Sunday, January 24, 2021

NATARAJA PATHTHU

 நடராஜ பத்து    J K  SIVAN 


 
  6. '' எனக்கு ஒண்ணுமில்லை, அது  உன்  கவலை''

 அற்புதமான  பத்து  பாடல்களை பாடி இருக்கிறார் சிறுமணவை  முனுஸ்வாமி முதலியார். ரொம்ப எளிமையான இனிய  நடராஜ பத்து, தில்லை நடராஜனோடு நம்மை  உறவாட வைக்கிறது.   இன்று  ஆறாவது பாடல்: 

6.  '' வழி  கண்டு உன்னடியை துதியாத போதிலும்,
வாஞ்சை  யில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும்,
வஞ்சமே செய்த போதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும், மோசமே செய்யினும்,
தேசமே கவரினும், முழு  காமியே ஆகினும்,
பழியெனக் கல்லவே தாய் தந்தைக்கல்லவோ?
பார்த்தவர்கள் சொல்லார்களோ, பாரறிய
மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ,?  எழில்பெரிய
அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ?
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே.''  

நான் யாரென்று எனக்கே பிடிபடவில்லை. ரமணரைப் போல் என்னை  ''நான் யார்?'' என்று தேடி கண்டுபிடிக்க, நான் வேதாந்தியும் அல்ல. ரெண்டு மூன்று நாள் மட்டும் கொஞ்சம் யோசித்தால்,  தோசை  வடை  வேண்டா மென்றால்  நான்  உலகை வெறுத்தவனா?   ஹிந்து பேப்பர் படிக்கா விட்டால்  அது  தியாகமா?  நான்  யோகி யாக முடியுமா?

நீ தான் நான்,  நானே நீ என்று  உணர்ந்து  சொல்லும்  அளவு எனக்கு  ஞானமும் பத்தாது . எப்படி வணங்கி னால், துதித்தால், உனது பொன் திருவடி அடையலாம்? என்றும் எனக்கு வழி  தெரியாது, யாரையும் கேட்ட தில்லை, அப்படி யாருமே  தெரிந்து சரியாக சொல்லவும் இல்லை. தெரிந்து என்னிடம் சொன்னாலும் அதை புரிந்து கொள்ளவோ, தெரிந்துகொள்ளவோ  முயற்சிக்காதவன். அன்பு எவரிடமும் இல்லாதவன், நடராஜா,   உனது ஆலயமோ, அல்லது  வேறெவர் கோவிலோ,  கிட்டே கூட போகாதவன், நான் செய்தது மற்றவர்களுக் கு  துன்பம் ஒன்றே தான்,

''பாடு'' என்றால் பாடுவேன், அதாவது ''கத்துவேன்''. எந்த இலக்கணத்துக்கும் முறைக்கும் ஒவ்வாத,  புரிபடாத  ஏதோ சப்தமிடுபவன். கழுதை  என்னோடு போட்டி போட்டு பலமுறை  தோற்றிருக்கிறது.    ''எழுது'' என்றால் கேட்கவே வேண்டாம். யாரோ சொன்னபடி நான்   'மோசமானவர்களில் முக்யமானவன்', சுருக்கமாக சொல்ல  வேண்டுமானால் என்னிடம் உள்ள தீய பழக்கங்கள் வேறெவரிடமும் இருக்க முடியாது.

இப்படி  யெல்லாம் இருக்கும் நான் யார்? உன் மகன் தானே? எனவே என்னைவிட உனக்கு தான் இப்போது என் மேல்  பொறுப்பு அதிகமாகிவிட்டது.

இன்னார் பிள்ளை என்று தானே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள்.   ஆகவே தான்  என்னை சரியாக்கும் பொறுப்பு உனதாகிவிட்டது. உன் பெயரையாவது  நீ  காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?    அடே, பாதி உமை பரமசிவா, என்னைக் காத்து, தடுத்தாட்கொண்டு அருளவேண்டியது உன் கடமை ஆயிற்றே.  உனது  இந்த கடமையில் நீ தவறினால் ஊரும் உலகமும் உன்னைத் தானே தூற்றும். எனக்கென்ன வந்தது?

''என்ன தந்தை இவன், பெற்ற பிள்ளையை இப்படி வளர்த்திருக்கிறான்? என்று  என்னால் உனக்குத்தான்    அவப் பெயர்.  எனவே தான் சிதம்பர நாதா,   நான் உன்னிடம் திரும்ப திரும்பச்  சொல்கிறேன் என்னிடம் காணும் குறைகளை நீக்கி என்னையும் நல்லவனாக்கு, காப்பாற்று. அண்ட பகிரண்டங்களை உருவாக்கி ஆள்பவனே, என்னை திருத்துவது உனக்கு ஒரு பெரிய காரியமா?  மனது வைத்தால் நீ கை   சொடுக்கும் நேரத்தில், கண் சிமிட்டும் நேரத்தில்  என்னை  ரொம்ப நல்லவனாக்கி விடுவாயே.

முனுசாமி முதலியார்  மனமுருகி   கெஞ்சியதை,  நான் கொஞ்சம்  ''நீஈஈட்ட்டி '' இருக்கிறேன்.  அவ்வளவு தான். 
 தன்னை சிவனின்  மகனாக உறவு காட்டி  முதலியார்  கெஞ்சுவது அற்புதாக இருக்கிறதல்லவா? இனி நடராஜ பத்து பதிகத்தில் பாக்கி இன்னும் நான்கு இருக்கிறது. நாலு நாளில் முடித்து விடுகிறேன். 



No comments:

Post a Comment