Thursday, January 7, 2021

THIRUCHAZHAL

 மணிவாசகர்  J K  SIVAN 

                             
                        திருச்சாழல்  4-7

ஹிந்து மதம் அதை  நிலை நாட்ட,  பொருத்தமான  மதபோதகர்கள் இல்லாதிருந்த  வேளை யில்,  தமிழகத்தில்  பௌத்த மதம் ஊடுருவ  நேர்ந்தது.   சைவ மதத்தை உயர்த்தி  நிலைநாட்ட தேவைப்பட்ட வேளையில்  தோன்றியவர்களில் ஒருவர்  மாணிக்கவாசக பெருமான்.  தமிழக  சிவாலயங்களுக்கு க்ஷேத்ர யாத்திரை சென்று பதிகங்கள் பாடிக் கொண்டு   சிதம்பரத்திற்கு வருகிறார். ஊருக்கு புறத்தே ஓரிடத்தில் தங்கினார்.  அப்போது தான் ஈழத்து ராஜா  சிதம்பரம் தீட்சிதர்களை  வாதுக்கு அழைத்தான்.  தீட்சிதர்கள்  வாதிடும் திறமையற்றவர்கள் என்பதால்  நடராஜரை வேண்டுகிறார்கள்.  அசரீரி  வாக்காக ” வாதவூரரை அழைத்து வெல்லுங்கள் ” என அறிவுரை கிடைத்து  மணிவாசகரை  வணங்கி  விபரம் சொல்லி  உதவி கேட்கிறார்கள். நடராஜனைப் போற்றி உடனே சம்மதிக்கிறார். 

ஈழத்து  பௌத்தர்களை வாதில் வென்று,  ஈழ  ராஜாவின்  பிறவி  ஊமை மகளைப்  பேச வைக்கிறார்.  உங்கள் கேள்விகளை கேளுங்கள்   இவளே பதில் சொல்வாள்  என்று அவள்  பதில் சொல்வதாக   திருச் சாழல்” என்ற  20  பாடல்களை  அருளிச்  செய்தார். 

 முதல்  மூன்று பாடல்களை முந்தைய பதிவில் படித்தோம். இனி மற்றும் சிலவற்றை  அறிவோம்.  இந்த  சாழல்  விளையாட்டில்  ஒரு பெண்  பாட்டுடைத் தலைவனை புகழ்ந்து அழகையும் அணியையும் பற்றி கேள்வி கேட்பாள்.  மற்றவள்  தோள் வீசி நின்று பாட்டாலே விடை அளிப்பாள். இது  தான்  சாழல்.  

அடுத்த கேள்வியாக  ஒருத்தி பாடுகிறாள்: 
 
''அயனை அநங்கனை
அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா
வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ.''4.

'' என்னடி  ரொம்ப பெரிதாக  உங்கள்  சிவனை ப்ரமாதப்படுத்துகிறீர்கள்?. அவன் எப்படிப்பட்டவன் என்று தெரியாதோ?  பிரமனையும், மன்மதனையும், யமனையும்  சந்திரனையும் கேளுங்கள் நிறைய சொல்வார்கள்.   ஒவ்வொரு சமயத்தில்   சிவனால் காயப்பட்டு  வடுப்படுத்தப்பட்டவர்கள் இவர்கள். இதுதானோ உங்கள் கடவுளின் குணமோ தன்மையோ  சொல்?  பெண் கேட்டது  பௌத்தன்  கேட்ட  கேள்வி.   அதற்கு மாணிக்கவாசகர் கூறிய  பதிலை  இது வரை ஊமையாக இருந்த ராஜாவின் பெண்  பதிலளிக்கிறாள் பாருங்கள்: 

'' பரம சிவன்  த்ரிநேத்ர தாரி.  முக்கண்ணன்.  குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும் என்பார்களே.  சிறியதோ  பெரியதோ  செய்த தவறுக்கு பொருத்தமாக  எமது  ஈசன்,  தலைவன்  என்ற பொறுப்பில்  தண்டித்து, தேவர்களுக்கு அதுவும் ஒரு பெருமை,  வெற்றி என்று தானே ஏற்றுக்கொள்ளவேண்டும்.  வைதாரையும் வாழவைப்பவன்  பரமேஸ்வரன் என்ற   விஷயம் புரியாமல் கேட்கிறாய்''

''தக்கனையும் எச்சனையுந்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.
பொழிப்புரை :

''ஓஹோ  அப்படியா,  யாகத்தின் போது  தக்ஷனையும்,  யாக அதி தேவதையையும்  அழித்தது  என்ன காரியம்  என்று சொல்லமுடியுமா?''

