Tuesday, April 20, 2021

ADHI SANKARA


 


''அவசியம் வந்துவிட்டது''    --     நங்கநல்லூர்   J K SIVAN --

ஒரு காலத்தில்  ஹிந்து சமயம்  க்ஷீண கதியில் இருந்த  போது   பிற மதங்களில்  பௌத்தம், ஜைனம் போன்றவை தலை தூக்கி இருந்தது. நல்லவேளை  அப்போது கிறிஸ்தவர்கள்  முஸ்லிம்கள் இல்லை.  ஏனைய சில  குட்டி குட்டி  மதங்கள், நம்பிக்கைகள் பரவலாக இருந்தது. அவற்றில் ஒன்று காபாலிகம், கபால ஓடு தரித்த காளாமுகர்கள்  நரபலி கொடுப்பவர்கள்.   சுடுகாட்டில் வசிப்பவர்கள்,  நர மாமிசம் உண்பவர்கள். சாம்பல் பூசிக்கொண்டு திரிபவர்கள். 


ஆதி சங்கரர்  தோன்றி பலரை  அத்வைத மார்க்கத்துக்கு  கூட்டிச் சென்றார்.   சைவம் துளிர்த்து வளர்ந்தது. பலரை வாதத்தில் வென்று ஷண்மத ஸ்தாபனம் செய்தார்.  காபாலிகர்களையும் அவர்  விட்டு வைக்கவில்லை. அவர்களையும்  சாத்வீகர்களாக மாற்றிக் கொண்டு வந்தார்.

இப்படிப்பட்ட  காபாலிகர்களின் தலைவன் ஒருவன் இருந்தான். சுடுகாட்டில் வாஸம் பண்ணுவது, நரபலி கொடுத்து மாம்ஸத்தையும் மஜ்ஜையையும் பச்சையாகத் தின்னுவது என்றிப்படி  க்ரூரமாக ‘வாமாசார’  ங்களை பின்பற்றி வந்தவனுக்கு   ஆதி சங்கரர்  அவனைப்  போன்ற பலரை   திருத்தி வருவது தெரியும்.  அவர் மீது கடும்  கோபம் அவனுக்கு.   அவனோடு சேர்ந்த  பல  காபாலிகர்கள் மனஸ் மாறிவிட்டார்களே.  மிச்சமிருந்த  ஒரு  சில காபாலிகர் களுக்கு  ஆதி சங்கரர் பரம வைரியாக  தோன்றிபதில் ஆச்சர்யம் இல்லை.  

மேலே சொன்ன  காபாலிக  தலைவனுக்கு   சங்கரரை  வாதத்தில்  எதிர்க்க முடியுமா?   அவரை தொலைத்து கட்டவேண்டும் என்ற எண்ணம்  வலுத்தது.  மஹா கருணையுள்ளம்  கொண்ட  ஆதி சங்கரர்  அவனுக்கு  பரம த்வேஷியாக  தெரிந்தார்.  

ஒருநாள்   அவரிடமே  நேரே   போய் நம் இஷ்டத்தைச் சொல்லுவோம்’ என்று நினைத்து, அவர் தனியாய் இருந்த ஸமயத்தில் அவரிடம் போய் இந்த காபாலிக  தலைவன்  நமஸ்காரம் பண்ணினான்.

கருணையோடு அவனை பார்த்தார்  சங்கரர்.

''ஐயா,  நான்  இதுவரை  விதவிதமாக பலி கொடுத்தும் கபாலி ஏனோ ப்ரத்யக்ஷமாகவில்லை. ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகமான ஒரு ராஜாவின் தலையையோ, அல்லது அஷ்ட மஹாஸித்தி பெற்ற ஒரு ஆத்மஞானியின் தலையையோ பலி கொடுத்தால் நிச்சயம் என் முன்னால்  கபாலி   ப்ரத்யக்ஷமாவார். ராஜாவின் தலைக்கு நான் எங்கே  போவேன்?   ராஜாவின்  தலைக்கு  நான்  முயற்சி பண்ணினால்  அவ்வளவு தான்...  அவன் என் தலையை வாங்கிவிடுவான்!    தாங்கள் மஹாஞானி, மஹா யோகஸித்தர். அதனால் என் மனோரதப் பூர்த்திக்காகக் கருணாமூர்த்தியான தங்களிடம் உதவி கேட்டு  வந்தேன்” என்றான்.

இப்படிக்   கூட ஒருத்தரிடம்  போய்  அவருடைய  தலையை  யாராவது கேட்பார்களா?  ஆதி சங்கரர்  கருணா  சாகரம் என்பதால் தைரியமாக காபாலிகன் கேட்டான். 

காபாலிகன் கேட்டதில்  சங்கராச்சார்யருக்கு  கோபம் வரவில்லை. அதற்கு பதிலாக ரொம்பவும் ஸந்தோஷம் உண்டாயிற்று: 

‘அட, ஒன்றுக்கும் உதவாதது என்று நினைக்கிற இந்த மநுஷ சரீரம்  கூடவா ஒருத்தனுக்கு ஈச்வர தர்சனமே கிடைப்பதற்கு உதவுகிறதாம்! மரம் பட்டுப்போனாலும் விறகாக உபயோகப்படுகிறது. மாட்டுக் கொம்பு ஈச்வர அபிஷேகத்துக்கே உபயோகமாகிறது. யானை தந்தமும் எத்தனையோ ப்ரயோஜனங்களைக் கொடுக்கிறது. மான் தோல், க்ரூரமான புலித் தோல்கூட, த்யானத்துக்கு ஆஸனமாகிறது. மநுஷ்ய சரீரம்தான் எதற்கும் ப்ரயோஜனப்படாதென்று நினைத்தால், இதை ஒருத்தன் கேட்டுப் பெற வருகிறானே!’ என்று ஸந்தோஷித்தார்.

