்கள் மனஸில் ஒர் ஆட்சேப உணர்ச்சியோடு  அதை பார்ப்பீர்கள்.   இதை  மஞ்சள்,   சிவப்பு என்றோ  ஒன்றும்  நான் சொல்லாமல், "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது.    மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனஸை ஒருமுகப்படுத்தினால் அப்படி பாவிக்கவும் முடிகிறது.

உபாஸனை  என்பது  இப்படி தான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாக பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுப்பது  தான்  உபாஸனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையில் மஞ்சள் நிறம் என்பதுபோல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது.   


பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து  என்றால்  அப்புறம்  ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்காது.   இது நமக்குப் புரிபடாத வஸ்து  என்று  நகர்வார்கள்.   வாழைப்பழத்தைச் சிவப்பு என்ற போது மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது. 

'இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படி உலகத்தை நடுத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?' என்று  கேட்க தோன்றும். ஆனால், ஒரு சிலையைக் காட்டி, "இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்" என்றால் அப்படி பாவிக்க முடிவதாகத் தோன்றும்- வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல். ஆனால் சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத் தெரிவது  போல் பரமாத்ம லக்ஷணம்  நமக்குத்  தெரியாதே! 

அதனால்  கடவுள் விக்ரஹத்தை   'ஏதோ பெரிய வஸ்து என்று  கொஞ்சம்  எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழ ஊன்றி நிற்க முடியாது. 

தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே ஒர் காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீ ரூபத்தில் விக்கிரகம் செய்து,     "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனசு அதை நன்றாகக்   க்ரஹித்துக்கொண்டு அப்படியே  அதில்  ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.

குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யாண  குணங்களும்  உண்டாகிறது.  ரூபமற்ற பரமாத்மாவிட மிருந்துதான் சகல உருவங்களும் தோன்றின.  அந்தந்த குணத்துக்கு அநுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற் றோடு திவ்ய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசு ஈடுபடுகிறது.  புரியாத பரமாத்ம தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில் உபாஸிக்க முடிகிறது.

சகலமும்  சர்வமும்  ஆன பரமாத்மா, அவரை  நாம்  எந்த ரூபத்தில் உபாஸித்தாலும்  அந்த உருவத்தில்  அருளுகிறார்.  படிப்படியாக நம் மனநிலையை உயர்த்துகிறார். 
கடைசியில் மனஸே இல்லாத, மனஸைக் கடந்த  ஒரு  நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த  நிர்குண பரமாத்மாவை உள்ளபடி அநுபவிக்க நம்மால் முடியும்.  ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருப்பதால்  "பரமாத்மா எல்லாம் கடந்தவர்"   என்பதில்  பிடிப்பு இல்லை.  ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமான பரமாத்மாவை உள்ளபடியே   நம்மால்  அநுபவிக்க முடியும் . மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மனஸுக்கு வேலை இல்லை .   மனசுக்கு வேலை கொடுத்து அதை சிந்திக்க வைத்தால்  தான்  இதெல்லாம் புரியும். 

 "உபாஸனையின்போது, பரமாத்மாவை   இந்த இந்த ரூபத்தில், இப்படி இப்படி  உபாசித்தால், மந்திரம்  ஸ்லோகம் எல்லாம் உச்சரித்தால், பூஜித்தால்  இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்" என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும் இல்லை. சரீரம் மனசு இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான் அநுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.

இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதாக பாவனை செய்துவிடக்கூடாது. உபாஸனையே பெரும் பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபயமாகும்,   படிப்படியாக  ஏறி  தான்  மேலே  போகவேண்டும்.   திவ்ய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமான பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அநுக்ரஹித்  திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனை முறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.

ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோது அன்போடு அதைச் செய்யவேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்கு பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம்.  இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம்  நமக்கு  தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதநுக்ரஹ  ஆனந்தமே நமக்குப் போதும்.''

No comments:

Post a Comment