Friday, March 12, 2021

STHALASAYANA PERUMAL TEMPLE

 


        முதல் ஆழ்வாரும்  முதலை ராஜாவும் - நங்கநல்லூர்  J K SIVAN 

சென்னையிலிருந்து  மஹாபலிபுரம், பாண்டிச்சேரி எல்லாம் போக ஒரு  வேகப்பாதை இருக்கிறதே, கிழக்கு கடற்கரை சாலை  ECR 
  என்று,   அதில்  மஹாபலிபுரம் செல்பவர்கள் அங்கே ஒரு  அருமையான  விஷ்ணு ஆலயம் இருப்பதை அறிந்திருப்பார்கள்.  தரிசித்திருப்பார்கள். 

அந்த ஆலயம் ஒரு  திவ்ய தேசம்.  அதாவது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட் ட  க்ஷேத்ரம். அதன் பெயர்  ஸ்தல சயனப் பெருமாள் கோவில்.   108  திவ்ய தேசங்களில் 63வது இது தான்   இந்த ஊரின் இன்னொரு விசேஷம் என்னவென்றால்,   இது  தான்  முதல் ஆழ்வார்களில் ஒருவரான  பூதத்தாழ்வார்  அவதரித்த ஸ்தலம்.  அவரை விஷ்ணுவின் கதாயுதமான  கௌமோதகியின்  அம்சம் என்பார்கள்.  

பூதத்தாழ்வார் என்று ஏன் பெயர்?  
பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து - அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால்,  ஆழ்வாருக்கு இந்த பெயர்.  

பூதத்தாழ்வார் பாசுரங்கள்  எளியவை. எளிதில் புரிபவை.  ரெண்டாம் திருவந்தாதி எனும்  நாலாயிர பிரபந்த பகுதியில்  பூதத்தாழ்வார் பாசுரங்கள் 100 வெண்பாக்களாக  இருக்கிறது.   மாதிரிக்கு மூன்று   தருகிறேன்:

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.

மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்

கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் μட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.

நமது  பாவலர்கள்  கவிஞர்கள் இப்படி எழுதுவார்களா? கண்ணில் படவே இல்லையே.  சினிமா பாடல்கள் வேறுவகை வெண்பாக்கள். அந்தாதிகள்.

கிட்டத்தட்ட  700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர ராஜா ஒருவன்,  பராங்குசன்,   இந்த விஷ்ணு ஆலயத்தைக் கடல் கரையில் கட்டியவன்.   அதற்கு முன்னர்  பல்லவர்கள் கால த்தில் அவர்கள் கட்டிய  சில  கடற்கரை    கோயில்கள்  சமுத்திரத்தில் மறைந்தது.   ராயர்  கட்டிய  கோயில் தான் கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டதால்   தப்பித்தது.  நமக்கு இன்றும்  சயனித்த திருக்கோலத்தில் ஸ்தலசயன பெருமாள் கிடைத்திருக்கிறார்.  

ஸ்தல சயன பெருமாள்  ஆலயம்  ஒரு அற்புதமான  கோவில்.  பெருமாளுக்கு சதுர் புஜங்கள்.   வலது கை  பூமியைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. உத்ஸவ பெருமாள்  ஸ்ரீதேவி, பூதேவி சமேதர்.   புஷ்கரணியின் பெயர் புண்டரீக புஷ்கரணி. இந்த புஷ்கரணிக்கு பின்னால்  ஒரு குட்டிக் கதை இருக்கிறது. சொல்கிறேன்.

பல்லவராஜா மல்லேஸ்வரன் தினமும்  குறைந்தது  ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்பவன்.  எல்லோரும் அவனைப் புகழ்ந்தார்கள் போற்றினார்கள்.  ஒரு கால கட்டத்தில் ராஜாவிடம் பொருள் குறைந்துவிட்டதால்  அன்னதானம் தொடரமுடியவில்லை.   பசியோடு எதிர்பார்த்து வந்தவர்கள்  ஏமாற்றம் அடைந்தார்கள். ராஜாவை  அவன் ராஜ்யத்தை வசைபாடினார்கள்.   முனிவர்களில்  ஒருவர்  இந்த புஷ்கரணி  படித்துறையில் பசியோடு அமர்ந்து ஒரு சாபமிட்டார்: ' ஹே  மல்லேஸ்வரா,  எங்களை பசியோடு விட்டாய் அல்லவா. நீ இதோ இந்த குளத்தில் பசியோடு ஒரு முதலையாக அவஸ்தைப் படுவாய்''

படுக்கையில் படுத்திருந்த  மல்லேஸ்வரன் தான் திடீரென்று  முதலையாக ஏன் மாறினோம் என்று யோசித்துக் கொண்டே  நடந்து புஷ்கரணி நீருக்குள் இறங்கிவிட்டான் . அது தாமரைக்குளம். அங்கே ஒருநாள்  புண்டரீக மகரிஷி வந்தபோது  தாமரை மலர்கள் குளத்தில் அவர் கண்ணைப் பறித்தது.  ஆஹா  இதை  பெருமாளுக்கு சாத்தலாமே , ஆழமான  அந்த குளத்தில் எப்படி சென்று  பூவைப் பறிப்பது?  கரையில்  நின்று அவர்  சிந்தனை செய்யும்போது  நீருக்குள்ளிருந்து  முதலை தலையை தூக்கியது.   ரிஷியைப் பார்த்து வணங்கியது.  தான்  சாபம் பெற்றதை மல்லேஸ்வர முதலை  சொல்லி அழுதது.  எப்படியாவது பழையபடி பண்ணிவிடு என்று  கெஞ்சியது. 

புண்டரீக  ரிஷி  ஞானதிருஷ்டியால் எந்த காலத்திலோ நடந்த சம்பவத்தை அறிந்தார்.  ராஜாவின்  இயலாமையால்  அன்னதானம் நின்றதை உணர்ந்தார்.  

''மல்லேஸ்வரா,  இந்த குளத்தில்  நிறைய  தாமரை மலர்கள் இருக்கிறதல்லவா. ஆயிரம் தாமரை மலர்கள் எனக்கு பறித்துக் கொடு  உன் சாபம் நீங்க  பெருமாளை வேண்டுகிறேன்''  என்று முதலையிடம் சொன்னார்.
விடுவானா மல்லேஸ்வரன் இந்த  சந்தர்ப்பத்தை. உடனே  வாயினால் ஆயிரம் தாமரை மலர்கள் பறித்து கரைக்கு கொண்டு வந்து கொடுத்தான்.   ரிஷி  ஸ்தலசயன பெருமாளுக்கு பூஜை செயது மலர்களைச்  சாற்றினார்.  ''பெருமாளே  உன் பக்தன்  மல்லேஸ்வரனை சாபம் நீங்கி உன்னை வணங்க அருள்  செய். உலகத்தில் மக்கள் பசி பட்டினியின்றி  உணவுண்டு க்ஷேமமாக வாழ அருள் புரி '' என்று வேண்டினார். 
முதலை புஷ்கரணியில்  மீண்டும் மல்லேஸ்வர  ராஜாவானது.   இது என்  சுய கற்பனைக்கு கதை அல்ல.  பிரம்மாண்ட புராணத்தில்  வருகிறது.   அதுமுதல் இந்த குளம்   புண்டரீக புஷ்கரணி ஆகி வருஷாவருஷம்  இன்றும்  ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடக்கிறது.




No comments:

Post a Comment