“உன் ஆசைப்படியே ஆகட்டுமப்பா! ஆனால் என் சிஷ்யர்களுக்கு    நீ கேட்ட இந்த விஷயம் தெரியப்படாது. அவர்கள் பொல்லாதவர்கள்! உனக்கு ஏதாவது கஷ்டம் உண்டாக்குவார்கள். ஆகையால் நான் தனியாக த்யானத்தில் இருக்கும் ஸமயத்தில் வந்து  என்னுடைய  சிரஸை எடுத்துக் கொண்டு போ”என்றார்.

காபாலிகன்   அவர்  எப்போது யாருமில்லாத நேரத்தில்  தனியாய் த்யானத்திலிருக்கிறார் என்று கவனித்துக்கொண்டே வந்தான். தக்க சமயம் வந்தது.    அவரை நெருங்கி தனது கூரிய   கத்தியை உருவினான்.   ஆச்சாரியார் தலையை சௌகரியமாக  குனித்து காட்டிக்கொண்டிருந்தார்.  காபாலிகனின்  ஓங்கிய கத்தி கழுத்தை நோக்கி இறங்கியது.   

அந்த க்ஷணம்  பார்த்து  எங்கேயிருந்தோ  ஒரு  ஆக்கிரோஷமான  சிம்ம ஸ்வரூபத்தில்  ஒரு  மனிதன் தோன்றினான். அப்படியே  காபாலிகன் மீது  பாய்ந்து  அவனை அலக்காகாக  கையால் தூக்கி சுழற்றினான். காபாலிகனின் கத்தி காற்றில் பறந்து எங்கோ போய் விழுந்தது.  அடுத்த கணம்  காபாலிகன் அந்த நரசிம்மனின் மடியில்  கிழிந்த  வயிறோடு ரத்தம் சொட்ட சொட்ட  இறந்து கிடந்தான். 

க்ஷண கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில்  காபாலிகனின்   கோர சப்தமும்,  சிம்ம கர்ஜனையும் ஒரே சமயம் கேட்டு ஆதிசங்கரரை கண் விழிக்கச்  இந்த செய்தது.    திரும்பி பார்த்த  ஆதிசங்கரரின் கண்ணில்   அவரது சிஷ்யர்  பத்மபாதர்   தெரிந்தார்.  

ஆச்சரியமடைந்த  ஆச்சார்யர்,    பத்மபாதா, “என்ன ஆச்சு?   நீ எப்படி இங்கே வந்தாய்,  யார் இந்த  காபாலிகனைக்  கொன்றது. நீயா? சிம்மக்குரல் கர்ஜனை கேட்டதே.   இது யார் பண்ணிய கார்யம்?” 

பத்ம பாதர்   ''குருநாதா,  எனக்கு ஒண்ணும் தெரியலை.  நான்  கங்கையில் த்யானத்தில்   இருந்தேன். அப்புறம் எனக்குள்ளே   என்னவோ மாதிரி   ஒரு ஆவேசம், அவசரமாக ஆட்டி வைத்தது. . இப்பத்தான ஸ்வய ப்ரக்ஞை வந்திருக்கு” என்றார்.

ஆசார்யாள், “ஓஹோ, உனக்கு நரஸிம்ஹ மந்த்ரம் உபதேசமாயிருந்ததா?” என்று கேட்டார்.

“இருந்தது. ஆனால் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை குருநாதா.  நரசிம்ம  ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டு   யாரோ  ஒரு வேடனுக்கு தர்சனம் தந்தார். என்னவோ சொன்னார், 

‘அவஸ்யம்  ஏற்பட்ட சமயத்திலே  உன்னிடம்  வருவேன்’ என்று” – இப்படி  பத்மபாதர்  சொல்லும் போதே  அவருக்கு பொறிதட்டியது.    சட்டென்று தெளிவாயிற்று.

 “குருநாதா,  நரசிம்மஸ்வாமி தான் என் மேல் வந்திருக்கிறார்.  அவர்  சொன்னபடிதான் இப்போது பண்ணியிருக்கிறார்!  உங்களுக்கு இந்த காபாலிகனால்  உயிருக்கு   ஆபத்து நேர்வதை அறிந்து  என்மேல்  ஆவிர்பவித்து என்னை ஒரே  தாவு தாவி இங்கே ஆவேசமாக   ஓடி வரச்செயது  ஆக்கிரோஷத்தோடு  அவனைக் கிழித்து கொல்லச் செய்திருக்கிறார். அவர் ஆவேசித்துத்தான் இந்தக் கார்யம் நடந்திருக்கிறது. இதைவிட ஆபத்தில் ரக்ஷணம் காட்ட ஸமயமுண்டா?”  


ஆதி சங்கரர் கண்களை மூடினார். அவர் மனதில்  நரசிம்ம ஸ்துதி வேகமாக  ஓடிக்கொண்டிருந்தது.  ஆபத் பாந்தவா, அநத ரக்ஷகா  என்று  பத்மபாதரும்  வேண்டிக்கொண்டு நின்றார்.

 

No comments:

Post a Comment