''அழிப்பது என்கிறாயே. யார்  வேண்டுமானாலும்  அதை செய்யலாம் என்று எடுத்துக் கொண்டாலும்  மற்றொன்றை நீ புரிந்துகொள்ளவில்லை.  தேவர்களோ எவரோ,  அவர் களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்யவில்லையா?  மற்றவரால் முடியுமா? , யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்குத்  தக்கவாறு ஆட்டின் தலையை அருள் செய்தான்''  என்பதை  அறியாமல்  பேசுகிறாயே'' என்கிறாள்  ஊமையாக இருந்த பெண். 

அலரவனும் மாலவனும்
அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந்
தவிரார்காண் சாழலோ.

''எதற்காக உங்கள் ஈஸ்வரன்  ப்ரம்மாவாலும்  விஷ்ணுவாலும்  அறியமுடியாவண்ணம்  ஒளிக்கற்றையாக நின்றான்? என்ன காரணம் இதற்கு?  சொல்லேன் பார்க்கலாம்?''
என்கிறான்  பௌத்தன்.

யோசிக்காமல் கேட்டுவிட்டாய்.  அவன் ஏன் அப்படி  அடிமுடி காணமுடியாமல் நின்றான் என்று நீயே யோசித்திருக்கலாம்.  அவன் அப்படி  ஒளிக்கம்பமாக நிற்காமல் இருந்தால்,  அவ்விருவரும் தமது ஆங்காரத்தை  அகம்பாவத்தை  விட்டிருப்பார்களா? சொல்.?  என்று பதிலுக்கு கேட்டாள்  ஊமைப்பெண்.

மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ் சாழலோ.

''சரி  அது போகட்டும், இது என்ன வேடிக்கை. இதற்கு காரணம்  சொல்.  ஏன்  உங்கள் சிவன்   பார்வதியை   உடலின் இடது பாகத்தில் அமைத்துக்கொண்டான்.  அதே நேரம் கங்காதேவி என்பவளை  நீருருவாக,  தலைமுடி  சடையில்  உறைந்து  பாயச்செய்தான்?  கேள்வி எழுப்பியவன் பௌத்தன். 

`''உலகில்  சக்தியின்றி சிவனில்லை.  அசையும் அசையா  பொருளுக்கு  காரணம்  சக்தி தேவி என்று விளக்கவே  பரமேஸ்வரன்   உமையொருபாகனாக  காட்சி தருபவன்,  தனது  சடையில் கங்கையை இறங்கி பூமியில் பாய விடாமல் விட்டிருந்தால்  இப்போது கேள்வி  கேட்கவோ, பதில் சொல்லவோ  நாம்  ஒருவருமே இருக்கமாட்டோம்.  பூமி   கங்கையின்  வேகமான  பலமான சக்தியை  தாங்காது பாதாளத்தில் இறங்கிவிடும் என்பதற்காக தான் ஆக்கிரோஷமாக  ஹோ  என்ற  பேரிரைச்சலுடன்  கீழ் இறங்கிய ஆகாய கங்கையைத் தன் தலையில் சுமந்தான். உனக்கெங்கேஇதெல்லாம் புரியும்? என்கிறாள்  ஊமைப்பெண்.

மேலே சொன்ன  4  பாடலிலும் விளையாடும் தமிழை ரசியுங்கள்.  மணிவாசகர் எழுத்துத் திறன்  அது.   (தொடர்வோம்)

No comments:

Post a Comment